முதல் சம்பளம்

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

எஸ் ஜெயலட்சுமி


காமாக்ஷியின் மனம் குமுறிக் கொண்டிருந்தது. தன் உணர்ச்சிகளை பஸ்ஸில் யாராவது பார்த்து விடுவார்களோ என்று தோன்றியது .கர்ச்சீப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். முகத்தைத் தான் துடைக்க முடிந்ததே தவிர மனத்தைத் துடைக்க முடியவில்லை. மனம் அலைபாய்ந்து கொண்டேயிருந்தது. அன்று காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளை மனம் அசை போட ஆரம்பித்தது. அன்று சம்பளநாள். அவளுக்கு முதல் சம்பளம்! ஆனால் அவள் என்ன, எல்லோரையும் போல் சந்தோஷம் கொப்பளிக்கவா சம்பளம் வாங்கினாள்? இப்படி ஒரு நிலைமையில் வேலை பார்த்து சம்பளம் வாங்கப் போகிறோம் என்று அவள் கனவிலும் நினைத்ததில்லையே! துக்கம் நெஞ்சையடைக்க கண்களை மூடினாள். கண்ணீர் கசிந்தது

காமாக்ஷிக்கு சின்ன வயசு முதலே காலேஜில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதே யில்லை. ஆனால் நாம் நினைப்பதோ ஆசைப் படுவதோ நடப்பதில்லையே! போன வருடம் வரை அவள் கணவன் மகாதேவன் ஒரு நாள் கூட காய்ச்சல், மண்டையிடி என்று படுத்ததே யில்லை. திடீரென ஒருநாள் ஆபீசில் மயக்கமாகி விட்டார் என்று
ஆபீசிலிருந்து கொண்டுவந்து விட்டு விட்டுப் போனார்கள் டாக்டரிடம் காட்டியதில் இதயத்தில் ஏதோ கோளாறு என்றார்கள். சென்னையில் பெரிய ஆஸ்பத்ரியில் காட்டி வைத்தியம் பார்த்தார்கள். எல்லாம் நல்ல படியாக நடந்து டிஸ்சார்ஜ் ஆகவேண்டிய நாளில் அந்த விபரீதம் நடந்து விட்டது. எப்படியோ இதயத்தில் திடீரென்று அடைப்பு ஏற்பட்டு கை மீறிப் போய்விட்டது என்றார்கள். எல்லாம் முடிந்து காமாக்ஷி அம்மா,அப்பா வோடு இங்கு வந்துவிட்டாள்.

மகாதேவன் வேலையில் இருந்த காலத்தில் அகால மரணமடைந்ததாலும் வேறு வாரிசு இல்லாததாலும் காமாக்ஷியே வேலைக்குப் போகலாம் என்றார்கள். நாற்பது வயதுக்குமேல் வேலை கொடுப்பார்களா என்று சிலர் சந்தேகங்களை எழுப்பினார்கள். காமாக்ஷி இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் அஞ்சல் வழியில் படித்துப் பட்டதாரி ஆகியிருந்தாள். எனவே அவளே வேலைக்குப் போவதாக முடிவெடுத்து விட்டாள். பெரும் முயற்சிக்குப் பின் ஒரு வழியாகக் கருணை அடிப்படையில் ஜூன் பதினைந்தாம் தேதி வேலையில் சேர்ந்தும் விட்டாள்.

காமாக்ஷியின் ஆபீசில் அவள் மாமனாருக்கு கொஞ்சம் தூரத்து உறவில் ஒரு பெண் வேலை பார்ப்பதாகத் தெரிய வந்தபோது அம்மா அப்பாவுக்குக் கொஞ்சம் நிம்மதி.”காமாக்ஷி, ஒனக்குத் தெரியாத விஷயங்களை யெல்லாம் அந்த விஜயலக்ஷ்மியிடம் கேட்டுத் தெரிஞ்சுக்கோ. அவள் ஒனக்கு வேலை யெல்லாம் சொல்லித்தருவாள்” என்றார் அப்பா. ஆனால் அப்பாவும் காமாக்ஷியும் நினைத்தது போல் விஜயலக்ஷ்மி இவளிடம் அனுசரணையாகப் பேசவில்லை.
“நீங்க ஏன் வேலை பாக்கணும்? உங்களுக்குத்தான் •பேமிலி பென்ஷன் வருமே! எங்க மாமா வீட்ல பெண்களையெல்லாம் படிக்கக்கூட வெளியில அனுப்ப மாட்டாங்களே! ஒங்கள எப்படி அனுப்பினாங்க”? என்று ஏதேதோ கேள்விகள். இவள் வேலை பார்க்க வந்ததில் அவளுக்கு இஷ்டம் இல்லை என்பது போல் பேசினாள். சராசரியாக ஒருபெண்ணுக்கு இந்தச் சூழ் நிலையில் மற்றொரு பெண்ணிடம் இருக்க வேண்டிய பரிவு அவளிடம் இல்லை.

ஜூன் 28ம் தேதி வெள்ளிக் கிழமை மகாதேவனுடைய மாதத் திதி வருவதால் ஆபீசரிடம் போய் முன்னதாகவே பெர்மிஷன் கேட்டுக் கொள்ளும் படி அப்பா சொல்லியிருந்தார். காமாக்ஷி விஷயத்தைச் சொல்லி பெர்மிஷன் கேட்ட பொழுது “நீங்க லீவு எடுத்துக்கலாம். லீவு அப்ளிகேஷன் குடுங்க. நான் சாங்ஷன் பண்ணறேன்” என்றார் ஆபீசர். அன்று மாலையே விஜயலக்ஷ்மியிடம் போய் லீவு அப்ளிகேஷன் பாரம் கேட்ட பொழுது “நீங்க லீவு போட்டா எப்படி?
ஒங்க பேர்ல தானே சம்பளபில் போட்டிருக்கேன் நேத்து மாதிரிக் கையெழுத்து வாங்கக் குடுத்தனுப்பினேனே, அப்பவே ஏன் சொல்லலை”?

அவள் அப்படிக் கத்துவாள் என்று இவள் எதிர்பார்க்கவே யில்லை. வேலை கற்றுக் கொடுக்கும்படி ஆபீசர் சொல்லியிருந்த போதிலும் விஜயலக்ஷ்மி அதை விரும்ப வில்லை என்பதைக் காமாக்ஷி இரண்டொரு நாட்களிலேயே புரிந்து கொண்டு விட்டாள். அதனால் கூடுமானவரை அவள் இருந்த அறைக்குப் போவதைத் தவிர்த்தாள். அதே ஆபீசில் அட்டெண்டராக இருந்த வேலாயுதம் என்பவரிடமே சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டாள். முந்தினநாள் மாதிரிக் கையெழுத்துப் போட்டபோது அவர் சொன்னது இவளுக்குப் புரியவில்லை. விஜயலக்ஷ்மி இப்படிக் கடுமையாக நடந்து கொண்டதை நினைத்து மிகவும் வருந்தினாள்.

மறுநாள் ஆபீசர் ”என்னம்மா லீவு லெட்டர் எழுதிட்டீங்களா”? என்று கேட்ட போது காமாக்ஷி தயங்கிக் கொண்டே
”ஸார், என் பேர்ல பில் தயார் செஞ்சிருக்காங்களாம் அதனால நான் தான் டிரஷரிக்குப் போகணுமாம். மாதிரிக் கையெழுத்துப் போடச்சொன்னதும் என்ன எதுக்குன்னு தெரியாம கையெழுத்துப் போட்டுட்டேன். அதனால நாளை எப்படியும் வந்துடறேன்” என்றாள். ஆபீசருக்கு இவ்வளவு கோபம் வரும் என்று காமாக்ஷி எதிர் பார்க்கவில்லை.

”வேலாயுதம், இங்க வாங்க. இந்த அம்மா பேர்ல யார் பில் போட்டது”?இவங்களுக்கு என்ன தெரியும்’?£ இவங்க ஜாயின் பண்ணி இன்னும் 15 நாள் கூட ஆகலை. ஆபீஸ்ல வேற ஒருத்தரும் இல்லியோ? நீங்க யாரும் போக வேண்டாம். எம்பேர்ல பில் போடுங்க. நான் போறேன்”என்று கோபமாகப் பேசினார். காமாக்ஷிக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. ஒருவாறு சமாளித்துக்கொண்டு”ஸார் தயவு செய்து மன்னிச்சுடுங்க. இவ்வளவு பிரச்சனை வரும் என்று எனக்குத் தெரியாது. ஆரம்பத்திலேயே என்னால பிரச்சனைகள் வரத நான் விரும்பலை. நாளைக் காலையில் நான் வந்துடறேன்” என்றாள்.”எப்படியாவது போங்க. ஒங்க பாடு அவங்க பாடு என்று வருத்தத்தோடு சென்று விட்டார் ஆபீசர்

அடுத்த நாள் வருவதாகச் சொல்லி விட்டாளே தவிர வீட்டில் விசேஷம் கழிந்ததும் கழியாததுமாய் அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டுக் கிளம்பிய போது துக்கம் நெஞ்சை யடைத்தது. அப்பா அம்மாவுக்காக எப்படியோ சாப்பிட்டதாகப் பெயர் பண்ணிவிட்டு ஆபீஸ் வந்து விட்டாள். மணி11ஆகியிருந்தது. போன வருடம் இதே 28ம் தேதி தான் மகாதேவன் கடைசிச் சம்பளத்தை வாங்கி வந்தார். மறு நாளே சென்னை போய் விட்டார்கள். அப்புறம் இரண்டு மாதம் மெடிகல் லீவு. லீவு முடிந்து வேலையில் சேரவேயில்லை. இன்றும் அதே 28ம் தேதி! காமாக்ஷிக்கு முதல் சம்பளம்! என்ன ஒற்றுமையான முரண்பாடு! இப்படிப் பல நினைவுகள் மனதை வட்டமிட்டன. விஜயலக்ஷ்மி வேகமாக வந்து ”வேலாயுதம் இன்னும் கெளம்பலியா? ஏற்கெனவே லேட்” என்றாள் அதட்டும் குரலில்.
”வாங்கம்மா,போகலாம்” என்ற வேலாயுதத்தின் பின்னால் நெஞ்சு பட படக்க பலியாடு மாதிரி போனாள் காமாக்ஷி.. ”என்னம்மா, ஒரு மாதிரி இருக்கீங்க? மனசுல ஒண்ணும் வெச்சுக்காதீங்க. ஒங்க நெலமை எனக்குப் புரியுது. என்ன பாடு படுத்தறா,ராக்ஷஸி” என்றார்

ஸ்டேட்பாங்கில் நுழைந்து அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்ததுமே காமாக்ஷிக்கு உள்ளங்கை யெல்லாம் வியர்த்தது. அவள் அந்த மாதிரியான இடங்களுக்கெல்லாம் போனதேயில்லை. போதாக்குறைக்கு இரண்டொருவர் வந்து “என்ன வேலாயுதம் இந்தம்மாவக் கூட்டிட்டு வந்திருக்கீங்க! பாவம் அவங்க ளுக்கென்ன தெரியும்”? என்று கேட்க ஆரம்பித்தனர். மகாதேவனுடன் வேலை பார்த்த சிலர் “வாங்கம்மா, நீங்களா வந்திருக்கீங்க”? என்றதும் இவள் உடைந்தே போனாள். பேசாமல் வீட்டிலேயே இருந்திருக்கலாமோ? கண்ணை வேறு இருட்டிக் கொண்டு வருவது போலிருந்தது. மற்றவர் களுடைய அனுதாபம் அவளை மேலும் நிலைகுலைய வைத்தது. அவ்வளவு பேரும் தன்னையே பார்ப்பது போலிருந்தது. ஓ வென்று அழ வேண்டும் போலிருந்தது.

