மலாக்கா செட்டிகள் (கட்டுரை தொடர்ச்சி)

This entry is part [part not set] of 25 in the series 20091204_Issue

ஏ. தேவராஜன்


இதற்கிடையே, 19 ஆம் நூற்றாண்டில் ஒப்பந்தக் கூலிகளாய் இழுத்துவரப்பட்டவர்களுக்கும் மலாக்கா செட்டி சமூகத்தவருக்கும் எவ்வித உறவுமில்லை. இவர்கள் ஆற்றில் ஒரு கால்,சேற்றில் ஒரு கால் என்பதைப் போலிராமல் மலாக்காவையே தங்கள் பிறந்த மண்ணாகக் கருதுகின்றனர். நெல் விவசாயம் செய்தபோது இந்துக்களைப்போல் சிறு தெய்வ வழிபாட்டைத் தீவிரமாக நடத்தி வந்தனர். இவ்விடந்தான் இப்போது காஜா பெராங் என்றழைக்கப்படுகிறது. மலாக்கா செட்டிகள் நிறுவிய கோயில்கள் பின்வருமாறு:

பெரிய ஆலயங்கள்:
• சிறீ பொய்யாத விநாயகர் கோவில் ( 1781 )
• சிறீ முத்து மாரியம்மன் ( 1822 )
• கைலாசநாதர் சிவன் ஆலயம் ( 1887 )
• சிறீ அங்காளம்மன் பரமேசுவரி ஆலயம் ( 1888 )
• சிறீ காளியம்மன் ஆலயம் ( 1804 )

சிறிய ஆலயங்கள்:
• லிங்காதரியம்மன்
• அம்மன் ஆலயம்
• தர்மராஜா ஆலயம்
• கட்டையம்மன் ஆலயம்
• ஐயனார் ஆலயம்

இந்த ஆலயங்களை நிர்வகிப்பதற்கு மலாக்கா செட்டிகளிடம் பொருளாதார வலு இல்லாமையால் திரெளபதியம்மன் ஆலயம் சிலோன் தமிழரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.பொய்யாத விநாயகர் கோவிலைச் செல்வச் செழிப்புப் பொருந்திய நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் தாங்கள் நிர்வகிக்க அனுமதி பெற, அதன் பின்னர் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் அக்கோயிலைப் பராமரித்து வருகின்றனர்.ஆனாலும், ஒப்பந்த அடிப்படையில் நோக்குங்கால் இக்கோயில் இன்னமும் மலாக்கா செட்டிகளினுடையதே!

ஆங்கிலேயர்களின் காலத்தில் (1824-1941) செட்டி சமூகத்துக்குத் தனிச் செல்வாக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.மறைந்த தேவநாயகம் செட்டி,லைனா அண்ணாமலை செட்டி,எல்.கனகசபை செட்டி, எம்.டி.பிள்ளை,தி.சொக்கநாதன் பிள்ளை போன்றோர் ஆங்கிலேயரால் கெளரவிக்கப்பட்டவர்களாவர்.

தற்பொழுது வசித்துவரும் மலாக்கா செட்டிமார்கள் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவர்களாவர். ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்த பதின்ம வயதினரின் சமூகம் குறித்த சிந்தனையைப் பிறகு விளக்குகிறேன். என்னுடன் உரையாடிக்கொண்டிருந்த இந்த நான்காவது தலைமுறைக்கு எப்படியும் ஐம்பது வயதைத் தாண்டியிருக்கும். கம்போங் கிலீங்கில்தான் இவரின் முன்னோர் வாழ்ந்து வந்தனர். ‘ கிலீங்’ என்ற சொல்லுக்குப் பல்வேறு வியாக்கியானங்கள் இருந்தபோதும், தற்போது அது தமிழர்களைப் பழிக்கும் பொருட்டுக்காகவே பிற இனத்தவரால் பிரயோகப்படுத்தப்படுகின்றது. அதில் பிரபலமான ஒன்று ‘ பாம்பையும் கிலீங்கையும் கண்டால் முதலில் கிலீங்கைத்தன் அடித்துக் கொல்ல வேண்டும்’! இந்த வாசகத்தின் பின்னணியில் தமிழர் சமூகத்தின் வளர்ச்சியும், பிறருக்கு அவர்கள் மீதிருந்த காழ்ப்புணர்ச்சியும் பொறாமையும் தெரிய வரும்!கால்களில் சலங்கைகளை அணிந்து வணிகம் செய்தமையாலும் ( கிலீங் !கிலீங்! என்ற ஒசை), ‘கலிங்’கப்பட்டணத்திலிருந்து வந்தமையாலும் இச்சமூகத்துக்கு இப்பெயர் தோன்றியதை இந்நாட்டின் வரலாறு கமுக்கமாய் மறைத்துவைத்திருக்கிறது! Kain Pelekat எனப்படும் மலாய் சமூகத்தவரின் பாரம்பரிய உடைகூட இவர்களின் வாயிலாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.மலாய் மொழி அகரமுதலியில் கிலீங் என்ற சொல்லுக்கு இவ்வகை உடையணிந்த இசுலாமியர்கள் என்றே வளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.14 ஆம் நூற்றாண்டில் இக்கிராமம் மலாக்கா துறைமுகத்தையொட்டி அமைந்திருந்தமையால் இவர்கள் வணிகத்தில் முழு வீச்சுடன் ஈடுபட்டிருக்கலாம் என்பதைத் தாராளமாக நம்பலாம்.மதிநுட்பம்,உழைப்பு,செல்வம் ஆகிய மூன்றும் இருந்தமையால் உள்ளூர்ப் பெண்கள் துணிந்து இவர்களைத் தங்கள் வாழ்க்கைத் துணைகளாக ஏற்றுக்கொண்டனர். இந்த ஆண்மக்கள் தென்மேற்குப் பருவக் காற்று (மே-செப்டம்பர்)வீசும் வரை மலாக்காவில் தங்கள் மனைவியரோடு தங்கிவிட்டு, காற்று ஒய்ந்தபின் மீண்டும் கடல் வாணிபம் செய்யப் புறப்பட்டனர். நமது மரபின்படி, ஆண்கள்தான் பொருளீட்டச் செல்ல வேண்டும். இந்தப் பிரிவால் அவர்களுக்குக் வாய்த்த குறுகிய காலத்தில் தமிழைத் தங்கள் குடும்பத்தாருக்குக் கற்றுத் தர வாய்ப்பின்றிப் போனது. ஐதீக மற்றும் கலாச்சாரக் கூறுகளை மட்டும் விட்டுச் செல்ல அவை கொடிபோல் வழிவழியாய்ப் படர்ந்தன;மொழியோ மறக்கப்பட்டது! அப்படிச் சென்றவர்களுள் பலர் திரும்பி வரமுடியாமல் போயிருக்கலாம் அல்லது கடல் சீற்றத்துக்குப் பலியாகியுமிருக்கலாம். மலாக்கா நீரிணையிலும் இவர்களின் கப்பல்கள் சில மூழ்கியுள்ளன. 1990 களின் பிற்பகுதியில், நகர விரிவாக்கத்திற்காக மலாக்கா கடற்கரையைத் தூர்த்தபோது மண்வாரி இயந்திரங்கள் தோண்டிய மணலில் இந்தியத் துணைக் கண்டத்தின் குறிப்பாகத் தமிழகத்துப் புராதன பொருட்களும் சில சிலைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ‘சில’ இப்பொழுது காஜா பெராங்கில் (காஞ்சிபுரம்) உள்ள மலாக்கா செட்டி தொல்பொருட்காட்சிச் சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

14 ஆம் நூற்றாண்டில் மலாக்காவுக்குப் பரமேசுவரா என்ற இந்து மன்னன் பெயர் சூட்டியது உண்மையாயினும், இதைக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாக மாற்றிய பெருமை மலாக்கா செட்டிமார்களையே சாரும். மலாக்கா அரண்மனையில் ‘Dato Bendahara’ போன்ற பெரும்பதவிகளில் இடம்பெற்றதோடு,மீனவ கிராமமாக இருந்த மலாக்காவை வணிக விருத்தி செய்து அளப்பரிய பங்கையாற்றியுள்ளனர். மலாய் இலக்கிய நூலான ‘Sejarah Melayu’ வில் இவர்கள் வசித்த கம்போங் கிலீங் என்ற கிராமம் பரபரப்பான வணிகத்தில் இயங்கியதைக் குறிப்பிட்டுள்ளது.1424 ஆம் ஆண்டு பரமேசுவரா மன்னன் ,பாசாய் (வட சுமத்திரா ) இசுலாமிய இளவரசியை மணமுடித்த பின்பு ‘Sultan Iskandar Shah’ எனும் பெயரையேற்க,மலாக்கா வாழ்மக்களும் இசுலாத்திற்கு மாறியபோது மலாக்கா செட்டிமார்களில் சிலரும் மதம் மாறினர் என்பதை மறுப்பதற்கில்லை. எஞ்சிய சிலரே இந்து பண்பாட்டில் உறுதிப்பாட்டுடன் இருந்தனர். அவர்களின் வழித்தோன்றல்கள்தான் இன்றிருக்கும் மலாக்கா செட்டிகள்! கூடக் குறைவாகத் தற்போது 50 குடும்பங்கள்தான் இருக்கின்றன.

இதே இனக்கலப்புச் சூழல்தான் (assimilation) அதே காலக்கட்டத்தில் மலேசியாவில் குடியேறிய சீன சமூகத்துக்கும் நேர்ந்தது. பண்பாட்டில் சீனத்தையும் மொழிப் பயன்பாட்டில் செட்டிகள் போல் மலாய் மொழியையும் தொடர்பு மொழியாகவே புழக்கத்தில் கொண்டுவந்துள்ளனர் சீன வழித்தோன்றல்கள். இச்சமூகத்தவரை ஆண்களை ‘Baba’ என்றும் பெண்களை ‘Nyonya’ என்றும் அழைக்கப்பட்டு வருகின்றனர். தனித்துவமிக்க இவ்விரு சமூகங்களும் மலாக்காவைத் தவிர மலேசியாவின் பிற மாநிலங்களில் காணவே முடியாது. மலேசியாவின் பழைய சமூகம் என்று அங்கீகரிக்கப்பட்டிருப்பினும், இவர்களுக்குப் பூமி புத்ரா (மண்ணின் மைந்தர்)என்ற அந்தச்து இன்னமும் வழங்கப்படாமல் இரண்டாந்தர குடிகளாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். இசுலாம் சமயம் கீழை நாடுகளுக்கு வருவதற்கு முன்பே இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து மண்ணை மேம்படுத்தியிருப்பினும் இவ்விரு சமூகங்களும் மண்ணின் மைந்தர்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.அதற்காகவே பல காலமாக அரசியல் ரீதியாகவும் அமைதி வழியிலும் போராடி வருகின்றனர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இவர்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதில்லை.அண்மைய காலத்தில் சிறு அளவிலான மாற்றம் அடைந்துள்ளதையும் மறுக்க முடியாது.மலாக்கா செட்டிகளைப் பொறுத்தமட்டில் மொழியைத் தவிர அவர்களின் பெயர்களும் சமய சடங்குகளும் விழாக்களும் இந்து முறைப்படியும் தமிழ்ப் பெயர்களையும் கொண்டிருப்பதால் இந்தியர்களாகவே சுட்டப்படுகின்றனர். இந்துக்கள் கொண்டாடும் அனைத்துப் பண்டிகைகளையும் விமரிசையாக் கொண்டாடி வருகின்றனர்.தாய்மொழி மலாய் மொழிதானென்றாலும் இந்து சமயத்தவர் என்ற ஒரே காரணத்துக்காக இவர்கள் கவனத்திற்குரியவர்களற்றதாகிவிட்டார்களோ என்னவோ? எனவே, இவர்களுக்குச் சிறப்புச் சலுகை வழங்கப்படுவது முறையல்ல என்பது அரசின் வாதம்.தொடக்கக் காலத்தில் வணிகர்களாகத் திகழ்ந்தாலும் காலவெள்ளத்தில் அச்சிறப்பையெல்லாம் இழந்து சராசரி தொழிலிலும் குறைந்த வருமானத்திலுமே இவர்களின் இன்றைய வாழ்க்கைப் படகு நகர்கிறது. நன்கு படித்தவர்கள் தொழில் காரணமாக நாட்டின் பெருநகரங்களில் இடம்பெயர வேண்டிய கட்டாயத்திற்கு இலக்காகியுள்ளனர். மத்தளத்தின் இரு பக்க அடி போல்தான் ஐந்து நூற்றாண்டுகளாக இவர்களின் இருத்தல் இந்நாட்டில்!

இச்செட்டிச் சமூகத்தின் பெரும்பாலோர் வெளிப்பார்வைக்கு ( தோலின் நிறம் ) மலாய்க்கார, சீன கலப்பைக் கொண்டவர்கள் போல் தோற்றமளிப்பர்.முதியவர்கள் மலாய்க்காரர் சார்ந்த உடைகளைத்தான் அணிகின்றனர். இவர்களின் முதல் தலைமுறையைப் பார்ப்பதற்கு அசல் மலாய்க்காரர்களைப் போலவெ அனைத்திலும் தோற்றமளித்தனர். இன்றுள்ள இளவயது பெண்கள் அவ்வப்பொழுது சேலை அணிவதையும் பார்க்கமுடிகிறது. மலாய் மொழியைத் தங்கள் தாய்மொழியாகவும் இந்து சமயத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாகவும் இரு கண்களாய்க் கொண்டுள்ளனர். இந்த இரண்டு கூறுகளையும் விட்டுக் கொடுக்க இவர்கள் தயாராயில்லை. இதுதான் இந்தச் சமூகத்தின் அழுத்தந்திருத்தமான அடையாளம் ! இந்த மரபை உடைக்கும் திருமணத்தையும் மதமாற்றுச் சூழலையும் எதுவாயினும் ஒருபோதும் இவர்கள் அனுமதிப்பதில்லை.

பதினாறு வயது மதிக்கத்தக்க ஜீவனேசுவரன் மற்றும் பிரவீன் ஆகிய இருவரையும் காஜா பெராங்கில் உள்ள செட்டி கிராமத்தில் அவர்களின் இல்லத்திலேயே சந்திக்க நேர்ந்தது. வீட்டின் அமைப்பு முறை மலாய்க்காரர்களின் வீட்டை நினைவுபடுத்தியது.வாயிலில் தெய்வப் படமும் தோரணங்களும் காட்சி தந்தன. மலாயிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே உரையாடியபோதும் அவர்களின் கைப்பேசியில் தமிழிசையும் தமிழ்ப்பாடல்கள் மட்டுமே ஒலிக்கின்றன. அவற்றின் பொருள் கொஞ்சம் தெரியும் என்றனர். இருவருமே மலாய்க்கார சமூகம் பேசுகின்ற ஒலி உச்சரிப்பு, பொழிப்பு முறைகளையே கையாளுகின்றனர். பெற்றோரிடமும் அப்படித்தான் அளவளாவுகின்றனர். சமையல் வகையறாக்களில் இந்திய-மலாய் சமூகத்தவரின் ஆதிக்கமிருப்பினும் நம்மைப்போல சில வகை ‘புலாலை’ முற்றிலும் மறுக்கின்றனர். தலையில் அணிகின்ற ‘Kopiah” கூட மலாய்க்காரர்களைப் போலிருந்தாலும் இந்திய முப்பாட்டன் பயன்படுத்திய தனித்துவமிக்க அடையாளம் அதில் பளிச்சிடுகிறது. முன்னொரு காலத்தில் வணிகராய் இங்கு வந்திறங்கியபோது தலையில் பெரியதொரு துவாலைத் துண்டை முக்கோண வடிவைப்பில் மடித்து அணிந்து கொண்டு வேலை செய்வார்களாம். அதுவே காலப்போக்கில் அவர்களின் அடையாளமாய் நிலைத்துவிட்டது. இந்து சமய நெறி ஆழமாக வந்தடையவும், தேவாரத் திருவாசகத்தைத் தடுமாற்றமின்றி உச்சரிக்கவும் வார இறுதியில் இங்குள்ள Dato Cha Char எனும் அம்மன் ஆலயத்தில் தமிழாசிரியரைக் கொண்டு தமிழ் கற்பிக்கப்படுகிறது. இந்து சமயத்தை ஆழமாகக் கற்க வேண்டியே அவர்கள் தமிழைக் கற்று வருகின்றனர். வீட்டில் தமிழ் மொழி புழக்கமின்றி மொழியின் சரளம் எவ்வாறு கைக்கூடும் என்பது எனக்குள் கேள்வி எழுந்தது. இதற்குப் பதிலுரைக்க யத்தனமடைந்தனர். ‘இதுதான் எங்களின் அடையாளம். மற்றவர்கள் எண்ணுவதுபோல் நாங்கள் முழுக்க முழுக்கத் தமிழர்கள் அல்லர். எங்களைத் தமிழராகப் பார்க்காதீர்கள்.அப்பாவின் வழி எங்கள் முதல் தாத்தா, தமிழர்தான். ஆனால், எங்கள் கொள்ளுப் பாட்டி முதல், இன்றைய அம்மா வரை யாரும் தமிழரல்லரே!அவர்கள் தமிழையே பேசியதில்லை! இம்மண்ணைச் சேர்ந்த பெண்கள்!மேலும்,அவர்கள் இசுலாத்திற்கு முந்திய மலாய்க்காரப் பெண்கள், ஜாவானியப் பெண்கள், சீனப் பெண்கள்,பாத்தாக் பெண்கள்தானே? இப்படியிருக்க எங்ஙனம் தமிழ் எங்களுக்குத் தாய்மொழியாக இருக்க முடியும்? தமிழகத்திலும் எங்களுக்கு இரத்த உறவுடையோர் இருப்பதை எப்படி அடையாளம் காண்பது? ஆனாலும்,பிற மொழிகளைவிட தமிழை அதிகமாகவே நேசிக்கிறோம்! ஆனால், தலைவர்கள் சிலர் எங்களுக்குத் தமிழ் மொழிப் பற்றில்லை என்று கோடி காட்டியபடி வரலாறு தெரியாமல் பேசி வருவது வேதனையளிக்கிறது! நாங்கள் தனித்து நின்று வாழ்வை அடையாளப்படுத்துவது தவறா?’ எனக் கேட்கின்றனர் இந்த மூன்றாம் படிவ இளைஞர்கள் இருவரும். எதிர்காலத்தில் காஜா பெராங் கிராமத்தை விரிவாக்கம் செய்து தமது செட்டி சமூகத்தின் இருத்தலை உறுதிபடுத்த அரசிடம் முறையாகக் கோரிக்கை வைத்து அதை எப்படியும் நிறைவேற்றப்போவதாகத் தீர்க்கமுடன் கூறினார் இத்தலைமுறையைச் சேர்ந்த ஜீவனேசுவரன். எந்தவொரு சமூகமும் தாம் குறுகிப் போவதையுணரும்பொழுதுதான், பெரிய பெரிய இலட்சியங்கள் கிளர்ந்தெழும் ? இன்று மலாக்கா செட்டிக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கிற அச்சம், நாளை…?

ஜீவனேசுவரனின் அப்பா திரு S.K.பிள்ளை ,அம்மாவோ ‘Nyonya’ சமூகத்தைச் சார்ந்தவர். நமக்குக் காணக் கிடைக்காத பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய அரிய கலைப்பொருட்களைக் கண்ணாடிப் பேழையில் கண்போல பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். இவை தங்கள் மூதாதையருடையவை என்று பெருமிதம் பொங்கக் கூறினார். நம்மவர் வழக்கில் இருந்த வெற்றிலை பாக்கு இடிக்கும் கருவி போன்ற சில கருவிகள் இன்று மலாய்க்காரச் சமூகத்தில் புழக்கத்தில் உள்ளன என்பது வேறு விஷயம்!

இவர்களின் சுவடுகள் குறித்த சேகரிப்புகள் காஜா பெராங் சாலையில் அமைந்துள்ள ‘மலாக்கா செட்டி தொல்பொருட்காட்சிச் சாலையில்’ காணலாம். அங்குக் காசி சிவ மகாராணி என்பவர் என்னை வரவேற்றுத் தமிழில் உரையாற்றினார். இவரது அப்பா தமிழர் என்றும் அம்மா மலாக்கா செட்டி சமூகத்தவரைச் சேர்ந்தவரென்றும், இங்குள்ள குபு தமிழ்ப்பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றதாகவும் கூறினார். இப்பொருட்காட்சிச் சாலையில் இவர்களின் வரலாற்றை விட, கலை,கலாச்சார,பண்பாட்டுக் கூறுகளைக் காட்டும் பழைமை வாய்ந்த படங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. இவர்களைப் பிரதிநிதித்த தலைவர்களின் உருவத் தோற்றங்கள் கொண்ட படங்களைப் பார்த்தால் இவர்கள் புறப்பட்ட புள்ளிக்கும் தமிழர்களுக்கும் ஒட்டு உறவே இல்லையோ என்பதை உணர்த்தும். அப்படியொரு வேறுபாடு உருவத்திலும் உடையிலும்!

நான் அவ்விடத்தைவிட்டு அகன்றபோது எனக்குள் சித்தப்பிரம்மை பிடித்தது மாதிரி இனம்புரியாத மையமொன்று அவர்களின்பால் ஒட்டிக்கொண்டேயிருந்தது.
ovilak@yahoo.com

Series Navigation

ஏ.தேவராஜன்

ஏ.தேவராஜன்