முகவரி மறந்தேன்…

This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

மோகனா.


சித்திரை வெயிலிலும்
சரசரக்கும் பட்டுப் புடவை.

கழுத்தே அறுந்து விடுமோ என்ற பயத்திலும்,
பதறாமல் எட்டு பவுன் சங்கலி.

காதிலும், கையிலும்
இன்னும் இடுக்குகளிலும்
நீ
வாங்கி தந்த தங்கத்தை
தவறாமல் அணிந்து கொள்கிறேன்.

என் உதிரத்தில் குளித்து
என்னுள் வளர்ந்தவனாகிலும்,
உன்னையே உருவாக கொண்டு
பிறந்த உன் மகனையும்
கையில் பிடித்துக் கொள்கிறேன்.

புன்னகைப் பூக்களை
மறக்காமல் சூடி கொள்கிறேன்.

வாழ வந்த இடத்தில் என்னை
இட வலம் பெயர்த்த
உன் உற்றாரிடமும், மற்றொரிடமும்,
உன் அந்தஸ்தை
பிரதிபலிக்கும் கண்ணாடியாக,
உன் வெற்றிகளை
பரை சாற்றும் முரசாக,
உன் உறவுகள் உடையாமல்
காக்கும் பரிசலாக,
என் சுய முகவரி மறந்தவளாக
வலம் வருகிறேன் ஒவ்வொரு விழாக்களிலும் !

*********
மோகனா.

MohanaLakshmi.T@in.efunds.com

Series Navigation

மோகனா.

மோகனா.