முள்பாதை 18

This entry is part [part not set] of 28 in the series 20100227_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

வீட்டுக்குத் திரும்பி வரும்போது பலவிதமான எண்ணங்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன. எங்கள் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட அந்தரங்கமான விஷயங்கள் இவனுக்கு எப்படித் தெரிந்திருக்கும்? யார் சொல்லியிருப்பார்கள்?
எனக்கும் அம்மாவுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறதாம். நாளுக்கு நாள் அது வளர்ந்து கொண்டிருக்கிறதாம். நினைக்கும் போதே எனக்கு எரிச்சலும், கோபமும் வந்தன. அவனை அப்படியே கடித்து விழுங்கி விடவேண்டும் போல் ஆத்திரமாக இருந்தது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தேன். இது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வது பிரம்மவித்தை ஒன்றுமில்லை. பணக்காரர்கள் வீடுகளில் கருத்து வேற்றுமைகள் வந்தால் வேலைக்காரர்கள் மூலமாக அவை பெரிதாக சித்தரிக்கப்பட்டு வெளி உலகிற்குப் பரவுவதில் வியப்பு ஒன்றுமில்லை. இவர்கள் எங்கள் வீட்டுக்கு வராவிட்டாலும் எங்களைப் பற்றிய சமாசாரங்களை உடனுக்குடன் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
ச்ச… ச்ச… எல்லோரையும் ஒன்றாக சேர்ப்பதாவது? ராஜேஸ்வரிக்கு எதுவும் தெரியாது. அத்தைக்குத தெரிந்திருந்தாலும் தெரிந்தாற்போல் காட்டிக் கொள்ளவில்லை. திடீரென்று பனி விலகியதுபோல் எனக்கு விஷயம் விளங்கி விட்டது. நான் வந்தது முதல் கிருஷ்ணன் என்னிடம் முகம் கொடுத்துப் பேசாததற்குக் காரணம் புரிந்து விட்டது. அதாவது அவனுக்கு முன்பே எல்லா விஷயமும் தெரியும். ‘நீ எங்கள் வீட்டுக்கு வந்தது எங்கள் மீது அன்பினால் இல்லை. எங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையினாலும் இல்லை. சில நாட்கள் எங்கேயாவது தலைமறைவாக இருக்க வேண்டும் என்ற சுயநலத்துடன் வந்திருக்கிறாய். எனக்குத் தெரியாதா உன் விஷயம்?’ என்பதுபோல் நடந்து கொண்டான்.
ரோஷத்தினாலும், அவமானத்தினாலும் எனக்கு உடல் பற்றி எரிவது போல் இருந்தது. ஏதோ நினைவில் வேகமாக நடந்து கொண்ருந்தவள் “அம்மா!” என்று கத்திக் கொண்டே நின்று விட்டேன். என் உள்ளங்காலில் பலமாக ஏதோ குத்திவிட்டது. கூர்மையான பொருள் என்பதால் ஆழமாக இறங்கிவிட்டது. காலை உயர்த்தி உள்ளங்காலை பரிசீலித்தேன். கருவேல மரத்தின் முள்! அதைப் பார்த்ததும் எனக்கு கிருஷ்ணனின் முகம்தான் நினைவுக்கு வந்தது. எவ்வளவு ஜாக்கிரதையாக எடுக்க முயன்றாலும் முள் பாதியிலேயே உடைந்துவிட்டது. காலை ஊன்றும்போது கொஞ்சம் வலித்தாலும் நடக்க முடியாத அளவுக்கு இருக்கவில்லை. ஆனால் சாதாரணமாக நடக்க முடியவில்லை.
“என்ன? என்ன ஆச்சு காலுக்கு?” வாசலில் நின்றுகொண்டு என் வருகைக்காகக் காத்திருந்த அத்தையும், ரானேஸ்வரியும் ஒரே நேரத்தில் கேட்டார்கள்.
“முள் குத்திவிட்டது. எடுத்து விட்டேன். கவலைப்பட வேண்டியதில்லை.” ஏதோ பெரிய காரியம் செய்து விட்டதுபோல் பெருமையுடன் சொன்னேன்.
“உன்னை அனுப்பி வைத்தேனே தவிர எனக்கு உள்ளூர பயமாகத்தான் இருந்தது” என்றாள் அத்தை.
நான் பதில் எதுவும் சொல்லாமல் உள்ளே வந்து விட்டேன்.
