மீராவின் கனவுகள்

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue

பாவண்ணன்


கல்லுாரியில் படித்துக்கொண்டிருந்த நேரம். நல்ல கவிதைகளை எழுதுவதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். எழுதி முடிக்கும் ஒவ்வொரு கவிதையையும் என் ஆசிரியராக இருந்த தங்கப்பாவிடம் வாசிக்கக்கொடுப்பேன். படித்தபிறகு அவர் சொல்லும் வார்த்தைகள் தொடக்கத்தில் என் கவிதையைப்பற்றியனவாக இருந்தாலும் மெல்லமெல்ல அவை கவிதைகளைப்பற்றிய பொதுவான கருத்துகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்குமானதாக மாறிவிடும். கவிதைகள் முதலாவதாக புத்தம்புதிதாக இருக்கவேண்டும். எப்பாதையில் நடப்பதாக இருந்தாலும் அப்பாதையில் பதிக்கப்படுகிற முதல்தடமாக ஒரு கவிதை இருக்க வேண்டும். சிறப்பான சொற்கட்டு மிகவும் அவசியம். நயம்பட சொல்லவேண்டும். அகத்துாண்டுதல் இல்லாமல் ஒருவரி கூட எழுதக்கூடாது. இப்படி நிறையச் சொல்லிக்கொண்டே இருப்பார்.

என் கவிதைகளில் நான் பயன்படுத்தியிருந்த பல உவமைகள் ஏற்கனவே இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுவிட்டன என்று சொன்னார். அணிலாடு முன்றில் என்னும் தொடர் அவருக்கு மிகவும் பிடிக்கும். திரும்பத்திரும்பப் பலமுறைகள் சொல்லிக்கொண்டே இருப்பார். கவிதைக்கான எந்த உவமையையும் படிமத்தையும் இப்படி வாழ்வில் நாம் பார்க்கும் காட்சிகளிலிருந்தே எடுக்கவேண்டும் என்பார். என் மனம் அத்திசையில் அசைபோட்டபடி இருந்தது. கண்ணில் படும் பொருள்களிலும் காட்சிகளிலும் எது என் கவிதைக்குப் பொருத்தமானது என ஆழ்மனம் களைக்கும்வரை யோசித்துக்கொண்டே இருப்பது பழகிப்போனது.

அப்போதுதான் தற்செயலாக எங்கள் கல்லுாரி நுாலகத்தில் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்னும் கவிதை நுாலைப் பார்த்தேன். நான் உள்ளே நுழைவதற்கு முன்னர் யாரோ திருப்பிக்கொடுத்துவிட்டுப் போயிருந்தார்கள். நுாலகரின் மேசையின் மீதே அந்த நுால் இருந்தது. அந்த நுாலின் தலைப்பு என்னை மிகவும் வசீகரித்தது. ஒரு கணிதச் சமன்பாட்டைப்போன்ற இத்தொடர் பார்த்த கணத்திலேயே என் மனத்தில் இடம்பிடித்துவிட்டது. அங்கேயே அதைப் படிக்கத் தொடங்கினேன். வகுப்புப் பாடத்தை மறந்து கவிதைகளில் மூழ்கிவிட்டேன். எல்லாக் கவிதைகளும் புத்தம்புதிய ஒரு சொல்முறையில் எழுதப்பட்டிருந்தது. ஈர்ப்பான உவமைகள். லட்சியக் கனவுகளையெல்லாம் காதலியின் ஒவ்வொரு அசைவுக்கும் ஆசைக்கும் வார்த்தைகளுக்கும் உகந்த உருவகமாகவும் உவமையாகவும் மாற்றி எழுதியிருந்த விதம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. கவிதைகள் பற்றிய தங்கப்பாவின் வார்த்தைகள் உடனடியாக நினைவில் மின்னலிட்டன. வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட ஒரு தாமரையின் புகைப்படத்தைப்போல காதல் மனத்தின் ஏக்கங்கள் வெவ்வேறு கோணங்களில் அக்கவிதைகளில் சொல்லப்பட்டிருந்தன. ஆசிரியரின் பெயரைச் சட்டென மறுபடியும் படித்துப்பார்த்தேன். மீரா என்றிருந்தது.

மீரா என்கிற பெயரை என் மனஉலகம் இப்படித்தான் முதன்முதலாக உள்வாங்கிக்கொண்டது. ஆழ்ந்த யோசனைகளுக்குப் பிறகு அவர் கவிதை முறையைப்போல என் கவிதை முறை அமைய வாய்ப்பில்லை என்பதையும் அவரது கவிதை உலகத்தைப்போல என் கவிதை உலகம் உருவாகவும் வாய்ப்பில்லை என்பதையும் நிதானமாகப் புரிந்துகொண்டேன். ஆனால் அவரது பெயரைப்பற்றியும் அக்கவிதைத்தொகுதியைப்பற்றியும் பார்க்கும் நண்பர்களிடமெல்லாம் சொல்லிக்கொண்டு திரிந்தேன். சோஷலிசம் வந்துவிடும் என்கிற கனவையும் காதலிக்கும் பெண்ணை அடைந்துவிட முடியும் என்கிற கனவையும் இணைத்து அவர் எழுதிய வரிகளையொட்டி மணிக்கணக்கில் நானும் நண்பர்களும் பேசிக்கொண்டிருந்தேன்.

பட்டப்படிப்பைத் தொடர்ந்து வேலைக்காக நான் கர்நாடக மாநிலத்துக்குச் செல்ல வேண்டியதாயிற்று. வாழ்வில் பல மாற்றங்கள். படைப்புலகத்திலும் பல மாற்றங்கள். கவிதைகளின் பக்கத்திலிருந்து நான் கதைகளின் பக்கம் நகர்ந்திருந்தேன். மீராவும் கவிதைகளின் பக்கத்திலிருந்து பதிப்பாக்கத்தின் பக்கம் நகர்ந்திருந்தார். ஒருவர் வாழ்வில் இப்படி நேரும் மாற்றங்கள் மிகவும் இயற்கையானவை. ஏன் இப்படித் தேர்ந்தெடுக்கிறோம் என்பதற்கான காரணங்களை அடுக்க முடியாது. மனம் கொள்ளும் ஆர்வமும் செயல்படுவதற்கான தோதான சூழல்களுமே ஒன்றைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக அமைந்து விடுகின்றன போலும்.

என் வாசிப்பு வேகவேகமாக வளர்ந்துகொண்டிருந்த நேரம். தமிழில் வெளிவந்திருக்கிற எல்லா மொழிபெயர்ப்புகளையும் படித்துமுடித்துவிட வேண்டும் என்கிற தீராத தாகத்தோடு படித்தேன். அத்துடன் மூத்த எழுத்தாளர்களின் எல்லாப் படைப்புகளையும் படித்துவிடவேண்டும் என்கிற ஆசையும் இருந்தது. சக்தி காரியாலயம், ஜோதி நிலையம், இன்ப நிலையம், தமிழ்ச்சுடர் நிலையம், ஸ்டார் பிரசுரம் என்கிற பெயர்களைப் பார்த்தாலே என் மனத்தில் பரபரப்பு கூடிவிடும். தமிழின் இலக்கியச்சூழலை வளப்படுத்தியதில் இந்தப் பதிப்பகங்கள் ஆற்றிய பங்களிப்பைப்பற்றி மிக உயர்வாக நினைத்திருந்தேன். இன்றும் அந்த எண்ணம் மாறவில்லை. வலிமையான இலக்கியச் சூழலை உருவாக்குவதில் ஒரு பதிப்பகத்துக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. கவிதைகளிலேயே தொடர்ந்து இயங்கிவந்த மீராவும் ஏதோ ஒரு கட்டத்தில் இப்படி நினைத்ததால்தான் தன் இயங்குதளத்தை மாற்றிக்கொண்டிருக்கலாம் என்ற தோன்றுகிறது.

நவீன இலக்கியத்தின்பால் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தமிழுலகில் உருவான ஈர்ப்புக்கு மீரா தொடங்கிய அன்னம் பதிப்பகத்தின் செயல்பாடு மிகமுக்கியமான காரணம் என்று குறிப்பிடுவது மிகையாகாது. வெங்கட் சாமிநாதனின் புத்தகத்தையும் எஸ்.வி.ராஜதுரையின் புத்தகத்தையும் வெளியிட்டதன் தொடர்ச்சியாகத் தமிழ்ச் சூழலின் சிந்தனைப்போக்கில் பலத்த மாற்றம் உருவானது. அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம், நிலவு வந்து பாடுமோ, மரக்குதிரை போன்ற மொழிபெயர்ப்புகள் பிறமொழி இலக்கிய முயற்சிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வந்தன. அபி, இன்குலாப், அப்துல் ரகுமான் ஆகியோரின் கவிதை முயற்சிகளுக்கும் அன்னம் தொடர்ந்து ஆதரவளித்துவந்தது. நவகவிதை வரிசை என்னும் வரிசையில் அவர் கண்டெடுத்த கவிஞர்களில் பெரும்பாலோர் இருபதாண்டுகளுக்குப் பிறகும் இன்றும் நல்ல கவிதைகளை எழுதுகிறவர்களாகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். பூமணி, நாஞ்சில் நாடன், கி.ராஜநாராயணன் எழுத்துகளைத் தொடர்ந்து நுால்வடிவில் வெளியிட்டதை அன்னத்தின் முக்கியமான நிகழ்வாகச் சொல்ல வேண்டும். சிறுநகரங்கள், கிராமங்கள் சார்ந்த படைப்பாளிகளின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் துணையாக அன்னம் இருந்ததை மிகப்பெரிய இலக்கியச்சேவை என்றே குறிப்பிட வேண்டும். பூமணியின் ‘பிறகு ‘ நாவல் தொடங்கி நாஞ்சில் நாடனின் ஏமிதவைஏ, ஜெயமோகனுடைய ‘விஷ்ணுபுரம் ‘ வரைக்குமான தமிழின் முக்கியமான சாதனைப் படைப்புகளை நாம் வாசிக்க வழிசெய்து தந்தது அன்னம் பதிப்பகம். நாஞ்சில் நாடனுடைய சிறுகதைகள் முதல் கோணங்கியின் சிறுகதைகள் வரை பல நல்ல சிறுகதை நுால்களுடன் உறவு உருவாகவும் இப்பதிப்பகம் காரணமாக இருந்திருக்கிறது.

பாக்கெட் நாவல்கள் அளவுள்ள நுால்வடிவில் தமிழின் முக்கியமான நாவல்களை மலிவான விலையில் எல்லாருக்கும் கிடைக்கும் வகையில் செய்யவேண்டும் என்கிற கனவை அவர் மனம் பெருமளவில் சுமந்திருந்தது. அதன் வெளிப்பாடாக அவரால் சா.கந்தசாமியின் நாவல், கி.ராஜநாராயணனுடைய நாவல் என ஒன்றிரண்டு நுால்களையே கொண்டுவர முடிந்தது. ஏதோ காரணத்தால் அம்முயற்சி தொடரவில்லை.

எழுத்தாளர்களை அலைக்கழிக்கிற பதிப்பாளர்கள் இருக்கும் சூழலில் அன்னம் மீரா வித்தியாசமானவர். என்னுடைய குறுநாவலையும் சிறுகதைத் தொகுப்பையும் வெளியிடட்டபோது எனலக்கும் அவருக்கும் முகப்பழக்கமே இல்லை. என் நணபரொருவரிடம் படிக்கக் கொடுத்திருந்த கையெழுத்துப் பிரதிகளைத் தற்செயலாகப் படித்துவிட்டுப் பிடித்திருந்ததால் வெளியிட்டார். என் நுால்கள் வெளிவந்து மூன்றாண்டுகள் கழித்த பிறகுதான் நானும் அவரும் சந்தித்துக்கொண்டோம். முக்கியமானப் பல நண்பர்கள் இப்படிச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் தன் ரசனைஉணர்வை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு நுால்களை வெளியிடத் தேர்ந்தெடுத்தார்.

அன்னம் பதிப்பகம் அவருடைய மிகப்பெரிய சாதனை என்றே சொல்ல வேண்டும். கால் நுாற்றாண்டுக்காலம் அதை அவர் வெற்றிகரமாகவே இயக்கி வந்தார். கடந்த நுாற்றண்டின் பிற்பகுதித் தமிழ் இலக்கியத்தின் அடையாளங்களாக அவை இருக்கின்றன. சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கவிதைகள், நாட்டுப்புறவியல் என எல்லாத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க படைப்புகளை அன்னம் வெளியிட் டிருக்கிறது. இவற்றைப் பற்றிய எந்த ஆய்வைத் தொடங்குகிறவர்களாக இருந்தாலும் அன்னம் வெளியிட்டுள்ள நுால்களின் துணையின்றிச் செய் தல் என்பது முடியாத காரியம்.

நான் அவரைச் சந்தித்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர் இலக் கியம் பற்றியே பெருமளவில் பேசினார். தானே ஒரு கவிஞர் என்றாலும் ஒருபோதும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் மற்றவர்களுடைய படைப்புகளை எந்தவிதச் சாய்வுகளுமின்றி அளவிடத் தெரிந்தவராக இருந்தார். அது அவருடைய மிகப்பெரிய வலிமை என்றே சொல்லவேண்டும். ஒருமுறை ஓர் இதழில் மலையாளப் பதிப்பகத்தார் ஒருவருடைய நேர்காணல் இடம்பெற்றிருந்தது. அதில் அவர் தம் பதிப்பகத்தின் வழியாக ஓராண்டில் ஏறத்தாழ 500 புத்தகங்கள் வெளியிடப்படுவதாகவும் தம் பதிப்பகத்தில் 1000 பேருக்குமேல் சந்தாதாரராக உள்ளார்கள் எனவும் மலையாள இலக்கியப் படைப்புகளில் சரிபாதி படைப்புகள் அவரது பதிப்பகம் வழியே வெளியிடப்பட்டவை என்றும் பெருமையுடன் குறிப்பிட் டிருந்தார். மீராவுக்கும் அப்படிப்பட்ட கனவுகள் இருந்தன. தமிழ்ச்சூழலில் அப்படிப்பட்ட வாசிப்புத்தரத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிபெற வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. திரைச்சுவையிலும் அரசியல் அடிதடிகளிலும் சதாகாலமும் திளைத்துக்கொள்கிறவர்களாகத் தமிழர்களைப்பற்றிப் பிறமொழியினரிடையே காணப்படும் படிமத்தை இத்தகு நுாலக இயக்கத்தாலும் இலக்கிய மேன்மைகளாலும் மாற்ற முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேன்மையான இலக்கியம், ஆழ்ந்த வாசிப்பு, தெளிவைத்தேடும் விவாதங்கள், சூழலைப் புரிந்துகொள்தல், கலாச்சாரத்தை மேம்படுத்துதல் என அடுக்கடுக்கான செயல்கள் அனைத்தும் வேகவேகமாக இந்த மண்ணில் நிகழ் ந்து தமிழுலகம் உயரும் என்பதில் அவர் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஒரு பதிப்பகத்தின் வழியாக அவளிவரும் ஒரு நுால் என்பது மண்ணில் ஊன்றப்படுகிற ஒரு விதையைப்போன்றது என்றும் அவ்வகையில் ஊன்றப்பட்ட பல விதைகளால் இம்மண் தோப்பாகவும் காடாகவும் நிச்சயம் மாறும் என்று ஆழ்ந்த குரலில் அவர் சொன்னபோது அவர் கொண்டிருந்த நம்பிக் கையின் உறுதியைப் புரிந்துகொண்டேன். அவர் கனவுகளும் நம்பிக்கையும் என்றாவது ஒருநாள் நிறைவேறும்.

*

மறைந்த ‘அன்னம் ‘ மீராவுடைய முதல் நினைவுநாள் 01.09.03 அன்று சிவகங்கையில் கொண்டாடப்பட்டது. கதிர், அறிவுமதி இருவராலும் தொகுக்கப்பட்ட நினைவுமலர் அச்சமயத்தில் வெளியிடப்பட்டது. ‘காலத்தின் குரல் ‘ என்னும் தலைப்பில் வெளியான அம்மலர்ில் இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்