முதல்முதலாய்….

This entry is part [part not set] of 27 in the series 20030413_Issue

வேதா


முட்டி முட்டி – என்
முகமெல்லாம் மலர்கிறதே!
முதல்முதலாய் பார்ப்பது போல்
ஏனிந்த அவசரமோ ?

தொட்ட இடமெல்லாம்
தாழம்பூ மணக்கிறதே!
‘தொட்டிலிடும ‘ி நேரம் பார்த்து
துவண்டு நீ இருந்தாயோ ?

கட்டிக் கட்டி வைத்த
கவிதையெல்லாம் கரைகிறதே!
காதலெல்லாம் கனிய வைக்க
காத்துக் காத்துக் கிடந்தாயோ ?

உரசலின் தித்திப்பு – என்
உயிர் வரையில் நனைகிறதே!
உள் உதட்டு ஸ்பரிசத்தில் – என்
உலகமெல்லாம் நிறைத்தாயோ ?

விண்மீன் வெளிச்சமெல்லாம் – உன்
விழி அசைவில் தெரிகிறதே!
விடையறியா சிறுகதையாய்
உயிர் வரமாய் துளிர்த்தாயோ ?

மாலை மலர்ந்த பின்னும்
மறையாத காலையாய் – என்
முகவரிகள் காணும் வரை
மூச்சடக்கி இருந்தாயோ ?

ஒரு ஜென்மம் என் மடியில்
உயிராகி நீ இருக்க,
முதல்முதலாய் என் தேகம்
பரிமாறி உயிர் முடிக்க
முழுமனதாய் விரும்புகிறேன்!

மறுஜென்மம் தேவையில்லை! – இனி
மறைத்திருக்க வழியுமில்லை!
மடிதிறந்து தவம் இருப்பேன் – நீ
மனம் மலரும் மாலையெல்லாம்!
உயிர் தெளித்து உறைந்திருப்பேன் – நீ
உடன் வளரும் பாதையெல்லாம்!

piraati@hotmail.com

Series Navigation

வேதா

வேதா