அவள் முகபாவத்தைக் கவனித்த வேலாயுதம். ”என்னம்மா காபிவேணா வாங்கிட்டு வரட்டுமா”? என்றார்.
.”சே, நம் பலவீனத்தைக் காட்டி விட்டோமே என்றிருந்தது. அங்கேயே இருந்தால் மயக்கம் போட்டு விழுந்து விட்டால் என்ன செய்வது என்றும் தோன்றியது. “ஸார், ஆபீசுக்குப் போயிட்டு வரலாமா?’’ என்று பரிதாபமாகக் கேட்டாள். இவள் நிலைமையைப் புரிந்து கொண்டவர், ‘’ஒரு கையெழுத்து மட்டும் போட்டுவிட்டுப் போகலாம். அப்பறமா வந்து பணம் வாங்கலாம்” என்று சொல்லிவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து வந்தார். கையெழுத்தைப் போட்டு விட்டு ஆட்டோவில் ஆபீசுக்கு வந்துவிட்டார்கள். நல்லவேளையாக பாங்கும் ஆபீசும் பக்கத்திலேயே இருந்தது.

ஆபீசுக்குள் நுழைந்ததுமே”என்ன, பணம் மாத்தலியா? அதுக்குள்ள வந்திட்டீங்க”. கடுகடுப்பானாள் விஜயலக்ஷ்மி.
”ஒரே கூட்டமாயிருக்கு. போய் சாப்டுட்டு வரலாம்னு நான் தான் கூட்டிட்டு வந்துட்டேன்”
இன்று என் கணவரின் மாதத் திதி என்று தெரிந்தும் இவள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? தூரத்து உறவு வேறு! இவளும் ஒரு பெண் தானே? இங்கிதமே கிடையாதா? வேலைக்கே வராமல் இருந்திருக்கலாமோ? கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டு முகத்தையும் அலம்பிக் கொண்டாள். கொஞ்சம் தெம்பும் தைரியமும் வந்தது. சுய பச்சாதாபம் வரவிடக் கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டாள். வேலாயுதம் வந்தபின் பாங்கிற்குப் போனார்கள்.

பாங்கில் கூட்டம் கலைந்து போயிருந்தது. பணத்தை எண்ணி வாங்கத் தெரியவில்லை. இவ் வளவு பணத்தை எண்ணிய தில்லை. கை நடுங்கியது. வேலாயுதம் உதவியுடன் பணத்தை வாங்கிக் கொண்டு வந்து விட்டார்கள். வந்த்தும் வராததுமாக ‘’வேலாயுதம் அவங்க தானே செக்‌ஷன், அவங்களையே பணம் பட்டுவாடா பண்ணச் சொல்லுங்க’’
என்றாள் விஜயலக்ஷ்மி.
‘’ஆபீசர் வந்து தர மாட்டாரா?’’ என்று ஈன ஸ்வரத்தில் கேட்டாள்
காமாக்ஷி.
’’இல்லம்மா, நாமதான் எல்லாருக்கும் கவரில் போட்டு வெக்கணும். ஸ்டாம்ப் ஒட்டினதும் எல்லாருக்கும் கொடுக்கலாம்’’ என்றார். பின் விஜயலக்ஷ்மி யிருந்த அறையில் போய், ‘’என்னம்மா அந்தம்மா வந்து இன்னும் 15 நாள்கூட ஆகல. இங்க யாருக்கு என்ன சம்பளம், என்ன பிடித்தம்னு எப்படித் தெரியும்? இன்னிக்கு நீங்க வந்து எடுத்து வையுங்க. அடுத்த மாசத்திலேர்ந்து அந்தம்மா எப்படி பில் போடறாங்கன்னு பாருங்க’’ என்றார்

