மிஸ்கா, என்னைத்தொடர்ந்து வரும்

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

நடேசன்


அவுஸ்திரேலியாவில் வருடத்துக்கு மூவாயிரம்பேர் சாலை விபத்துக்களில் இறக்கிறார்கள். இதை குறைப்பதற்கு அரசாங்கங்கள் பல நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. விக்ரோரிய மாநிலத்தில் சாலை விபத்துக்கள் சமீப காலத்தில் குறைந்துள்ளது மகிழ்ச்சிக்குரிய விடயம்.

சாலை விபத்தில் மனிதர்களுடன் பல உயிரினங்கள் இறக்கின்றன. அவுஸ்திரேலிய நாட்டுப்புறத்தில் கங்காரு, வல்லபி போன்ற காட்டு மிருகங்களும் நகர வீதிகளில் நாய், பூனைகளும் இறக்கின்றன. இவைகளின் உயிர்கள் முக்கியத்துவம் குறைந்தவை என்பதால் புள்ளிவிபரங்கள் இல்லை. நாய், பூனைகளுக்கு கருத்தடை ஒப்பரேசன் நடப்பதால் விபத்துக்களில் இறப்பதும் தற்பொழுது குறைந்துவருகிறது.

சாலை விபத்தில் அடிபட்டு இறந்த நாய் ஒன்றின் காயங்கள் வழியாகவந்த உடல் உறுப்புகளை உள்ளே தள்ளி, தைத்துக்கொண்டிருந்தேன். எனது புதிய நேர்ஸ் ஏமி கண்களை மூடியபடி எனக்கு உதவிசெய்துகொண்டிருந்தாள். காயங்கள் பாரியவை. இரண்டு கண்களும் அவைக்குரிய குழிகளைவிட்டு வெளியே வந்துவிட்டன. இடது பக்கத்து விலாவில் இருந்த காயத்தின்வழி இதயம் வெளிவந்து தொங்கிக்கொண்டிருந்தது. இதயத்தை வெளியே எடுத்துவிட்டு அந்த பகுதியை மூடி தைத்தேன்.

இதயத்தை எடுத்தபோது, என் அருகே நின்ற ஏமி “ஊச் ஸஸ” என்றாள்.

கண்ணை மூடிக்கொண்டு நின்றவள் எப்படி பார்த்தாள்?

“உனது உணர்வுகளை உனக்குள்ளே புதைத்துக்கொள். இதைத்தொழிலாக நாம் செய்கிறோம”;. என்றேன்.

என்னைப்பற்றி என்ன நினைத்தாளோ. ஆனால் அமைதியானாள்.

நான், நாயின் காயங்களை தைத்து முடித்ததும், “இப்ப எப்படி இருக்கிறது?”

“பரவாயில்லை. பார்க்கமுடிகிறது”. என்றாள்.

நாயின் உடலை வெள்ளைத்துணியால் இறுக்கமாக சுத்தி கறுப்பு பிளாஸ்டிக் பொடி பாக்குக்குள் வைத்து மூடினேன்.

சிறிது நேரத்தில் நாயின் உரிமையாளர் வந்தார்.

“தயவுசெய்து பொடி பாக்கில் இருந்து எடுத்து வெள்ளைத்துணியோடு குறைந்தது ஒரு மீட்டர் ஆழத்திலாவது புதைக்கவேண்டும்”.

நன்றியுடன் வாங்கிக்கொண்டு சென்றார்.

இறந்த மனிதர்களின் உடல் உறுப்புகளான மூளை, இதயம், குடல் போன்றவையை எடுத்துவிட்டு வெளி உடலைப் பதப்படுத்துவதுதான் என்பாம் என்று சொல்லப்படுவது. அத்துடன் உடல் உள்ளே உள்ள ஈரத்தை உறிஞ்சுவதற்கு கடுதாசி போன்றவற்றை உள்ளே திணித்து உடலுக்கு உறுதிகொடுப்பார்கள். வெளியே பார்க்கும்போது எதுவும்தெரியாது.

இப்படியான ஒரு செயலைத்தான் நான் செய்தேன். செல்லப்பிராணி இறந்தாலும் அதனது அலங்கோலம் அதை நேசிப்பவர்களுக்கு தெரியாமல் இருக்க செய்தேன்.

மனிதர்களின் மனம், வரலாறுதெரிந்த காலமாக தாம் நேசிக்கும் மனிதர்களை மட்டுமல்ல அவர்கள் நேசிக்கும் செல்லப்பிராணிகளையும் மரணத்தில்கூட அலங்காரமாக பார்க்கவிழைகிறது. டொரண்டோ மியூசியத்தில் பார்த்தேன். எகிப்தியர்கள், மனிதர்களை மட்டுமல்ல அவர்களது செல்லப்பிராணிகளையும்கூட அழகாக மம்மிகளாக்கி இருந்தார்கள்.

இறப்பு என்பது இறுதிப்புள்ளி, நோய்கள் காற்புள்ளிகளாக ஏற்படுகிறது தவிர்க்கமுடியாதது. முதுமையில் அமைதியாக இறப்பது நல்ல சாவு என காலம் காலமாக பேசப்படுகிறது. இப்படியான நோக்கத்திலே மனித நாகரீகம் விஞ்ஞானத்தையும் சமூக நீதியையும் துணைகொண்டு முன்னேறுகிறது. நாகரிகத்தின் உச்சக்கட்டம் என நான் நினைப்பது மனிதர்களும் அவர்கள் நேசிக்கும் உயிர்களும் முதுமையில் அமைதியாக மரணிப்பதுதான். போர்களும் வன்முறையும் எப்பொழுது தவிர்க்கப்படுகிறதோ அப்பொழுதே இந்த நோக்கம் நிறைவேறும்.

நான் தைத்து அலங்காரப்படுத்திய மிஸ்கா என்ற 9 வயது நாயின் மரணம் உண்மையில் பரிதாபகரமானது. இதனது சொந்தக்காரனான திரு, திருமதி தோன்ரன் அவர்களதும் மனத்தை நெருடும் அதிலும் திரு தோன்ரனுக்கு குற்ற உணர்வு பலகாலம் நிழல்போல் தொடரும்.

பல வருடங்களாக எனது கவனிப்பில் இருந்த மிஸ்காவிற்கு இரண்டு வருடத்துக்கு முன்பு மார்பில் விலாப்பகுதியில் கட்டி வந்திருந்தது. அதை வெட்டி அகற்ற முயன்றபோது அந்த கட்டி விலாப்பகுதியை மூடும் தசையில் வந்திருந்தது. தசையுடன் கட்டியைவெட்டி பத்தோலஜிக்கு அனுப்பியபோது புற்றுநோய் என்று உறுதியாகியது. அத்துடன்; அந்தகட்டி மீண்டும் வருவதற்கான சாத்தியம் உண்டு என்று தோன்ரன் குடும்பத்திற்கு தகவல் அனுப்பினேன்.

தசைநாரை வெட்டியதால் மிஸ்காவுக்கு பலகாலமாக அந்த நோ இருந்தது. இதன்பின்பு எனது வைத்தியசாலைக்கு வந்தால் வாசல் அருகே நிற்கும். என்னையும் எனது வைத்தியசாலையைம் வெறுக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

மீண்டும் அந்தக்கட்டி எதிர்பார்த்ததுபோல் இரண்டு வருடத்தில் அதே இடத்தில் வந்தது. மற்றைய புற்றுநோய்போல் பல உறுப்புகளுக்கு பரவாத தன்மை கொண்டதாலும்இ மேலும் மிஸ்காவின் உடல் நலத்தில் வேறு எந்த குறைபாடும் இல்லாததால் மீண்டும் வெட்டி எடுத்தேன். நோவை குறைப்பதற்கு ஊசியும் போட்டேன்.

அன்று மாலை திரு தோன்ரன் எனது பணத்தை கொடுத்துவிட்டு மிஸ்காவை வீட்டுக்கு கொண்டுசெல்லும்போது என்நேர்ஸ் ஏமி “நீங்கள் லீஸ் (நாய் சங்கிலி) கொண்டுவந்தீர்களா” என்றாள்.

“இல்லை. மிஸ்கா, என்னைத்தொடரும்.” என சிரித்தபடி பதிலளித்தார்.

நான் பக்கத்தில் நின்றேன். மிஸ்கா அவரை தொடர்ந்து சென்றது. நான் எனது அறைக்கு சென்றேன்.

சில நிமிட நேரத்தில் ஏமி வந்து “மிஸ்கா ஓடிவிட்டது. இந்த மனிதர் சாலையெங்கும் தேடுகிறார்” என்றாள்.

நானும் எனது பங்கிற்கு சில இடங்களில் தேடினேன்.

திருமதி தோன்ரன் வந்து கணவனை “பொறுப்பில்லாத மனிதர் ” என்று பேசியதும் எனக்கு கேட்டது.

ஏமி, திருமதி தோன்ஸ்ரன் ஆத்திரத்தில் புகைவதாக கூறினாள்.

சிறிது நேரத்தின்பின் மிஸ்காவின் படத்தை கம்பியூட்டரில் அடித்து காணவில்லை சன்மானம் உண்டு என எழுதி எங்களுக்கும் ஒரு பிரதி தந்தார்கள் தோன்ரன் குடும்பத்தினர்.

“எப்படியும் மிஸ்கா நாளை கிடைக்கும்” என நாங்களும் ஆறுதல் அளித்தோம்.

அடுத்தநாள் பன்னிரண்டு மணியளவில் எனது நேர்ஸ் கலி வந்து கூறினாள் கறுத்த ஜக் ரஸ்சல் ரெரியர் நாயொன்று சாலையில் இறந்து கிடப்பதாக தனது தம்பி SMS செய்தான்

அவனைத் தொடர்புகொண்டு சரியான இடத்தை தெரிந்துகொள்ள முடியவில்லை. நானும் கலியுமாக அந்த பகுதிக்குச்சென்று சாலையின் இருபக்கமும் பிரிந்துதேடினோம். கிடைக்கவில்லை. கலி தனது தம்பியை திட்டினாள்.

நான் ஒப்பரேசன் செய்ததும் திரு தோன்;ரன் பணம் சொலுத்தியதும் சேர்ந்து என் மனத்தில் மூடுபனிபோல் கவிந்து ஒரு சோகத்தை ஏற்படுத்தியது.

நான் மதிய உணவுக்கு சென்றுவிட்டாலும் கலி தனது முயற்சியில் மனம் தளராமல் நாயின் சடலத்தை தேடுவதற்கு தனது தாயை அனுப்பினாள்.

சிறிது நேரத்தில் நான் மதிய உணவு அருந்திக்கொண்டிருந்தபோது மீண்டும் தொலைபேசி வந்தது.

“மிஸ்காவின் உடலை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன். உடனே வரவும”;.

அரைமணி நேரத்தில் வைத்தியசாலையில் இருந்தேன்.

கெலி பதற்றத்துடன் “வாழ்க்கையில் முதல்தடவையாக இப்படி வேலைசெய்தேன் உடல் உறுப்புகள் தொங்க ரோட்டுக்கரையில் கிடந்தது. ஆரம்பத்தில் நிட்சயமாக மிஸ்கா என தெரியவில்லை. எனவே உடலை புரட்டி பார்க்கவேண்டி இருந்தது”.

நான் போட்ட தையல் அறுந்து அதற்குள்ளாக இதயம் வந்திருந்தது.

தோன்ரனுக்கு போனில் கூறினேன். “உங்களுக்கு கவலை தரும் செய்தி உள்ளது. மிஸ்கா தெருவிபத்தில் இறந்து தற்போது உடல் எங்களிடம் உள்ளது”.

“நான் வந்து உடலை எடுக்கவா?”

“நீங்கள் உடலை எடுக்காமல்விடுவது நல்லது. உடல் நல்ல நிலையில் இல்லை.”

“என் மனைவியிடம் பேசிவிட்டு உங்களை தொடர்பு கொள்கிறேன்.”

அரைமணி நேரத்தில் திருமதி தோன்றன் பேசினார். “மிஸ்காவின் உடலை எமது வீட்டு காணியில் புதைக்க விரும்புகிறோம். தயவுசெய்து உடலை முடிந்தவரை ஒழுங்காக தரமுடியுமா?” என்றார் விம்மலுடன்.

“நான் முடிந்தவரை செய்கிறேன். ஒருமணி நேரத்தில் வந்து எடுங்கள் என உறுதியளித்தேன்”.


uthayam@optusnet.com.au

Series Navigation

நடேசன்

நடேசன்