மீண்டும் பிறவி வேண்டும்

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

ஜோதிர்லதா கிரிஜா


(1992 ஆம் ஆண்டில் எழுதிய ஆங்கில ஈரடிப் பாடலின் கருத்தை மையமாய்க் கொண்டது. POET (Chennai) என்னும் இதழில் அப்பாடல் வெளிவந்தது.)

விண்ணுலகை யடைந்ததிலிருந்து உறங்கிக்கொண்டிருந்த நான் திடாரென்று கண் விழித்தேன். இந்தியா தனது விடுதலைப் பொன்விழாவைக் கொண்டாடி முடித்திருந்ததை இராமபிரானிடமிருந்து கேட்டறிந்த நான் என் தாய்நாடு சென்றுவர அவரது அனுமதியைக் கோரினேன்.

‘காந்தி! நீர் போய்த்தானாக வேண்டுமா ? ‘ என்ற இராமபிரான் தம் வாய்க்குள் சிரித்துக் கொண்டதாய்த் தோன்றியது. அதில் தெரிந்தது கசப்பா, கேலியா என்பது புரியவில்லை.

‘ஆமாம், சுவாமி! ‘

‘சரி, போய் வாரும். உமது ஆசையைத்தான் கெடுப்பானேன் ? ‘

நன்றி கூறிவிட்டு நான் தில்லியைப்பற்றி நினைத்த மறு கணமே, அங் கிருந்தேன். தில்லி இரயில் நிலையத்தில் ஒரு பையுடன் குறுக்கும் நெடுக்குமாய்ச் சுழலும் பார்வைகளுடன் நடந்து கொண்டிருந்த இரண்டு மனிதர்கள் மீது என் பார்வை விழுந்தது. சுவரைக் கூட ஊடுருவும் வல்லமை கொண்ட என் பார்வையால் அவன் கையிலிருந்த பைக்குள் வெடி குண்டுகள், மின் ஒயர்கள், கெடியாரங்கள் ஆகியவை இருந்ததைப் பார்த்து அதிர்ந்தேன். வண்டித்தொடர் ஒன்றைக் கவிழ்க்கும் நாசவேலையே அவர்களது நோக்கமென்று புரிய, நான் சுற்றிலும் கவனித்தேன். இரண்டு காவல் துறையினர் தென்பட்டனர். அவர்களை நெருங்கி, ‘அதோ! அங்கு பாருங்கள்! அவர்களைப் பிடித்துச் சோதனை செய்யுங்கள்! ‘ என்றேன். என் சொற்கள் அவர்கள் செவிகளில் விழாது என்பது எனக்குத் தெரிந்ததுதான். இருப்பினும், அவை அவர்களது உள்ளுணர்வை உசுப்ப, இருவரும் அந்த நாச வேலைக்காரர்களின் புறம் பார்த்தார்கள். பிறகு, இருவரையும் பிடித்துச்சோதனை செய்தார்கள். உண்மை வெளிப்பட்டது. ஒரு வண்டித்தொடரைக் கவிழ்க்க வந்த சதிகாரர்களாம். பாகிஸ்தானின் கைக்கூலிகளாம். பெரும் ஆரவாரத்தினிடையே அவர்களை இழுத்துப் போனார்கள்.

‘பாகிஸ்தானுக்கு இதே வேலையாய்ப் போயிற்று ‘, ‘காஷ்மீர்ப் பிரச்சினை தீர்ந்துவிட்டால், இது போல் நடக்காது ‘, ‘பாகிஸ்தான் தான் காஷ்மீரைப் படை எடுப்பதற்கு முன்பு இருந்த நிலைக்கு – ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தின்படி – செல்ல மறுக்கும் வரை இது தீரப் போவதில்லை ‘, ‘அப்போது இந்தியா வாக்கெடுப்புக்குச் சம்மதித்துத்தான் இருந்தது. ஆனால், இந்த ஐம்பத்துச் சொச்சம் ஆண்டுகளில், காஷ்மீர்ப் பண்டிதர்களை இலட்சக் கணக்கில் கொன்றுவிட்டும், அவர்களை இலட்சக்கணக்கில் துரத்திவிட்டும், ‘இப்போது வாக்கெடு ‘ என்று பாகிஸ்தான் கலகம் செய்தால்,அதை ஏற்க இந்தியர்கள் முட்டாள்களா ? ‘, ‘ஆக மொத்தம், இனி நிரந்தரத் தலைவலிதான்! ‘, ‘நேரு காஷ்மீர்ப் பிரச்சினையைப் பாதுகாப்புச் சபைக்குக் கொண்டு போனதேஅசட்டுத்தனம் ‘, ‘அவன் என்னை அடித்தான் என்று புகார் செய்ததற்குப் பதில் நாம் அப்போதே அவர்களைத் திருப்பித் தாக்கியிருக்க வேண்டும் ‘, ‘நேருவுக்குத் தாமும் ஒரு காந்தி என்கிற நினைப்பு! ‘ …. இவ்வாறு பல்வேறு விமரிசனங்கள் என் செவிகளில் விழுந்தன.

பிறகு, பாராளுமன்றம் சென்றேன். உலக வங்கியின் பாராட்டைப் பெறுகிறஅளவுக்கு அந்நியச் செலாவணிக் கையிருப்பு உயர்ந்துள்ளது பற்றி நிதியமைச்சர் பீற்றிக் கொண்டிருந்தார். வரும் வழியில் எச்சில் இலைகளிலிருந்து வழித்துத் தின்று கொண்டிருந்த ஏழைகளைப் பார்த்துக் கண் கலங்கிப் போயிருந்த எனக்குக் கசப்பும் சிரிப்புமே வந்தன. ‘ஏழைகளுக்குச் சோறு கூடப் போட முடியாத நீர் அந்நியச் செலாவணியைப் பேழை பேழையாக வைத்திருந்து என்ன பயன் ? ‘ என்று சபித்தேன். பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவரது பேச்சைக் கேட்காமல், சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர்வாய் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். கவனித்துக் கேட்டவர்கள் மிக, மிகச் சிலரே.அக்கறையோ பொறுப்போ அற்ற மாணவர்களைப் பெரும் பான்மையாய்க் கொண்ட வகுப்பறையே எனக்கு நினைப்பு வந்தது.

அடுத்து, தில்லி புறநகர்ப் பகுதிக்குப் போனேன். காலில் இடறிய ஒரு செய்தித்தாளின் நறுக்கைப் படித்து அதிர்ந்தே போனேன். சாப்பட்டுக்காக ஒரு பெற்றோர் தம் குழந்தையை விற்றது பற்றிய செய்தி அதில் இருந்தது. ‘ஒரு விவசாய நாட்டிலா இப்படி ‘ என்று உள்ளம் உடைந்தேன். தில்லியை நன்கு சுற்றினேன். அயல் நாட்டுப் பெரும் புள்ளிகள் வரக்கூடிய இடங்கள், தெருக்கள் ஆகியன துப்புரவாக இருந்தன. உள்ளத்தில் துப்புரவு இல்லாத அரசியல்வாதிகளின் கள்ளத்தனத்தை இந்நிலை பிரதிபலித்தது நன்கு தெரிந்தது.

சட்டென்று என் கவனம் ஒரு காரின் மீது விழுந்தது. அதில் ஒரு தேசியக் கொடி பறந்து கொண்டிருந்தது. உள்ளே ஓர் அமைச்சர் என் குல்லா அணிந்து – அதாவது ‘காந்திக்குல்லா ‘ அணிந்து – வெள்ளைக் கதராடையில் பளிச்சென்று காணப்பட்டார். நான் கார்க்கதவை ஊடுருவி அவருக்கு அருகே அமர்ந்தேன். காரின் ஓட்டுநர் நான்கு விஸ்கி பாட்டில்கள் அடங்கிய ஒரு பையை அமைச்சரிடம் கொடுத்தார். தலையிலே காந்திக் குல்லா, கையிலே விஸ்கி பாட்டில்! பேஷ், பேஷ்!

‘டிரைவர்! நேற்று மாலை நான் தில்லி திரும்பிய அரசுப் பயணம் சம்பந்தப்பட்ட பயணப்படிப் பணம் இன்றே என் கைக்கு வரவேண்டும். என் பி.ஏ.- யிடம் மறக்காமல்சொல்லு. ‘

‘சரி, சார் ‘

கார் ஒதுக்குப்புறமான பங்களா ஒன்றின் முன் நின்றது. விஸ்கி பாட்டில்பையுடன் அமைச்சர் இறங்கினார். ‘டிரைவர்! இன்னும் ஒரு மணி நேரத்துக்கு நீ என் காருடன் பெற்றோல் பங்க் பக்கம் போய் இரு. தேசியக் கொடியை அகற்றிவிடு. நான்இங்கு வந்திருப்பது பற்றி….மூச்!… தெரிந்ததா ? ‘

‘தெரியும், சார். யாருக்கும் சொல்ல மாட்டேன், ‘ என்றவாறு தலைகுனிந்த ஓட்டுநரின் கண்களில் ஒரு கேலிச் சிரிப்புத் தவழ்ந்து கொண்டிருந்தது. அமைச்சர்உள்ளே போக, சன்னலின் வழியே ஓர் அழகிய இளம் பெண் எட்டிப் பார்த்தாள். தலைநரைத்த அமைச்சரின் நோக்கம் புரிய, நான் அருவருப்புடன் காரிலிருந்து நழுவிக் காற்றில்மிதந்து போபால் சென்றேன். அங்கே பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விஷவாயு விபத்தைப் பற்றி யறிந்தேன். ஊழியர்களின் மெத்தனத்தாலும், நிர்வாகக் கோளாறுகளாலும்ஊர் முழுவதும் நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டுப் பல்வேறு உடல் ஊனங்களுக்கு உட்பட்ட மனிதர்களுக்கு இன்னும் கூட இழப்பீடு வழங்கப்படவில்லை யாம். என்னே கொடுமைஇது! இதை யறிந்ததும், அரசுப் பயணப் படியை தில்லிக்குத் திரும்பிய உடனேயே தமக்குத் தரப் பணித்த அமைச்சர் பற்றிய ஞாபகம்தான் எனக்கு வந்தது. மனம் குமைந்தது. இந்த அக்கறையில் நூற்றில் ஒரு பங்கேனும் இருந்திருந்தால், போபால் விஷவாயு பாதிப்பாளர்களுக்கு என்றோ இழிப்பீடு கிடைத்திருந்திருக்குமே! சே! … போபால் மக்களுக்காக இராமபிரானிடம் பிரார்த்தித்தேன். மறு கணமே அயோத்தியின் நினைப்பு எழ, அங்குப் பறந்தேன்.

அயோத்தியில் மக்கள் ஆங்காங்கு கும்பல் கும்பலாக நின்று முனைப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். சில இடங்களில் இந்துக்களின் கும்பல்கள். சில இடங்களில்முஸ்லிம்களின் கும்பல்கள். கவனித்துக் கேட்டதில், சில நாள்களுக்கு முன்பு இந்து வெறியர்கள் சிலர் இராமபிரானுக்குக் கோவில் கட்டும் பொருட்டு பாப்ரி மஸ்ஜிதை இடித்து விட்டது தெரிய, வெட்கிப் போனேன். இந்துக்கள் யாருடனும் வலுச்சண்டைக்குப் போகமாட்டார்கள் என்பதே வரலாற்று உண்மை. ஆனால், அவர்களில் சிலர் வந்த சண்டையை விடாதவர்கள் என்பதும் உண்மை. எனினும், அதைக் கூட அவர்கள் விட்டுவிட வேண்டும் என்பதே எனது அறிவுரையாக இருந்து வந்தது. இந்த அகிம்சைத் தத்துவத்தையும் திருப்பித் தாக்காத பொறுமை காத்தலையும் நான் இந்துக்களுக்கு மட்டுமே உபதேசித்துக் கொண்டிருந்தேன் என்பது இந்து மதவாதிகள் என் மீது வீசிக்கொண்டிருந்தகுற்றச்சாட்டு. இதுவே நான் சுட்டுக் கொல்லப்பட்டதற்குக் காரணம் என்பதாய்ப் பின்னர் அறிந்தேன். கடவுள் சர்வ வியாபி – உருவிலியாதலால் ‘சர்வ ‘ இடங்களிலும் ‘வியாபி ‘த்திருப்பவர் எனும் உண்மையான இந்து மதத் தத்துவத்தை உணர்ந்திருப்பின் – அதாவது எங்கும் உறைபவர் எனும் அடிப்படைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டிருந்தால் – அந்தச் சில இந்துமத வெறியர்கள் மசூதியை இடித்திருக்கவே மாட்டார்கள். இராமர் பிறந்த இடம் அதுவே யானாலும் – முன்னொரு காலத்தில் இங்கு இராமர் கோவில்இருந்தது என்பதாய் மெய்ப்பிக்கப் பட்டாலும் கூட – அவர் அங்கு மட்டுமே உறைபவரா!அட, வடிகட்டின முட்டாள்களா!

ஆனாலும், நல்லவேளையாக, இந்துக்களில் பெரும்பான்மையினர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரிக்கவில்லை என்பதே எனது ஒரே ஆறுதல். என்னைப் பொறுத்தமட்டில் அரசியலில் மதத்தைக் கலப்பது என்பது கடவுளுக்குப் பயந்து – அதாவது உண்மையாகவும், நேர்மையாகவும் – நடப்பது என்பதாகும். ஆனால் – அய்யோ! – இவர்கள் மதம்என்பதைப் புரிந்து கொண்டுள்ள விதம் அபத்தமாக இருக்கிறதே! அதே சமயத்தில், ‘அந்த நாளில் முஸ்லிம்கள் எத்தனை இந்துக் கோவில்களைத் தகர்த்திருக்கிறார்கள்! பெரும்பான்மையினராக இருந்தும், இந்துக்கள் அவர்களைப் பழிவாங்கவில்லையே! அந்தப் பெருந்தன்மையை எண்ணி இந்த முஸ்லிம்கள் தான் விட்டுக்கொடுத்தால் என்ன ? இந்த இந்துக்கள் தானாகட்டும், இராமபிரான் கோவில் இருந்த இடம் என்று தாங்கள் உறுதியாக நம்பும் இடத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவது அவர்கள் தங்கள் இராமனையே தொழுவதற்குச் சமம் என்று எண்ணிப் பெருமை கொண்டு, விட்டுக்கொடுக்கலாமே!

‘ஹே! ராம்! இந்தச் சோதனையிலிருந்து மீண்டு இந்தியா புடம் போட்ட பொன்னாக ஒளிரத் தாங்கள்தான் அருளவேண்டும்! ‘ – இப்படி யெல்லாம் புலம்பியவாறே நான் அகமதாபாத் சென்றேன். குஜராத் நான் பிறந்த மாநிலம் என்பதால் அங்கு மதுவிலக்கு அமலில் இருந்ததை யறிந்தேன். ஆனால், அதற்காக, குஜராத் மக்கள் குடிக்கவில்லை என்றோ அங்கே கள்ளச் சாராயம் புழக்கத்தில் இல்லை என்றோ ஆகாது என்பதும் தெரியவந்தது.

அகமதாபாத் இரயில் நிலையம் ஜேஜே என்றிருந்தது. குஜராத் மாநில அரசு சரியாய்ச் செயல்படாததால், சுகாதாரக் குறைவு ஏற்பட்டு, பிளேக் போன்ற ஒரு கொள்ளை நோய் அங்குப் பரவ, ஆயிரக்கணக்கான சாவுகள் ஏற்பட்டதாக மக்கள் பேசிக்கொண்டதிலிருந்து தெரிந்தது. அமைச்சர்களில் தொடங்கி, அடிமட்டத் தொழிலாளிகள் வரை யாருக்குமே கடமை யுணர்வு இல்லை என்பது தெள்ளத் தெளிவாய்ப் புரிந்தது.

ஏலாமையுடன் பெருமூச்செறிந்த பின், நான் அடுத்து மும்பைக்குப் போனேன். மும்பை எப்போதும் போல் ஜேஜே என்றிருந்தது. நான் ஒரு நாளிதழ் அலுவலகத்துள் நுழைந்தேன். சில பழைய ஏடுகளைப் புரட்டிப் பார்த்து, அளவற்ற வேதனைக்கு ஆளானேன். பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் எதிரொலியாக, மும்பையிலும் பல இடங்களில், முஸ்லிம்கள் தொழுகையில் – தங்கள் பணியிடங்களிலிருந்து வெளிச்சென்று மசூதிகளில் – பாதுகாப்பாக இருந்த நேரம் பார்த்து – இஸ்லாமிய வெறியர்கள் குண்டுகளை வெடிக்கச் செய்தனராம். இந்தத் தந்திரத்தால், இந்துக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டனராம்.காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ வைத்து உயிர், பொருள் சேதங்கைளை விளைவித்து வருவது பாகிஸ்தானே என்று அமெரிக்காவும் பிரிட்டனும் கண்டுபிடித்து வெளியிட்டிருந்த ஆதாரம் மிக்க செய்தியறிந்து உள்ளம் நொந்தேன். ‘எந்த நாட்டில் நீ பிறந்து வாழ்கிறாயோ அந்த நாடே உனது தாய் நாடு ‘ என்று வணக்கத்துக்குரிய நபிகள் நாயகம் -சல் அவர்கள் – கூறியுள்ளது பற்றிய உணர்வே இல்லாத முஸ்லிம்களை எண்ணிவருந்தினேன்

அடுத்து, மும்பையயில் விபசாரம் கொடிகட்டிப் பறப்பதை யறிந்து வேதனையில் வெந்தேன். சில பத்திரிகைகளைப் புரட்டிய போது என் இதயம் துடிக்கவும் மறந்து போனது. தாய்மையின் சின்னங்களான பெண்களின் உடலுறுப்புகளைக் கொச்சைப்படுத்தும் ஆபாச நகைச்சுவைத் துணுக்குகள், இளைஞர்களைக் கெடுக்கும் அத்து மீறிய இனக்கவர்ச்சிப் படங்கள்! சினிமா நிழற்படங்கள் இல்லாத பத்திரிகைகள் விற்பதில்லையாம்.இவற்றை யெல்லாம் வெளியிட்டு விபசாரம் செய்யும் பத்திரிகைகளில், ரொம்பவும் மனச்சாட்சி யுள்ளவர்கள் போல் இவற்றின் உரிமையாளர்களை உயர்த்திக் காட்டும் சமுதாய முன்னேற்றக் கட்டுரைகள்! சமுதாயச் சீர்கேடுகள் பற்றிய விழிப்பு உணர்வுத் தலையங்கங்கள்! பெண்சீண்டலைத் தூண்டும் விஷயங்களை வெளியிட்டு விட்டு, அதனால் உயிரிழக்கும் பெண்களுக்காகப் போலிக் கண்ணீர் உகுக்கும் அனுதாபக் கட்டுரைகள்! தொடையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டும் இந்த மனித இனத் துரோகிகளின் இரட்டை நாக்கைப் பற்றி என்ன சொல்லித் திட்ட!

அடுத்து, ஐதராபத்தில் இறங்கினேன். அங்கே ஏக ரகளை. வன்முறைத் தாக்குதல்கள், கத்திக்குத்துகள் போன்ற நக்சலைட்டுகளின் அர்த்தமற்ற வெறிச் செயல்கள்.எனினும், ஏழைமையே இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்பது புரிகையில் நக்சலைட்டுகளின் மீது அனுதாபமே மேலிடுகிறது. ஆனால், வன்முறையால் எதைச் சாதித்தாலும், அது நிலைக்காது என்பதை ஏன் இவர்கள் உணரவில்லை ? அடேய்! என் கண்மணிகளா! நான் கற்றுக்கொடுத்த – கடைப்பிடித்து வெற்றி யடைந்த – அறப்போர் பற்றி யெல்லாம் உங்கள் பாட நூல்களில் விவரமாய் எதுவுமே சொல்லப்பட வில்லையா ? ..

மேற்கொண்டு அங்கிருக்கப் பிடிக்காமல், சென்னைக்குப் பறந்தேன். சென்னை இரயில் நிலையத்தி லிருந்து புறப்பட்ட பெரிய சொகுசுக் காருக்குள் புகுந்து அமர்ந்து கொண்டேன். அதில் இரண்டு பேர் இருந்தார்கள். ஒருவர் திரைப்பட முதலாளி.இன்னொருவர் திரைப்பட இயக்குநர். அவர்கள் எடுத்திருந்த ஒரு திரைப்படத்தில் அளவுக்குஅதிகமான வன்முறையும் ஆபாசமும் இருந்ததால் அதை வெளியிட அனுமதி கிடைக்கவில்லையாம். நிறைய லஞ்சம் கொடுத்துத் திரைப்படத் தணிக்கைக் குழுவின் எல்லா உறுப்பினர்களையும் சரிக்கட்டி விட்டார்களாம் – ஒரே ஓர் உறுப்பினரைத் தவிர. சான்றிதழ் அளிக்க மறுத்துவரும் அவரையும் சரிக்கட்டிவிட்டால் படத்தை வெளியிட்டுவிட முடியுமாம்.அந்த அம்மாளின் வீட்டுக்குத்தான் கார் போய்க்கொண்டிருந்தது. என்னுள் ஆவல் கிளர்ந்தது.

… முதலில் அந்த அம்மாள் ஆகா ஊகூ என்றாள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், பட முதலாளி ஒரு சதுரமான – ஜிகினா ஒட்டிய – சிறு பெட்டியைத் திறந்து அவளுக்குக் காட்டியதும், அவள் கண்களில் ஒரு பேராசை வந்து உட்கார்ந்து கொண்டது. பெட்டிக்குள் ஒரு வைர அட்டிகை இருந்தது. அதன் ஜொலிப்பு விழிகளைக் கூசச் செய்தது. ஓர் அசட்டுச் சிரிப்புடன் அதை ஏற்ற அவள் அவர்களது வேண்டுகோளையும் அப்படியே ஏற்றாள்! எனக்குச் சப்பென்று ஆகியது.

அடுத்து, ஒரு சிறைச்சாலையை அடைந்தேன். ஆய்வாளரின் அறைக் கதவு சாத்தப்பட்டிருந்தது. ஊடுருவி உள்ளே போனேன். அய்யோ! அங்கே கண்டதை நான் எப்படி எழுதுவேன்! ஆனாலும் எழுதித்தானாக வேண்டும். உள்ளே ஒரு பெண்ணை நான்கு காவல்துறை ஊழியர்கள் பலாத்காரம் செய்ய முயன்று கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணின் அழுகையும் கெஞ்சுதலும் யாரையும் இளக்கவில்லை. நான்கு பேருடன் போராடித் தன்னைக் காத்துக்கொள்ள அவளால் இயலப் போவதில்லை என்பது விளங்க, அந்த இழிசெயலைக் காணும் மனமின்றி, ‘ஹே, ராம்! ‘ என்று புலம்பியவாறு, கண்ணீர் மல்க – அதைத் தடுக்க இயலாத மனச்சுமையுடன் – அங்கிருந்து புறப்பட்டேன். கட்டாய நுகர்வைத் தடுத்துப் பெண்களைக் காக்க வேண்டிய கடமை உள்ளவர்களே கற்பழிக்கிறார்களே! என்ன கொடுமை இது! பிற பெண்களிலெல்லாம் தாயின் அம்சத்தைக் கண்டு அவர்களை ‘அம்மா ‘ என்றழைக்கும் இந்தியப் பண்பாடு எங்கே போயிற்று ? ‘ஹே, ராம்! ‘

பின்னர், ஒரு மருத்துவக் கல்லூரிக்குப் போனேன். கல்லூரி முதல்வருக்குமுன்னால் ஓர் இளைஞனும் அவன் தந்தையும் அமர்ந்திருந்தனர். அவர்களது உரையாடல் என்னை அதிரச்செய்தது. அவனை விட அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களிருக்க, அவருடைய மகனுக்கு இடம் வேண்டின், கேட்கிற லஞ்சத்தைக் கொடுக்க வேண்டியதுதானே என்று முதல்வர் வாதாடினார். திறமை குறைந்தவர்கள் பணவலிமையால் மருத்துவர்களாகி மனித உடல்களை அறுத்துச் சிகிச்சை செய்வது பற்றிய கற்பனை என் அடிவயிற்றைக் கலக்க, அங்கிருந்து கிளம்பினேன்.

மதுரையில் இடுப்பில் மட்டுமே துணி சுற்றியிருந்த ஏழைக் குடியானவரைப் பார்த்த குற்ற உணர்வால், நானும் அன்றிலிருந்து அவரைப் போன்றே இடுப்பில் மட்டும் ஆடை யணிய முற்பட்டதால், எனக்கு மதுரை செல்லும் ஆவல் ஏற்பட்டது. நினைத்த மறு கணமே மதுரையில் இருந்தேன். மதுரைப் பக்கத்துக் கிராமங்களைக் காண விரும்பியதால், உடனே ஒரு பட்டிக்காட்டை யடைந்தேன். இந்தியாவின் உயிர்நாடியே கிராமங்கள்தான் என்று சொன்னவனே நான்தானே! …

ஒரு குடிசைக்குள் எட்டிப் பார்த்தேன். ஒரு பெண் பிரசவ வேதனையில்துடித்துக் கொண்டிருந்தாள். அங்கு நிலவிய வறுமை துளியளவு ஈவிரக்க முள்ளவர்களையும்துடிதுடிக்கச் செய்துவிடும். அந்த ஊரில் ஓர் ஆஸ்பத்திரி கூட இல்லையாம். சிக்கலானபிரசவம் என்று பேசிக்கொண்டார்கள். அதனால், அரசு ஆஸ்பத்திரி இருந்த பக்கத்து ஊர்ஒன்றுக்குப் போக முடிவு செய்த அந்தக் குடும்பம் ஒரு கட்டை வண்டியில் புறப்பட்டது. நானும் உடன் சென்றேன். அடியம்மா! என்ன பாதை அது! குண்டும் குழியுமாய்! பேருந்துவசதி யற்ற எண்ணிறந்த கிராமங்கள் இருப்பது அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது. வழியில் எதிர்ப்பட்ட மக்கள் வறுமையின் சின்னங்களாக இருந்தனர்.

‘டவுனை ‘ யடைவதற்கு முன்னால், வழியில் ஓரிடத்தில், ஓர் ஓட்டலுக்கு முன்னால் வண்டி நின்றது. ஓர் ஆணும் ஒரு பெண்ணும் இறங்கிப் போனார்கள். நானும் உடன் சென்றேன். அந்த ஓட்டலில், ‘தீண்டத் தகாதவர்களுக்கு ‘ எனும் அறிவிப்புக் காணப்பட்ட மறைப்பில் குவளைகளில் தேநீர் வாங்கிக்கொண்டார்கள். ஓட்டலுக்குள் எட்டிப் பார்த்தேன். கல்லாவில் இருந்த முதலாளியன் தலைக்கு உயரே சுவரில் எனது பெரிய படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது! என் இதயம் சுக்கல் சுக்கலாயிற்று. கனத்த இதயத்துடன் நான் அவர்களோடு வண்டிக்குத் திரும்பினேன்.

பயணம் தொடர்ந்தது. வலியால் துடித்துக் கொண்டிருந்த பெண் உட்பட எல்லாரும் தேநீர் அருந்தினார்கள். அவள் கணவன் அவள் காதோடு சொன்னான்: ‘பெண்குழந்தை பிறந்தால், கொன்றுவிடலாம். வீண் சுமை. ‘ அதற்கு அந்தப் பெண் முகம் பொத்திஅழுதாள். என் இதயம் தடதடத்தது. பெண் சிசுக்களை அவை பிறந்த வுடனேயே கொன்றுவிடும் வழக்கம் உள்ளவர்கள் என்பது அவர்கள் பேச்சிலிருந்து புரிந்தது. வரதட்சணைக் கொடுமை, பெண் வீட்டாரின் திருமணச் செலவுகள் போன்றவை காரணமாம். 1920-களிலிருந்து என் இறுதி முச்சுவரை நான் நிகழ்த்திய வரதட்சணை எதிர்ப்புப் போர் இன்றளவும் வெற்றி பெறவில்லை! சிறுவர்-சிறுமியர் திருமணமும் ஆங்காங்கு இன்றும் நடக்கின்றன என்று அறிந்தேன் என்னே கொடூரம் இது!

பின்னர் திருவனந்தபுரம் சென்றேன். முதலில் மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்த பள்ளிக்கூடத்துக்குப் போனேன். மாணவர்கள் ‘காப்பி ‘ யடித்துக் கொண்டிருந்தார்கள். மேலாளர் கண்டும் காணாதவராய் தேர்வுக்கூடத்தில் வளைய வந்துகொண்டிருந்தார். காப்பி யடித்தவர்களைப் பிடித்துத் தண்டித்தால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மறுநாளே அந்த மேலாளரை அடித்துப் போட்டு விடுவார்களாம்! ஏன் ? ஒருவர் கொலையே கூடச் செய்யப்பட்ட துண்டாம்! பள்ளியின் வராந்தாவில் நடந்த உரையாடலி லிருந்து தெரிய வந்த செய்தி. விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்கேற்று உயிர் நீத்த பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் பற்றிய நினைவு அப்போது எனக்கு வந்தது. மாணவக்கண்மணிகள் ஏனிப்படி மாறிப் போனார்கள் ?

ஒரு பெருமூச்சை உதிர்த்தபின், நான் கொல்கத்தாவுக்குப் போனேன். அன்னை தெரசாவின் சமூக சேவை மையத்துக்கு நான் சென்ற போது, அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் தொழு நோயாளிகளுக்குச் செய்துகொண்டிருந்த சிகிச்சையையும் பணிவிடைகளையும் பார்த்து உள்ளம் உருகினேன். அன்பின் அடையாளமான அந்தக் காட்சி புண்ணாகிவிட்டிருந்த எனது நெஞ்சுக்கு ஒத்தடம் போல் ஆனது.

நான் கனவு கண்ட இந்தியாவுக்கும், இன்றைய இந்தியாவுக்கு மிடையே புலப்பட்ட இமாலய வேறுபாடு சகிக்க முடியாத துயரத்தில் என்னை ஆழ்த்தியது. அதிர்ச்சியில் என்னை நிலை குலையச் செய்தது. இந்தயா சென்று பார்த்து வர நான் அனுமதி கேட்டபோது, இராமபிரான் வாய்க்குள் சிரித்துக்கொண்டது எதனால் என்பது இப்போது தெள்ளத் தெளிவாயிற்று. யோசித்ததில் ஒன்று விளங்கிற்று.

என்னைப் போற்றி வியந்து என் சொற்படி நடந்து மரியாதை காட்டிய அந்தத் தலைமுறை அழிந்து விட்டது. புதிய தலைமுறைக்கு என்னைப் பற்றித் தெரியவில்லை. நான் விட்டுச் சென்ற செய்திகள் பற்றியோ எதுவுமே தெரியவில்லை.

எனினும், நான் பயணித்த ஊர்களிலெல்லாம் எனக்கு ஆங்காங்கு சிலை வைத்திருந்தார்கள். வேஷதாரிகள்! கண்ணீருடன் நான் இராமபிரானிடம் திரும்பிச்செல்ல முற்பட்டேன். வழியில் எதிர்ப்பட்ட என் மிகப் பெரிய சிலை ஒன்றைத் தகர்க்கும் ஆத்திரம் என்னுள் கனன்றது. ஆனால் உருவிலியான என்னால் அதைச் செய்யமுடியவில்லை.

அதன் பின், போகும் வழியில், ‘இந்தியாவை இனி எவ்வாறு சரி செய்வது ‘ என்று சிந்திக்கலானேன். நான் மீண்டும் இங்கு வந்து பிறந்தால்தான் அது சாத்தியம் என்பது புரிய, நான் கண்ணீருடன் இராமபிரானின் காலடியில் விழுந்தேன்.

‘ஹே, ராம்! முன்பு இந்தியாவை ஆட்டிப் படைத்த காந்தியைக் காட்டிலும் பன் மடங்கு அதிக ஆற்றல் படைத்த காந்தியாக நான் மீண்டும் இந்தியாவில் பிறக்க வேண்டும்! ‘

இந்த எனது கோரிக்கையை இராமபிரான் ஏற்பாரா என்பது தெரியவில்லை….

jothigirija@vsnl.net

Series Navigation

author

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts