மெய்மையின் மயக்கம்: 2

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

சோதிப் பிரகாசம்


(ஜெயமோகனின் கடிதம் பற்றிய ஒரு விமர்சனத் தொடர்)

சூழல்கள்

தமிழ்ச் சூழல் என்று ஒரு புதிய சூழலைப் பற்றி அடிக்கடி ஜெய மோகன் குறிப்பிடுகிறார்.

காலம் காலமாக இருந்து கொண்டு வந்து இருக்கின்ற இந்தியத் துணைக் கண்டத்தைத் திடிர் என்று யாரோ ஈரோப்பியர்கள் கண்டு பிடித்து விட்டது போலவும் இந்தியாவில் வாழ்ந்து கொண்டு வந்து இருந்த மக்களுக்கு இந்தியாவைப் பற்றி அதற்கு முன்னர் எதுவும் தெரிந்து இருக்க வில்லை என்பது போலவும், கருதிக் கொண்டு வந்து இருக்கின்ற ஈரோப்பியர்களின் பான்மைதான் இங்கே நமது நினைவுக்கு வருகிறது.

யாருக்கும் தெரிந்திட முடியாத எத்தனையோ சூழல்களை இவர் தெரிந்து வைத்து இருப்பது போன்ற ஒரு மலைப்பினை வாசகர்களின் ஆழ் மனத்திற்குள் ஏற்படுத்தி, பின்னர், வாசகர்களின் அறியாமைக்குச் சான்றாக அந்த மலைப்பினை நிலை நிறுத்தி விடுகின்ற வகையில் பல் வேறு நாடுகளின் பல் வேறு எழுத்தாளர்களில் சிலரைப் பெரிதாகச் சுட்டிக் காட்டி, உருப் படாமல் போய் விட்ட தமிழ்ச் சூழலை நிருபித்துக் காட்டி விட்ட ஒரு பாவனையில் தமிழ்ச் சூழலைத் தம் வயப் படுத்திக் கொண்டு விட முயல்கின்ற ஜெய மோகனின் உத்தி போலும் இது!

எத் தகைய உத்தியாக இந்த உத்தி இருந்து விட்ட போதிலும், தமிழ்ச் சூழல் என்று ஒரு குறிப்பிட்ட சூழலை ஜெய மோகன் குறிப்பிடுகிறார் என்றால், இந்தக் குறிப்பீட்டின் அடித் தளத்தில் ஜெய மோகனின் ஒப்பீடு ஒன்று ஒளிந்து கிடக்கிறது என்பதில் ஐயம் இல்லை. அதே நேரத்தில், எந்தச் சூழலுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தமிழ்ச் சூழலை எடை போடுவதற்கு அவர் முற்பட்டுக் கொண்டு வந்து இருக்கிறார் என்பதும் நமக்குப் புரிய வில்லை.

தஞ்சை, திருச்சி போன்ற வளமான பகுதிகளில், பாட்டு, கூத்து, நடனம், நாடகம், என வளப்பத் தனமாகக் கலைகள் வளர்ந்து கொண்டு வந்து இருக்கின்றன என்றால், திருநெல்வேலி, தூத்துக் குடி போன்ற வறட்சியான பகுதிகளிலோ சமயம், தத்துவம், என வறட்டுத் தனமான சிந்தனைகள்தாம் வளர்ந்து கொண்டு வந்து இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். உண்டு, கொழுத்து, உல்லாசமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டு வந்து இருக்கின்ற பண்ணையக் கிழார்களும் மேல் தட்டுச் சிற்றுடைமை யாளர்களும்தாம் முன்னதற்குக் காரணம் என்பதும் நமக்குத் தெரிந்ததுதான்.

இந்த முறையில் ஜெய மோகனின் கருத்துகளை நாம் அணுகுகின்ற பொழுது, ஃப்ரான்ஸ் நாட்டுச் சூழலையோ அல்லது மலையாள நாட்டுச் சூழலையோ கருத்தில் கொண்டுதான் தமிழ் நாட்டுச் சுழலை எடை போடுவதற்கு அவர் முன் வந்து இருக்க வேண்டும் என்று நமக்கு எண்ணிடத் தோன்றுகிறது. முதலில், அன்றைய ஜெர்மன் நாட்டுச் சூழலைப் பற்றிக் கார்ல் மார்க்ஸ் கூறி இருக்கின்ற சில கருத்துகளைக் கொஞ்சம் நாம் பார்ப்போம்.

சூழல்களின் சிந்தனைகள்

ஜெர்மனியின் சிந்தனைகளுக்கு ஜெர்மனியின் சூழல்கள்தாம் காரணம் என்று கூறுகின்ற கார்ல் மார்க்ஸ், நமது வாழ்க்கைதான் நமது உணர்மை (கான்ஷியஸ்னஸ்)யினைத் தீர்மானிக்கிறது என்று கூறி, நமது வாழ்க்கைச் சூழலைப் பற்றிய உணர்மைதான் நமது உணர்மை என்றும் சுட்டிக் காட்டுகிறார்.

அப்படி என்ன ஒரு பெரிய விசயத்தைக் கார்ல் மார்க்ஸ் கூறி விட்டார்; இதைக் கூறுவதற்குக் கூட ஒரு கார்ல் மார்க்ஸ் தேவையா ? என்றால், தேவைப் பட்டு இருந்து இருக்கிறார்; தேவைப் படவும் செய்கிறார் என்பதுதான் மெய்மை! இல்லை என்றால், வெறுமனே ஒரு கருத்துச் சூழலாக—அறிவு அல்லது அறியாமை பற்றிய ஒரு சூழலாக—மட்டும் தமிழ்ச் சூழலைக் கருத்தில் கொள்வதற்கு ஜெய மோகன் முனைந்து இருப்பாரா ?

‘பசி ‘ என்னும் ஒரு கருத்து நமது மண்டையில் பதிந்து விட்டு இருக்கின்ற காரணத்தினால்தான் நமக்குப் பசிக்கிறது என்று யாராவது கூறினால் நாம் என்ன செய்வோம் ? சற்றே நகைப்போம்; வயிறு குலுங்கச் சிரிக்கவும் செய்வோம்!

பசி என்னும் நிகழ்வினை (ஃபினோமினா)ப் புரிந்து கொள்வதற்கு நாம் தவறி விடுவோம் என்றால் நாமே தவறி விடுவோம் என்பதுதான் உண்மையே ஒழிய, நமக்குப் பசி எடுப்பதற்குப் பசி பற்றிய நமது கருத்துக் காரணம் அல்ல; மெய்மையாக எதையாவது நாம் புசித்தால் ஒழிய, பசி பற்றிய நமது கருத்துக் கலைந்து போவதற்கும் வாய்ப்பும் எதுவும் இல்லை; நமது விருப்பங்களுக்கு அப்பால் பட்ட இயற்கை நிலவரங்களின் ஒரு விளைவுதான் அது; என்று அவருக்கு விளக்கம் அளித்திடவும் நாம் முன் வருவோம்.

ஆனால், கொள்கை என்றும் கோட்பாடு என்றும்—முற்போக்கு என்றும் பிற்போக்கு என்றும்—கதை என்றும் கவிதை என்றும்—சுவனம் என்றும் அதன் தரம் என்றும்—வந்து விட்டால் மட்டும், நமது மண்டைகளுக்குள் மட்டும் அவற்றை நாம் தேடிக் கொண்டு இருப்போம்; நமது மண்டைகளின் தனிச் சிறப்பினை நினைந்து நினைந்து நாம் பெருமைப் பட்டுக் கொண்டும் இருப்போம்—நமது மண்டைகளால் மட்டும் முடிந்திடக் கூடிய ‘படைப்புகள் ‘தாம் அவை என்னும் தலைக் கனத்தில்!

முன் ஒரு காலத்தில் ஒரு விடலை இருந்தானாம்; மனிதர்களின் மண்டைகளைப் ‘புவி ஈர்ப்பு ‘ என்னும் ஒரு கருத்துப் பற்றிப் பிடித்துக் கொண்டு இருக்கின்ற கரணத்தினால்தான் தண்ணீரில் அவர்கள் மூழ்கிப் போகிறார்கள் என்று கருதிக் கொண்டும் அவன் வந்து இருந்தானாம்—கார்ல் மார்க்ஸ் கிண்டல் அடிக்கிறார்.

மனிதர்களின் மண்டைகளை மட்டும்தானா ?

கற்களின் மண்டைகளைப் ‘புவி ஈர்ப்பு ‘ என்னும் ஒரு கருத்துப் பற்றிப் பிடித்துக் கொண்டு இருக்கின்ற காரணத்தினால்தான் மண்ணில் அவை விழுந்து விடுகின்றன என்றும் பறவைகளின் மண்டைகளைப் ‘புவி ஈர்ப்புக்கு எதிர்ப்பு ‘ என்னும் ஒரு கருத்துப் பற்றிப் பிடித்துக் கொண்டு இருக்கின்ற காரணத்தினால்தான் விண்ணில் அவை பறந்து கொண்டு இருக்கின்றன என்றும் கூட அவன் நினைத்துக் கொண்டு இருந்து இருக்கலாம்.

