மொழிவது சுகம்: அடித்து வளர்க்கிற பிள்ளைகள்

This entry is part [part not set] of 26 in the series 20100115_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


சராசரி தமிழனுக்கு சூடுபிடிக்கும் தேர்தல் முக்கியம்.. புவி வெப்பமாதல் குறித்து ஒரு மாநாடு கோபன்ஹேகனின் கூட்டப்படுகிறது. அதுபற்றிய செய்திக்குறிப்பு எதையும் தமிழ் தினசரிகளில் பார்க்க நேர்ந்ததில்லை. இயற்கைக்கு எதிராக நிகழும் இப்பயங்கரவாதம் குறித்து தமிழ் தினசரிகள் கவலைகொள்ள எதுவுமில்லை. கடந்த ஆண்டு மும்பை தாஜ் ஓட்டலில் பலியாவனர்களின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்ட செய்தியைத் தமிழ் தினசரிகளில் பார்க்க முடிந்தது. நாடுமுழுவதும் கண்ணீர் அஞ்சலி. கூட்டுபிரார்த்தனை. பலியானவர்கள் தாஜ் ஓட்டல் வாடிக்கையாளர்கள் என்பது காரணமாக இருக்கலாம். வி.ஐ.பி. உயிர்கள். தெருவோரம், புகைவண்டி இரயிலில், கடைவீதிகளில் பயங்கரவாதத்தால் பலியான உயிர்களுக்கு இத்தனை மரியாதையை எதிர்பார்க்க முடியாது.

குழைந்தைகளைக் கொஞ்சி, திரைப்படம் பார்த்து, தினசரியில் மூழ்கி, கோபம் வருகிறபோது காரணகாரியமின்றி சண்டையிட்டு, கோவிலைப் பார்த்த நேரங்களில் கையெடுத்துக் கும்பிட்டு வாழப்பழகிய சராசரி உயிரின் அன்றாட வாழ்க்கை சட்டென ஒரு நாள் இதுபோன்ற சம்பவங்களால் பிறழ்கிறது, தடம் புரண்டுபோகிறது. எங்கே யாரிடமும் அழ முடியும்? இவர்களில் எத்தனைபேருக்கு சம்பவத்திற்குப் பிறகு வாய்க்கிற வாழ்க்கையை எதிர்கொள்ளும் திறனுண்டு? உயிரிழந்தவர்கள், காயமுற்றவர்கள், கால்கை இழந்தவர்களென்று பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். சம்பவத்தின்போது பத்திரிகைகாரர்களுக்காக அரசாங்க எந்திரங்கள் ஓடோடிவந்திருக்கும், பொலபொலவென்று கண்ணீரைச் சிந்தியிருக்கும், ஆறுதல் சொற்களுக்கும் பஞ்சமிருந்ததில்லை. இன்றைக்கு அந்த அப்பாவிகளின் கதியென்ன? பயங்கரவாதத்திற்கும் சரி, அதனை அடக்க நடவடிக்கைகள் எடுக்கிறேன் என்று சொல்லும் அரசாங்க வாய்ச்சவடால் முயற்சிகளுக்கும் பலியாவதென்னவோ அப்பாவி உயிர்களே. தலிபான்களைக் காட்டிலும், அமெரிக்க மற்றும் மேற்கத்திய படைகளின் தாக்குதலுக்குப் பலியாகும் ஆப்கானியர்கள் எத்தனைபேர். பயங்கரவாதமும் தங்கள் இருப்பை உணர்த்த ஆடுகளைத்தான் தேடி அலைகின்றன. இருதரப்பினருமே எதிரிகளோடு நேரடியாக மோத வக்கற்றவர்கள், தங்கள் பலத்திற்கு நோஞ்சான்களை பலிகொடுப்பது இருவருக்கும் ஒருவகையில் சௌகரியமாக இருக்கிறது. இரக்கமற்று மெலிந்தவர்களை பலிகொடுத்துவிட்டு சந்தர்ப்பம் வாய்க்கிறபோது இரத்தத்தில் தோய்ந்த நாக்கும் பல்லிடுக்கில் சதை துணுக்குமாக சமாதானம் பேச அமர்வார்கள்.

”வெடிபட்டு சாகாமல்
வெகுளியாய்
விஷக்காற்றைக் குடித்துப் பின்
நலிவுற்று முடமாய் துடிக்காமல்
முழு உடம்பாய்
இயற்கையாய் சாவது
அரிது, அரிது இன்று மிக அரிது!’
கவிஞர் வைதீஸ்வரனின் ‘மைலாய்’ வீதி நினைவுக்கு வருகிறது.

எதிரெதிராக மோதிக்கொள்கிறபோது புலிகளை வென்ற சிங்கங்கள், உண்ட மயக்கத்தில் நித்திரைகொள்கிற நேரத்தில் வாலைக் கடிக்கிற எலிகளைத் துரத்த வகையறியாது விழிக்கின்றன. கடிபடுவது வால் என்பதால் அவ்வபோது உறக்கம் கலைந்து தலையை உயர்த்தி கர்ஜிப்பதோடு சரி, கழுத்தினை எலிகள் நெருங்காதென்கிற நம்பிக்கை சிங்கங்களுக்கு நிறையவே உண்டு. வால் அப்பாவி உயிர்கள், எலிகள் தீவிரவாதிகள். பயங்கரவாதம் தீர்வுகாணமுடியாத, குணமாவாதற்கு வாய்ப்பற்ற மற்றொரு பறவைக் காய்ச்சல் அல்லது பன்றிக்காய்ச்சல். காரணமில்லாத பகை ஏது. பின் நவீனத்துவவாதிகள் சொல்வதுபோல பகை-நட்பினை, கோபம்- அன்பினை விளிம்பு நிலைக்குத் தள்ளியிருக்கிறது. ஆண் பெண், பணக்காரன் ஏழை, பகல் இரவு, மகிழ்ச்சி துக்கம், வெற்றி தோல்வியென நீங்கள் சோர்வுறும்வரை இருமைப் பண்புகளால் ஆன இவ்வுலகை கட்டுடைத்துக்கொண்டுபோகலாம். பின் நவீனத்துவாதிகள் இவை அனைத்தையும் மையம் விளிம்பு என்று இரு பெரும் பிரிவுக்குள் அடக்கினர். இருப்புகளில் ஒன்று மற்றமையை மறுக்கிறது, மற்றொன்றின் இருப்பினை ஏற்க அதற்குச் சம்மதமில்லை. ஆக யுத்தம், மோதல், போட்டி ஆகியன பிறமைகளை விளிப்புநிலைக்குத் தள்ளும் முயற்சி. டோம் ஜெரி விளையாட்டு. உண்மையில் யுத்தமோ மோதலோ சமபலம்கொண்டவர்களிடம் ஏற்படுவதில்லை. பிற உயிர்கள் மீது நிகழ்த்தும் அநேக தாக்குதல்களுக்கு ஏற்ற தாழ்வுகள் காரணமாக இருக்கின்றன. ஈராக் மீது யுத்தம் செய்ய தாயாராக இருக்கும் மேற்கத்திய நாடுகள் சீனா, வடகொரியா என்றால் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றன. சீனாவுக்கு திபெத்தை விழுங்குவது சுலபம். ஓரளவு ஆயுதபலங்கொண்ட தைவான் நாட்டினை சொந்தமாக்கிக்கொள்வதில் அத்தனை அவசரம் காட்டுவதில்லை.

இந்த மனம் எங்கிருந்துவந்தது? இதற்கான ஆரம்பம் எங்கே? அலுவலகத்தில் ஒரு மேலதிகாரி அவனுக்குள்ள பதவி பலத்தில் கீழீருக்கும் ஊழியனைத் திட்டுகிறான். மாலையில் வீடு திரும்பிய ஊழியனுக்கு, கணவன் என்ற தகுதி தரும் பலத்தைப் பிரயோகிக்க தம்மினும் பார்க்க எளியதொரு உயிர் தேவை, மனைவி கிடைக்கிறாள், அவள் தம் பங்கிற்கு கோபத்தைக் குழந்தைமீது செலுத்துகிறாள் ஆக எதிர்ப்பவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம். கோபத்திற்கென தனி உயிரணு இருக்கிறதா, அதை பிரித்தெடுத்து சிகிச்சை அளிக்க்கும் பட்சத்தில் அத்தனைபேரும் சாந்த சொருபீகளாக மாறிவிடமுடியுமா? எப்போதோ ஒரு முறை படித்த நூலில் வன்முறைக்கு உணவும் காரணமென்று படித்திருக்கிறேன். அசைவ உணவுகாரர்கள் கோபக்காரர்களென்றும், சைவ உணவு பிரியர்கள் அமைதியானவர்களென்றும் படித்த நினைவு.விலங்குகளிடத்தில்கூட இப்பேதங்களைப் பார்க்கத்தான் செய்கிறோம்.

மருத்துவர் எட்விஜ் ஆந்த்தியெ இங்கே (பிரான்சு நாட்டில்) ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு பெண்மணி. இவரொருபுகழ்பெற்ற குழந்தைகள் நல மருத்துவருங்கூட. உலகில் வன்முறையைக் குறைக்கவேண்டுமெனில், பெற்றோர்கள் பிள்ளைகளைத் தண்டிப்பதை தடைசெய்யவேண்டும் என்கிறார். சிறுவயதில் அடித்து வளர்க்கப்படுகிற பிள்ளைகள் அனைவருமே பின் நாட்களில் வன்முறையைத் தேடுபவர்களாக இருப்பார்கள் என்பது இவரது கருத்து. இதற்காக பிரான்சு நாட்டின் சிவில் சட்டத்தில் போதிய திருத்தம் செய்வதற்கான யோசனையை அரசுக்குக் வழங்கியிருக்கிறார். அடித்து வளர்க்காத பிள்ளைகள் உருப்படமாட்டார்களென இந்தியர்களில் பெரும்பாலோனோர் நம்புவதுபோல ஐரோப்பியர்களும் தமது பிள்ளைகள் உருப்படவேண்டுமெனில் தண்டிக்கப்படவேண்டுமென நினைப்பவர்கள். பிரெஞ்சு மக்களில் 87 விழுக்காடு மக்கள் இன்றைக்கும் தம்பிள்ளைகளைத் தண்டிப்பற்கு உகந்த இடம், அவர்களின் பின்புறமென நம்புகிறார்கள். கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம், குழந்தைகளின் பின்புறத்தில் அடிக்கின்ற பழக்கத்தைப் பெற்றோர்கள் கைவிடுவதற்கு ஆவன செய்யவேண்டுமென தமது உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டது. அதனை ஏற்று இத்தாலி, ஸ்பெயின், சைப்ரஸ் சட்டங்கள் இயற்றின. பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுதலைப் பூர்த்திசெய்யவேண்டிய நிர்ப்பந்தம். எட்விஜை இது பற்றி ஆய்ந்து ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கப் பிரெஞ்சு அரசாங்கம் கேட்டுக்கொண்டது. அவ்வறிக்கையில் சொல்லப்பட்டதுதான் மேலே நீங்கள் படித்தது. தமது 30 ஆண்டுகள் மருத்துவ அனுபவத்தில் மழலையர் பள்ளிகளில் பிள்ளைகள் கடித்துக்கொள்வதற்கும் தொடக்கப்பள்ளிகளில் கட்டிப்புரண்டு சண்டையிடுவதற்கும், நடுநிலை பள்ளிகளில் பேட்டை ரவுடிகள்போல நடந்துகொள்வதற்கும், பருவ வயதில் பெண்களைச் சீண்டி, அவர்களை வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவதற்கும் ஒரே காரணந்தான், சின்ன வயதில் அவர்கள் பெற்ற தண்டனைகளுக்கு பழிதீர்த்துக்கொள்கிறார்கள் அதாவது எட்விஜ் ஆந்த்தியே கூற்றுப்படி.

———————————————–

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா