முள்பாதை 37

This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

நான் ஏறிய ரயில் வழக்கத்தைவிட நாலுமணி நேரம் தாமதமாக தஞ்சைக்குப் போய்ச் சேர்ந்தது. அப்பா இரவில் ரயிலேற்றும் முன், “மீனா! ஜாக்கிரதையாகப் போய் வா. திருமணம் முடிந்ததும் கிளம்பி வந்துவிடு” என்றார்.” அப்பா அப்படி எச்சரிப்பது அது நான்காவது முறை.
“சரி டாடீ.”
“மெலட்டூரில் கமலாவை, குழந்தைகளை இன்னும் யாரை எல்லாம் பார்க்கணும் என்று நினைக்கிறாயோ எல்லோரையும் பார்த்துவிட்டு வா. இதுதான் கடைசி முறை நீ அந்த ஊருக்குப் போவது” என்றார். சரி என்பது போல் தலையை அசைத்தேன்.
“சூட்கேஸ் கவனம். நீ பாட்டுக்கு தூங்கிவிட்டாய் என்றால் எவனாவது தூக்கிக் கொண்டு போய் விடுவான்.” அப்பா எச்சரிப்பதைக் கேட்கும் போது எனக்கு சிரிப்புதான் வந்தது. தனியாகப் பயணம் செய்வதில் எனக்கு பயம் இல்லை என்றும், முதல் வகுப்பில் போகிறேன் என்றும் நான் சொன்னதை அப்பா காதில் வாங்கிக் கொள்ளவில்லை. பிடிவாதமாக இரண்டாவது வகுப்பில் லேடீஸ் கம்பாரட்மெண்டில் ஏற்றிவிட்டார். இரவு முழுவதும் நான் தூங்வில்லை. கண்ணயர்ந்தால் சூட்கேஸ் களவு போய் விடுமோ என்ற பயம் ஒரு பக்கம், மெலட்டுர் பற்றிய எண்ணங்கள் மற்றொரு பக்கம் என்னை அலைக்கழித்தன.
நான் திடீரென்று போய் நின்றதும் அத்தையின் வீட்டில் எவ்வளவு ஆச்சரியப்படுவார்களோ எனக்குத் தெரியும். ராஜி ஓடி வந்து என்னைக் கட்டிக் கொள்வாள். அத்தையும், குழந்தைகளும் சந்தோஷத்தில் மூழ்கிவிடுவார்கள்.
மது தோட்டத்திற்குப் போய் அண்ணி வந்திருக்கிறாள் என்று சொன்னதும் கிருஷ்ணன் நம்ப முடியாதவன் போல் கை வேலையை விட்டுவிட்டு வேகமாக வீட்டுக்கு வந்து விடுவான். நேரில் என்னைப் பார்த்த பிறகும் உண்மைதானா என்பதுபோல் பார்த்துக் கொண்டு நிற்பான்.
நான் பெருமை பொங்கும் குரலில் “ராஜி உன்னுடைய தங்கை மட்டுமே இல்லை. என்னுடைய அத்தை மகளும்கூட. அதான் வந்து விட்டேன்” என்று சொல்லுவேன்.
இப்படி பலவிதமான யோசனைகளுடன் எனக்குத் தூக்கம் வரவில்லை. இரவு முழுவதும் தூங்காததாலும், நாலரை மணி நேரம் தாமதமாகப் போய்ச் சேர்ந்ததாலும் ரொம்ப களைப்பாக இருந்தது.
ஜன்னல் வழியாக தொலைவில் போய்க் கொண்டிருந்த போர்டரை அழைத்தேன். அவனுக்குக் காதில் விழவில்லை போலும். திரும்பிப் பார்க்காமல் அப்படியே போய்விட்டான்.
“கூலி… கூலி…” கைகளைத் தட்டி அழைத்தேன்.
“யெஸ் மேடம்!” பின்னாலிருந்து குரல் கேட்டது.
