மேரி மாக்தலேன் அருளிய பரிசுத்த நற்செய்தி

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

மண்ணாந்தை


ரோமானிய பேரரசில் முக்கிய அதிகார பீடமாக கிறிஸ்தவம் நிலைபெற புறந்தள்ளப்பட்ட அதன் கூறு ஞானத்துவம் (Gnosticism). விளிம்பு நிலையில் அடக்குமுறைக்கு ஆளாகிய ஒரு பிரிவாக கிறிஸ்தவத்தில் அது இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நாக் ஹமாதியில் கிடைத்த கோப்டிக் பால்பைரா சுருள்களில் பதிவுசெய்யப்பட்ட ஞான கிறிஸ்தவத்தின் பரிசுத்த நற்செய்திகள் இன்று திருச்சபைகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நால்வர் பரிசுத்த நற்செய்திகளுக்கும் பழமை வாய்ந்த கிறிஸ்தவத்தின் பதிவுகளாக அறியப்படுகின்றனர். இதனை குறித்த எலெய்ன் பாகெல்ஸின் ஆராய்ச்சியும் நூலும் மிகவும் பிரபலமானது. இவற்றுள் முக்கியமானவை புனித தோமையாரின் பரிசுத்த நற்செய்தியும், அதனைப்போல முழுமையாக கிட்டாத மகதேலேனாவின் மரியாளின் பரிசுத்த நற்செய்தியுமாகும். இவற்றுள் கிறிஸ்து ஜெயந்தியென கொண்டாடப்படும் திருநாளையொட்டியை வாசகர்களுக்கு மகதேலேனாவின் மரியாளின் பரிசுத்த நற்செய்தியை மொழி பெயர்த்து கொடுப்பதில் மகிழ்ச்சியும் திருப்தியும். மொழிபெயர்ப்பில் குறைகள் இருப்பின் மன்னிக்கவும்.

-மண்ணாந்தை.

மேரி மாக்தலேன் அருளிய பரிசுத்த நற்செய்தி

(முதல் ஆறு பக்கங்களை அழிந்துவிட்ட நிலையில் இவ்வாறு தொடங்குகிறது.)

‘…எனில் பருப்பொருளானது இரட்சிக்கப்படுமா ? ‘

இரட்சகர் கூறினார், ‘அனைத்து இயற்கைகளும், உரு கொண்ட அனைத்து வஸ்துக்களும், அனைத்து உயிர்களும் ஒன்றுக்குள் ஒன்றாய் ஜீவிக்கின்றன. பின் அவை தம் வேர்களில் தந்நிறைவடைகின்றன ஏனெனில் பருப்பொருளின் இயற்கை இயற்கையின் வேர்களிலேயே கரைந்தொடுங்குகிறது. காதிருப்பவன் கேட்கக் கடவன் ‘

பேதுரு அவரிடம் கூறினார், ‘அனைத்தையும் எங்களுக்கு நீவிர் விளக்கினீரே எனவே இதையும் எமக்கு விளக்கிடுவீர்: இவ்வுலகில் பாவம் என்பது என்ன ? ‘ இரட்சகர் கூறினார், ‘பாவம் என்கிற ஒன்று தன்னளவில் இல்லை. நீங்கள் விலக்கப்பட்டவற்றைச் செய்கையில் பாவத்தை செய்கிறீர்கள். இதற்காகவே நன்மை உங்களிடத்தில் வந்தது ஒவ்வொன்றினுடையவும் இயற்கைக்காக-ஒவ்வொன்றையும் அதன் வேரினிற்கு நிலைநிறுத்த. ‘ அவர் மேலும் தொடர்ந்தார், ‘இதற்காகவே நீங்கள் பிறக்கவும் இறக்கவும் செய்கிறீர்கள்…எவன் இதனை அறிய முடிந்தவனோ அவன் அறிவானாக…இயற்கைக்கு மாற்றானததிலிருந்து எழும் ஒப்பிடவொண்ணாததோர் கடுமை.பின் முழு சரீரத்திலும் எழும் பெரும் சங்கடம். இது பற்றியே நான் உங்களுக்கு கூறுகிறேன் நல்-தைரியமுடையவர்களாக இருப்பீர்களாக. நீங்கள் அதைரியப்படுத்தப்பட்டாலும் இயற்கையின் பல்வேறு ரூபங்களுக்கும் எதிராக( (தாண்டும் ?-மொபெ) தரியமுடையவர்களாக இருங்கள். காதிருப்பவன் கேட்கக்கடவன். ‘

