மானுடமாகட்டும் பெண்மை

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

திலகபாமா


காற்றுக்குப் பறந்து போகும் காகிதங்கள்
அலங்கரிக்கப் பட்ட உலோகங்கள்
செல்வங்களாய் சொல்லப் பட
பொருள் இழக்கின்றன வார்த்தைகள்
செல்வத்தைக் கொடுத்து
செல்வத்தை மணந்தும்
எப்போதும் கையேந்தல்கள்
பிறந்த வீட்டில்
நான் மகாலட்சுமியாம்
செல்வத்தோடிருந்தும்
நளினங்களைத் தொலைத்து
நான் வீற்றிருப்பது
எரியும் நெருப்பூக்களில்
கைகளில் வரங்களாய் வாய்த்த
தாமரைகளுள்ளும்
நெளியும் பூநாகங்களின்
விச மூச்சுக்களை முரிிக்கும்
அளவிற்கு எனக்குள்ளும் விசம் ஏறிக் கிடக்க
கைகளிலிருந்து கொட்டும் பொற்காசு
இருந்தும் இழந்திருப்பது தவிர்க்க எனக்குள்
தர்க்கப் போராட்டம்
மன அலைகள் கொதித்தெழ
கால் நனைத்து போகும் ஆதிக்க கூட்டம்
எனைப் புரிய
மூச்சடக்கி முத்தெடுக்குமா ?
மணலோடு மோதித்திரும்பும்
அலைகளும் அறியவில்லை
தனக்குள் செல்வமிருப்பதை
பாற்கடலென்றாலும்
பள்ளி கொண்ட பெருமானென்றாலும்
காலடியிலும்,, வெற்றிக்கு பின்னும்
விதி வழி வீழ்ந்து கிடப்பதை விட்டு
வீதி வழி வீசி வரும் தென்றலாய்
என் சூரியப் பயணம்
தன்னை உணரா தாவித்ததும்பும் அலைகள்
மணலோடு மோதி மறைந்தே போக
என்னை உணர முற்பட்ட
தருணத்தில்
வழி வழி வந்த புராதனப் பெட்டியொன்று
இன்று என் கையில்
செல்வமெனத் தரப்பட்டது
இடுப்பில் ஆடிய அழகிய கொத்துச் சாவி
அந்த பெட்டியின் பூட்டிற்கு
சேருமா என்று
என் வரை யாரும் அறிந்திருக்கவில்லை
பூட்டை திறக்க முடியா
சாவிக் கொத்தை
தடவிக் கொண்டிருந்த என்
த;லைமுறையினரிடையே
பூட்டையும் சாவியையும்
தொலைக்கத் துணிந்த
முதல் மனுசி நான் தான்
மீனோடிய நெல்வயலில்
கதிர் விளைந்த மணிகள்
கலயத்துள் இருக்க
பெட்டிக்குள் செல்வமென சிறையிருந்தன
இதுவரை
அச்சத்தோடிருந்த மணிகளை
ஆசை தீரத்தூவுகிறேன்
சேறோடிய என் வயலில்
நெல் கீறி இலை விடுத்து வேர் ஊன்ற
நாணம் கொண்டிருந்த மணிகளை
அவித்து அரைத்து குத்திப் புடைத்து
கொதியில் வைக்க
நாணம்மறந்து சிரிக்கின்றன
என் இன்றைய பசிக்காய்
மடத்தூசிகளோடு இருந்தவற்றை
தூத்திப் புடைக்க
மின்னும் மணிகள்
நாளைய தேவைக்கான சேமிப்பாய்
ஒன்றிலிருந்து
ஒரு நூறு நெல் மணிகள்
பயிராகி வந்து
கை மாறி காசாகின்றன
தந்தை வழிச் சமூகம்
பெண்ணாய் பூட்டிய
புராதனப் பெட்டிக்குள்ளிருந்து
தாயாண்மை சமூகம் நிறுவ
மனுசியாய் எழுந்து
செல்வமென மாறிப் பரவுவேன்
ஊரெல்லாம் கற்கள்
சாபம் தாங்கிக் கிடக்க
உன் கால் வண்ணம்
காட்டவென்றா நான்
பெண்ணாய் மாற
இனி இடறும் கால்களில்
கொட்டும் குருதியில்
கற்கலெல்லாம் பவழமாகட்டும்
முடிச்சு விழுந்துபோன வேர்கள்
அழுகத் துவங்க
பதியனிடத் தயாராகின்றேன்
கிளைகள் பூக்களை மட்டுமல்ல
ஒடித்த இடமிருந்து வேர்களையும்
முகிழ்க்குமென்று
என் வீட்டுக் கொலுவில்
தாமரைகள் தனியே கிடக்கின்றன
கூட்டைச் சுமக்கும் நத்தை வாழ்வு தொலைத்து
வாழ்வை வாழ்வதே திரவியமென
தேடிப் பயனித்த லட்சுமிகளை
செல்வம் தேடி வந்து சேர
மனுசியாய் உணர முடிந்த அந்த நாளொன்றில்
வாழ்த்துச் சொல்லுவேன்
பெண்மை வாழ்கவென்றல்ல
மானுடம் வாழ்கவென்று
*****
mahend-2k@eth.net

Series Navigation