ரொம்பவும் அறிமுகமான அந்தக் குரலைக் கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பினேன். என் கண்கள் வியப்பால் விரிந்தன. எதிரே கிருஷ்ணன் நின்றிருந்தான்.
“நீயா!” என்றேன் நம்ப முடியாதவள் போல் பார்த்துக் கொண்டே.
“ஜீ ஹ¤ஜுர்” என்றான் லேசாக குனிந்து, ஏர் இண்டியா மகாராஜாவைப் போல் வணக்கம் தெரிவித்துக் கொண்டே.
“நான் வரப் போவது உனக்கு எப்படித் தெரியும்?”
“நேற்று இரவு கனவு வந்தது.”
“கிண்டல் வேண்டாம். உண்மையைச் சொல்லு.”
“முதலில் கீழே இறங்கு.” மேல் பர்த்தில் இருந்த என்னுடைய சூட்கேஸை எடுத்துக் கொண்டான்.
“என்ன ஆளுப்பா நீ? நினைத்துக் கொண்டால் போதும், அல்லாவுத்தீன் பூதம்போல் கண் எதிரே வந்து நிற்கிறாயே?” என்றேன் நிஷ்டூரமாக.
“அப்படியா. எனக்குத் தெரியாதே?” என்றான் முறுவலுடன். அந்த முறுவலில் இருந்த குறும்புத்தனம் என் இதயத்தைத் தாக்கியது,
“பெட்டியை நீ தூக்குவானேன்? போர்ட்டரைக் கூப்பிடு” என்றேன்.
“தாங்கள் தர நினைத்த கூலியை அடியேனிடம் தந்து விடுங்கள். இந்த ஏழைக்கு உதவியாக இருக்கும்.” நாட்கபாணியில் சொன்னான்.
“ரொம்ப உற்சாகமாக தென்படுகிறாயே?”
“உண்மைதான். ஒப்புக்கொள்கிறேன்.”
கிருஷ்ணனுடன் சேர்ந்து அந்த பிளாட்·பாரத்தில், ஜன சந்தடியில் வேகவேகமாக நடப்பது எனக்கு சந்தோஷமாக, இனிய அனுபவமாக இருந்தது. அவன் இப்படி உரிமையுடன் என்னிடம் பேசுவது இதுதான் முதல் தடவை.
பிளாட்·பாரத்தை விட்டு வெளியே வரும்போது மறுபடியும் கேட்டேன். “உண்மையைச் சொல்லு. நான் வரப் போவது உனக்கு எப்படித் தெரியும்? வேறு யாருக்காவோ வந்த போது நான் கண்ணில் பட்டேன். அப்படித்தானே?” என்றேன்.
“அப்படி எதுவும் இல்லை. சாட்சாத் உனக்காகத்தான் வந்தேன். என் பொறுமையை சோதிப்பதுபோல் ரயில் வேறு நாலரை மணி நேரம் தாமதமாக வந்தது. காத்திருத்தல் என்பது இவ்வளவு வேதனையைத் தருவதாக, இவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று இதுநாள் வரையில் எனக்குத் தெரியாது.”
அவன் பேச்சில் மறைமுகமான அர்த்தம் ஏதோ இருப்பது போல் எனக்குத் தோன்றியது. அவன் பக்கம் பார்த்தேன். அவன் என் பக்கம் பார்த்தான். இருவரின் இதழ்களிலும் முறுவல் மலர்ந்தது. நான் உடனே உதட்டை சுழித்துக் கொண்டு “நீ வந்ததால் என் இனிமையான கனவு நாசமாகிவிட்டது” என்றேன்.
“என்னது?” கிருஷ்ணன் வியப்புடன் என் பக்கம் திரும்பினான்.
“திடீரென்று நான் வந்து உங்கள் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்த வேண்டும் என்று பலவிதமாக யோசித்துக் கொண்டு வந்தேன். எல்லாம் வேஸ்ட் ஆகிவிட்டது. கிருஷ்ணார்ப்பணம்!” என்றேன் பெருமூச்சு விட்டுக் கொண்டே.
“நானும் சரியாக அதையே தான் நினைத்தக் கொண்டிருந்தேன். நான் ஸ்டேஷனுக்கு வரப் போவது உனக்குத் தெரியாது இல்லையா. என்னைப் பார்த்ததும் வியப்பில் ஆழ்ந்து போவாய் என்றும், திகைத்துப் போவாய் என்றும் நினைத்தேன். நான் பொறுமையாக உனக்காக காத்திருந்ததெல்லாம் வியர்த்தமாகிவிட்டது. ராமார்ப்பணம்!”
“பழித்துக் காட்டுகிறாயா?” என்றேன் லேசான கோபத்துடன்.
நடந்து போய்க் கொண்டே திடீரென்று நின்று விட்ட இருவரையும் சுற்றிலும் இருந்தவர்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். அதைக் கவனித்த கிருஷ்ணன் என் கையை பட்டும் படாமல் தொட்டுவிட்டு “தாயே! உனக்குப் புண்ணியம் கிடைக்கட்டும். இங்கே எந்தச் சண்டையும் ஆரம்பித்து விடாதே. வா போகலாம்” என்று நடையை எட்டிப் போட்டான்.
“நான் வரப்போவதாக எப்படி தெரியுமோ சொல்லக் கூடாதா?” வேண்டுகோள் விடுப்பது போல் கேட்டேன்.
“மாமா டெலிகிராம் கொடுத்தார்.”
“என்ன?” மறுபடியும் கிருஷ்ணன் பக்கம் திரும்பப் போனேன்.
கிருஷ்ணன் என் கையைப் பற்றி நேராக நடக்கச் செய்தான். “பின்னே எப்படி தெரிய வரும் என்று நினைத்தாய்? நேற்று மதியம் நான் பாபநாசம் போகணும் என்று கிளம்பும்போது மாமாவின் டெலிகிராம் வந்தது. டெலிகிராம் கிடைக்க அரைமணி நேரம் தாமதமாகியிருந்தால் உன் இனிய கனவு நினைவாகியிருக்கும்” என்றான்.
அப்பா மீது எனக்குத் தாங்க முடியாத கோபம் வந்தது. கிருஷ்ணனுக்கு டெலிகிராம் கொடுக்கப் போவதாக என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இருவரும் வெளியே வந்தோம். கிருஷ்ணன் ஜட்கா வண்டியை அழைத்து ஏதோ ஒரு தெருவின் பெயரைச் சொன்னான்.
“நாம் பஸ் ஸ்டாண்டுக்கு போகவில்லையா?” என்று கேட்டேன்.
“கடைத்தெருவில் கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடித்துக்கொண்டு மாலையில் போகலாம்” என்றான்.
இரண்டு பேரும் ஜட்கா வண்டியில் ஏறிக் கொண்டோம். தெருவில் மக்கள் நடமாட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான் நடுவில் கிருஷ்ணன் பக்கம் பார்த்தேன். அவனும் அதே சமயத்தில் என்னைப் பார்த்தான். இருவரின் முகத்திலும் ஒரேவிதமான சந்தோஷம். உயிர் நண்பர்கள் இருவர் ரொம்ப நாட்கள் கழித்து சந்தித்துக் கொண்டது போன்ற உணர்வு.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த கோலத்தில் பிடிபட்டு விட்டதை சமாளிப்பதற்காக கேட்டேன். “நாம் இப்போ யார் வீட்டுக்குப் போகிறோம்?”
“எங்க அப்பாவின் ஒன்றுவிட்ட சித்தியின் வீட்டுக்கு. உறவுமுறையில் பாட்டிதான் என்றாலும் நாங்களும் சித்தி என்றுதான் அழைப்போம்.” கிருஷ்ணன் சொல்லிக் கொண்டிருந்தபோதே ஜட்கா ஒரு வீட்டின் முன்னால் வந்து நின்றது. கிருஷ்ணன் இறங்கி கதவைத் தட்டிக் கொண்டே “சித்தீ!” என்று அழைத்தான்.
உள்ளே இருந்து ஆள் வருவதுபோல் சந்தடியோ, வருகிறேன் என்ற குரலோ எதுவும் கேட்கவில்லை.
“யாரும் இல்லை போலிருக்கு” என்றேன்.
“பூஜை அறையில் இருக்கிறாளோ என்னவோ” என்றான்.
வண்டிக்காரன் சூட்கேஸை கொண்டு வந்து எங்கள் அருகில் வைத்தான். கிருஷ்ணன் சட்டைப் பையிலிருந்து பர்ஸை எடுத்தான்.
“இரு. நான் தருகிறேன்” என்றேன். ஆனால் நான் பேக்கைத் திறந்து பணத்தை எடுப்பதற்குள் கிருஷ்ணன் அவனுக்குப் பணம் கொடுத்து அவனை அனுப்பி விட்டான்.
“நான் எப்படியும் என்னுடைய சூட்கேஸை தூக்கிக் கொண்டு வந்ததற்கு உனக்குக் கூலி கொடுக்கணும் இல்லையா.”
“அவசரப்படாதே. வட்டீயுடன் சேர்த்து வசூல் செய்து கொள்கிறேன்.”
அதற்குள் கதவுகள் திறந்து கொண்டன. ஒற்றைக் கதவை மட்டும் திறந்து வழிவிடுவது போல் அந்த மூதாட்டி ஒதுங்கி நின்றாள்.
“உள்ளே வா.” கிருஷ்ணன் என்னை அழைத்துக் கொண்டே சூட்கேஸை எடுத்துக் கொண்டு உள்ளே போனான். நானும் உள்ளே அடி எடுத்து வைத்தேன்.
கிருஷ்ணன் சித்தி என்று அழைத்த அந்த மாதுவுக்கு வயது கிட்டத்தட்ட எண்பது இருக்கும். தோல் முழுவதும் சுருங்கி ஒற்றை நாடியாக இருந்தாள். மழிக்கப்பட்ட தலை, நெற்றியில் வீபூதி கீற்றும் கழுத்தில் ருத்ராட்ச மாலையும் இருந்தன. பூஜையின் நடுவில் வந்தாள் போலும், சத்தம் வெளியே வராமல் சுலோகத்தை உச்சரித்துக் கொண்டிருந்தாள்.
கிருஷ்ணன் என்னை அறிமுகப்படுத்தியதும் வரவேற்பது போல் புன்னகைத்து விட்டு கட்டிலை காண்பித்து உட்காரச் சொல்லி ஜாடை காட்டினாள். சித்தி பாட்டி உள்ளே போனதும் கிருஷ்ணன் தொடர்ந்து உள்ளே போனான். “சித்தீ! பிளாஸ்கை எடுத்துக் கொடு” என்று கிருஷ்ணன் சொல்வது காதில் விழுந்தது.
நான் கட்டில் மீது அமர்ந்து கொண்டேன். கிருஷ்ணன் திரும்பி வந்தான். ஆனால் அவன் கையில் பிளாஸ்க் இருக்கவில்லை.
“கடைத் தெருவுக்கு போகிறாயா?” என்று கேட்டேன்.
“ஆமாம். உனக்கு ஏதாவது வேண்டுமா?”
“வேண்டாம். நான் பணம் தருகிறேன்.”
“பணமா? எதுக்கு?”
“காபி வாங்கி வருவதற்காக வெளியே போகிறாய் இல்லையா?”
“பணம் பணம் என்று சொல்கிறாயே. எவ்வளவு கொண்டு வந்திருக்கிறாய் பார்ப்போம்.” கட்டில் மீது கிடந்த என் பேக்கை கையில் எடுத்துக் கொண்டான்.
சட்டென்று அவன் கைகளை பலமாக பிடித்துக் கொண்டு “வேண்டாம் வேண்டாம். திறக்காதே” என்று சத்தமாக சொன்னேன்.
கிருஷ்ணன் பேக்கை விட்டுவிட்டான். நான் பேக்கை மடியில் வைத்துக் கொண்டேன்.
“எதற்காக இந்தப் பதற்றம்? அப்படி என்ன இருக்கு அதில்?”
“என்னுடைய உயிர்!” பேக்கை மார்போடு அணைத்துக் கொண்டேன்.
“ஓஹோ! அப்படி என்றால் அது என்னிடம் இருப்பது நல்லது. கவனமாக பாதுகாக்கிறேன். இங்கே கொடு.” பேக்கை எடுத்துக் கொள்ளப் போவது போல் பாசாங்கு செய்தான்.
பேக்கை தொலைவாக வைத்தேன். “இரு அவசரப்படாதே. உன்னிடமே தருகிறேன். இப்போ இல்லை. சரியான நேரமும் வாய்ப்பும் அமையட்டும். அதுவரையில் காத்திரு.”
“என்ன பேசுகிறாய் நீ?” புரியாதவன் போல் பார்த்தான்.
“லாடின்! உனக்குப் புரியாது. போதுமா?” நாக்கை நீட்டி பழிப்பு காட்டினேன்.
கிருஷ்ணன் கூர்ந்து என்னை பார்த்துவிட்டு வெளியே சென்றுவிட்டான். அவன் போனதும் நான் பேக்கில் இருந்த காகிதங்களை எடுத்து சூட்கேஸில புடவைகளுக்கு நடுவில் பத்திரமாக வைத்தேன். அதற்குள் சித்தி பாட்டி வெளியே வந்தாள். பூஜை முடிந்து விட்டது போலும்.
“பயணம் நன்றாக நடந்ததா குழந்தே. குளிக்கணும் என்றால் குளித்துவிட்டு வா” என்றாள்.
தலைக்குக் குளித்தால் தவிர பயணக் களைப்பு நீங்காது என்று தோன்றியது. மாற்று உடைகளுடன் ஷாம்பு பாட்டிலையும் எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தேன். கால் மணி நேரம் கழித்து ஈரத் தலையை துவட்டிக் கொண்டே வெளியே வந்த என்னை சித்தி பாட்டி வியப்புடன் பார்த்தாள்.
“தலைக்கு குளிப்பதாக சொல்லியிருந்தால் சீயக்காய்த் தூள் தந்திருப்பேனே? ஷாம்பு போட்டுக் குளித்தாயா?”
“பரவாயில்லை. எனக்குப் பழக்கம்தான்” என்றேன் சிடுக்கை எடுத்துக் கொண்டே.
வெளியே போன கிருஷ்ணன் வந்ததும் சித்திபாட்டி இருவருக்கும் டிபன் காபி தந்தாள். காபி குடிக்கும் போது கிருஷ்ணன் சொன்னான். “நான் கடைத் தெருவில் வேலையை முடித்துக் கொண்டு வருகிறேன். இரவு முழுவதும் சரியாக தூங்க வில்லை என்றாயே. தூங்கு” என்றான்
“வேளையில்லாத வேளையில் தூங்கும் பழக்கம் எனக்கு இல்லை. நீ கடைத் தெருவுக்கு போய்விட்டால் நான் இங்கே தனியாக என்ன செய்வது?”
“நகத்தைக் கடி.” சிரித்துக் கொண்டே சொன்னான்.
“நகங்கள் இல்லை. கைவசம் எதுவும் இல்லை என்றால் மனிதர்களையே கடித்து விழுங்கி விடுவேன் ஜாக்கிரதை.” மிரட்டினேன்.
“உன்னைத் தனியாக விட்டால் ஆபத்துதான். கிளம்பு என்னுடன்.” மிரண்டு விட்டது போல் நடித்தான்.
இரண்டு பேரும் கிளம்பினோம். கிருஷ்ணன் நிறைய பொருட்களை வாங்கினான். அவற்றில் ஜவுளிதான் அதிகம். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினோம். ராஜிக்கு சற்று அதிக விலையில் இரண்டு பட்டுப் புடவைகளை வாங்கினான். மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்க வேண்டிய துணிமணியை பார்த்துப் பார்த்து தேர்வு செய்தான். உடைகளைத் தேர்ந்தெடுப்பதில் அவனுடைய ரசனையைக் கண்டு வியப்படைந்தேன். எனக்குத் தெரிந்த வரையில் அம்மாவைத் தவிர வேறு யாருக்கும் இவ்வளவு சாமர்த்தியம் இல்லை.
நிறைய ஐடம்களை வாங்கி விட்டதால் நான் சிலவற்றை கையில் பிடித்துக் கொண்டேன். மணி இரண்டாகிவிட்டது.
“ரொம்ப நேரமாகிவிட்டது. நான் கவனிக்கவே இல்லை” என்றான் கிருஷ்ணன்.
வீட்டுக்குத் திரும்பும்போது சொன்னேன். “இந்த ஊர் வழியாக பயணம் செய்வது இது மூன்றாவது தடவை. தஞ்சை பெரிய கோவிலைப் பற்றி அப்பா எப்போதும் சொல்லிக் கொண்டு இருப்பார். பார்க்கத்தான் நேரம் கிடைக்கவில்லை” என்றேன்.
கிருஷ்ணன் என் பேச்சைக் காதில் வாங்கிக் கொண்டானோ இல்லையோ தெரியாது. பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.
வீட்டில் காலடி எடுத்து வைக்கும் முன் வேண்டுமென்றே கோபமாக சொன்னேன். “பலே ஆளுப்பா நீ! நான் ஏதோ கொஞ்சம் ஊரை சுற்றிப் பார்ப்போம் என்று வந்தால் உன் லக்கேஜ் எல்லாம் என்னைக் கொண்டு சுமக்க வைத்தாய். காலையில் என் பெட்டியைத் தூக்கி வந்ததற்கு பதிலாக இப்போ உன் லக்கேஜை என்னிடம் தள்ளிவிட்டாய். அப்படித்தானே.”
கிருஷ்ணன் என் பக்கம் திரும்பினான். அவன் கண்கள் என்னை ஊடுருவுவது போல் பார்த்தன. நானும் சீரிஸாக பார்க்க நினைத்தேன். ஆனால் முடியவில்லை. பக்கென்று சிரித்துவிட்டேன்.
“நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி” என்றான் முறுவலுடன் கதவைத் தட்டிக் கொண்டே.
“எதுக்கு? உன் பெட்டிகளை சுமந்து வந்ததற்காகவா?”
“இல்லை. இப்படி நிம்மதியாக சிரிக்க முடிந்ததற்கு. எந்தக் கவலையும் இல்லாதவர்களால்தான் இப்படி மனம் விட்டு சிரிக்க முடியும்.”
சித்திபாட்டி கதவைத் திறந்ததால் எங்களுடைய உரையாடல் நின்றுவிட்டது.
“இத்தனை நாழியாகிவிட்டதே. சாப்பாட்டைப் பற்றி மறந்து விட்டீர்களா என்ன? எல்லாம் ஆறிப் போய் விட்டிருக்கும். வாங்க சாப்பிட” என்றாள் சித்திபாட்டி.
சித்திபாட்டி இருவருக்கும் தட்டைப் போட்டுவிட்டு சாப்பாடு பரிமாறினாள். பாட்டிக்கு அப்பாவைத் தெரியுமாம். சின்ன வயதில் பார்த்திருக்கிறாளாம். பழைய விஷயங்களைப் பேசிக் கொண்டே உணவைப் பரிமாறினாள். சாப்பிடும்போது எனக்குப் புரை ஏறிற்று. கிருஷ்ணன் தலையில் தட்டப்போனவன் நின்று விட்டான். “தலையில் தட்டிக்கொள்” என்றான்.
“அவங்க அம்மா அப்பா நினைக்கிறாங்க போலிருக்கு” என்றாள் சித்திபாட்டி.
“இல்லை சித்தி! அவளை நினைக்கிறவங்க வேறு ஒருத்தர் இருக்காங்க.” கிருஷ்ணன் என்னைப் பார்த்து சிரித்தான்.
எனக்கு ஏனோ சிரிப்பு வரவில்லை. நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கும் இந்த சமயத்தில் சாரதியை நினைவுப் படுத்தியதற்குக் கொஞ்சம் கோபம் கூட வந்தது.
சித்தி பாட்டி நெய் கிண்ணத்தை எடுப்பதற்காக அந்தப் பக்கம் திரும்பினாள். நான் கையை நீட்டி கிருஷ்ணனின் கையை வெடுக்கென்று கிள்ளினேன்.
“அம்மா!” கத்திவிட்டான் கிருஷ்ணன்.
“என்ன ஆச்சு?” சித்திபாட்டி பதற்றத்துடன் திரும்பிப் பார்த்தாள்.
கிருஷ்ணன் திருதிருவென்று விழித்தக்கொண்டே “ஒன்றுமில்லை சித்தி! நாக்கைக் கடித்துக் கொண்டு விட்டேன்” என்றான்.
“ஆமாம் ஆமாம். யாரோ உன்னை திட்டிக் கொண்டு இருக்கிறார்களாய் இருக்கும் நீ இப்படி என்னுடன் ஜாலியாக பேசிக் கொண்டு இருக்கிறாய் என்று அவர்களுக்குத் தெரிந்து விட்டதோ என்னவோ” என்றேன்.
“அவனைப்போய் யாராவது தவறாக நினைக்க முடியுமா? அவனைத் திட்டினால் கண் அவிஞ்சு போய்விடும். சாட்சாத் தர்மராஜன்!” கிருஷ்ணனைக் கனிவுடன் பார்த்துக் கொண்டே சொன்னாள் சித்திபாட்டி. “இருந்தாலும் நீ அவனுடைய மாமன் மகள். உன்னுடன் இல்லாமல் வேறு யாருடன் இப்படி உரிமையாக பேசுவான்?” என்றாள் மறுபடியும்.
கிருஷ்ணன் முகம் சீரியஸாக மாறியது. அதற்குப் பிறகு அவன் அதிகமாகப் பேசவில்லை.
சாப்பாடு முடிந்த பிறகு கட்டில் மீது அமர்ந்துகொண்டேன். கிருஷ்ணன் வாங்கி வந்த பொருட்களை பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான்.
“இப்போ நம்முடைய புரோகிராம் என்ன? இனி கிளம்ப வேண்டியதுதானே?” என்றேன்.
“நீ கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள். நான் மறுபடியும் கடைத் தெருவுக்குப் போய் வாட்ச் ஒன்று வாங்கணும்.”
“நானும் வருகிறேன்.”
“வேண்டாம். வெயில் அதிகமாக இருக்கு. சீக்கிரம் திரும்பி விடுகிறேன்.”
கட்டில் மீது உட்கார்ந்திருந்த நான் அப்படியே சரிந்து தலையணையில் கன்னத்தைப் பதித்துக்கொண்டு படுத்தேன். ஏனோ தெரியவில்லை கிருஷ்ணனுடன் கழித்த ஒவ்வொரு நிமிஷமும் என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டிருந்தது.
அப்படியே கண்ணயர்ந்து தூங்கிவிட்டேன் போலும். எத்தனை நேரம் தூங்கனேனோ தெரியவில்லை. திடீரென்று விழிப்பு வந்தது. எழுந்து உட்கார்ந்து கொண்டேன்.
“குடிக்க தண்ணீர் வேண்டுமா குழந்தே?” வாசற்படி அருகில் அமர்ந்து பகவத் கீதையைப் படித்துக் கொண்டிருந்த சித்திபாட்டி கேட்டாள்.
“வேண்டாம். கிருஷ்ணன் எங்கே?”
“கடைத் தெருவுக்குப் போயிருக்கிறான். வரும் நேரம்தான்.”
மறுபடியும் தலையணையில் சாய்ந்து கொண்டேன். தூக்கக் கலக்கம் முழுவதும் தெளியாததால் மறுபடியும் உறங்கி விட்டேன். சற்று நேரம் கழித்து என் காது அருகில் குறுகுறுவென்று ஏதோ ஊர்ந்தது போல் இருந்தது. தூக்கக் கலக்கத்திலேயே கையால் அதைத் தள்ளி விட்டேன். மறுபடியும் ஊர்ந்தது. இந்த முறை பலமாகத் தள்ளி விட்டேன். கையில் ஏதோ சிக்கியது போல் இருந்தது.
“இன்னும் தூக்கம் போறவில்லையா?” பக்கத்திலிருந்து குரல் கேட்டது. கண்களைத் திறந்து பார்த்தேன்.
கிருஷ்ணன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவன் இடது கையில் அதுவரையில் படித்துக் கொண்டிருந்த பேப்பர் இருந்தது. வலது கையில் நீளமான காம்புடன் சாமந்தி பூவொன்று பாதி இதழ்கள் உதிர்ந்த நிலையில் இருந்தது. நான் கையை பிரித்துப் பார்த்தேன். என் கையில் காய்ந்து போன சாமந்தி இதழ்கள் இருந்தன.
கிருஷ்ணன் மறுபடியும் சாமந்தி பூவால் என் காது அருகில் தொட்டான். காதைப் பொத்திக் கொண்டு சட்டென்று எழுந்து கொண்டேன். “என்ன இது?” என்றேன் கோபமாக.
“உன்னை எப்படி எழுப்புவது என்று தெரியவில்லை. மணி எவ்வளவு ஆகிவிட்டதோ பார்” என்றான்.
“ரொம்ப நேரமாக தூங்கி விட்டேனா? நீ எப்போது வந்தாய்?” வாட்சை பார்த்துக்கொண்டேன். “கொஞ்சம் முன்னாடியே எழுப்பியிருக்கக் கூடாதா?”
“அவன் வந்ததே இப்பொழுதுதான். வந்து குளித்துவிட்டு உன்னை எழுப்பினான்.” பக்கத்திலேயே இருந்த சித்தி பாட்டி சொன்னாள். கிருஷ்ணனை ஒரு வார்த்தை சொன்னால் சித்திபாட்டிக்குப் பொறுக்காது போலும்.
“சீக்கிரமாகக் குளித்துவிட்டு உடைகளை மாற்றிக் கொண்டு வா. நான் காபி கூட குடிக்காமல் உனக்காகக் காத்திருக்கிறேன்” என்றான்.
நான் சட்டென்று எழுந்து கொண்டு பத்து நிமிடங்களில் குளித்து முடித்துவிட்டு தலை பின்னிக் கொண்டு தயாராகிவிட்டேன். இவ்வளவு சீக்கிரமாக தயாரானது எனக்கே வியப்பாக இருந்தது. “முகம் அலம்பிக் கொண்டு வரச் சொன்னால் முக்கால் மணி நேரம்” என்று அம்மா இப்போதும் என்னை கடிந்து கொள்வது நினைவுக்கு வந்தது.
(தொடரும்)

Series Navigationஇவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம் >>