இப்படி, கருத்தைக் கொண்டு கருத்தை அளந்து விடுகின்ற ஒரு கற்பனையில்தான் (கருத்து = கருத்து) ஜெய மோகனும் மிதந்து கொண்டு இருக்கிறார். இதில், இவருக்குத் துணையாக ஆதி சங்கரரையும் இவர் அழைத்துக் கொள்வதுதான் மிகப் பெரிய வேடிக்கை!

ஆதி சங்கரர்

வீட்டை விட்டு ஓடிப் போய் யாருக்கும் தெரியாமல் காதலனுடன் நடந்து சென்று கொண்டு இருக்கிறாளாம் காதலி—அதுவும், பாலை நிலத்தில்!

பட்டுப் போன மரங்களும் காய்ந்து போன சருகுகளும் வெட்ட வெளியும் வெய்யிலின் கொடுமையுமாகக் காதலனுடன் கை கோர்த்து நடந்து சென்று கொண்டு இருக்கின்ற அவளது உள்ளத்திலோ குறிஞ்சியின் நறு மணமும் குளிர்க் காற்றும் சுழன்று அடித்துக் கொண்டு இருக்கின்றனவாம்!

இதனை எப்படி நாம் புரிந்து கொள்வோம் ?

தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்து தன் உள்ளம் கவர்ந்த கள்வனுடன் அவள் ஒன்றி விட்டாள்; இந்த மகிழ்ச்சி மட்டும்தான் அவளது நெஞ்சத்தை நிறைத்து இருக்கிறது; வேறு எதுவும் அவளுக்கு ஒரு பொருட்டு அல்ல; என்றுதானே!

ஆனால், ஜெய மோகன் கூறுகிறார்—குறிஞ்சி நிலமாகப் பாலையை அவள் கனவு கண்டாள் என்று; எனவே, குறிஞ்சி நிலமாகப் பாலை நிலம் மாறி விட்டது என்று; எனவே, நமது எண்ணங்களின் உருவகம்தான் மெய்மை என்று; ஆதி சங்கரரும் இதைத்தான் கூறி இருக்கிறார் என்று! மிகவும் நன்றாகத்தான் தமிழ்ச் சுழலை ஜெய மோகன் புரிந்து வைத்து இருக்கிறார் போலும்!

ஆதி சங்கரரது அனைத்து நூல்களிலும் முதிர்ச்சியான நூல் எது ? என்றால் அது ‘விவேக சூடாமணி ‘தான் என்பதில் யாருக்கும் ஐயம் இருந்திட முடியாது. ‘சங்கர :பாஷ்யம் ‘ (சங்கர பாடியம்) என்று அழைக்கப் பட்டு வருகின்ற அவரது ‘:ப்ரஹ்ம சூத்ர ‘ உரைகளில், ஆதி சங்கரரது கடின உழைப்பையும் தீவிரமான தேடலையும் நாம் காண முடிகின்ற அதே நேரத்தில், அவரது சில தடுமாற்றங்களையும் நாம் காண முடிகிறது.

ஆனால், விவேக சூடாமணியிலோ, அழுத்தம்-திருத்தமான அவரது கருத்துகளை உறுதியாக அவர் உரைத்துச் செல்வதை நாம் காண்கிறோம்.

அவன், அவள், அது, என்னும் அவை (சிவ ஞான போதம்) ஆகிய இந்த மெய்மை, வெறும் கனவு என்றோ, ஒரு பொய்மை என்றோ, வெறும் மாய்மை என்றோ ஆதி சங்கரர் கருதிட வில்லை; அவரது நோக்கமும் அது இல்லை!

மாறாக, மெய்மையின் பலப் பல வேறுபாடுகளுக்கு இடையே பொதுப்படையானது ஓர் உண்மையாக—பன்மையில் வேறு பட்டுக் கிடக்கின்ற தனித் தன்மைகளுக்கு இடையே ஊடாடி நிற்கின்ற ஒரே ஒரு பொதுத் தன்மையாக—இருப்பது சுயமை, அல்லது தான்மை (செல்ஃப்) என்பது மட்டும்தான் ஆகும்; இந்தச் சுயமையைப் பற்றிய உனர்மைதான்—சுய-உணர்மைதான்— ‘பரம் ‘ என்பதும் ஆகும்; என்பதுதான் ஆதி சங்கரரது கருத்து.

