யாதுமாகி நின்றாய் பராசக்தி…….

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

இளந்திரையன்


எல்லாம் முடிந்து விட்டது. வீடே வெறிச்சென்றிருக்கிறது. துக்கத்திற்கு வந்திருந்த உறவுகளெல்லாம் கலைந்து விட்டிருந்தன.

தன்னையும் அறியாமல் ‘கமலம் ……. கமலம் ‘ என்று பல முறை அழைத்து விட்டார். இருபது வருடங்கள் அவரின் அதிகாரத்திற்கும் ஆணவத்திற்கும் ஆங்காரத்திற்கும் பதில் சொல்லிய அவள் இன்று இல்லையென்றாகி விட்டது.

இத்தனை காலமும் எடுத்ததற்கெல்லாம் ‘கமலம்……. கமலம் ‘ என்று கூப்பிட்டுப் பழகிய பழக்கத்தை அவரால் இன்னும் தான் மாற்றிக் கொள்ள முடியவில்லை. தனது ஒவ்வொரு தேவைக்கும் எழுந்து எழுந்து செல்லும் போது தான் வாழ்க்கை பற்றிய சிரமம் புரிந்தது. அவள் இருந்த வரை எந்த சிரமமும் இருக்கவில்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் விசுவாசமான அடிமையாக அவள் இருந்தாள்.

அவரது கோபம் வெறுப்பு காமம் துயரம் எல்லாவற்றையும் இறக்கி வைக்கும் வடிகாலாகத் தான் அவள் இருந்தாள். ஆண்மையின் ஆங்காரத்தை அவளுள் இறக்கிய போது அவருக்காக இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்தாள். சொடுக்கு விரலில் முந்தானை விரித்து குற்றேவல் செய்து அவர் முகக்குறிப்பு பார்த்து காரியமாற்றி……….. இருபது வருடங்கள் அவருடன் சேர்ந்து வாழ்க்கையை நகர்த்தி வம்சம் வளர்த்து வாழ்வை முடித்து…….. எல்லாம் முடிந்து விட்டது.

அவரைக் கவனித்துக் கொள்வதே அவள் கடமை என்பதைத் தவிர வேறு விதமாக அவளைப் பற்றி என்றும் அவர் சிந்தித்துப் பார்த்ததே கிடையாது. இப்பொழுது அவள் இல்லாத இந்த வேளையில் அவளைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கிறார்.

பெற்ற பிள்ளைகளே – அவர் ரெளத்திரம் அறிந்து ஆங்காரம் அறி;ந்து- அவரைத் தவிர்த்து தனிமையில் விட்டபோது அவளைப் பற்றி சிந்திப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.

அவர் பிள்ளைகள் அவரை விட்டுப் பிரிந்த போதே அவர்களைத் தன்னுடன் சேர்த்துப் பிணைத்திருந்த நுால் அறுந்து விட்டதை அவர் புரிந்து கொண்டார்.

இன்முகம் காட்டி ஓடியோடி அவள் பணிவிடை புரிந்த போதும் சில வேளைகளில் அவர் ரெளத்திரம் பொங்கி அவளை நய்யப் புடைத்ததும் அவர் நினைவுக்கு வந்தது. மூக்கிலிருந்து இரத்தம் பெருக கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோட அவள் நின்ற கோலம் இப்போது அவரை என்னவோ செய்தது. மூன்று நாட்கள் அவர் முன்னால் வராமலே அவரை அவள் கவனித்துக் கொண்டதையும் அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அந்த மூன்று நாட்களும் வயது வந்த பிள்ளைகள் அவர் பின்னால் கூடிக் கூடிக் கதைத்ததும் திட்டங்கள் போட்டதும் அவர் அறியாததல்ல.அவர் அகங்காரம் அவை எவற்றையும் ஒரு பொருட்டாகவேனும் எடுத்துக் கொள்ள விடவில்லை. ஆனாலும் அவள் என்ன சொன்னாளோ …….. என்ன செய்தாளோ ….. முறுக்கிக் கொண்டிருந்த பிள்ளைகள் சாதுவாகிப் போய்விட்டிருந்தார்கள். மீண்டும் அவரே அந்தக் குடும்பத்தின் தலைவனாக கெளரவமாக வலம் வந்தார்.

பிள்ளைகளின் திருமணங்கள் என்று வந்த போது கூட அவர் எண்ணங்கள்; வேறாக இருந்த போதும் எப்படி எப்படியோ திசை மாறி ஏதேதோ நடந்து விட்டன.

ஆனால் இப்போது அவள் இல்லாத போது தான் அவருக்கு எல்லாம் விளங்குகின்றது. அவள் தனக்காக மட்டும் வாழவில்லை …… இந்தக் குடும்பத்தையே தாங்கிப் பாதுகாத்ததும் அவருக்குப் புரிந்தது.

அவர் அவளைப் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்கப் பல உண்மைகளை அவரால் விளங்கிக் கொள்ள முடிந்தது. அவள் சிரித்துச் சிரித்து என் விருப்பம் போலவே எல்லா நன்மையான சரியான முடிவுகளையும் அவளே எடுத்திருப்பது புரிந்தது. அவளைப் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க பல புதிர்கள் விடுபடுவது ேபுால அவர் உணந்தார்.

இதுவரை அவர் தான் குடும்பத்தையே பாதுகாத்தது போன்ற இறுமாப்புடன் தான் இருந்து வந்தது புரிந்தது. ஆனால் அவளைத் தவிர்த்து இந்த இருபது வருட வாழ்க்கையில் எதுவும் இருந்திருக்க முடியாது என்பதை அவர் இப்போது உணர்ந்து கொண்டார்.

அவரைக் கூட ஒரு குழந்தையைக் காப்பது ேபுால அவள் காத்திருந்ததை அவர் விளங்கிக் கொண்டார். அவர் காலடியில் விழுந்து கிடந்த பூச்சியம் என்று நினைத்திருந்த அவள் அவரின் பின்னால் எத்தனை பூச்சியங்களாக

வியாபித்திருந்தாள் என்பதையும் தனக்கு எத்தனை மதிப்பையும் பெறுமதியையும் அவள் தந்திருந்தாள் என்பதையும் எண்ணிப் பார்த்த போது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவளுடைய வியாபகத்தின் முன்னால் தான் ஒன்றுமில்லாததாக உணர்ந்தார். அவர் வாழ்வு முழுவதும் வியாபகமாகவும் வாழ்கையின் நிறைவாகவும் இருந்த அவளை அவர் நடத்திய விதத்தை எண்ணிய போது வெட்கமாக இருந்தது.

‘கமலம் ………. கமலம் ……. அடுத்த பிறப்பிலும் நீ தான் என் மனைவியாக வர வேண்டும் ……… ஆனால் என்னை நீ தாங்கியது போல அடுத்த பிறப்பிலாவது நான் உன்னைப் பாதுகாத்து அன்பு காட்ட வேண்டும் ….. எண்ணங்கள் வார்த்தைகளான போது அவர் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. அந்தக் கண்ணீரோடு சேர்ந்து அவர் நெஞ்சத்து வெம்மை கோபம் ஆங்காரம் குரோதம் எல்லாம் வெளியேறிக் கொண்டிருந்தன. இப்போது அழுவதற்காக அவர் வெட்கப் படவில்லை.

‘கமலம் ……… கமலம் ……… யாதுமாகி நின்றாய் பராசக்தீ …….. ‘

Series Navigation