இதைக் கேட்ட்தும் காமாக்ஷிக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. அடுத்த மாத பில்லைத் தானே தயார் செய்து விட வேண்டும் என்ற சங்கல்பமும் பிறந்தது. ஏதேதோ முணுமுணுத்தபடி விஜயலக்ஷ்மிஅனைவருக்கும் பணத்தை எடுத்து வைத்தாள். அவளிடமிருந்து சம்பளக் கவரை வாங்கிய பொழுதும் காமாக்ஷியின் கை நடுங்கியது. பஸ்ஸில் ஏறும் வரை அந்த படபடப்பு உள்ளூர இருந்து கொண்டே யிருந்தது. பஸ்ஸிலும் கூட அந்தப் படபடப்பும் துக்கமும் தொடர்ந்தது.

இதோ அவள் அடுத்த ஸ்டாப்பில் இறங்க வேண்டும். தலைவலி மண்டையைப் பிளப்பது போலி ருந்தது. காலையில் அவசர அவசரமாகச் சாப்பிட்டதாகப் பேர் பண்ணினதும், அடுத்தடுத்து நிகழ்ந்த அன்றைய நிகழ்ச்சிகளும் தலைவலியை அதிகமாக்கி விட்டிருந்தது. ஸ்ட்ராங்காக ஒரு காப்பி குடித்தால் தேவலை என்று தோன்றியது. பக்கத்திலிருந்த ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தாள். அங்கிருந்த பெரிய கண்ணாடியில் முகத்தைப் பார்த்தவள் திடுக்கிட்டாள். முகம் பேயறைந்தது போலி
ருந்தது. குளிர்ந்த நீரால் முகத்தை அலம்பிக் கொண்டதும் கொஞ்சம் தெம்பு வந்தது. இரண்டு காபி ஆர்டர் செய்தாள். சூடான காபி தொண்டைக்கு இதமாக இருந்தது.

ரேடியோவிலிருந்து வந்த ’துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே, சோகம் பொல்லாதே’ என்ற பாட்டு அவளுக்காகவே பாடப் பட்டது போலிருந்தது. ஹோட்டலை விட்டு வெளியே வந்தவள் மனதில் உறுதியும் , நடையில் நிதானமும் தெரிந்தது.

திங்கட் கிழமை ஆபீஸ் போனதும் வேலாயுதம் குட்மார்னிங் சொன்னார்.
‘’அம்மா, அன்னிக்கு என் மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாயிருந்தது. பொம்பளையா அவ! ஒங்க மாமனாருக்கு ஏதோ ஒறவுன்னு வேற சொன்னீங்க. டவுண் ஆபீஸ்ல வேல பாக்கற ஒருத்தர் இந்த ஆபீஸுக்கு வரேங்கறார். இந்த ஆபீஸ்ல எடுத்த எடுப்பில செக்‌ஷன் பாக்க ஒங்களுக்குக் கஷ்டமாயிருக்கும் அங்கன்னா டெஸ்பாட்ச் பாக்கலாம். ஒங்களுக்கும் லேசாயிருக்கும். ம்யூச்சுவல் ட்ரான்ஸ்பர்ல மாத்திக்கலாம். என்ன சொல்லறீங்க?’’ என்றார்.

காமாக்ஷி நிதானமான, ஆனால் உறுதியான குரலில்‘’நா எங்கேயும் போகப் போறதில்லை. இதே ஆபீஸ்ல தான் தொடர்ந்து வேலை பார்க்கப் போறேன். இன்னிலேர்ந்து எனக்கு சம்பள பில் தயார் பண்ண கத்துக் குடுங்க. இந்த மாச சம்பள பில்ல நான் தயார் பண்ணறேன்’’ என்றாள்.

வேலாயுதம் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தார்.

Series Navigation

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி