முடிக்கு விலையென்ன – உரை வெண்பா

This entry is part [part not set] of 27 in the series 20030413_Issue

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்


பிரிட்டாஷ் காரர்களை எதற்கு விமர்சித்தாலும், அவர்களை ஒரு விஷயத்துக்காக மனம் திறந்து பாராட்டலாம்.

பழைய, புராதனப் பொருட்களைப் போற்றிப் பாதுகாப்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறைக்காக.

அதில் நூறில் ஒரு பங்கு நமக்கு இருந்தால் கூட இத்தனை கோயில் சிலைகள் திருட்டுப் போயிருக்காது. தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் சிந்தாமணியைப் பதிப்பிக்கவும், குறிஞ்சிப்பாட்டில் உதிர்ந்த மலர்களைத் தேடியும் கால் தேய நடந்தது கொஞ்சம் குறைந்திருக்கும். ஐம்பெருங்காப்பியங்களில் வளையாபதியும் குண்டலகேசியும் ‘காணாமல் போனவை ‘ லிஸ்டில் சேர்ந்திருக்காது.

பிபிசியில் ‘ஆண்டிக் ரோட் ஷோ ‘ நிகழ்ச்சியைப் பார்க்கும்போது இது நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் நடக்கும் இந்த ஒரு மணி நேரத் தொலைக்காட்சி நிகழ்ச்சி இங்கிலாந்தில் முக்கியமான நகரங்களில் போய்ப் படமாக்கப்படுவது. அந்தந்தப் பட்டணத்திலும், சுற்றி எட்டுப்பட்டி கிராமங்களிலும் இருக்கப்பட்ட பிரிட்டாஷ் மகாஜனங்கள் அவர்கள் போற்றிப் பாதுகாத்து வைத்திருக்கும் குடும்பப் பொக்கிஷங்களோடு ஆஜராகி விடுகிறார்கள்.

பழைய ஓவியம், பழைய சிற்பம், கைவினைப் பொருட்கள், பழைய புத்தகம், பழைய மர ஜாமான் என்று எத்தனை எத்தனையோ பொருட்களைப் பார்வையிட்டு சுவாரசியமாகப் பேசியபடி அவற்றை மதிப்பிட வல்லுனர்களும் பங்கு பெறுகிறார்கள்.

அப்படி என்ன என்ன தான் வருகின்றது இந்தப் பழைய பொருள் கண்காட்சியில் ?

போன மாதம் ஒரு பாட்டியம்மா கொண்டு வந்த கான்வாஸ் பையைக் கொட்டிக் கவிழ்த்தார். சின்னச் சின்னதாகப் பொட்டலங்கள். பாட்டிக்குப் பாட்டி காலத்துப் பல்பொடியாக இருக்குமோ என்று பார்த்தால், விஷயமே வேறே.

எல்லாப் பொட்டலத்திலும் இருந்தது தலைமுடிதான்.

அந்தம்மா குடும்பமே தலைமுறை தலைமுறையாக முடிவெட்டும் தொழிலில் இருப்பவர்களாம். அதுவும் பிரபலங்களுக்கு சிகை திருத்தும் தொழில்.

பாட்டியின் முப்பாட்டனார் கையில் கத்திரி பிடித்த நேரம் போக, வெட்டிய முடியை எல்லாம் ஒரு இழை வ்ிடாமல் அப்படியே கூட்டிப் பெருக்கிக் குப்பையில் போடாமல், ஒரு புத்திசாலித்தனமான காரியம் செய்திருக்கிறார்.

தான் சிகை அலங்காரித்துச் சிங்காரித்த பிரபலங்களின் உதிர்ந்த முடியில் கொஞ்சம் போல் எடுத்துப் பொட்டலம் கட்டி வைத்ததோடு அந்தக் காகிதத்திலேயே நாள், நட்சத்திரம், திதி, வருஷம் போட்டு யாருடைய தலைமுடி என்றும் கைப்பட எழுதி வைத்திருக்கிறார்.

அப்படியான பொட்டலங்களில் ஒன்று நெல்சன் துரையின் தலைமுடி. இந்த ஒற்றைக்கண் வெள்ளைக்காரன் இருநூற்றைம்பது வருடம் முன்பாக, பிரஞ்சு சக்கரவர்த்தி நெப்போலியனின் கப்பல் படையைத் துரத்தோ துரத்தென்று எகிப்து வரை துரத்தி நைல் நதியில் வைத்துக் கிடுக்கிப் பிடி போட்டு மடக்கிக் கடற்போரில் தோற்கடித்தவன். இங்கிலாந்தின் சிறந்த கடற்படைத் தளபதி யாரென்றால் உடனே இவன் பெயரைத்தான் சொல்வார்கள்.

நெல்சனின் சுருள் சுருளான உச்சிக்குடுமி சைஸ் முடிக்கு, இப்போது என்ன மதிப்பு தெரியுமா ?

மயக்கம் போடவேண்டாம். சுமார் ஐயாயிரம் பவுண்ட் (கிட்டத்தட்ட நாலு லட்சம் ரூபாய்).

பார்வேந்தன் ராணியம்மா பத்தொன்பது வைப்பாட்டி
தேரோட்டி சேவகன் தேர்ந்தெடுத்த வீரன்
உயிர்போய் வருடம் உருண்டு கடக்க
மயிரும் விலையேறும் பார்.

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்

MuruganRamasami@halifax.co.ukX

Series Navigation