This entry is in the series 20091204_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்


புரிவதே இல்லை இந்தக் கதைகள்

குளத்தில் சங்கமித்த
மழைத் துளியின் வரலாறு
மீன்களுக்குப் புரியும்

ஆறுவண்ணமிழந்த
நீலவானின் புலம்பல்
முகில்களுக்குப் புரியும்

புரதங்கள் சேர்த்த
மண்ணின் கதையெலாம்
வேர்களுக்குப் புரியும்

கோடிக் கோடி செல்களுக்கு
ரத்தம் சோறூட்டும் ரகசியம்
நரம்புகளுக்குப் புரியும்

பூக்கள்
தேன் சேர்த்த பாடெல்லாம்
பூச்சிகளுக்குப் புரியும்

சுவரான கதையை
மண்ணும் மரமும் பேசுவது
பல்லிகளுக்குப் புரியும்

எல்லாம் புரிந்த
இயற்கைக்கு
சொல்லத் தெரிவதில்லை

சொல்லத் தெரிந்த
நமக்கோ இந்தக் கதைகள்
புரிவதே யில்லை

Series Navigation