ராங்கேய ராகவின் படைப்புலகம்

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

எச். பீர்முஹம்மது.


கடந்துபோன படைப்பாளியின் படைப்புகளைப் பற்றி மதிப்பீடு செய்வது ஒரு நேர்மையான செயல்பாடு. குறிப்பிட்ட கோட்டுத்துண்டில் அவன் நகர்ந்து சென்ற வேகம் ஏற்படுத்திய பாதிப்பு காலத்தை முன்னோக்கி நகர்த்த கூடியது. சிலாின் படைப்புகள் பற்றிய மதிப்பீடுகள்/ விமர்சனங்கள் அவன் காலம் கடந்து விட்ட பிறகே வெளிவருகின்றன. தமிழ்ச்சூழலில் நவீன இலக்கிய காலகட்டம் என அறியப்படும் மணிக்கொடி எழுத்தாளர்களின் படைப்புகள் அவர்கள் காலம் கடந்து பத்து/ பதினைந்து ஆண்டுகள் கழித்தே வெளி உலகுக்கு தொியவந்தன. இன்று தமிழ்ச்சூழலில் புதுமைப்பித்தன் என்றால் அநேகம்பேர் அறிந்திருப்பார்கள். அவர்கள் வாழ்ந்தபோது கிடைக்காத மதிப்பும்/ மாியாதையும் இறந்தபிறகு வந்து விடுகிறது. அம்மாதிாியே ராங்கேய ராகவும் அவரது படைப்புகளும்/ ராங்கேய ராகவ் இந்தி இலக்கியத்தின் முன்னோடி. பிரேம்சந்த்/ யஷ்பால் இவர்களின் காலகட்டத்தை சேர்ந்தவர். நெடுநாட்கள் வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே காலம் கழித்த அவர் எழுத்திற்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்து கொண்டார். பலருடைய வற்புறுத்தல் காரணமாக சுலோசனாவை திருமணம் செய்துகொண்டார்.

ராங்கேய ராகவின் படைப்புகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்யத்தேவையான துணிவும்/ முயற்சியும்/ முனைப்பும் எவாிடமும் இல்லை. காரணம் அவர் தொடாத துறையோ/ சொல்லாத விஷயமோ இல்லை என்று கூறலாம். நாவல்/ சிறுகதை/ கவிதை/ விமர்சனம்/ நாடகம்/ சமூகவியல்/ வரலாறு/ கலாச்சாரம் ஆகிய எல்லா துறை சார்ந்த விஷயங்களும் அவாின் கைக்குள் வந்தன. அவரது நாவல்கள் மொத்தம் 38 வெளியாகி உள்ளன. அதில் ஆயிரம் பக்கங்கள் கொண்ட மகாயாத்திரா நாவலும் அடங்கும். கிட்டத்தட்ட 80 கதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறார். அவாின் துவக்கம் கவிதையாக அமைந்தது. அவாின் முதல் கவிதை தொகுப்பு அஜேய் கண்டஹர். 1944இல் வெளிவந்தது. இதற்கு முன்னரும் பின்னரும் எழுதிய கவிதை தொகுப்பு பிகல்தே பத்தர் 1946ல் வெளிவந்தது. அவாின் கவிதைகளில் புரட்சிதொனியே மேலோங்கி நின்றது. ஆழ்மன வெளிப்பாடே கவிதையாகும். இச்சூழலில் அவர் கவிதை தீவிர வாசகனுக்கு அலுப்பாக இருக்கலாம். ஆனால் அவாின் கவிதைகளில் அதற்கான வீச்சு இருந்தது. நாஜிகளின் ஆக்கிரமிப்பை தீரத்துடன் எதிர்த்து நின்று போராடிய ரஷ்ய மக்களின் வீர வரலாறுதான் அஜேய் கண்டஹர். ரஷ்ய புரட்சிக்குப்பிறகு நடைபெற்ற இந்திய சுதந்திர போராட்டத்தில் ரஷ்யாவின் பாதிப்பும் முக்கிய பங்கு வகிக்க தொடங்கியது.

கூர்மையான அறிவுத்திறன் தான் ராங்கேய ராகவின் சிறப்பு. தன் அறிவு/ உணர்ச்சி தளம் விாிவடைய அவர் தனக்குள் இருந்த எல்லைப் பாடுகளை நீக்கினார். ராங்கேய ராகவ் ஒரு நாவலாசிாியர் என்ற முறையில் கரெளந்தே (பொம்மைவீடு) நாவலுடன் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். அவாின் பல நாவல்கள் அலுப்புதட்டக்கூடியவை. அவரது பெரும்பாலான படைப்புகளில் ஒரு சீரான கட்டுக்கோப்போ/ மெருகோ படைப்பாளியின் சுய கலையுணர்வோ/ அனுபவபூர்வ தாிசனமோ மிக குறைவாக உள்ளது. தீவிரமான அனுபூதி நிலையின் பிரம்மாண்டம் குறைவு. அவாின் அறிவுத்திறனின் வீச்சு அதிகம். இதனால் அதிகமாக எழுதிக் குவித்துள்ளபோதும் ராங்கேய ராகவ் கவிதை/ நாவல்/ சிறுகதை இலக்கியத்தில் அவரது சமகாலத்தவர்களும்/ அவருக்கு பின்வந்தவர்களும் தங்களது ஒன்றிரண்டு படைப்புகளின் மூலமே எளிதாக கிடைத்துவிட்ட இலக்கிய அந்தஸ்தை பெறாமல் போய்விட்டது. ராங்கேய ராகவின் ‘ானமும்/ தேர்ச்சியும்/ மொழி நுட்பமும் அவரது படைப்பாற்றலுக்கு தடையாக உள்ளது. தன் அனுபவபூர்வமான அல்லது அனுபவபூர்வமற்ற ‘ானத்தை வெளிப்படுத்துவதிலேயே அவாின் கலைத்தன்மை தீர்ந்து விடுகிறது என்பது விமர்சகர்களின் அவரைப்பற்றிய விமர்சன நிலைபாடாகும்.

அவாின் நாவல்களை பொறுத்தவரை விமர்சனத்திற்காக கீழ்கண்டவாறு பிாித்துக்கொள்ளலாம்.

சமூக நாவல்கள்

இது நகர்புற மற்றும் கிராமிய வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது.

சாித்திர நாவல்கள்

இம்மாதிாியான நாவல்கள் ராங்கேய ராகவ் அவாின் சுய இருப்பு சார்ந்த பின்னணியில் படைத்திருக்கிறார்.

வாழ்க்கை சாித்திரத்தை சித்தாிக்கும் நாவல்கள்

அக்கால கட்டத்தில் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்ச நிலையை ஒட்டி இவை எழுந்தன.

வட்டாரச்சூழலில் எழுதப்பட்ட நாவல்கள்

தான் வாழ்ந்த இடத்தின் புறச்சூழலை ஒட்டி அமைந்தவை.

ராங்கேய ராகவின் படைப்பாற்றலை அவாின் வராலாற்று நாவல்களில் காணமுடிகிறது. அவர் ஒரு முற்போக்காளர். வாழ்க்கைப் பற்றிய தன் கண்ணோட்டத்தையும்/ சிந்தனையும் இந்திய வரலாறு/ கலாச்சார பின்னணியில் அறிய முயன்றார்.

இந்திய வரலாற்றின் பெரும்பகுதியை தன் படைப்புகளில்/ நாவல்களில் ஊடகமாக கொண்டு எழுதியுள்ளார். வரலாற்று நாவல்களை படைக்க/ படைப்பாற்றல் எந்த அளவு முக்கியமானது என்பதை குறித்து அவர் எழுதினார்.

‘கரெளந்தேவிற்கு பிறகு என் முன்னே இரண்டு விஷயங்கள் இருந்தன. ஒருபுறம் வாழ்க்கையின் யதார்த்தம் என்னை நிகழ்காலத்தின் பால் இழுத்தது. மற்றொருபுறம் இந்தியாவின் ஆன்மா/ அதன்மொழி மற்றும் கலாசாரத்தின் மகத்தான தன்மை என்னை முற்றிலும் உட்கிரகித்தது. கடந்த காலத்தின் பல்வேறு யுகங்களின் போராட்டங்களிடையே மனிதனை புாிந்துகொள்ள/ இனம் கண்டுகொள்ள முயற்சித்தேன். ‘

ராங்கேய ராகவின் கண்ணோட்டம் தனிப்பட்ட முறையில் தன்னடக்கத்துடன் கூடியதாக தோன்றுகிறது. மொகஞ்சதாரோ நாகாீகத்தின் வரலாற்றை/ பாரபட்சமின்றி வெளிப்படுத்தி இருக்கிறார்.

சமகால வாழ்வின் பிரச்சினைகள் அவாின் நாவல்களில் அதிகம் இடம் பெறவில்லை. தனிமனிதனை விட ஆசிாியாின் பார்வை அந்த யுகத்திற்குள்ளேயிருந்து தான் அதிக கவனத்தை பெற்றிருக்கிறது.

பெரும்பாலும் நான் என் வரலாற்று படைப்புகளில் அந்தந்த காலகட்டத்தை காண முயற்சித்துள்ளேன். அந்த யுகத்தின் மூலமாகதான் நான் தனிமனிதனை கண்டுள்ளேன். அந்த மனிதன் இடையறாது உண்மையை தேடிக்கொண்டிருக்கிறான் என்று என்னால் கூற முடியும்.

அவரது இக்கண்ணோட்டம்தான் அவரது நாவல்களில் பெண்ணின்நிலை/ மாறிவிட்ட அதன் உருவம் மனிதனுக்கும் சமூகத்திற்கிடையேயுள்ள பரஸ்பர தொடர்பு/ போரும் அமைதியும் போன்ற என்றென்றும் அழியாத சாசுவதமான பிர்சினைகளுக்குதான் முக்கியத்துவம் அளித்து அவற்றை கடந்த காலமென்னும் விசாலமான பின்னணியில் ஆராய முற்பட்டிருக்கின்றன.

ராங்கேய ராகவன் படைப்புகள் அவாின் காலகட்டத்தில் விமர்சகர்களால் தரமற்றவை என்று புறக்கணிக்கப்பட்டன. தீவிரம் சார்ந்த அளவுகோல் எது என்பதை தீர்மானிக்கும் பிரச்சினையில் இதனால் அவருக்கு விமர்சகர்கள் மீது கோபமும்/ வெறுப்பும் இருந்தது. முற்போக்காளராக இருந்தாலும் இடதுசாாி இயக்கத்துடன் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை. காரணம் இயக்கத்தின் கொள்கைகள் ஸ்தோனோவியம் மாதிாி படைப்பாளியின் மீது திணிக்கப்படும் போது அவனின் சுயத்துவம் அடிபட்டு போய்விடுகிறது என்பதே. அவாின் கடைசி நாவலான ஆகிாி ஆவாஜ் பரபரப்பாக பேசப்பட்டது. காரணம் கடைசி நாவல் என்பதின் குறியீடாக எல்லாமே கடைசி என்கிறபொழுது அவை வாசகனின் வாசிப்பு பரப்பில் அதிர்வை ஏற்படுத்துவது இயல்பான விஷயமாகும்.

1923ம் ஆண்டு பிறந்த ராகவ் 1962ம் ஆண்டில் தன் 39ம் வயதிலேயே மரணமடைந்தார் இவ்வளவு குறுகிய காலகட்டத்துக்குள்ளேயான படைப்பாளியின் இலக்கிய ஆளுமை என்பது விலக்கி அப்புறப்படுத்த முடியாததாகும்.

***

peer13@asean-mail.com

Series Navigation

எச்.பீர்முஹம்மது

எச்.பீர்முஹம்மது