முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு- எனது கேள்விகள்

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

சின்னக்கருப்பன்


சமீபத்தில் ஆந்திர பிரதேச முதலமைச்சரான யெலகிரி சாமுவேல் ராஜசேகர ரெட்டி அவர்கள் ஆந்திர பிரதேசத்தில் வாழும் முஸ்லீம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு அனைத்து மாநில வேலைகளிலும் அளித்திருக்கிறார்.

இதனை எதிர்த்து வி ஹெச் பி , பாஜக போன்ற இந்துத்துவ தத்துவச் சார்புடைய அமைப்புக்கள் குரல் கொடுத்திருக்கின்றன. சுப்ரீம் கோர்ட் முஸ்லீம்களில் ஒரு பகுதியினருக்கு அதாவது முஸ்லீம்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டுமே அளிக்கலாம் என்று பரிந்துரை செய்திருந்தது. இது அரசாணையாக இருந்தமையால் அது சட்டத்துக்குப் புறம்பானது என்று மாநில நீதிமன்றம் கூறிய பின்னர் இது சட்டமாக ஆக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலச் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படலாம்.

இது மேம்போக்காகப் பார்த்தால், வரவேற்கத்தகுந்த விஷயம். ஆனால், ஆழ்ந்து பார்த்தால் ஏராளமான பிரச்னைகளை உள்ளே கொண்ட விஷயம்.

***

மாநிலங்களில், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு இல்லையா ? அது போன்ற பிரமை இருந்தால் தவறு.

முஸ்லீம்களுக்கு ஆந்திரம் தமிழ்நாடு கேரளா கர்னாடகா போன்ற மாநிலங்களில் ஏற்கெனவே இட ஒதுக்கீடு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் முஸ்லீம் ஜாதியினருக்கு ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு இந்த வலைப்பக்கத்தில் இருப்பதை கவனியுங்கள்.

http://www.tn.gov.in/department/bclist.htm

5.Ansar

21.Dekkani Muslims

69. Labbais including Rowthar and Marakayar (whether their spoken language is Tamil or Urdu)

77.Mapilla

114.Sheik

119. Syed

மேற்கண்ட ஜாதி வரிசைப்படி எல்லா வகை முஸ்லீம்களுக்கும் இங்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதைக் காணுங்கள். ஷேக், சையது போன்றவர்கள் முஸ்லீம்களுக்குள்ளாகவே மேல் ஜாதியினராகப் பார்க்கப்படுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் பணக்காரர்கள். அவர்களுக்கும் இங்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எந்த ஒரு தமிழ்நாட்டு முஸ்லீமும் இந்த வகைக்குள் தன்னை அமைத்துக்கொண்டு இட ஒதுக்கீடு பெறுவது இயலாத காரியம் அல்ல.

கிரிஸ்துவர்களுக்கான இட ஒதுக்கீடு

18. Converts to Christianity from Scheduled Castes irrespective of the generation of conversion for the purpose of reservation of seats in Educational Instituitions and for seats in Public Services

19. C.S.I formerly S.I.U.C (in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District)

71. Latin Catholics (in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District)

82. Nadar, Shanar and Gramani ( including Christian Nadar, Christian Nadar, Christian Shanar and Christian Gramani )

142. Converts to Chritianity from any Hindu Backward Classes Community or Most Backward Classes Community or Denotified Communities except the Converts to Christianity from Meenavar, Parvatharajakulam, Pattanavar, Sembadavar, Mukkuvar or Mukayar and Paravar

http://www.tn.gov.in/department/mbclist.htm

27. Paravar ( except in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District where the Community is Scheduled Caste ) ( including converts to Christianity )

28. Meenavar ( Parvatharajakulam, Pattanavar, Sembadavar ) ( including converts to Christianity )

29. Mukkuvar or Mukayar ( including converts to Christianity )

ஆகவே, முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாததால் அவர்கள் போராடுகிறார்கள் என்று நினைத்தால் அது தவறு. அவர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது.

ஆகவே, இவ்வாறு முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு என்று பேசுவது அப்பட்டமான அரசியல் கோஷம்.

ஒருவேளை இப்படி வாதிடலாம். ‘ முஸ்லீம்கள் 69 சதவீதத்துக்குள்ளாகவே தங்களுக்கான இடத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அந்த சதவீதத்துக்குள்ளும் முஸ்லீம்கள் வரும் அளவுக்கு படித்தவர்கள் இல்லை. ஆகவே தனியாக 5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். ‘ என்று இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

இதுவும் சரியானதாகப் படவில்லை. நம் ஜனாதிபதி இந்தியாவின் விண்வெளி திட்டத்தை நிர்வகித்திருக்கிறார். இந்த இட ஒதுக்கீட்டால் பயன் பெற்றாரோ இல்லையோ, ஆனால் சொந்த திறமையும் உழைப்பும் இருந்தால், நிச்சயம் எந்த அளவுக்கும் ஒரு முஸ்லீமால் இந்தியாவில் செல்லமுடியும் என்பதைத்தான் அவர் நிரூபிக்கிறார். அவர் முஸ்லீம் என்பதற்காக அவருக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டதாக எங்காவது எழுதியிருக்கிறாரா ? அல்லது படிப்பு மறுக்கப்பட்டதாக எங்காவது எழுதியிருக்கிறாரா ? அப்படியிருக்கும் போது, முஸ்லீம்கள் சாதி அடிப்படையில் ஒதுக்கீடு கொடுத்தும் அவர்கள் பெற்றிருக்க வேண்டிய இடத்தைப் பெறவில்லை என்று கூறுவது இஸ்லாமியரை அவமதிப்பதாகும்.

காவல் துறை மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் முஸ்லீம்கள் வேலை செய்வது அவர்களுக்கு அரசில் பங்கு பெறும் உணர்வையும் அளிக்கும் என்பது நிச்சயமான ஒன்று. முஸ்லீம் பொதுமக்களுக்கு அரசு அலுவலகங்களில் அவர்கள் முஸ்லீம்கள் என்பதற்காக பாரபட்சம் காட்டப்படுகின்றதா என்று தெரியவில்லை. காவல்துறை மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் முஸ்லீம்கள் அதிகம் வேலை செய்யவில்லை என்று கூறுவதை வாதத்தின் பொருட்டு ஏற்றுக்கொண்டாலும், அது ஏன் என்பதே கேள்வியாக இருக்கமுடியும்.

கல்லூரிகளிலும் வேலை வாய்ப்பிலும் முஸ்லீம்கள் பின் தங்கி இருக்கிறார்கள் என்பது கேட்க ஆச்சரியமான விஷயம். ஒவ்வொரு சிறு நகரங்கள் உட்பட எல்லா ஊர்களிலும் இருக்கும் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருக்கின்றன. ஒருவேளை முஸ்லீம்களுக்கு இடங்களை அரசாங்கக் கல்லூரிகள் மறுக்கின்றன என்று கருதவும் வாய்ப்பில்லை. அப்படி ஒருவேளை இருந்தாலும், முஸ்லீம் கல்லூரிகளும், முஸ்லீம் பள்ளிகளும் முஸ்லீம் தொழில்நுட்பக்கல்லூரிகளும் ஏராளம் இருக்கின்றன. அந்தக் கல்லூரிகளில் முஸ்லீம்களுக்கு என்று இருக்கும் இடங்களைக் கூட இந்துக்களுக்கும் கிரிஸ்துவர்களுக்கும் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஏராளமான முஸ்லீம் நடத்தும் தொழிற்சாலைகளும் தொழில் நிறுவனங்களும் இருக்கின்றன. அவற்றில் எனக்குத் தெரிந்து முஸ்லீம்களுக்கு தெளிவாகவே முன்னுரிமை இருக்கிறது. அதனை யாரும் விமர்சிக்கக்கூட இல்லை. (சொல்லப்போனால் இந்துக்கள் கிரிஸ்துவர்கள் நடத்தும் தொழில் நிறுவனங்களில் அந்த அளவு பாரபட்சம் பார்ப்பது இல்லை.) இத்தனை வசதி வாய்ப்புக்கள் இருந்தும் முஸ்லீம்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின் தங்கி இருக்கிறார்கள் என்றால் என்ன காரணம் என்று தீவிரமாக ஆராய வேண்டும்.

அரசு அலுவலகங்கள் இன்றைய நிலையில் பெரும் வேலைவாய்ப்புக்கான இடங்களாக இல்லை. தனியார் தொழிற்சாலைகளும் தனியார் தொழில் நிறுவனங்களுமே இன்று பெரும் வேலை வாய்ப்பு இடங்களாகவும் வளமையை உற்பத்தி செய்யும் இடங்களாகவும் இருக்கின்றன. அவற்றில் ஒருவர் முஸ்லீம் என்பதால் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டார் என்ற நிலை இருக்கிறது என்று புகார் ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. அதுவும் தெளிவாக தங்களது மதச்சார்பின்மையை வெளிக்காட்ட முனையும் இந்துக்கள் அதிகம் உள்ள தமிழ்நாட்டிலும், தெற்கத்தி மாநிலங்களிலும், ஒருவர் சார்ந்துள்ள மதம் காரணமாக வேலை மறுக்கப்பட்டதாக எனக்குத் தெரிந்து எந்த ஒரு உதாரணமும் இல்லை. ஆனால், இந்து என்பதற்காக வேலை மறுக்கப்பட்டவர்களும், படிக்கும் இடம் மறுக்கப்பட்டவர்களும் ஏராளம் எனக்குத் தெரியும். கேரளாவில் கடந்த 57 வருடங்களில் கல்வித்துறை அமைச்சராக (இரண்டு மாதம் இருந்த ஒரு இந்து தவிர) வேறு ஒரு இந்து அமைச்சராக இருந்ததே கிடையாது. இதனால், அங்கு இருக்கும் கல்வி நிறுவனங்கள் அனைத்துமே கிரிஸ்துவ மற்றும் முஸ்லீம் கல்வி நிறுவனங்களே.

பல நூற்றுக்கணக்கான இஸ்லாமிய கல்வி நிலையங்களும், தொழிற்சாலைகளும் இருக்கும்போது இஸ்லாமியர் ஏன் படிப்பு போன்ற துறைகளில் அக்கறை எடுக்கவில்லை என்பதுதான் கேள்வியாக இருக்க முடியும். அப்படிப்பட்ட கேள்விக்கு பதில், அவர்களுக்கு கட்டாய இட ஒதுக்கீடு கொடுத்து 5 சதவீத இடங்களை அரசு அலுவலகங்களில் பூர்த்தி செய்வது அல்ல.

ஆனால், அரசு அலுவலகங்களில் இட ஒதுக்கீடு கொடுப்பது அரசாங்கத்துக்கு உகந்ததே என்பதை கவனத்தில் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். இது, அரசாங்கமும் மக்கள் பிரதிநிதிகளும், ‘ஏன் இஸ்லாமியர் படிப்பு மற்றும் அலுவலக வேலைகளில் ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள் ? ‘ என்ற கேள்வியை கேட்க வேண்டிய நிர்பந்தத்திலிருந்து விடுவிக்கிறது. முஸ்லீம் பிரதிநிதிகள், இஸ்லாமியருக்கு ஏதோ செய்து கொடுத்துவிட்ட பெருமையை கொடுத்துவிடுகிறது.

ஆனால் இது இஸ்லாமியருக்கு எவ்வளவு பெரிய துரோகம் என்பது எழுதப்படமாட்டாது. அதனையே இக்கட்டுரையில் எழுத முயல்கிறேன்.

***

முதலாவது, மத ரீதியான வேலைவாய்ப்பு அல்லது படிப்பில் முன்னுரிமை என்பது மகாப் பெரிய குழப்பத்தை உண்டுபண்ணும்.

ஏனெனில் ஒருவரது பிறந்த ஜாதி காரணமாக இட ஒதுக்கீடு என்பது ஓரளவுக்கு சட்டப்படி நிறைவேற்றப்படக் கூடியது. ஆனால் மதம் அப்படி அல்ல. இன்று முஸ்லீமாக இருக்கும் ஒருவர் நாளை சுய விருப்பத்தின் காரணமாகவும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் உரிமை காரணமாகவும், இன்னொரு மதத்தினை தழுவலாம். இது பல பிரச்னைகளுக்கு வழிகோலக்கூடியது.

உதாரணமாக ஒரு பிறப்பால் இஸ்லாமியர், முஸ்லீம் என்ற இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை பெற்றுக்கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் வேலையில் சேர்ந்த பின்னர் கிரிஸ்துவ மதத்துக்கோ அல்லது இந்து மதத்துக்கோ செல்ல விரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரது வேலை என்ன ஆகும் ? அவர் வேறொரு மதத்தைச் சேர்ந்துவிட்டார் என்று அவரை பணி நீக்கம் செய்ய முடியுமா ? போலீஸ், அரசுத்துறை, முக்கியமான வேலை போன்ற ஒன்றில் பல வருடம் பணி புரிந்தவரோ அல்லது நீதிபதியாக பணிபுரியும் இஸ்லாமியரோ தன் சுய விருப்பம் காரணமாக இந்து மதம் தழுவினால், அவர் பணி நீக்கம் செய்யப்படுவாரா என்ன ?

இவ்வாறு வைத்துக்கொள்வோம். அவர் வேலையில் சேரும்போது எந்த மதத்தினைச் சார்ந்ததாகக் கூறிக்கொள்கிறாரோ அதுவே கணக்கில் எடுக்கப்படும் என்று வைத்துக்கொள்வோம். அது இன்னும் பல மோசடிகளுக்கு வழி வகுக்கும்.

உதாரணமாக, அரசு வேலையில் சேர்வதற்காக ஒருவர் ஒரு மாதத்திற்கு முன்னால், இஸ்லாமிய மதத்தினை தழுவி விட்டு, வேலையில் சேர்ந்த பின்னால், அவர் மீண்டும் இந்து மதத்துக்குச் சென்றுவிட்டார் என்றால், அதனை அரசு தவறு என்று சொல்லுமா ? அது சட்டத்துக்குப் புரம்பானதாக இருக்குமா ? இதில் இன்னும் ஒரு பெரிய குழப்பம் இருக்கிறது. ஒருவர் இஸ்லாமிய மதம் மாறிவிட்டதாக கூறுவதற்கு பெரிய விஷயங்கள் தேவையில்லை. ஏன் ஒரு இந்துப்பெயரை அராபியப்பெயராக மாற்ற வேண்டிய கட்டாயம் கூட இல்லை. தான் இஸ்லாமுக்கு மாறிவிட்டதாக கெஜட்டில் பதிவு செய்தாலே போதுமானது. ஆக ‘ராஜ்குமார் ‘ என்ற பெயர் உள்ள ஒரு கிரிஸ்துவர், இஸ்லாமுக்கு மதம் மாறிவிட்டதாகத் தெரிவித்து கெஜட்டில் பதிவு செய்துவிட்டு வேலை பெற்ற பின்னால், திரும்பவும் கெஜட்டில் தான் இந்து மதத்துக்கு மதம் மாறிவிட்டதாக அறிவித்தால் என்ன பிரச்னை ? எந்த சட்டத்தை உடைக்கிறார் அவர் ? ஒன்றும் செய்யமுடியாது.

சரி சட்டம் இப்படி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஒருவர் முஸ்லீம் பெற்றோருக்குப் பிறந்திருக்க வேண்டும். அவர் முஸ்லீமாக தன்னை பதிவு செய்திருக்க வேண்டும், ஒருவர் தன் வேலை செய்யும் காலம் வரைக்கும் முஸ்லீமாகவே இருக்கவேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.

இது அரசு வேலை என்ற காரணம் காட்டி அவர் முஸ்லீமாகவே கட்டாயம் இருக்கவேண்டும் என்று ஒரு தனி நபரை கட்டாயப்படுத்துவது போல பார்க்கலாம் அல்லவா ?

அவ்வாறு இந்திய அரசு, அரசில் பணி புரியும் ஒருவர் முஸ்லீமாகத்தான் இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தமுடியுமா ?

முஸ்லீம் பெற்றோருக்குப் பிறந்தவர் மட்டுமே அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு பெற முடியும் என்று அரசு அறிவிப்பது நியாயமாக இருக்குமா ? பல காரணங்களால் முஸ்லீமாக மாற விரும்பும் பலரும் தான் முஸ்லீமாக மாறினாலும் தனது பெற்றோர் இந்துவாகவோ அல்லது கிரிஸ்துவராகவோ இருப்பதால், இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது என்று நீதி மன்றம் ஏற மாட்டார்களா ? இது அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று இன்னொரு நீண்ட நீதிமன்ற பிரச்னைகளுக்கு இட்டுச் செல்லாதா ?

அதைவிட இன்னொரு பிரச்னை இருக்கிறது. யார் முஸ்லீம் யார் முஸ்லீம் அல்ல என்று இந்திய அரசாங்கம் நிர்ணயிக்க முடியுமா ? ஷியா ஷீனி அஹ்மதியா பிரிவினர் தாங்களே உண்மையான முஸ்லீம்கள் மற்றவர்கள் முஸ்லீம்கள் அல்லர் என்று விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். நிச்சயம் பலர் எதிர்த்தரப்பு பிரிவினர் முஸ்லீம்கள் அல்லர் அவர்களுக்கு வேலை கொடுத்தது தவறு என்று நீதிமன்றம் ஏறப்போகிறார்கள். இந்திய நீதிமன்றம் இந்த வழக்குக்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறதா ?

***

நான் மேலே கூறுபவை நடக்கக்கூடிய விஷயங்கள் மட்டுமல்ல, ஏற்கெனவே பலமுறை நடந்த விஷயங்களும் கூட.

ஜாதி என்ற அடையாளம் இருக்கும்போதே, ஜாதி சார்ந்த இட ஒதுக்கீட்டில் ஏராளமான குளறுபடிகள் நடந்திருக்கின்றன.

1. ஒரு மேல்ஜாதிப்பெண் ஒரு தலித்தை திருமணம் செய்தபின்னர், தான் தலித்தாகி விட்டதாக கோரி இட ஒதுக்கீடு வேண்டுமென்று கோரியிருக்கிறார்.

2. கிரிஸ்துவ மதத்தைச் சார்ந்த தலித் பலர் இந்து மதத்துக்கு மாறி தலித் இட ஒதுக்கீட்டில் வேலை பெற்றிருக்கிறார்கள். இதனை பல இந்து தலித்துகள் தீவிரமாக எதிர்த்துப் போராடியிருக்கிறார்கள். (அந்த செய்திகள் இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளிவராதது என் குற்றமல்ல)

3. மேல்ஜாதியைச் சார்ந்த பலர் தங்களை அட்டணை சாதியினராக பதிந்து கொண்டு படிப்பும் வேலை வாய்ப்பும் பெற்றிருக்கிறார்கள். இதனால், ஒரு சில அட்டவணை சாதியினரின் மொத்த மக்கள்தொகை எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் அவர்கள் அரசுப்பணியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பிரச்னையானது. இதனால், ஒரு குறிப்பிட்ட அட்டவணை சாதியினராக சான்றிதழ் வேண்டுமென்றால், அவர்கள் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மட்டுமே சான்றிதழ் வாங்க வேண்டும் என்று திருத்தப்பட்டது.(கொண்டா ரெட்டி, காட்டு நாயக்கர் வகுப்பினைச் சேர்ந்தவர்களுக்குத் தரப்பட்ட ஒதுக்கீட்டை, வசதி படைத்த ரெட்டியார்கள், நாயக்கர்கள் தவறாகப் பயன்படுத்திக் கொண்டது வழக்கு மன்றத்திற்குச் சென்றதுண்டு).

**

இதில் நான் தீவிரப் பிரச்னையாகப் பார்ப்பது, மூன்றாவது குளறுபடி. பல மேல்ஜாதியினர் தங்களை கீழ்ஜாதியாகப் பதிந்து கொண்டு இட ஒதுக்கீடு பெற்ற பிரச்னை.

இது ஏறத்தாழ தலித்துகளுக்கு கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டையே கேவலப்படுத்திவிட்டது. அவர்களுக்கு கிடைக்க இருந்த பலனை மறுத்துவிட்டது என்றால் மிகையாகாது.

நேருவின் கூற்றுப்படி, பொருளாதார உயர்ச்சியைவிட அந்தஸ்து உயர்ச்சியே முக்கியமாகக் கொண்டதாகக் கூறப்பட்ட ஜாதி அமைப்பில், மேல் ஜாதியினர் என்ன பணம் கொடுத்தாலும் தங்களை கீழ் சாதியினர் என்று கூறுக்கொள்ள மாட்டார்கள் என்ற அடிப்படை கருதுகோளை உடைத்து சுக்கு நூறாக்கிவிட்டது இந்த குளறுபடி.

80களிலும், 90களிலும், பல நூற்றுக்கணக்கான ஜாதியினர் தங்களை கீழ் சாதியாக அறிவிக்க வேண்டும் என்று போராடியது ஞாபகமிருக்கலாம்.

அப்படி வேலைக்காகவும் பொருளாதார மேன்பாடுக்காகவும் தங்கள் ஜாதியையே மாற்றி பதிவு செய்து கொண்டு வேலை பெற்ற வரலாறு இருக்கும்போது, முஸ்லீம்களுக்கு என்று பொத்தாம் பொதுவாக 5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தால் இதில் பயன் பெறப்போவது யார் ?

இன்று முஸ்லீம்களுக்கு பிற்பட்ட ஜாதியினர் பிரிவிலும், மிகவும்பிற்பட்ட ஜாதியினர் பிரிவிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது. இந்த 5 சதவீத இட ஒதுக்கீடு வந்தால், அந்த இட ஒதுக்கீடு போய் விடும்.

அப்படி போய்விட்டால், எல்லோரும் எந்த ஜாதியைச் சார்ந்தவராக இருந்தாலும் தற்காலிகமாக ஒருவர் (தன் சொந்தப்பெயரை மாற்றாமலேயே) முஸ்லீமாக அரசாங்க கெஸட்டில் பதிந்துவிட்டு, வேலை கிடைத்த பின்னால், மீண்டும் இந்துவாக பதிந்து கொள்ளும் குளறுபடிகள் அதிகரிக்கும். கவனியுங்கள். நீங்கள் உங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்ற ஒரு கட்டாயமும் இல்லை. ஒருவர் முஸ்லீமாக இருப்பதற்கு அவர் அராபியப்பெயர்தான் வைத்திருக்க வேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை. அதேதான் கிரிஸ்துவத்துக்கும். ஒரு கிரிஸ்துவர் ஆங்கிலப்பெயர் வைத்திருக்க வேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை. வேணுகோபாலன் என்ற பெயர் கொண்ட என் நண்பர் தீவிர பெந்த கொஸ்தே கிரிஸ்துவராக இருக்கிறார். வேணுகோபாலன், தன் பெயரை அப்படியே வைத்துக்கொண்டு, தன்னை முஸ்லீம் என்று கெஸட்டில் பதிந்து கொண்டு இட ஒதுக்கீட்டில் வேலை பெறுவதற்கு என்ன பிரச்னை ?

இதில் யார் பாதிக்கப்படுகிறார்கள் ?

இதுவரை பிற்பட்ட ஜாதியினர் பிரிவில் இட ஒதுக்கீடு பெற்று வரும் உண்மையான முஸ்லீம் ஜாதினரான, சையது, தெக்கணி முஸ்லீம்கள், மாப்பிளா, அன்ஸார், சேக், ராவுத்தர் மரைக்காயர் மக்களே பாதிக்கப்படுவார்கள்.

***

ஆகவே அரசு அலுவல்களில் இட ஒதுக்கீடு என்பது அதிகம் முஸ்லீம்களுக்கு பிரயோசனப்படாத ஆனால், அரசியல் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட சட்டம்.

**

காங்கிரஸ் அரசாங்கம் இதுவரை இது போன்ற ஒன்றுக்கும் உதவாத சலுகைகளை முஸ்லீம்களுக்குக் கொடுத்து, ஏதோ மகாப்பெரிய உதவியைச் செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி முஸ்லீம் தலைவர்களின் விசுவாசத்தையும் அப்பாவி முஸ்லீம்கள் வாக்குச்சீட்டுக்களையும் பெற்று அரசியல் நடத்தி வருகிறது. அதைத் தொடர்ந்து வந்த ஜனதா தள அரசியல்வாதிகளும் இதே போன்ற ஒன்றுக்கும் உதவாத அல்லது பணக்கார முஸ்லீம்களுக்கு மட்டும் உதவக்கூடிய சலுகைகளை கொடுத்து முஸ்லீம்களுக்கு ஏதோ செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் அதிமுக திமுக கட்சிகளும் இதே போன்ற ஒரு விஷயத்தைச் செய்து வந்திருக்கின்றன.

உண்மையிலேயே காங்கிரஸ் கட்சியும் திமுக, அதிமுக கட்சிகளும் முஸ்லீம்களின் நலன்களுக்கு உதவி வந்திருக்கின்றன என்ற ஒரு மாயை தொடர்ந்து வெளிவரும் புள்ளி விவரங்களினால் உடைக்கப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக, அரசு வேலைவாய்ப்புக்களிலும், இதர படிப்பு வாய்ப்புக்களிலும் முஸ்லீம்கள் குறைவான சதவீதத்தில் இருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் யாரைச் சுட்டிருக்க வேண்டும் ? காங்கிரஸ், திமுக , அதிமுக போன்ற கட்சிகைளைத்தானே சுட்டிருக்க வேண்டும் ? ஆனால், கிடப்பதை விட்டு கிழவனை மனையில் வை என்பது போல பாஜகவை திட்டச் சென்று விடுவார்கள் பத்திரிக்கையாளர்கள். பத்திரிக்கையாளர் மட்டுமா ? எல்லோருமே.

இதில் கிரிஸ்துவ மதத்தைச் சார்ந்த தலித்துகள் கதையை இடைச்செருகலாகக் கூறுகிறேன். 1947இல் இட ஒதுக்கீடு என்ற சலுகையை அம்பேத்கர் கொண்டுவந்தபோது, கிரிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்கள், சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்கள் பெளத்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்று யாராக இருந்தாலும் அவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் பங்கு உண்டு என்று வாதாடினார். ஆனால், கிரிஸ்துவ தலைவர்கள், தங்கள் மதத்தைச் சார்ந்தவர்களை மேல் ஜாதியினராகவே கருத வேண்டும், கிரிஸ்துவர்களாக ஆனபின்னால், அவர்கள் தலித்துகள் என்ற சாதியை சார்ந்தவர்கள் அல்லர் என்றும், கிரிஸ்துவம் ஜாதியை அங்கீகரிக்கவில்லை என்றும் போராடினார்கள்.

ஆனால், 1990களில் கிரிஸ்துவத்தலைவர்கள், முக்கியமாக தமிழக தெலுங்கு கிரிஸ்துவத்தலைவர்கள் புது தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். (அதில் தலித் கிரிஸ்துவர் என்று எழுதப்பட்ட கிரிஸ்து சிலுவையில் தொங்க, காவி உடை அணிந்து, குடுமி வைத்த, ‘இந்துத்துவா ‘ என்று அட்டை ஒட்டப்பட்ட ரோமானியர்கள் ஈட்டியால் இந்த தலித் கிரிஸ்துவை குத்தினார்கள்.) சீக்கிய, பெளத்த தலித்துகளுக்குக் கொடுக்கப்படும் இட ஒதுக்கீடு கிரிஸ்துவர்களுக்கு மறுக்கப்படுவது இந்துத்துவ சதி என்று போராடினார்கள். கிரிஸ்துவ தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு இல்லாமல் போனதற்கும், இந்துத்துவாவுக்கும் என்ன சம்பந்தம் ? (வெளிநாட்டு செய்தி நிறுவனங்களுக்கும், இந்தியராக தப்பிப்பிறந்துவிட்ட வெளிநாட்டினருக்கும் முற்போக்கு செய்தி தீனி கொடுக்க வேண்டாமா ?)

இதன் காரணம், பல கிரிஸ்துவ தலித்துகள் இட ஒதுக்கீடு காரணமாக தங்களை இந்துக்கள் என்று பதிந்து கொள்வதை தடுக்கவே என்பது வெளிப்படை.

*

மீண்டும் காங்கிரஸ் கட்சி முஸ்லீம்களுக்கு உதவும் பம்மாத்தைப் பார்ப்போம்.

தி இந்து பத்திரிக்கை சிறுபான்மையினரின் பின்தங்கிய நிலைமையை எடிட்டோரியலாக எழுதியிருப்பதை படிக்கலாம்.

http://www.hindu.com/2004/10/12/stories/2004101201631000.htm

மொழிச்சிறுபான்மையினரும் மதச்சிறுபான்மையினரும் சமூக ரீதியாகவும் கல்விரீதியாகவும் பின் தங்கியவர்களாக வரையறை செய்யமுடியுமா என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, அவ்வாறு கொடுக்கலாம், கமிஷன் அப்படி கொடுக்க முன்வந்தால் அது 50 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்திருக்கிறது.

65 சதவீத இந்துக்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும், முஸ்லீம்கள் 59 சதவீத கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருப்பதைச் சுட்டிக்காட்டும் தி இந்து, இந்துக்களுக்கு அரசு கல்வி கொடுக்கிறது முஸ்லீம்களுக்கு அரசு கல்வி கொடுப்பதற்கு அக்கறை காட்டவில்லை என்பது போன்ற ஒரு மாயையை உருவாக்க முயல்கிறது. வேலையில் இருக்கும் முஸ்லீம்களின் எண்ணிக்கை 31 சதவீதமாகவும் இந்துக்களின் எண்ணிக்கை 40 சதவீதமாகவும் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், இன்னொரு முக்கிய சிறுபான்மையான கிரிஸ்துவர்களைக் காட்டிலும் இந்துக்கள் முஸ்லீம்கள் இருவருமே பின்தங்கியிருக்கிறார்கள் என்பதை அது சுட்டிக்காட்டவில்லை. கிரிஸ்துவர்கள் அரசு வேலைகளிலும் தனியார் வேலைகளிலும் அதிக அளவில் இருக்கிறார்கள். கல்வியறிவு பெற்றவர்களும் கிரிஸ்துவர்களில் அதிகம். ஏனெனில் கிரிஸ்துவர்களின் இந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் சாதனைகளைச் சுட்டிக்காட்டினால், இந்திய அரசாங்கம் இந்துக்களுக்கு மறைமுக ஆதரவாக இருக்கிறது என்ற பொய்யை உண்மை போல் கோடிட்டுக் காட்ட முடியாதல்லவா ?

ஏன் இந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒப்பிட வேண்டும் ? ஒரு சிறுபான்மையையும் மற்றொரு சிறுபான்மையையும் அல்லவா ஒப்பிட வேண்டும் ? இந்துக்களின் சதவீதங்களை ஒப்பிடுவது எதன் பொருட்டு ?

இன்றைக்கு ஒரு சிறுபான்மையினர் கல்விக்கூடம் ஆரம்பிக்க வேண்டுமென்று கேட்டால் உடனே வரும் அனுமதி, இந்துக்கள் அனுமதி கேட்டால் உடனே கிடைக்காது. அப்படியிருக்கும் காரணத்தால், பல இந்துக்கள் கிரிஸ்துவப் பெயரில் கல்வி நிறுவனங்களை அமைத்திருக்கிறார்கள். சென்னையில் புகழ் பெற்ற ஒரு கிரிஸ்துவப் பெயர் கொண்ட பெண்கள் பள்ளிக்கூடம் இந்துக்களால் நிர்வகிக்கப்படுகிறது. அப்படியிருக்கும் நிலையில் கிரிஸ்துவர்கள் பரந்த கல்வி அறிவு பெற்றிருப்பதில் ஆச்சரியம் இல்லை. இந்துக்களும் ஓரளவு கல்வி பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமானது. இவ்வளவு சிறுபான்மையினர் உதவி கொடுத்திருந்தும் முஸ்லீம்கள் கல்வியில் பின் தங்கியிருக்கிறார்கள் என்பதுதான் இன்னும் ஆச்சரியமானது.

இவ்வளவு வருடங்கள் காங்கிரஸ் இந்தியாவில் ஆட்சி செய்திருந்தும், எத்தனையோ சலுகைகளை சிறுபான்மையினருக்கு அளித்திருந்தும், முஸ்லீம்கள் கல்வியிலும் வேலையிலும் பின் தங்கி இருப்பதற்குக் காரணம் என்ன ? அதற்கான பதில் என்னிடம் இல்லை.

ஆகையால், இது உபகாரத்தைவிட உபத்திரவத்தையே அதிகம் உண்டுபண்ணக்கூடியது என்பது என் கருத்து.

**

ஆகையால் எதற்கு இந்த முஸ்லீம்களுக்கு என்று தனிப்பட்ட இட ஒதுக்கீடு கோரிக்கை ?

எனக்கு பல காரணங்கள் தோன்றுகின்றன. அவை அனைத்துமே தவறாக இருக்கலாம். அதில் முதலாவது காரணம் இது சாதாரண முஸ்லீம்களின் கோரிக்கை இல்லை. இது முஸ்லீம் மத நிறுவனங்களை நிர்வகிப்பவர்களின் கோரிக்கை என்பது.

1. இன்று சாதிவாரியாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இஸ்லாமியர்கள் இந்த பிற்பட்ட சாதி இட ஒதுக்கீடு காரணமாக சாதி வாரியாகப் பிரிந்துவிடுவார்கள் என்று இஸ்லாமிய அமைப்புக்கள் அஞ்சலாம். இது இஸ்லாம் சாதியை ஒப்புக்கொள்வதில்லை என்ற பிரச்சாரத்துக்கு எதிராக இருப்பதால், முஸ்லீம்கள் என்ற பொதுவான இட ஒதுக்கீட்டுக்குள் வருவது முஸ்லீம்களை ஒன்றிைணைக்கும் என இந்த அமைப்புக்கள் கருதலாம்.

2. தலித்துகளை மதமாற்றம் செய்யும் போது, பலர் மதம் மாறத் தயாராக இல்லை. அவர்கள் இஸ்லாமுக்கு மதம் மாறினால், தங்களுக்கு இருக்கும் இட ஒதுக்கீட்டை இழந்துவிடுவோம் என்று கருதலாம். அதனால், முஸ்லீம்களுக்கு என்று தனி இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தால் அது மதம் மாற்றறும் வேலையில் உபயோகமாக இருக்கலாம்.

3. இன்று ஒரு சாகுல் ஹமீது மரைக்காயர், கிருஷ்ணன் நம்பி மரைக்காயராக மதம் மாறினாலும், அவருக்கு ஜாதி வாரியான பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு இருப்பதால், அவர் தொடர்ந்து இட ஒதுக்கீட்டின் மூலம் பயன் பெற முடியும். ஆனால், முஸ்லீம்களுக்கு என்று ஒரு பொதுவான இட ஒதுக்கீடு வந்தால், கிருஷ்ணன் நம்பி மரைக்காயருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது. ஆகவே, முஸ்லீம்களை கட்டுக்கோப்புக்குள் கொண்டுவர இந்த முஸ்லீம் என்ற பொதுவான இட ஒதுக்கீடு பயனளிக்கலாம்.

4. பல முஸ்லீம் நிறுவனங்கள் யார் முஸ்லீம் யார் முஸ்லீம் இல்லை என்ற விவாதங்களில் இறங்கியுள்ளன. ஷியா ஷீனி மற்றும் அஹமதியா பிரிவைச்சார்ந்த பலரும் தாங்களே முஸ்லீம்கள் மற்றவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்ற விவாதங்களில் இருக்கிறார்கள். பாகிஸ்தானும் சவூதி அரேபியாவும் ஏற்கெனவே அஹ்மதியா முஸ்லீம்களை முஸ்லீம்கள் அல்ல என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இப்போது முஸ்லீம்களுக்கு என்ற ஒரு பொதுவான இட ஒதுக்கீடு வரும்போது, பலரும் பாகிஸ்தானில் இவர்கள் முஸ்லீம்கள் அல்லர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்; ஆகையால் இவர்களுக்கு முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டில் பங்கு அளிக்கக்கூடாது என்று நீதிமன்றம் ஏறுவார்கள். எந்த பிரிவு முஸ்லீம் அல்ல எந்தப்பிரிவு முஸ்லீம் என்று இந்திய நீதிமன்றங்களில் பல வழக்குகள் போடப்படும். இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்துவிட்டாலோ அவ்வளவுதான். ஏராளமான முஸ்லீம்களின் வேலை காலி என்ற நிலை வரும். இது ஒரு குறிப்பிட்ட பிரிவு முஸ்லீம்கள் மற்றொரு குறிப்பிட்ட பிரிவு முஸ்லீம்களை இந்திய அரசின் துணை கொண்டு பயமுறுத்த முனையும் ஒரு உபாயமாகவும் இருக்கலாம்.

இது தான் மிக ஆபத்தான விளைவாக இந்த அறிவிப்பை நடைமுறைப் படுத்தினால் உருவாகும். பாகிஸ்தான் போன்ற , இஸ்லாமிய அடையாளங்களை வைத்து ஆட்சி செய்யும் மதவாத அரசுகளுக்கு, யார் சரியான இஸ்லாமியர் என்று வரையறுப்பது முக்கியமான விஷயமாகப் படலாம். ஆனால் மதச்சார்பின்மையையும், ஜனநாயகத்தையும் மையமாகக் கொண்ட இந்திய அரசு யாருடைய மதம் சரியான மதம் என்று ஒரு நிலைபாடு எடுக்க நிர்ப்பந்திக்கப் பட்டால் அது போன்ற ஆபத்து வேறு எதுவும் இல்லை.

****

ஆகையால் யார் ஒருவரும் தான் பிறந்த பிறப்பு காரணமாகவோ, இனம் காரணமாகவோ மொழி காரணமாகவோ வேலை வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என்ற பொதுவான சட்டத்தை ஏற்படுத்துவது இன்றைய காலத்துக்கு ஏற்ற சட்டமாக இருக்கலாம். அவ்வாறு வேலை வாய்ப்பு மறுக்கப்படும் நிலையில் அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்ல தகுந்தாற்போல ஒரு சட்டம் இயற்றப்படவேண்டும்.

வங்கிக் கடன், தொழிற்கடன் தரும் நிறுவனங்கள் எந்த அளவிற்கு சிறுபான்மையினருக்கு உதவிகள் அளித்து வருகின்றன என்று கணக்கெடுப்புச் செய்ய வேண்டும். அதில் குறைகள் இருந்தால் சிறுபான்மையினர் வாரியம் சுட்டிக் காட்டி, பரிகார நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

****

சாதியை முன்வைத்து இட ஒதுக்கீடு அளிப்பது, மதத்தை முன்வைத்து இட ஒதுக்கீடு அளிப்பதும் இரண்டு வேறு வேறு செயல்கள். சாதிகளுக்கு ஒதுக்கீடு இருக்கும்போது ஏன் மதங்கள் அடிப்படையில் ஒதுக்கீடு இருக்கலாகாது என்ற கேள்வியே அபத்தம். சாதி என்பது அதன் அடிப்படையிலேயே மாற்றிக் கொள்ள முடியாத ஒன்று என்றும், ஒரு சாதியைச் சேர்ந்ததால் வரலாற்று ரீதியாக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, இன்று அந்த அநீதி இல்லையென்றாலும் பரிகாரம் செய்கிற ஒரு செயல் என்பது தான் சாதி ரீதியான ஒதுக்கீட்டின் அடிப்படை.

ஆனால் மத ரீதியாக அப்படிப்பட்ட அநீதிகள் நடந்ததாக எந்த வரலாறும் இல்லை. அது மட்டுமல்ல, மதத்தை மாற்றிக் கொள்ளமுடியாது என்பது தனிமனித உரிமையில் கை வைக்கிற விஷயம்.

முஸ்லீம்களுக்கான இந்த இட ஒதுக்கிட்டு அறிவிப்பு வெறும் அறிவிப்பு தான் , இதனால் முஸ்லீம்களுக்கு எந்தப் பயனும் கிட்டாது; அதிலும் தீமையே அதிகம். மாறாக பா ஜ கவிற்கு அடுத்த தேர்தலுக்கு யாத்திரை செல்ல ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைக்கும், அடுத்த தேர்தலில் காங்கிரசுக்கு முஸ்லிம்கள் வாக்கு வங்கி சற்றே வலுப்படலாம், ஆனால் அதுவும் ஒரு தேர்தலைத் தாண்டி சிதறாமல் இருக்க எந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் இந்த அறிவிப்பின் பின்னால் காங்கிரஸ் காலம் காலமாகச் செய்து வரும் பிரித்தாளும் உத்தியும், வேடமிடலும் தான் மிகத் தெளிவாகத் தெரிகின்றன. சுப்ரீம் கோர்ட் இதனை ஒப்புக் கொள்ளாது. எனவே முஸ்லீம்களிடம் பார்த்தாயா நான் உனக்கு சலுகை தர விரும்புகிறேன் ஆனால் நீதிமன்றம் அனுமதிக்க வில்லை என்று அனுதாபம் பெறலாம். அவ்வளவு தான்.

ஆனால் முஸ்லீம்கள் ஏன் காங்கிரஸை நம்புகிறார்கள் என்பது தான் ஆச்சரியம் தரும் அவலம்.

இன்றைய நிலையில், தனியார் நிறுவனங்களில் முன்னுரிமையை அமல் படுத்தமுடியாத நிலை. குறைந்த பட்ச பொது வேலைத்திட்டம் என்று அறிவிக்கப்பட்டதில், சிறுபான்மையினருக்கும் பிற்பட்டஜாதியினருக்கும் தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தருவோம் என்று சொல்லி வாக்குக்களைப் பெற்று ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, இன்று தனியார் நிறுவனங்கள் தானாக முன் வந்து இடம் தரவேண்டும் என்று பேசுகிறத். அரசு நிறுவனங்கள் குறைந்து கொண்டு வருகின்றன. அவை தனியார் நிறுவனங்களாக மாற்றப்பட்டுகொண்டு வருகின்றன. அரசுப் பணிகளிலும் ஆட்குறைப்பு நிகழ்ந்து வருகிறது. முஸ்லீம்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்காக எத்தனை புது பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள் ? 500 முஸ்லீம்களுக்கு வேலை முன்னுரிமை தரவேண்டும் என்றால் 10000 புதிய பணியிடங்கள் உருவாக்கப் படவேண்டும் . அப்படிப் பணியிடங்கள் உருவாக்க ஏதும் திட்டங்கள் அரசிடம் உள்ளதா ? இதெல்லாம் இல்லாமல் ஏன் இந்தப் பம்மாத்து ?

சரி, முஸ்லீம்கள் மட்டும் மதச் சிறுபான்மையினர் அல்லவே, கிருஸ்துவர்கள் இருக்கிறார்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், சமணர்கள் , பெளத்தர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்க ஏதும் திட்டம் இவர்களிடம் உள்ளதா ? இல்லை என்றால் முஸ்லீம்களை மட்டும் திருப்திப் படுத்த முயல்கிறார்களா ? முஸ்லீம்கள் சரியான விகிதத்தில் இல்லை என்பதற்கு ஏதும் சென்சஸ் ஆதாரங்கள் இருக்கிறதா ? அந்த ஆதாரங்கள் முன்வைக்கப் பட்டுள்ளனவா ?

காங்கிரஸ் இப்படி ஏமாற்றினால் ஏன் இவர்கள் ஏமாறத் தயாராய் இருக்கிறார்கள் என்பது இஸ்லாமியத் தலைமையினால் வரும் சிக்கல்.

பொதுவாக ஒரு சமூகம் , தன் மத்தியதரவர்க்கத்தின் வழிகாட்டுதலினாலும், தலைமையின் கீழும் தான் இயங்குகிறது. இஸ்லாமியர்களின் தலைமை தொன்றுதொட்டு இரண்டு பிரிவுகளாய் உள்ளன. ஒன்று இக்பால், ஜின்னா, சுஹராவர்தி, மெளலானா மெளதூதி போன்ற மதவாதத் தலைமை. முஸ்லீம்களின் மத அடையாளத்தை மட்டும் முன்னிறுத்தி அவர்களுடைய கல்வி, கலாசார அடையாளங்களை பின்னுக்குத் தள்ளும் இந்த மதவாதத் தலைமை தான் வலுப்பெற்றும் விளங்கியிருக்கிறது. மெளலானா அபுல் கலாம் ஆசாத், கான் அப்துல் கஃபார் கான், இப்டா போன்ற கலைச் சங்கங்களில் இடம் பெற்ற இடது சாரி சிந்தனை கொண்டவர்களை உள்ளிட்ட மனிதநேயத் தலைமையை மதவாதத் தலைமை பின்னுக்குத்தள்ளிவிட்டது. காங்கிரஸில் இருந்த மிதவாத இஸ்லாமியத் தலைவர்களை காங்கிரஸே பலமுறை மதிக்கவில்லை என்று காங்கிரஸ் முஸ்லீம் தலைவர்கள் வருந்தியிருக்கிறார்கள். இடதுசாரிகளைப் பொறுத்தமட்டிலும், மதவாதத்தலைமையைப் பொறுத்தமட்டிலும், காங்கிரஸில் இருக்கும் முஸ்லீம் தலைவர்களையும் இதர மிதவாத முஸ்லீம் தலைவர்களையும் ‘சர்க்காரி முஸ்லீம் ‘ என்ற பெயர் சூட்டிக் கேவலப்படுத்தும் பணி தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், மதவாதச் சிந்தனையை உதறிய, இந்த மதவாதத்தலைமையிலிருந்து தனிமனித ரீதியாய் விலகிய அப்துல் கலாம், ப்ரேம்ஜி , மு மு இஸ்மாயில் போன்றவர்கள் தான் பெருமையை அடைந்திருக்கிறார்கள்.

மேற்சொன்ன இந்தப் பிளவு இன்றும் தொடர்கிறது. ஷபனா ஆஸ்மி, சல்மான் குர்ஷித், அஸ்கர் அலி இஞ்சினியர், இன்குலாப் , எம் ஜே அக்பர் போன்ற மிதவாத அறிவிஜீவிகள் தலைமையேற்று வழிநடத்து முன்வராததால், சி எம் இப்ராகிம், முஃப்டி முகம்மது சையது , சையது ஷகாபுதீன், இமாம் புகாரி போன்ற மதவாதிகளும், த மு மு க போன்ற மதவாத இயக்கங்களும் தலைமையேற்று வழிகாட்டத் தொடங்கிவிட்டால் இது தான் விதி.

இது இன்று நேற்றல்ல. வெகுகாலமாய் முஸ்லீம் தலைவர்களிடையே நிகழ்ந்து வரும் அபத்தம். நாத்திகரான பெரியாருடனும், கருணாநிதியுடனும், நாத்திக இயக்கமான தி மு கவுடனும் இணக்கமாய் முஸ்லீம் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், இந்து முஸ்லீம் கலவரத்தின் போதெல்லாம் தன் உயிரைப் பணயம் வைத்து உண்ணாவிரதம் இருந்து, முஸ்லீம்கள் நலனுக்காக உயிரையே கொடுத்த காந்தியைக் காட்டிலும், இந்துமதத்தைத் தாக்கியதாலேயே பெரியார் இவர்களுக்கு உவப்பானார் என்றால் அதன் பொருள் என்ன ?

இந்திய முஸ்லீம்களுக்குத் தேவை கமால் பாஷா . ஆனால் அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பதோ ஜின்னாவும், சையது ஷகாபுதீனும், எந்த பயனையுமளிக்காத ஐந்து சதவீத இட ஒதுக்கீடும், த மு மு கவும் தான்.

***

karuppanchinna@yahoo.com

Series Navigation