“அண்ணீ! ஏன் என்னவோ போல் இருக்கிறாய்?” முகத்தில் தென்பட்ட மாறுபாட்டை கவனித்து விட்ட ராஜேஸ்வரி என் பின்னால் வந்து கொண்டே கேட்டாள்.
“எப்படி இருக்கிறேன்? நன்றாகத்தான் இருக்கிறேன்.”
எனக்கு ஏனோ இந்த இடத்தில் இனி ஒரு நிமிடம்கூட இருக்கப் பிடிக்கவில்லை. உடனே இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்று பலமாகத் தோன்றியது.
துணிமணிகளை எடுத்து சூட்கேஸில் வைத்துக் கொண்டே “ராஜி! நாளை காலை நான் கிளம்புகிறேன்” என்றேன்.
“உண்மையைச் சொல்லு. என்ன நடந்தது? அண்ணன் உன்னை ஏதாவது சொன்னானா?” ராஜேஸ்வரி §க்டாள்.
நான் போலியாக வியப்பைக் காட்டியபடி ராஜேஸ்வரி பக்கம் திரும்பினேன். “நன்றாக இருக்கு நீ சொல்வது. உங்க அண்ணன் என்னை என்ன சொல்லப் போகிறான்? ஒன்றும் சொல்லவில்லை. அப்படி ஏதாவது சொன்னால் நான் சும்மா இருப்பேனா என்ன?” எவ்வளவு சாதாரணமாகப் பேச முயன்றாலும் என் குரல் லேசாக நடுங்கியது.
ராஜேஸ்வரி சந்தேகத்துடன் பார்த்தாள். “நீ சொல்லவில்லை என்றாலும் எனக்குப் புரிந்து விட்டது. ஏதோ நட்ந்திருக்கிறது. போகும்போது இருந்த உற்சாகம் இப்போ உன்னிடம் இல்லை. அண்ணன் வீட்டுக்கு வரட்டும். நானே கேட்டு விடுகிறேன்” என்றாள்.
“நல்ல பெண் இல்லையா. அப்படி எதுவும் செய்யாதே. உனக்குப் புண்ணியம் கிடைக்கட்டும்” என்றேன்.
கிருஷ்ணன் அன்று இரவு ரொம்ப நேரம் கழித்து வீட்டுக்கு வந்தான். இரவு சாப்பிடும்போது அத்தையிடம் என் பயணத்தைப் பற்றிச் சொன்னேன்.
அத்தையும் திகைத்துப் போனாள். “வாரம் பத்து நாட்கள் இருப்பதாகச் சொன்னாயே. அதற்குள் உனக்கு இந்த பட்டிகாடு அலுத்துவிட்டதா?” அப்பாவியாக கேட்ட அத்தையைப் பார்க்கும் போது என் மனம் இளகிவிட்டது.
“இல்லை அம்மா… அண்ணிக்கு ஏதோ கோபம்” என்றாள் ராஜேஸ்வரி.
உதைப்பேன் என்பதுபோல் ஆள்காட்டி விரலை உயர்த்தி ராஜேஸ்வரியை மிரட்டினேன். பிறகு அத்தையின் பக்கம் திரும்பி “அப்படி எதுவும் இல்லை அத்தை. அம்மா அப்பாவை விட்டுவிட்டு நான் எங்கேயும் போனதில்லை. ஏனோ அவர்களுடைய நினைப்பாகவே இருக்கிறது” என்றேன்.
அத்தை என் பேச்சை நம்பிவிட்டாள். சாப்பாடு முடிந்ததும் ராஜேஸ்வரி, மணி, மது எல்லோரும் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். “வேண்டாம் அண்ணீ! போகாதீங்க. இன்னும் கொஞ்ச நாள் இருங்க.” வேண்டுகோள் விடுப்பதுபோல் அவர்கள் சொன்னபோது என்ன பதில் சொல்வது என்று எனக்குப் புரியவில்லை. எல்லோரும் படுத்துக் கொண்டு விட்டோம். நானும் உறங்குவதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது கிருஷ்ணன் வீட்டுக்கு வந்தான். நான் தூங்கிவிட்டது போல் அசையாமல் படுத்திருந்தேன்.
குழந்தைகள் சாப்பிட்டு விட்டார்களா என்று கேட்டுவிட்டு பிறகு நான் சாப்பிட்டேனா இல்லையா என்று தனிப்பட்ட முறையில் கேட்டுத் தெரிந்து கொண்டான் கிருஷ்ணன்.
பிறகு “என்னம்மா நீ? ஒரு நாள் சாப்பிடவில்லை என்றால் எனக்கு என்ன ஆகிவிடும்? கூடைகளில் நிரப்பி வைத்த காய்கறியை எடுத்துப் போக வரவேண்டிய ஆள் வரவில்லை. வேலைக்காரர்கள் சாப்பிடப் போய்விட்டார்கள். அங்கே யாருமே இல்லையே என்று நான் தங்கி விட்டேன். வீட்டுக்கு விருந்தாளியாக வந்த பெண்ணிடம் எனக்கு சாப்பாடு அனுப்பி வைப்பதாவது? உனக்கு மூளை கலங்கி விட்டதா என்ன?” கோபமும், எரிச்சலும் கலந்த குரலில் கிருஷ்ணன் சொன்னது என் காதில் விழுந்தது.
“என்னவோப்பா. அவியல் வேறு செய்திருந்தேனா? நீ சாப்பிட வராமல் போனதும் எனக்கு எப்படியோ இருந்தது. அப்படியும் நான் வேண்டாமென்றுதான் சொன்னேன். அவள் கேட்கவில்லை. வீட்டில் உட்கார்ந்து போர் அடிக்கிறது, காலாற நடந்து போனாற் போலவும் இருக்கும் என்று சொன்னதால் கொடுத்து அனுப்பினேன். நானும் எப்படி இருப்பாளோ என்னவோன்னு நினைத்தேன். ஆனால் தங்கமான குணம். இவ்வளவு சகஜமாக பழகுவாள் என்று கனவில்கூட நினைக்கவில்லை.”
“பசிக்கிறது. சாதம் போடும்மா.” கிருஷ்ணன் பேச்சை மாற்றிவிட்டான். அவர்கள் சாப்பிட்டு முடித்து எப்போ எழுந்து கொண்டார்களோ தெரியாது. உடனே தூக்கத்தில் ஆழ்ந்து போய் விட்டேன்.

*********

மறுநாள் காலையில் நான் பயணத்திற்கு ஆயத்தமாவதைக் கவனித்து விட்டு அத்தை திகைத்துப் போனாள். மகனிடம் சென்று “கிருஷ்ணா! மீனா இன்னிக்கு கிளம்புவதாக சொல்கிறாள்” என்றாள்.
கிருஷ்ணன் அன்று தோட்டத்திற்குப் போகவில்லை. வீட்டிலேயே இருந்தான். அத்தையும் அவனும் சமையல் அறையில் பேசிக் கொண்டிருந்தார்கள். முன் அறையில் நான் தலைவாரி பின்னிக் கொண்டிருந்தேன்.
“இன்னும் ஒரு வாரம் இருப்பதாகச் சொன்னாளே. இதற்குள் என்ன வந்து விடதாம்?” எதுவும் தெரியாதது போல் கிருஷ்ணன் கேட்டுக் கொண்டிருந்தான்.
பயணத்தை ரத்துச் செய்து கொள்ளப் போவதில்லை என்றும், கட்டாயம் போய்த் தீருவேன் என்றும் காலையில் சொன்னபோது ராஜேஸ்வரியின் முகம் வாடி விட்டது. மேற்கொண்டு அதைப்பற்றிப் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
திடீரென்று நான் கிளம்புவதாகச் சொல்வதற்குக் காரணம் தன் அண்ணனாக இருக்குமோ என்று ராஜேஸ்வரி சந்தேகப்படுவது எனக்குப் புரிந்தது.
கிருஷ்ணன் அப்படிச் சொன்னதும் அங்கேயே இருந்த ராஜேஸ்வரி “நீதான் அவளை ஏதாவது சொல்லியிருப்பாய்” என்றாள்.
“நானா?” என்றான் கிருஷ்ணன்.
“நீ இல்லாமல் வேறு யாரு? நேற்று சாப்பாடு கொண்டு வந்தபோது அவள் மனம் நோகும்படியாக எதையாவது சொலியிருப்பாய்.”
ராஜேஸ்வரியின் துணிச்சலைக் கண்டு வியந்தேன். கிருஷ்ணனுக்கும் உடனே வாயிலிருந்து வார்த்தை வெளிவரவில்லை போலும். ஒரு நிமிடம் கழித்து “கேட்டியா அம்மா ராஜேஸ்வரி சொல்வதை?” என்று அத்தையிடம் புகார் செய்தான்.
“ராஜீ! என்ன பேச்சு இது? அண்ணா அவளை எதற்காக சொல்லப் போகிறான்? அவனுக்கு என்ன வேலை?” என்றாள் அத்தை அதட்டுவதுபோல்.
“உனக்குத் தெரியாதும்மா. வந்தது முதல் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அண்ணியிடம் அண்ணன் முகம் கொடுத்துப் பேசவே இல்லை. அண்ணி எவ்வளவு வருத்தப்பட்டுக் கொண்டாள் தெரியுமா? தான் இங்கே வருவது நமக்குப் பிடிக்கவில்லையோ என்றுகூட நினைக்கிறாள்.”
நான் மெதுவாக முன் அறையிலிருந்து கிருஷ்ணனின் அறைக்கு நழுவினேன். என்னைப் பற்றி அவர்கள் பேசிக் கொள்ளும் போது நான் அங்கே இருப்பது சரியில்லை. ரொம்ப அப்பாவியாக, வாயே திறக்காதவளாக தென்படும் ராஜேஸ்வரி தன் அண்ணனிடம் குரலை உயர்த்திப் பேசியதைப் பார்க்கும் போது எனக்கு வியப்பாக இருந்தது. பரவாயில்லை, தேவை ஏற்பட்டால் வாதாட முடியும் அவளால்.
நான் அப்படி இல்லை. வெறுமே இருக்கும் போது வாய் கிழிய பேசுவேன். ஆனால் சமயம் வரும்போது ரொம்ப தயங்குவேன். எதிரில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்துத் தளர்ந்து போய் விடுவேன்.
நான் இங்கிருந்து போக வேண்டும் என்று முடிவு செய்ததற்குக் காரணம் நேற்று கிருஷ்ணன் பேசியப் பேச்சு நிச்சயமாக இல்லை. என்னிடம் ஒரு பலவீனம் இருக்கிறது. சட்டென்று கோபம் வந்துவிடும். வந்த வேகத்தில் தானே மறைந்து போய் விடும். கோபம் வந்தபோது என்ன பேசுகிறேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் அதற்குப் பிறகு என் அளவுக்குப் பச்சாத்தாபம் அடையும் நபர் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.
இப்போ எனக்குக் கிருஷ்ணன் மீது எந்தக் கோபமும் இல்லை. விடியற்காலையில் தூக்கம் கலந்துவிட்ட நேரத்தில் நிதானமாக யோசித்துப் பார்த்தேன்.
அத்தை பழைய விஷயங்களைக் கொஞ்சம்கூட மனதில் வைத்துக் கொள்ளாமல் என்னை ரொம்ப அன்பாக பார்த்துக் கொள்கிறாள். ராஜேஸ்வரி சொந்த தங்கையைவிட அதிகமாக, நெருங்கிய தோழியைப் போல் பாசத்துடன் பழகுகிறாள். குழந்தைகள் என்னை ஒரு தேவதை போல் வழிபடுகிறார்கள். இந்த வீட்டில் இத்தனை விதமாக விருந்தோம்பலை பெற்றுக் கொண்டிருக்கும் நான், இவர்களில் யாருக்காவது இந்த உபசாரத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காவது திருப்பித் தர என்னால் முடியுமா? இங்கே இத்தனை நாட்கள் தங்கியிருந்த நான், ஒரு வேளையாவது எங்கள் வீட்டிற்கு வரச் சொல்லி ராஜேஸ்வரியை அழைக்க முடியுமா? நடக்காத காரியம்! கொடுப்பதற்கு வக்கு இல்லாதவர்களுக்கு பெற்றுக் கொள்ளும் தகுதி மட்டும் எங்கிருந்து வரும்? ஒருக்கால் அப்படிப் பெற்றுக் கொண்டாலும் என்னுடைய கண்ணோட்டத்தில் அது தானம்தான்.
எந்த விதமான தயக்கமோ, பயமோ இல்லாமல் நான் அம்மாவிடம் இவர்களைப் பற்றிப் பேச முடிந்த போது, இவர்களை எனக்குப் பிடிக்கும் என்று வெளிப்படையாக சொல்ல முடிந்த அன்று நான் மறுபடியும் இந்த வீட்டுக்கு வருவேன். அம்மாவுக்கும் எனக்கும் இடையே உள்ள கருத்து வேற்றுமைகளைப் பற்றி அத்தையிடம் ஒளிமறைவு இல்லாமல் பேச முடிந்த அன்று இந்த வீட்டில் என் விருப்பம்போல் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்குவேன். அவ்வளவுதானே தவிர இப்போ என்னால் இருக்க முடியாது. ஏதோ கள்ளத்தனம் செய்வதுபோல் உறுத்தலாக இருந்தது. இங்கே இருக்கக் கூடிய தகுதி எனக்கு இல்லை.
தலையைப் பின்னிக் கொண்டே ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்த எனக்கு யாரோ அறைக்குள் வருவது போல் காலடிச் சத்தம் §க்டது. திரும்பிப் பார்த்தேன். கிருஷ்ணன்தான் உள்ளே வந்தான். ஒரு வினாடி எங்கள் இருவரின் பார்வையும் சந்தித்துக் கொண்டன.
“என்ன விஷயம்? என்னைப் பற்றி ராஜியிடம் புகார் செய்திருக்கிறாயாமே?” என்றான்.
அவன் முகம் பிரசன்னமாக இருந்தது. குரலும் ரொமப இயல்பாக இருந்தது. முறுவலுடன் நின்றிருந்த அவனைப் பார்க்கும்போது அவன் என்னிடம் சண்டை போடுவதற்காக வரவில்லை என்றும் புரிந்தது. அது மட்டும் இல்லை. அவன் பேசிய முறையில் ஒருவிதமான உரிமையும் கலந்திருந்தது. பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். கிருஷ்ணன் என்னிடமிருந்து பதில் எதிர்பார்க்காதவன் போல் சூட்கேஸ் அருகில் சென்றான்.
“எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டாகி விட்டதா? இன்னும் பாக்கி ஏதாவது இருக்கா?” பெட்டியை பார்வையிட்டுக் கொண்டே கேட்டான்.
என்னை இல்லை என்பதுபோல் பேசாமல் இருந்தேன். ஆனால் ஓரக்கண்ணால் அவனுடைய ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன்.
இந்த ஊருக்கு வந்தது முதல் சாவிக்கொத்தை எங்கேயாவது தொலைத்து விடுவேனோ என்ற பயத்தில் சூட்கேஸ் மீதே வைத்திருந்தேன். கிருஷணன் சாவிக்கொத்தை எடுத்துக் கொண்டு என் பக்கம் திரும்பி “பூட்ட வேண்டிய வேலை ஒன்றுதானே பாக்கி?” என்றான்.
ஆமாம் என்பதுபோல் பார்த்தேன்.
கிருஷ்ணன் சூட்கேஸை பூட்டினான். சாவிக்கொத்தை கையில் வைத்துக் கொண்டே ஏதோ யோசிப்பது போல் ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டான். பிறகு மெதுவாக என் பக்கம் திரும்பினான். அவன் போக்கைப் பார்த்தால் இதுதான் சாக்கு என்று என்னை அடுத்த நிமிடமே வண்டியில் ஏற்றி அனுப்பி விடுவான் போல் இருந்தது.
நான் அவன் வாயிலிருந்து வரப் போகும் வார்த்தைகளுக்காக ஆர்வத்துடன் காத்திருந்தேன். சூட்கேஸ் மீது சாய்ந்தாற்போல் நின்று கொண்டிருந்த கிருஷ்ணன் நான் ஏதாவது சொல்வேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். இப்படி பேச்சுவார்த்தை இல்லாமல் வெறுமே நிற்பது எனக்கு சங்கடமாக இருந்தது. மெதுவாக அறையிலிருந்து வெளியே நழுவப் போனேன்.
“மீனா!” பின்னாலிருந்து அழைத்தான்.
நான் அதே இடத்தில் நின்றுவிட்டேன்.
“நேற்று என்னுடைய வார்த்தைகளால் உனக்கு ஏதாவது வேதனை ஏற்பட்டிருந்தால் என்னை மன்னித்துவிடு.”
அவன் குரலில் பச்சாத்தாபம் இருக்கவில்லை. அவசரப்பட்டு விட்டோமோ என்ற வருத்தம் அசலுக்கே இல்லை. சொல்லிக் கொடுத்த பாடத்தை உருப்போட்டு ஒப்புவிப்பதுபோல், யாரோ வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் மன்னிப்பு கேட்டுக்கொண்டதுபோல் இருந்தது. ராஜேஸ்வரியை திருப்தி படுத்துவதற்காக மட்டுமே அவன் இந்த வார்த்தைகளை ஒப்புவித்ததை என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது. அதனால் பதில் எதுவும் சொல்லாமல் காதில் விழாதது போல் சும்மா இருந்தேன்.
“நீ இப்படி திடீரென்று கிளம்புவதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்” என்றான்.
விருட்டென்று திரும்பினேன். “நான் போய்த்தான் தீருவேன். இன்றைக்கு போகணும் என்று நான் முடிவு செய்துவிட்டால் யாராலும் என்னைத் தடுக்க முடியாது” என்றேன் பிடிவாதமாக.
என்னையே சீரியஸாக பார்த்துக்கொண்டிருந்தவன் சட்டென்று சிரித்துவிட்டான். “ஒற்றைப் பிள்ளையாகப் பிறந்து, செல்லமாக வளர்ந்தவர்களிடம் இதுதான் பிரச்னை. எப்போதும் தங்களுடைய கண்ணோட்டத்தில் யோசிப்பார்களே தவிர எதிராளியின் பிரச்னையைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.”
“நான் கிளம்பிப் போவதால் இங்கே யாருக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை என்று எனக்குத் தெரியும். ஒருக்கால் இருந்தாலும் நான் பொருட்படுத்த மாட்டேன்.”
“மீனா! உன் சுபாவம் ரொம்ப வித்தியாசமானது. எதிராளியைத் தூண்டிவிடுவது போல் உரிமையுடன் பேசுவாய். எதிராளி கொஞ்சம் உரிமையை எடுத்துக் கொண்டு பதில் சொன்னால் மட்டும் உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உன்னை அவமானப்படுத்தி விட்டதாக நினைத்துக் கொள்கிறாய். நேற்று நடந்ததும் அதுதான். மீ சாதாரணமாக வந்து சாப்பாட்டைக் கொடுத்து விட்டுப் போயிருந்தால் ஒன்றும் நடந்திருக்காது. உன் பேச்சையும், உரிமை எடுத்துக் கொண்டு பழகியதையும் பார்த்து நானும் கொஞ்சம் உரிமையுடன் பேச முயன்றேன். நீ வேறு ஏதேதோ ஊகித்துக் கொண்டு எதையோ பேசிவிட்டு வந்து விட்டாய்.”
நான் பதில் சொல்லவில்லை.
மென்மையான, கம்பீரமான குரலில் மேலும் அவன் சொன்னான். “மீனா! ஒரு விஷயம் சொல்லட்டுமா. நான் உனக்கு வேற்று மனிதனாகத் தென்படுகிறேனோ என்னவோ. உன்னைப் பார்க்கும்போது எனக்கு அப்படி தோன்றவில்லை. உன்னைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரிந்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அதுதான் நானும் கொஞ்சம் உரிமையுடன் பேசிவிட்டேன்.”
நான் கோபமாகப் பார்த்தேன். மறுபடியும் அதே பேச்சு! என்னைப் பற்றி நன்றாகத் தெரியுமாமே? என்ன தெரியும்?
கையிலிருந்த சாவிக் கொத்தை அப்படியும் இப்படியும் அசைத்தபடி அதையே பார்த்துக் கொண்டு சொன்னான். “நீ இங்கே வருவதற்கு முன்பு நாங்கள் எல்லோரும், முக்கியமாக நான் உன்னைப் பற்றி வேறு விதமாக நினைத்துக் கொண்டது உண்மைதான். ஆனால் இங்கே வந்த சில நாட்களில் நீ அம்மாவுடன், என் தம்பி தங்கைகளுடன் கலந்து பழகியதைப் பார்த்த பிறகு என் அபிப்பிராயம் முற்றிலும் மாறிவிட்டது. உங்க அம்மா உன்னை ரொம்ப கவனமாக வளர்த்தாலும் அவளுடைய குணம் உன்னிடம் கொஞ்சம்கூட இல்லாமல் இருப்பது ரொம்ப வேடிக்கைதான்.”
அவன் பேச்சு காதில் விழாததுபோல் நான் மறுபடியும் தலையை வாரிக் கொண்டிருந்தேன்.
சற்று நேரம் கழித்து மீண்டும் அவனே சொன்னான். இந்த முறை நிமிர்ந்து நேராக என்னைப் பார்த்துக் கொண்டே சொன்னான். “இந்த உலதில் அம்மாவைவிட அதிகமாக நான் மதிக்கும் ஒரு நபர் இருக்கிறார். அந்த நபர் உங்க அப்பாதான் என்றால் நீ நம்புவாய் இல்லையா. நீ இங்கிருந்து கோபித்துக் கொண்டு போகக்கூடாது. மாமா வேறுவிதமாக நினைக்கக்கூடும். அந்த வாய்ப்பை வரவிட மாட்டேன் நான்.”
“உன்னால் என்ன செய்ய முடியும்?” தூண்டி விடுவது போல் கேட்டேன்.
“உன்னை இன்றைக்குப் போக விடமாட்டேன். போகிறேன் என்று நீ சொன்னாலும் நான் அனுப்பப் போவதில்லை.”
“அனுப்பாமல் இருப்பதற்கு நடுவில் நீ யாரு? நீ என்னை அழைக்கவில்லை. நானும் உன் வீட்டுக்கு வரவில்லை.” மறுப்பு தெரிவித்தேன்.
கிருஷ்ணனின் கண்களில் கம்பீரம் மறைந்து குறும்புத்தனம் எட்டிப் பார்த்தது. முறுவலை மறைத்துக் கொண்டே சொன்னான். “நீ யார் வீட்டுக்கு வந்திருக்கிறாய் என்ற பேச்சு இப்போ தேவை இல்லை. ஆனால் இந்த வீட்டில் நான் யாரோ, எப்படிப் பட்டவனோ அம்மாவிடம் கேட்டுக்கொள். இல்லையா குழந்தைகளை, சாமிகண்ணுவை, அக்கம் பக்கத்தில் யாரையாவது கேட்டுப்பார். நான் யாரென்று உனக்குத் தெரியப்படுத்துவார்கள். நான் சம்மதம் சொன்ன பிறகுதான் நீ இங்கே வந்திருக்கிறாய். என் அனுமதி இல்லாமல் நீ திரும்பிப் போக முடியாது.” சாவிக்கொத்தை சட்டைப் பையில் போட்டுக் கொண்டு வெளியே போய்விட்டான். பதில் சொல்லவும் அவகாசம் இருக்கவில்லை.
தன் அபிப்பிராயத்தை அவன் என்னிடம் சொன்ன தோரணையே அதன்படி நடந்து கொள்ளத்தான் வேண்டும் என்று ஆணையிடுவதுபோல் இருந்தது. திகைத்துப் போனவளாக நின்றிருந்த எனக்கு அறையில் வெளியே கிருஷ்ணனின் குரல் கேட்டது. “கவலைப்படாதே ராஜி! உங்க அண்ணி இன்றைக்குப் போகவில்லை. நான் மன்னிப்பு கேட்டுக் கொண்டு விட்டேன்.”
ரோஷத்தினாலும், கோபத்தினாலும் என் மனம் கொந்தளித்தது. ஆக மொத்தம் அன்று என் பயணம் கான்சல் ஆகிவிட்டது.
இதுவரையில் அம்மாவைத் தவிர வேறு யாரும் என்னை ஆணையிட்டதில்லை. அம்மாவாக இருந்தாலும் ஆணையிடுவதுபோல் பேசினால் எனக்குக் கோபம்தான் வரும். கூடாது என்று அவர்கள் சொன்ன காரியத்தைச் செய்துதான் ஆக வேண்டும் என்ற பிடிவாதம் தலைதூக்கும். வேடிக்கை என்னவென்றால் கிருஷ்ணன் சொன்னதற்கு எனக்கு ஆத்திரம் வந்தது உண்மைதான். ஆனால் அவன் சொன்னதற்கு மாறாக செய்துதான் ஆகவேண்டும் என்ற பிடிவாதம் மட்டும் இருக்கவில்லை. திடீரென்று நான் கிளம்பிப் போனால் அப்பாவின் முன்னால் குற்றவாளியாக நிற்க வேண்டிவரும் என்று கிருஷ்ணன் பயப்படுவதைக் கண்டு எனக்கு இரக்கம் தான் ஏற்பட்டது. அதோடு அப்பாவிடம் மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவனுக்கு வேதனையைத் தருவது நியாயம் இல்லையே.
காலை வேளையில் என்னுடைய சூட்கேஸின் சாவிக்கொத்தை சட்டைப் பையில் போட்டுக் கொண்டு வெளியில் போன கிருஷ்ணன் மதியம் ஒரு மணி ஆகும் போது வீட்டுக்குத் திரும்பி வந்தான். அதுவரையில் என் சாப்பாடு முடியவில்லை. அத்தை நாலைந்து முறை கூப்பிட்டு, பசி இல்லை என்று நான் மறுத்துவிட்டதால் விட்டு விட்டாள்.
கிருஷ்ணன் வரும்போதே நான் சாபிட்டேனா இல்லையா என்று கேட்டான். இல்லை என்று அத்தை சொன்னதும் இருவருக்கும் சேர்த்து பரிமாறச் சொல்லிவிட்டு நான் இருந்த அறைக்கு வந்தான்.
“சத்யபாமா தேவி அவர்களே! கோபம் வந்தால் அதைக் கொண்டாடுவதற்கு எங்கள் வீட்டில் தனியாக அறை எதுவும் இல்லை. அதனால் கோபித்துக் கொண்டு பிரயோஜனம் இல்லை. சாப்பிட வாங்க.” பணிவு கலந்த குரலில் சொன்னான்.
படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை சூட்கேஸ் மீது வீசிவிட்டு கோபமாகப் பார்த்தேன். “என் பெயர் சத்யபாமா இல்லை. மீனாட்சி. கோபித்துக் கொண்டு தனி அறையில் போய் உட்காரணும் என்ற விருப்பம் எனக்கு அசலுக்கே இல்லை. பசி இல்லை என்பதால் நான் சாப்பிடவில்லை. என்னை யாரும் வலுக்கட்டாயமாக சாப்பிட வைக்க முடியாது” என்றேன்.
சிரித்துக் கொண்டிருந்த கிருஷ்ணனின் முகம் கம்பீரமாக மாறியது. “மீனா! மறுபடியும் என்னைத் தூண்டி விடுவதுபோல் பேசுகிறாய். நீ வேண்டாம்னு சொன்னால் அந்தக் காரியத்தைச் செய்துதான் ஆகணும்னு என்று எனக்குத் தேன்றுகிறது. நான் ஏதாவது செய்ய நினைத்தால் இந்த வீட்டில் என்னைத் தடுப்பவர்களோ, எதிர்ப்பு தெரிவிப்பவர்களோ யாரும் இல்லை. நீ சாப்பிட மறுத்தால் நான் வலுக்கட்டாயமாக உனக்கு ஊட்டிவிட வேண்டியிருக்கும். உன் விருப்பம் அதுதான் என்றால் சாப்பிட வராமல் இங்கேயே உட்கார்ந்துகொள். ஐந்து நிமிடங்கள் டைம் தருகிறேன்” என்று சொல்லிவிட்டுப்போய்விட்டான்.
எனக்குச் சிரிப்பு வந்தது. கோபமும் வந்தது. பேசவே தெரியாது என்று எண்ணியிருந்த கிருஷ்ணன்தானா இது?
ஐந்து நிமிடங்கள் கழிந்துவிட்டன. கிருஷ்ணன் வைத்திருந்த கெடு முடிந்து விட்டது. நான் அறையிலேயே காத்திருந்தேன், என்ன செய்வானோ பார்ப்போம் என்ற ஆர்வத்தில்.
கிருஷ்ணன் முன் அறையிலிருந்து உரத்தக்குரலில் கத்தினான். “அம்மா! உன் அண்ணன் மகள் இன்னிக்கு என்னிடம் ஒரு கோரிக்கையை வெளியிட்டாள். என் கையால் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடணுமாம். என்னிக்குமே வராதவள் வந்திருக்கிறாள். அவள் கேட்டதை நிறைவேற்றாமல் இருக்க முடியுமா? என்ன செய்வது? கிண்ணத்தில் சாதம் பிசைந்து கொடு. வேறு வழியில்லை.”
அத்தை நிஜமாகவே கிண்ணத்தில் சாதம் கொண்டு வந்துவிடப் போகிறாளே என்று பயந்து சமையலறைக்கு ஓட்டமெடுத்தேன். அங்கே தயாராக போட்டிருந்த மனையின் மீது உட்கார்ந்து கொண்டே “அத்தை! உங்க மகன் உண்மையிலேயே அசகாய சூரன்… வீராதி வீரன். நானும் என்னமோன்னு நினைத்தேன்” என்றேன் பொய் கோபத்துடன்.
அத்தை சிரித்துவிட்டாள். நான் வந்து இத்தனை நாட்களுக்குப் பிறகு கிருஷ்ணன் மற்ற எல்லோரையும்போல் உரிமையுடன் கலகலவென்று பேசத் தொடங்கினான். அன்று முதல் முறையாக நானும் அவனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம்.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்