ஆசிர்வதிக்கப்பட்ட அவர் இவ்வாறு கூறியபின் அவர் அவர்களனைவரையும் வாழ்த்தி கூறியதாவது ‘அமைதி உங்களுடன் உறையட்டும். என் அமைதியை உங்களுக்காக பெற்றுக்கொள்ளுங்கள். ‘அதோ அங்கே ‘ ‘இதோ இங்கே ‘ என வார்த்தைகளால் உங்களை எவரும் தவறான வழிகளிலிட்டு செல்லாதபடிக்கு ஜாக்கிரதையாக இருங்கள் ஏெனெனில் மனிதனின் குமாரனோ உங்களுள் உறைகிறார். அவரையே பின்பற்றுங்கள். அவரை தேடுபவன் எவனோ அவனே அவரை கண்டடைவான்.எனவே செல்லுங்கள் இறைப்பேரரசின் நற்செய்தியை உபதேசியுங்கள். நான் இபே¢போது கூறியவற்றைத் தவிர வேறெதையும் உங்களுக்கு கட்டளையிடவில்லை. நான் சட்டமளிப்பவர்களைப் போல உங்களை பிணிக்கும்படிக்கு எவ்வித சட்டமும் அளிக்கவில்லை. ‘

அவர்கள் மிகவும் துக்கமடைந்து பெரிதும் வருந்தி கூறினார்கள், ‘நாங்கள் புறசாதியாரிடம் எவ்வாறு செல்வோம் ? மனித குமாரனின் இறைஅரசின் நற்செய்தியை எவ்வாறு பிரசங்கிப்போம் ? அவரையே விட்டுவைக்காத போது நாங்கள் எவ்வாறு பிழைத்திருப்போம் ? ‘

பின்னர் மேரி எழுந்து நின்று அவர்களனைவருக்கும் வாழ்த்து கூறி சகோதரர்களிடம் பேசலானாள், ‘வருத்தமடையவோ துக்கமடையவோ அல்லது உறுதியின்றியோ இராதீர்கள். அவரது அருள் என்றும் உங்களனைவருடனும் இருந்து உங்கைளை பாதுகாக்கும். அவர் பெருமையை புகழ்ந்தேத்துவோம். ஏனெனில் அவர் நம்மெல்லோரையும் தயாராக்கி மனிதர்களாக்கினார். ‘ மேரியின் இவ்வார்த்தைகளைக் கேட்டதும் அவர்கள் அனைவரது இதயங்களும் நன்றாகின. அவர்கள் இரட்சகரின் போதனைகளை குறித்து பேசலாயினர்.

பேதுரு மேரியிடம் கூறினார், ‘சகோதரியே நம் மீட்பர் மற்றெந்த பெண்ணைக்காட்டிலும் உம்மிடமே அதிக அன்புடன் இருந்தார். எனவே உமது மனதிலிருக்கும் நம் மீட்பரின் வார்த்தைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் அவை நீங்கள் அறிந்தவை; நாங்கள் அறியாதவை; நாங்கள் கேட்டிராதவை. ‘

மேரி அதற்கு பதிலிறுத்து பின்வருமாறு பகர்ந்தார், ‘ உங்களுக்கு மறைக்கப்பட்டவற்றை இப்போது நான் உங்களுக்கு கூறுகிறேன். ‘ இவ்வார்த்தைகளை தொடர்ந்து கூறலானார், நான் இறைவனை ஒரு காட்சியில் கண்டேன். எனவே நான் அவரிடம் கூறினேன், ‘இறைவரே நான் உம்மை ஒரு காட்சியில் கண்டேனே. ‘ அவர் அதற்கு பதிலளித்து கூறினார், ‘நீ ஆசிர்வதிக்கப்பட்டாய். என் காட்சியிலிருந்து நீ நழுவிட சஞ்சலப்படவில்லை. எங்கு மனம் நிலைக்கிறதோ அங்கேயே தாங்கி நிற்கும் உறுதிப்பாடு எழுகிறது. ‘ நான் அவரிடத்தில் வினவினேன், ‘இறைவரே காட்சியினை காண்பது மனமோ அல்லது ஆன்மாவோ அல்லது உயிரோ ? ‘ மீட்பர் அதற்கு பதிலளித்தார், ‘காட்சி உயிராலோ ஆன்மாவாலோ காணப்படுவதில்லை. இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட மனமே காட்சியினை உணர்கிறது. அதுவே …. ‘

‘…இச்சையானது கூறிற்று, ‘ நீ மேலிருந்து கீழ் இறங்குவதை நான் காணவில்லை. ஆயின் நீ மேலெழுவதையோ நான் காண்கிறேன். எனவே நீ எனக்கே உரியதாக இருக்க என்னிடத்தில் நீ பொய் கூறியதென்ன ? ‘ ஆன்மா பதிலளித்துக் கூறியது, ‘நான் உன்னைக்கண்டேன் ஆனால் நீயோ என்னைக்காணவோ கண்டுதெரிந்து கொள்ளவோ இல்லை. நான் உனக்கு ஆடையாக சேவைபுரிந்தேன் நீ என்னை கண்டறிய வில்லை. ‘ இவ்வாறு பதிலளித்தபின் அது ஆனந்தமாக வெளிச்சென்றது. பின் அது மீண்டும் அறியாமை எனும் மூன்றாவது சக்தியிடம் வந்தது. இச்சக்தி ஆன்மாவிடம் வினவியது, ‘ நீ எங்கே போகிறாய் ? நீ தீமையில் அமிழ்ந்திருக்க வேண்டுமே. நீ அமிழ்ந்தே உள்ளாய். எனவே தீர்ப்பிடாதிரு. ‘ ஆன்மா கூறிற்று, ‘நான் தீர்ப்பிடாதிருக்கையில் நீ தீர்ப்பிடுவதென்ன ? நான் பிணைத்திருக்கப்பட்டேன் நான் பிணைக்கவில்லை.நான் தெரிந்தறியப்படவில்லை ஆனால் நான் தேர்ந்தறிந்தேன். அனைத்துமே விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்துமே விடுதலை அடையும்.. ‘ அவ்வாறு மூன்றாது சக்தியினின்றும் விலகி ஆன்மா மேலே சென்றது அப்போது நான்காவது சக்தியினை அது சந்தித்தது. அந்த நான்காவது சக்தி ஏழு ரூபங்களை கொண்டிருந்தது. ஒன்றாவது இருண்மை; இரண்டாவது இச்சை; மூன்றாவது அறியாமை; நான்காவது இறப்பினின்றும் எழுவது; ஐந்தாவது சரீர மாமிசத்தின் ராச்சியம்; ஆறாவது சரீர மாமிசத்தின் தவறான ஞானம் ஏழாவது வெறித்தன்மை கொண்ட ஞானம். இவையே ஆத்திர வெறியின் ஏழு ரூபங்கள். அவை ஆன்மாவைக் கேட்டன, ‘மனிதர்களைக் கொல்பவனே எங்கிருந்து வந்தாய் ? வெட்டவெளியின் வெற்றியாளரே எங்கே செல்கிறாய் ? ‘

ஆன்மா அதற்கு பின்வருமாறு பதிலளித்தது, ‘ என்னைப் பீடித்திருந்தது கொல்லப்பட்டது; என்னைப் தடம் புரளவைப்பதோவெனில் வெல்லப்பட்டது. உலகில் ஒரு உலகிலிருந்து நான் ரட்சிக்கப்பட்டேனே.ஒரு வகையில் ஒரு உயர் வகையினின்றும் ரட்சிக்கப்பட்டேனே. காலத்தின் ஆளுகைக்குட்பட்டதோர் அறிவினால் பிணிக்கப்படுவதினின்றும் ரட்சிக்கப்பட்டேனே. இனி இத்தருணமுதல் முடிவிலிக் காலங்களுக்கு அமைதியின் தருணத்தில் இளைப்பாறுவேன். ‘

இவ்வாறு மேரி கூறியபின் அவள் அமைதியிலாழ்ந்தாள் ஏனெனில் அதுவரை மீட்பரே அவளுடன் உரையாடிருந்தார். ஆனால் ஆண்ட்ரூ அவளுக்கு பதிலளித்து சகோதரர்களிடம் கூறலானார், ‘அவள் கூறுவது குறித்து நீங்கள் எண்ண எண்ணுகிறீர்களோ எண்ணிக்கொள்ளுங்கள். ஆனால் நான் நம் மீட்பர் இவ்வாறு கூறியிருப்பார் என எண்ணவில்லை. ஏனெனில் இச்சிந்தனைகள் அயலானவை. ‘

பேதுருவும் அவளை இவ்விஷயங்கள் குறித்து அவளை எதிர்த்து மீட்பர் குறித்து பின்வருமாறு கூறலானார், ‘எனில் அவர் நம்மிடையேயும் வெளிப்படையாகவும் கூறாது ஒரு பெண்ணிடமா இவ்வாறு கூறியிருப்பார் ? நாம் திரும்பி அவளுக்கு செவிமடுக்கவேண்டுமா ?அவர் நம்மிலும் அவளைத் தேர்ந்தெடுத்திருப்பாரா ? ‘ பின் மேரி வருத்தமுற்று பேதுருவிடம், ‘பேதுருவே என் சகோதரனே! நீ நினைப்பதென்னவாயிருக்கிறது ? நான் கூறியதனைத்தையும் என் இதயத்தில் நானே உருவாக்கியதென்றும் நம் மீட்பரைக் குறித்து நான் பொய் கூறுவதாகவும் நீ நினைப்பதென்ன ? ‘ என்றாள்.

லெவியானவன் இதற்கு பதிலளித்து பேதுருவிடம் கூறினான், ‘ பேதுருவே நீ எப்போதுமே எளிதில் எரிச்சலடைபவனாகவே இருக்கிறாய். இபோழுதோ நீங்கள் இப்பெண்ணிடம் ஒரு எதிரியை போல ஆத்திரமடைவதென்ன ? நம் மீட்பர் தேர்ந்தெடுத்த பின் நீ அவளை விலகுவதெவ்வாறு ? நிச்சயமாக நம் மீட்பர் இப்பெண்ணை நன்றாக அறிந்திருந்தார். எனவேதான் நம் அனைவரைக்காட்டிலும் அப்பெண்ணிடம் அவர் அதிக அன்பு செலுத்தினார். நாம் பரிபூரணமடைந்த மானுடனால்[…]நாமாவதைக்காட்டிலும் இவ்வாறாயிருக்க நாம் வெட்கப்படகடவோம்.

அவர் கூறியபடி தேவ ராச்சியத்தின் பரிசுத்த நற்செய்தியினை நம் மீட்பர் கூறியதற்கப்பால் எவ்வித கட்டளையும் எவ்வித சட்டமுமின்றி பரப்புவோமாக ‘. லெவி இவ்வாறு கூறியபின் அவர்கள் நற்செய்தியை கூறவும் பரப்பவும் வெளியே செல்லலாயினர்.

மூலம்: http://reluctant-messenger.com/gospel-magdalene.htm

தமிழில்: மண்ணாந்தை

Series Navigation

மண்ணாந்தை

மண்ணாந்தை