ஆனால், கனவினை மெய்மை என்றும் மெய்மையினை மாய்மை என்றும் கருதுகின்ற ஒரு மாய்மை வாதியாக ஆதி சங்கரரை ஜெய மோகனோ சித்தரித்து விடுகிறார். துணிந்தவனுக்குத் தூக்கு மேடையும் ஒரு பஞ்சு மெத்தை என்பது எல்லாம் சரிதான்! அதற்காக, ஒரு பஞ்சு மெத்தையாகத் தூக்கு மேடை மாறுதல் அடைந்து விடுமா, என்ன!

சில சூழல்கள்

இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சியுடன் வளர்ந்து கொண்டு வந்து இருந்த சமுதாயச் சிந்தனைகளைத் தங்கள் சூழலுக்கு ஏற்ப ஜெர்மன் சிந்தனையாளர்கள் பயன் படுத்திக் கொண்டு வந்து இருந்தார்கள் என்றும் ஜெர்மனியில் இதனால் ஏற்பட்டு இருந்தது ஒரு சிந்தனைச் சீரழிவுதான் என்றும் கார்ல் மார்க்ஸ் கூறுகிறார். எனினும், ஜெர்மனியில் உள்முகமான (ஸ்பெக்யுலேட்டிவ்) சிந்தனைகள் செழித்து வளர்ந்து கொண்டு வந்து இருந்தன என்பதற்கு ஹே:கல் ஒருவரே சாட்சி என்பது நமக்குத் தெரியும்.

இதில் நாம் வியப்பு அடைவதற்கும் எதுவும் இல்லை. ஏனென்றால், இந்தியாவிற்குச் ‘சமுகாண்மை ‘ (சோஷலிசம்) என்னும் கருத்து வந்து இருந்த பொழுது, ‘சமன்மை ‘ என்னும் பொருளில்தான் பெரும்பாலும் அது புரிந்து கொள்ளப் பட்டு இருந்தது. மனிதர்களின் ‘பிறவிச் சமன்மை ‘யை மறுத்துக் கொண்டு வந்து இருந்த சாதியச் சூழல்தான் இந்தக் கருத்துப் பிறழ்ச்சிக்குக் காரணமும் ஆகும்.

அவ்வளவு ஏன், திருக் குறளுக்கு உரை எழுதுவதற்கு முன் வந்து இருந்த பரிமேலழகர், திரு வள்ளுவர் காலத்துச் சமுதாயச் சூழலை மறந்து விட்டுத் தமது காலத்தின் சமுதாயச் சூழலுக்கு ஏற்பத்தானே விளக்கங்களை எழுதிக் கொண்டு வந்து இருந்தார்!

பெண் உரிமை மற்றும் விடுதலை என்பன வற்றையும் தனிப்பு உரிமை (ரைட் ட்டு ப்ரைவசி) முதலிய தனி மனித உரிமைகளையும் புரிந்து கொண்டும் உணர்மைப் படுத்தியும் வைத்து இருப்பதில், ஒரு புறம் அமெரிக்க மற்றும் ஈரோப்பிய மக்களுக்கும் மறு புறம் ஆசிய மற்றும் ஆஃப்ரிக்க மக்களுக்கும் இடையேதான் எவ்வளவு பெரிய வேறுபாடு!

இப்படி, வாழ்வியம் (எக்ஸ்சிஸ்ட்டென்ஷியலிசம்) என்றும் அமைப்பியம் என்றும் பின்- புதின வாதம் என்றும் புதிது புதிதாக எத்தனையோ தேற்றங்களை உருவாக்கிக் கொண்டு வந்து இருக்கின்ற ஃப்ரான்ஸ் நாட்டுச் சிந்தனைகளுக்கு, அந் நாட்டு அறிவாண்மைச் சூழலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு வந்து இருக்கின்ற மேல் தட்டுச் சிற்றுடைமையாளர்கள்தாம் காரணம். இவற்றுள் ஒன்று கூட உருப்படியாக இல்லை என்பதனைக் கார்ல் மார்க்ஸின் பக்கம் சற்றே நாம் திரும்பிப் பார்த்தால் நாம் புரிந்து கொள்ளவும் முடியும்.

(வெள்ளைக் காரச் சிந்தனை என்றும் கறுப்புக் காரச் சிந்தனை என்றும் மனிதர்களின் சிந்தனை நிறங்களை வேறுபடுத்திப் பார்த்திட விரும்புபவர்கள் சற்றே புறக் கணிக்கப் படுவார்களாக!)

எனவே, ஜெய மோகனுக்கு நன்கு அறிமுகம் ஆகி உள்ள மலையாளச் சூழலுடன் தமிழ்ச் சூழலைச் சற்றே நாம் ஒப்பிட்டுப் பார்ப்போம்—கேரளச் சூழலைக் கருத்தில் கொண்டுதான் தமிழ்ச் சூழலை எடை போட்டுப் பார்ப்பதற்கு ஜெய மோகன் முன் வந்து இருக்கிறார் என்று நமக்குத் தோன்றுவதால்!

தமிழ்ச் சூழல்

அரசு முதலாண்மை வாதம் என்பதுதான் ஸ்தாலினிசம் என்பது நமக்குத் தெரியும். மேல் தட்டுச் சிற்றுடைமையாளர்களின் ஆதரவு இல்லாமல் அரசு முதலாண்மை நிலைநின்றிட முடியாது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகவும் சோவியத் ருஷ்யாவை நாம் கொள்ளலாம்.

மேல் தட்டுச் சிற்றுடைமையாளர்களை ஒழித்துக் கட்டிக் கொண்டு வந்து இருந்ததன் மூலம், அரசு முதலாண்மையின், எனவே, ஸ்தாலினிசத்தின் அடிப்படைகளைத் தகர்த்து எறிந்திடத் தக்க அடித் தளங்களை அமைத்துக் கொண்டு வந்து இருந்தவரும் ஸ்தாலின்தான் என்பது வேறு விசயம்!

தமிழ் நாட்டையும் கேரளாவையும் ஒப்பிட்டுப் பார்க்கின்ற பொழுது, தனியார் முதலாண்மையின் செல்வாக்குக் கேரளாவில் குறைவு என்பதும் தமிழ் நாட்டில் அது அதிகம் என்பதும் வெளிப்படை!

இது போல, கேரளாவில் மேல் தட்டுச் சிற்றுடைமையாளர்கள் அதிகம் என்றால், தமிழ் நாட்டில் கீழ்த் தட்டுச் சிற்றுடைமையாளர்கள் அதிகம் என்பதும் வெளிப்படை! அதாவது, தனியார் முதலாண்மையின் வளர்ச்சியில் வாழ்க்கையைப் பணயம் வைத்துக் கொண்டு இருக்கின்ற சிற்றுடைமையாளர்கள் தமிழ் நாட்டில்தான் அதிகம் என்பது வெளிப்படை!

கேரளாவைப் பொறுத்த வரை, இம் மாதிரியான பிறழ்ச்சனை எதுவும் அங்கே மேல் தட்டுச் சிற்றுடைமையாளர்களுக்கு இல்லை. எனவே, சீரழிவை எதிர் கொண்டு தத்தளித்துக் கொண்டு இருக்கின்ற சூழ் நிலை அங்கே மிக மிகக் குறைவு!

உறுதியான எந்த ஒரு நிலையிலேனும் நின்று கொண்டு போர்க் களம் புகுந்திட வேண்டிய அவசியம் எதுவும் கேரளத்துச் சிற்றுடைமையாளர்களுக்கு இல்லை. ஆனால், தமிழ் நாட்டிலோ, உறுதியான ஏதேனும் ஒரு நிலையினை அவர்கள் எடுத்து ஆக வேண்டும்—மத வெறியாக வெளிப் படுகின்ற ஒரு கொலை வெறியாக அது இருந்தாலும் சரி, சாதி வெறியாக வெளிப் படுகின்ற ஒரு மல வெறியாக அது இருந்தாலும் சரி!

அதாவது, ‘உடல் நோகாத உழைப்பு ‘, ‘மூளை நோகாத ஞானம் ‘ என ஒரு மாய்மையான—தெளிவு இல்லாத—சூழ் நிலையில் இதம் கண்டு வருவதற்கு மேல் தட்டுச் சிற்றுடைமையாளர்களால் முடியும் என்றால், கீழ்த் தட்டுச் சிற்றுடைமையாளர்களால் அது முடியாது.

இது போன்ற ஆய்வுகளில், குறிப்பாக, சாதி ஒழிப்பு முயற்சிகளில் ஈ. எம். சங்கரரின் பங்கு பற்றிய ஆய்வுகளில், ஜெய மோகன் ஈடு படுவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதால், கதைகளுக்கும் கவிதைகளுக்கும் மட்டும் நாம் வருவோம்! ‘குறுக்கல் ‘ வாதம் என்று மார்க்சியத்திற்குப் பெயர் சூட்டி அதனை ஒதுக்கி வைத்து விட்டு, தமது மண்டைக்குள் மட்டும் அனைத்தையும் அவர் ‘குறுக்கி ‘க் கொள்ளாமல் இருந்தால் சரி!

(தொடரும்)

sothipiragasam@lycos.com

Series Navigation