யாமறிந்த உவமையிலே

This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue

அணைக்கட்டு பாலா


பெண்ணைச் சிறு வெண் பல்லிக்கு… நிறுத்தும். பல்லியே அருவருப்பானது. அதிலும் பெண்கள் பல்லியைப் பார்த்தாலே அலறுவார்கள். இதற்கு பாரதியிடம் கடன் வாங்கித் தலைப்பு.

மன்னிக்கவும். உவமை என்றாலே உவமையும் உவமிக்கப்படும் பொருளும் அனைத்துவகையிலும் சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கிளி போலப் பெண்ணென்றுச் சொல்லிவிட்டு மூக்கு வளைந்த பெண்ணை முன்னே நிறுத்தினால் எப்படி?

கவிஞன் பாடுபொருளை உருவகமாக்கிக் கூறும்போது உவமைக்கற்கண்டு நெஞ்சில் இனிக்கிறது. அதுவே குறியீடாகக் குறிப்பிடும்பொழுது கவிதையின் கருவினை, பலப்பண்புகளைத் தொட்டுப் படிப்பவரின் சிந்தனையைத் தூண்டுகிறது.

தளையறுத்தப் புதுக்கவிதை உலகில், கவிதையின் மேன்மை அதில் சொல்லப்பட்டுள்ள படிமத்தால் பரிமளிக்கின்றது. யானையைப் போல் என்று படிக்கும்பொழுது ஏற்படும் புலக்காட்சியை விடத் துதிக்கையால் செடிகொடிகளைத் துவம்சம் செய்து வரும் யானை என்று படிக்கும்பொழுது மனத்தில் காட்சி விரைவில் உருவாகிறது. நிலைத்து நிற்கிறது. கவிஞன் எடுத்துக்கொண்ட கருவைப் படிமம் எப்படி பலப்படுத்துகிறது எனக் கவிதைச் சுவைஞனை யோசிக்க வைக்கிறது.

மேலே குறிப்பிட்ட பல்லி, சங்க காலச் செய்யுள் ஒன்றில் தலைவனை இழந்து தவிக்கும் தலைவி தன்னை பல்லியுடன் ஒப்பிடும் வகையில் கூறப்பட்டுள்ளது. தலைவி தன்னை வண்டிச் சக்கரத்தின் மர ஆரக்கால் ஒன்றில் தொற்றிக்கொண்டு அதனை இறுகப்பற்றிக் கொண்டுள்ள வெண் சிறுபல்லியுடன் ஒப்பிட்டுக் கொள்கிறாள். ஜெயமோகன் எழுதியுள்ள சங்கச் சித்திரங்கள் என்னும் நூலில் இக்கவிதையைப் படித்தேன். படித்து முடித்தவுடன் பல்லி என் மனதைப் பற்றிக் கொண்டு, ஒட்டிக் கொண்டுச் சுற்றிச் சுற்றி வர ஆரம்பித்தது.

அச்சுடைச் சாகாடு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி

அச்சு கொண்ட சக்கரத்தின் ஆரக்கால் ஒன்றில் பொருந்தியுள்ளச் சிறிய வெளிறிய பல்லி போன்று பெருந்தூரம் கடந்துவிட்டாளாம் இத்தலைவி.

இப்பல்லியின் இடப்பயற்சி / நகர்வு மூன்று வகைகளாகப் பார்த்தேன். மூன்றுவகைகளுமே பெண்களின் பல்வேறு நிலைப்பாடுகளை அருமையாக வெளிப்படுத்துவது என்னை அதிசயிக்க வைத்தது. பல்லியின் வெவ்வேறு நிலைகளை நான் பட்டியலிடுகிறேன். பெண்களின் வாழ்க்கை நிலைகளை நீங்கள் நிரப்பிக்கொள்ளுங்கள்.

முதல் நிலை: பல்லி நகரவேயில்லை. பிடி தவறினால் வண்டியிலிருந்து கீழே விழ நேரிடும். மற்ற வண்டிகளால் நசுக்கப் படலாம். கழுகுப்பார்வைக்கோ காக்கைப்பார்வைக்கோ தப்ப முடியாமல் போகலாம். வேறுவண்டியிலும் தொற்றிக் கொள்ளக் கூடியச் சாத்தியக் கூறும் உண்டு.

இரண்டாம் நிலை: பல்லி தன் கால்களைச் சற்றும் நகர்த்தாமல், ஒடுகின்ற வண்டிச்சக்கரத்தின் ஆரக்காலைப் பற்றிக் கொண்டுள்ளதால் சக்கரத்தின் அச்சினையேச் சுற்றிச் சுற்றி வருகிறது.

மூன்றாம் நிலை
நகராத பல்லி ஒரே மையத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது. பெயர்ச்சியின்மையும் சுழற்ச்சியும் மட்டுமா? இல்லை. இடப்பெயர்ச்சியும் உண்டு. வண்டியோடு பல காத தூரம் 25, 30, 40, 50, 60 காதங்களை, மேடுபள்ளங்களைக் கடந்து வந்துள்ளது.

பெண்களின் வாழ்க்கையில் மேற்சொன்ன நிலைகளை ஒப்பிட்டுவிட்டீர்களா?.

எவ்வளவு பொருத்தம்! நகராத, சுழலுகிற, இடம்பெயர்கிற மூன்றுநிலைகளையும் கொண்ட எவ்வளவு அற்புதமான படிமம்!

இப்படிப்பட்டப் படிமத்தைக் கையாண்டுள்ள அத்தமிழ்க் கவிதை எவ்வளவு பழமையானது தெரியுமா? கணவனை இழந்த தலைவி குயவனை மன்னா என்று விளித்து அவன் அருள் வேண்டுகிறாள். ‘கலம் செய் கோவே! என்னவன் இறந்ததால் அவனுடன் என்னையும் வைக்குமாறு ஈமத்தாழியைப் பெரிதாகச் செய்தருள்’. தற்காலத்தில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுக்கும் படிவங்கள் மற்றும் முதுமக்கள் தாழி நடைமுறையில் இருந்த காலத்தின் இறவாப் படிமம் இது.

அணைக்கட்டுபாலா


anaikattubala@gmail.com

Series Navigation

author

அணைக்கட்டு பாலா

அணைக்கட்டு பாலா

Similar Posts