மலாக்கா செட்டிகள்

This entry is part [part not set] of 25 in the series 20091204_Issue

ஏ.தேவராஜன்


மலாக்கா மாநிலத்தில் வாழ்ந்துகொண்டே என்னைப் பற்றியும் என் வாழ்வைப் பற்றியுமே சிந்தித்த சராசரியிலும் கீழான மனிதன் நான். என்கூடவே முப்பாட்டன் காலந்தொட்டு வாழ்வை நகர்த்தி வந்த தமிழர் மரபில் வந்த ஒரு சமூகத்தைப் பற்றி கடுகளவாவது தெரிந்து வைத்திருந்தேனா? என்ன வகை மனிதன் நான்! அதனால், மோட்டார் சைக்கிளை முடுக்கி நாற்பது நிமிடங்களில் மலாக்கா பட்டணத்தை அடைந்தேன். அந்தச் சமூகம் வசிக்கின்ற பகுதி ஏற்கெனவே தெரிந்திருந்தாலும், அது குறித்த முன்னறிவோடு செல்லலாம் என்று தீர்மானித்திருத்து, வணிகப் பெருமகனார் டத்தோ S.K.R.M துரைராஜ் அவர்களை முதலில் சந்திக்கலாம் என்று எண்ணியிருந்தேன். இதற்குச் சிறப்புக் காரணமும் உண்டு.பொதுவாகவே டத்தோ S.K.R.M. துரைராஜ் அவர்கள் நிறைகுடமாயினும்,எல்லா இலக்கிய நிகழ்வுகளிலும் தன்னடக்கமாய்ப் பின்னிருக்கையில் அமர்ந்திருப்பதையே விரும்பும் பண்பினர். அதனால், அவரில் ஒர் ஈடுபாடு இருந்தது.அவர் அச்சமயம் வேறொரு காரியம் பொருட்டு வெளியில் சென்று திரும்பும் வரை, அவர் மகன்தான் சிறு விளக்கம் கொடுத்தார். பிற்பாடு அவர் வந்து சேர்ந்ததும், பல பயனான விவரங்கள் எனக்குக் கிடைத்தன.வேறு யாராவது இது பற்றிப் பேசுவார்களா என வினவினேன். லோரோங் ஹங் ஜெபாட்டுக்குச் சென்றால் அங்கு வழக்கறிஞர் அருணைச் சந்திக்கலாம் என்றார். இந்த நகைக்கடையிலிருந்து பொடிநடையாக நடந்து சென்றால் ஐந்தே நிமிடங்களில் அடைந்துவிடலாம் என்றார். அவரது பேச்சைக் கேட்டபின்பு மோட்டார் சைக்கிளை நன்கு பூட்டிவிட்டு நடந்தேன்.( ஏற்கெனவே PCY 1074 காணாமால் போயிருந்த பட்டறிவு)

