ராஜாஜியும் அவரது கல்வித் திட்டமும்: உண்மையைப் பதிவு செய்யத் தானாகவே வருகிறது வாய்ப்பு!

This entry is part [part not set] of 28 in the series 20051230_Issue

மலர்மன்னன்


அடக் கஷ்டமே, கற்பக வினாயகம் மனம் புண்பட்டுப் போனாரா ? எவரையும் மனம் புண்படச் செய்தல் மனதாலும் விரும்பேன். அதிலும் ஒருவர் மனம் புண்படும் விதமாகத் தமாஷ் செய்தல் அனாகரிகம் என்பதை அறிவேன். தமாஷ் என்ற பெயரில் சம்பந்தப் பட்டவர்களின் மனம் புண்படுமே என்கிற விவஸ்தையின்றி, ஒருவரின் சரும நிறம், உடற் குறை இவற்றையெல்லாம் வைத்து நம் திரைப் படங்களில் வரும் காட்சிகளைக் கண்ட மாத்திரத்தில் அருவருத்து அகன்று செல்லும் வழக்கம் உள்ளவன். மேலும் என் எழுத்தில் நகைச் சுவை உணர்வு இருப்பதில்லை என்பது பொதுவாகக் கூறப்படும் குறைபாடே அல்லவா ?

உண்மையை எழுதுவதால் எவர் மனமேனும் புண்படுமாயின் அதற்கு சம்பந்தப்பட்டவர்கள்தான் சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும். உள் நோக்கம்

ஏதுமின்றி எழுதுவதுதான் எனது நோக்கம்.. புண்படுத்தும் குரூர இச்சையல்ல.

முதலில் நண்பர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இடஒதுக்கீடு விஷயத்தில் ஈ.வேரா. வுக்கு இருந்தது பிராமணர் அல்லாத மேல் ஜாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் மீதான கவனம்தான். இதனை நான் அவர் மீது ஒரு குறையாகவோ குற்றமாகவோ கூறவில்லை. அவருக்கு இயற்கையாக இருந்த நிலைப்பாட்டைப் பற்றித்தான் குறிப்பிடுகிறேன். பிராமணர் அல்லாத, தலித்துகளுமல்லாத ஜாதியினரை அக்கிரஹாரத்திற்குள் நடமாடச் செய்வதில் அவருக்கு இருந்த அவசரமும் அக்கரையும் மகிழ்ச்சியும் தலித்துகள் பிராமணர் அல்லாத மேல் ஜாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்

பட்டோர் ஆகியோரின் தெருக்களில் நுழையச் செய்வதில் இருக்கவில்லை. இந்த உண்மையை நான் சொல்வதற்கு உள் நோக்கம் கற்பித்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

தவறான தகவலின் அடிப்படையில் ராஜாஜி மீது ஒரு குற்றச்சாட்டை வைத்து அதன் பயனாக உண்மையைப் பதிவு செய்யும் வாய்ப்பினை நண்பர் எனக்கு

அளித்துவிட்டிருக்கிறார். அதற்காக அவருக்கு என் நன்றி! இிப்படிச் சொல்வதால் நான் ராஜாஜி தாசன் என எண்ணிவிட வேண்டாம். அவர் மீதும் எனக்கு

விமர்சனம் உண்டு!

1952-ல் (1950-ல் பாரதம் குடியரசான பிறகு) நடந்த முதல் பொதுத் தேர்தலில் ஆந்திரம், தென் கனரா மற்றும் கேரளத்தின் மலபார் உள்ளிட்ட தமிழகம் அடங்கிய சென்னை ராஜதானியில் காங்கிரஸ் ஆட்சியமைக்க இயலாத அளவுக்குக் குறைவான இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் தலைவரான ஆந்திர கேசரி பிரகாசம் தமது பாரம்பரியமான கட்சியிடம் பிணக்கு கொண்டு கம்யூனிஸ்டுகளுடன் கைகோத்து ஐக்கிய முன்னணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்ததன்

விளைவு அது. எனவே ஏதோ 1967-ல்தான் காங்கிரஸ் தோல்வி கண்டதாக எண்ணவேண்டாம். ராஜாஜி அப்போது நாட்டின் மிக உயர்ந்த பதவியான கவர்னர் ஜெனரல் பதவியைவிட்டுக் கீழே இறங்கி, அதன் காரணமாகவே அரசியலில் நேரடியாக ஈடுபடும் எண்னத்தைக் கைவிட்டு, சென்னை தியாகராய

நகர் பசுல்லா சாலையில் ஓய்வாக சங்கீதம் கேட்டுக் கொண்டும், தமக்கு மிகவும் பிரியப்பட்ட கல்கி, டி.கே.சி ஆகியோருடன் சல்லாபித்துக்கொண்டும், குழந்தைகளுக்கு ராமாயணக் கதை எழுதியும் பொழுதைக் கழிக்கும் உத்தேசத்துடன் வந்து சேர்ந்திருந்தார். சென்னையில் முதல் தேர்தலிலேயே காங்கிரஸ் ஆட்சியமைக்க முடியாது போவது மானக் கேடாயிற்றே என்று நேரு பதறிப் போனார். ராஜாஜியிடம் பரிகாரம் தேடச் சொன்னார். அந்தச் சமயத்தில் தமிழ் நாடு காங்கிரஸில் கொடிகட்டிப் பறந்தவர் காமராஜர். ராஜாஜிக்கு தமிழ் நாடு கங்கிரஸில் மட்டுமல்ல, பொதுவாக மக்களிடம் கூட ஆதரவு இருந்த

தில்லை. கசப்பு மருந்தை, ‘சாப்பிடாமப் போனா பாத்துக்கோ ‘ என்று மிரட்டியும் புகட்டும் அம்மாக்களைக் குழந்தைகள் விரும்பமாட்டாதானே! ராஜாஜிக்கு

காங்கிரசில் ஆதரவு இருந்தது தொடக்க காலத்தில் மட்டுமே. தில்லி செல்வாக்கில் அரசியல் செய்துகொண்டிருந்தவர் அவர். ஆனால் அங்கும் பிறகு கழற்றி

விடப்பட்டார்.

நேரு சொன்னதன் பேரில், காமராஜ் உள்ளிட்ட உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் ராஜாஜியிடம் வந்து காலில் விழாத குறையாக மன்றாடி, எப்படியாவது காங்கி

ரஸின் மானத்தைக் காக்குமாறு வேண்டினார்கள். ராஜாஜியும் சரியென்று காங்கிரசுக்கு எதிராகத் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் நின்று ஜயித்த உழைப்பாளர் கட்சியினரான ராமசாமிப் படையாச்சி, வட ஆர்க்காடு மாவட்டத்தில் அதேபோல காமன்வீல் கட்சியென்று வைத்து ஜயித்த மாணிக்கவேலு நாயகர் ஆகியோரைத் தம் கட்சிக்கு இழுத்து மந்திரி பதவி கொடுத்துத் தாம் முதல்வரானார். இந்த இரண்டு கட்சிகளுமே சொந்த ஜாதி நலனுக்காகத் தொடங்கப் பட்ட வன்னியர் கட்சிகள்தாம். பிற்பட்டவர், பிற்பட்டவர் என்று சொல்லிக் கொண்டு பதவியை நாடுவது தவிர அவற்றுக்கு வேறு உருப்படியான கொள்கை ஏதும் இல்லை! அவற்றின் வாரிசாக இப்போது பாட்டாளி மக்கள் கட்சி என்பதாக ஒன்று இல்லையா ? ராஜாஜி, அவர்களின் பலவீனத்தைத் தெரிந்துகொண்டு, பதவியென்னும் கேரட்டைக் கொடுத்து அவர்களைத் தம் பக்கம் இழுத்துக் கொண்டார். இந்த இரண்டு பேர்களிடமும் கையொப்பம் வேறு வாங்கிக் கொண்டு தி.மு.க. தேர்தலில் அவர்களுக்கு ஆதரவாக வேலை செய்து ஏமாந்தது! ஏ.கோவிந்தசாமி என்பவர் மாத்திரம் மனச்சாட்சிக்குப் பயந்து கட்சி மாற மறுத்து

விட்டார். ஆனால் ராஜாஜிக்கு ஆட்சியமைக்கப் பெரும்பான்மை கிடைத்துவிட்டது! இந்த கோவிந்தசாமிதான் அவரது நேர்மையின் காரணமாக அண்ணாவின் தனிப் பாசத்திற்கு உரியவராகி 1967-ல் அன்ணாவின் தலைமையில் அமைந்த முதல் தி.மு.க அமைச்சரவவையில் வேளாண்மைத் துறை அமைச்சரானார். பிறகுஅண்ணா காலமான ஆண்டே தாமும் காலமாகி மறக்கப் பட்டார். தி.மு.க வில் நேர்மையாளர்கள் மிக மிகக் குறைவு. அருமையாக வாய்க்கும் ஒருசில

நேர்மையாளர்கள் உடனே மறக்கப் பட்டுவிடுவது அங்குள்ள நடைமுறை!

ஆக, நம் அரசியலில் குதிரை வியாபாரத்தைத் தொடங்கிவைத்தவர் ராஜாஜிதான். ஆனால் அவர் அவ்வாறு செய்திருக்காவிடில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக்

கவர்ந்து கவைக்கு உதவாத திட்டங்களால் ராஜதானியைக் குட்டிச் சுவராக்கிவிட்டிருப்பார்கள்! எனவேதான் போலும், ராஜாஜியானவர் கிருஷ்ண பரமாத்மாவின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு அந்த மாயக் கண்ணன் பாரதப் போரில் செய்த குறும்புத்தனம் போலவே தாமும் செய்து தமது கட்சியை ஜயிக்கவைத்தார்!

ஆட்சிக்கு வந்த வேகத்தில் ராஜாஜி சூட்டோடு சூடாக ஆறவுன்ஸ் அரிசி ஆட்சி என்னும் அவப் பெயரைத் துடைத்து ரேஷன் என்கிற பெயரே வயிற்றை இறுக்கிக் கட்டுகிற மாதிரியான உணர்வைத் தருவதால் நியாய விலைக் கடை எனப் பெயர் சூட்டினார். திண்னையில் உட்கார்ந்து (ஸ்வாமின், நம் ‘தின்ணை ‘ அல்ல!) சீட்டாடிப் பொழுது போக்கும் பிராமண, பிள்ளைமார், மற்றும் மேல் ஜாதி மிராசுகளுக்கு நாற்பது பங்கு, வரப்பில் நின்று மேற்பார்வை பார்ர்க்கும் குத்தகைதாரனுக்கு அறுபது பங்கு என வாரம் விதித்து, விவசாயத் தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்சக் கூலி நிர்னயித்து நிலைமையைச் சீர்செய்தார்.

அநியாய வட்டிக் கடன்களைக் காலாவதியாக்கினார். இவ்வாறாக விவசாயம், உனவுப் பிரச்சினை இரண்டையும் தீர்த்தார். அந்தக் காலத்தில் வீச்சமடிக்கிற, பழுப்பு நிற தானியத்தைத்தான் அரிசி என்பதாக அறிந்திருந்தோம். அதுவும் வாரம் ஒருமுறை, இருண்டு போன சிறு கடையெதிரில் கால் கடுக்க நின்ற

பிறகே கண்ணால் காண இயலும். இந்த நிலையை மாற்றி, நல்ல மணம் வீசும் மல்லிகைப்பூ வண்ண அரிசியைச் சர்வ சாதாரணமாக மண்டியில் பார்த்து வேண்டிய மட்டில் வாங்கிக் கொள்ளலாம் என்கிற அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார்.

நமது அரசியல் சாசனம் ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் மக்கள் அனைவரும் அடிப்படைக் கல்வி பெறச் செய்துவிட வேண்டும் என்றும் விதித்திருந்தது. இதனை நிறைவு செய்வது பற்றி யோசித்த ராஜாஜி, முற்பகலில் ஒரு பாட்ஜ், பிற்பகலில் ஒரு பாட்ஜ் என்று ஒரே நாளில் இரு மடங்கு என்ணிக்கையிலான

குழந்தைகள் அடிப்படைக் கல்வி பெற்றுவிடத் திட்டமிட்டார். இதன்படி ஒரு குழந்தை அரை நாள் பள்ளிக்கு வந்தால் போதும். ஆக, புதிதாகப் பள்ளிகள்,

நிறைய ஆசிரியர்கள் என்றெல்லாம் கூடுதலான நிதி, நிர்வாகச் செலவு இல்லாமலே இரு மடங்கு குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியைக் கொடுத்து

விடலாம் என்பது ராஜாஜியின் யோசனை. பாதி நாள் பள்ளிக்கு வரும் குழந்தை மீதி நாள் என்ன செய்யும் என்று கேட்டார்கள். அதற்கென்ன, பெற்றோருக்கு உதவியாக அவர்கள் செய்யும் பணியில் ஈடுபடச் செய்தால் அது பெற்றோருக்கும் பயன்படுவதாக இருக்கும், குழந்தையும் ஒரு தொழிலைக் கற்றுத் தேர்ந்து

விடலாம், என்றார் ராஜாஜி. அவ்வளவுதான். கடல் பொங்கியது, பூமி அதிர்ந்தது! குல்லூக பட்டர், வர்ணாசிரம சனாதனி, குலக் கல்வியைக் கொண்டுவந்து

விட்டார் என்ற கடும் கண்டனம் எழுந்தது.

தகப்பனார் ஒரு பட்டறை வைத்து இயந்திரங்களைப் பழுதுபார்த்துக் கொடுக்கும் தொழில் செய்கிறார் என்றால் குழந்தையும் பட்டறையில் கூட மாட வேலை செய்து சிறுவயதிலிருந்தே ஒரு தொழிலைக் கற்றுத் தேர்ந்துவிடலாம். அதன் பயனாகக் குழந்தை வளர்ந்த பிறகு வேலை தேடி அலையாமல், வேலையில்லாதோர் எண்ணிக்கையைக் கூட்டாமல், சுயமாகவே தொழில் செய்து கவுரவமாகச் சம்பாதித்துப் பிழைத்துக் கொள்ளும். அத்துடன், பள்ளியில் படிப்பது வேலை பார்க்கத்தான், அறிவைப் பெறுவதற்கு அல்ல என்கிற மனோபாவமும் மறையும். இம்மதிரியான தொழில்கள் ஒன்றும் ஜாதி அடிப்படையிலானவை அல்ல. சில ஜாதி அடிப்படையில் வருவனவும்தான். ஆனால் அவையும் இழிவல்ல, வேலையின்றி வீட்டில் கிடப்பதைவிடக் கையில் ஒரு வேலைத் திறம் இருப்பது

நல்லதுதானே! ராஜாஜி இதையும் மனதில் வைத்துத்தான் புதிய கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்தார். ஆனால் அவரால் ஆக வேண்டிய காரியம் ஆக

விட்டதால் இனி அவர் தேவைப் பட மாட்டார் அல்லவா ? வீட்டுக்கு அனுப்ப வேளை பார்த்துக் காத்திருந்தார்கள். அவரது புதிய கல்வித் திட்டம் அவர்களுக்கு மிகவும் வசதியான ஆயுதமாகக் கையில் எடுத்துக் கொள்ள முடிந்தது. குலக் கல்வி, குலக் கல்வி என்று பழி சுமத்தி, அவரை சங்கீதம் கேட்கவும் ராமாயணம் எழுதவும் அனுப்பி வைத்தார்கள்.

1991-ல் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையான சோஷலிசக் கொள்கையை காங்கிரஸ் துணிந்து மூட்டைகட்டி ஒரு பக்கம் வைத்துவிட்டு லைசென்ஸ், பர்மிட்

கோட்டா இல்லாத சந்தைப் பொருளாதாரத்திற்குத் தவிர்க்க முடியாத கட்டாயத்தின் பேரில் தாவியதும் அதனை வரவேற்று தினமணி நாளிதழில் ‘ராஜாஜியின்

எச்சரிக்கை பலித்துவிட்டது ‘ என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். ஏனெனில் பாரதம் அப்போது தென்னமெரிக்க நாடுகளைப் போல வாழைப் பழக் குடியரசாகும் கட்டத்திற்கு வந்துவிட்டிருந்தது. எல்லாம் கனவில் லயித்து, மேகத்தில் மிதந்தே காலங் கடத்திய நேருவின் உபயந்தான்! அவர் காலம் கடந்த பின்னரும் அவர் விட்டுச் சென்ற பிழை சிறுகச் சிறுக வீங்கிப் பருத்து பாரதப் பொருளாதாரத்தை வெடித்துச் சிதறும் நிலைமைக்குக் கொண்டு வந்திருந்தது. நல்ல வேளையாகக் காலங் கடந்த பிறகாவது நிலைமையின் விபரீதத்தைப் புரிந்து கொண்டு பரிகாரம் தேட ஒரு மன்மோஹன் சிங்கும் நரசிம்ம ராவும் கிடைத்தார்கள்.

அக்கட்டுரையில் ராஜாஜியின் இரண்டாவது தடவையிலான சென்னை ராஜதானி முதல்வர் பதவிக் காலம் பற்றி நான் நினைவு கூர்ந்திருந்தேன். அதனைச்

சிலாகித்து ஆசிரியருக்குப் பல கடிதங்கள் வந்தன. அவற்றுள் சில, அடிப்படைக் கல்வி பெறுவது அறிவு வளர்ச்சிக்கேயன்றி வேலை தேடித் திரிய அல்ல என உணரவைத்து அதன் காரனமாக இளமையிலேயே தொழில் ஒன்று கற்றுத் தேர்ந்து, இப்பொழுது நல்ல நிலையில் இருப்பதாக ராஜாஜிக்கு நன்றி தெரி

வித்திருந்தன!

இதுதான் கற்பக வினாயகம் சூதறிஞராகக் காண்கிற ராஜாஜியால் நமக்குக் கிடைத்த பலன்.

அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் பற்றியும் நண்பர் தமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விமர்சனம் செய்துள்ளார். அதனை அடுத்த கச்சேரியில் வைத்துக் கொள்வோம். இட ஒதுக்கீடு என்பது சல்லிசாகக் கிடைக்கிற சமாசாரமாகப் போய்விடாமல் மிகவும் அவசியமான, தவிர்க்க முடியாத

காரனங்களுக்காக வழங்கப்படுவதாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படைக் குறிிக்கோள். இன்றைய இடஒதுக்கீடுக் கொள்கை, அனேகமாக எல்லா வகுப்பினரையுமே சுய மரியதை இழக்கச் செய்து ஒவ்வொரு வகுப்பும் லஜ்ஜையின்றத் தன்னை மிகவும் பிற்பட்ட வகுப்பாக அறிவிக்கக் கோரி மனுக் கொடுக்கச் செய்துவிட்டதே, இது ஈ.வே.ராவின் சுய மரியாதைக் கொள்கைக்குப் பொருத்தம்தானா என்று யோசிக்க வேண்டாமா ?

எனக்குத் தெரிந்த, நான் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்தவற்றைப் பலரும் விரும்பியதற்கு இணங்கவே என் பார்வைக்குப் பட்டவிதமாக இங்கு பதிவு செய்ய முன் வந்துள்ளேன். எவ்வித உள் நோக்கமும் இன்றியே இவ்வினையினை ஆற்ற முற்பட்டுள்ளேன். ஆகவே எதிர்வினைகள் இடுப்புப் பட்டிக்குக் கீழே அடிப்பனவாக இல்லாமல் மாற்றுக் கருத்தை முன் வைத்து என்னையும் அதற்கு ஒப்புக் கொள்ளச் செய்வதாக இருப்பதுதான் சரியாக இருக்கும். என் தகவல் தவறாகவும் இருக்கலாம். முறைப்படி எடுத்துக் காட்டினால் திருத்திக் கொள்ளத் தயாராகவே இருக்கிறேன். ஏனெனில் ஒரு காலகட்டத்தின் நிகழ்வுகள் சரிவரப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுதான் நம் அனைவரின் அடிப்படையான குறிக்கோள். உங்களில் பெரும்பாலோர் படங்களாக மட்டுமே பார்த்த பலரை ரத்தமும் சதையுமாய் நெருக்கத்தில் பார்த்துப் பழகியவன். ஆகையால் உங்களைக் காட்டிலும் அதிக வாத்சல்யத்துடன் அவர்களை நினைவு கூர்வேன் என்பதை

நம்புங்கள். வீண்பழி சுமத்த மாட்டேன், எவர் மீதும்.

—-

malarmannan79@rediffmail.com

.

.

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்