அது லோரோங் ஹங் ஜெபாட் என்பதாகப் பெயர். 64 ஆம் எண் கொண்ட கடைவீதியில்தான் வழக்கறிஞர் அருணின் அலுவலகம் உள்ளது. அதனை அடைவதற்கு முன் மலாக்கா நதியைப் பாலத்தின் மூலம் கடந்து செட்டியார் இருப்பிடங்களைத் தாண்டிச் சென்றாக வேண்டும். அது நாம் வழக்கமாக வசிக்கின்ற வீட்டின் அமைப்பைப் போல் தெரியாது என்பதைத் திறந்து கிடந்த ஒரு கடை வீட்டைப் பார்த்ததும் அறிந்து கொண்டேன்.வாசலில் நின்று தெரு நாய் ஒன்று எட்டிப்பார்ப்பது போல தலையை உள்ளிட்டு ‘ வணக்கம் ஐயா’ என்றேன். கல்லாப்பெட்டியைப் போல அமைந்த நீண்ட வாங்கிற்கு அருகில் வெள்ளையும் சள்ளையுமாய் வேட்டி சட்டையுடன் அறுபது வயதைத் தாண்டிய முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். வேறு யாரையுமே காணேன்.வணக்கம் என்பது மரியாதைக் குறைவான வார்த்தையா என்று யோசிப்பதற்குள் “ யாருமில்ல…வெளிய போ!” என்று சூடான வார்த்தைப் பிரயோகம் என் ஆர்வத்தைத் தடுமாறச் செய்தது. “ நான் திருடன் இல்லை ஐயா!” என்றேன். அவர் திரும்பத் திரும்ப மனனம் செய்ததைப் போல ஒப்புவித்தார். உள்ளே அனுமதிக்காவிட்டால் என்ன, பேசக்கூடவா முடியாது? எனக்குள் கோபம் பிரவாகமெடுத்தது- நான் சராசரி மனிதன் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன் அல்லவா?“ கதவை நல்லா பூட்டிக்குங்க. நான் ரொம்ப மோசமானவன்!” என்று சொல்லிவிட்டு அதே வரிசையில் இன்னொரு கடைக்குத் தாவ, அங்கு வெகு நேரமாய் என்னையே பார்த்துக் கொண்டிருந்த அறுபது வயதைத் தாண்டிய அம்மா சிரித்தபடி அமர்ந்திருந்தார். “ என்ன தம்பி செய்றது? எங்கே பார்த்தாலும் திருடு அது இதுன்னு நடக்குது. இன்னிக்கு நேத்திக்கு இல்ல…!ஒங்களப் பாத்தாலும் அப்படித்தான் இருக்கு!அதனாலதான் பயம்” என்றார். நானும் அப்படித்தான் வழிப்போக்கன் மாதிரி தெரிந்தேன்.அப்பாடா! இவராவது பேசினாரே என்று ஆசுவாசப்பட்டேன். இவரது பெயர் வைரத்தாயம்மாள் @ வள்ளிக்கண்ணு-வயது 68. இந்தத் தெரு 100 ஆண்டுகளுக்கு முன்பு செட்டித் தெரு என்ற பெயர்தான் இருந்ததாம். டச்சுக்காரர் ஆண்ட காலத்தில் ( 1641-1824 ) மூங்கில் காடுகளாக இருந்த இப்பகுதியை அழித்துப் பலகையாலும் அத்தாப்பு ஒலைகளாலும் தமிழர்கள்தான் வீடுகளைக் கட்டினார்களாம். இத்தெருவைச் சுற்றியுள்ள கிராமத்துக்குக் கம்போங் கிலீங் @ மலாக்கா செட்டி கிராமம் என்ற பெயர் அப்பொழுது வழக்கில் இருந்ததை இன்னமும் வாழ்ந்து வருகிற வயதானவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றார். அந்த அம்மா சிறிய அளவிலான குளிர்பானக் கடையைப் பராமரித்து வருகிறார். ஐந்து நிமிடங்கள் பேசினாலும் அன்போடு பேசியதால் இரண்டு வெள்ளி கொடுத்துச் சில்லென்று குடித்துவிட்டு வழக்கறிஞர் அருணின் அலுவலகத்திற்குச் சென்றேன். பக்கம்தான்!அசப்போக்கில் பார்த்தால் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் போல தோற்றமளித்தார். காரைக்குடியிலிருந்து வந்து குடியேறி இருபது ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் தற்போது தந்தையின் நிர்வாகத்தைக் கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டார். அமர்ந்து பேசுவதற்குச் செந்தணப்பு வசதி கொண்ட அறையை எனக்காக ஒதுக்கித் தந்தபொழுது அங்குப் பேழை பேழையாக நிரம்பிக் கிடந்த நீதிசார் புத்தகங்களைக் கண்டு துணுக்குற்றேன்.சின்ன பையன் போலிராமல் மரியாதையாகப் பேசி முறையாகத் தகவல்களைத் திரட்டலாம் என்று முற்பட்டபோது முற்பகல் பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. நான் மலாக்கா செட்டி சமூகத்தைக் குறித்துத் தெரிந்து கொள்ளத்தான் வந்தேன் என்றாலும் நாட்டுக்கோட்டை செட்டியாரைப் பற்றியும் தெரிந்து கொள்வதும் நலம் என்றேன். மலாக்கா செட்டியைப் பற்றி தனக்கு முழுமையாகத் தெரியாதெனவும் நாட்டுக்கோட்டைச் செட்டியாரைப் பற்றி வேண்டுமானால் சொல்கிறேன் என்றார். இரண்டு வகை ‘ செட்டிகளைத்’ தெரிந்துவைத்திருத்தல் நன்மையென்று கருதி காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டேன். அப்போது அவர் கூறிய விவரங்கள் பின்வருமாறு:

• நாட்டுக்கோட்டைச் செட்டியாரும் ( நகரத்தார் ) மலாக்கா செட்டி சமூகமும் ஒன்றல்ல.
• நாட்டுக்கோட்டைச் செட்டியாரின் தாய்மொழி / பேச்சுமொழி தமிழே.
• நாட்டுக்கோட்டைச் செட்டியார் இங்குக் குடியேறி தோராயமாக 100-150 ஆண்டுகள் இருக்கும்.
• இவர்கள் பூம்புகார் வணிகர் மரபைச் சேர்ந்தவரென்றும், பூம்புகார் பெரும்பாலும் கடற்கோளுக்கு இரையாகி வந்தமையால் அவர்கள் இடம் பெயர்ந்து இராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை,செட்டி நாடு போன்ற பகுதிகளில் வாழ்ந்து வந்த சமூகமாகும்.
• சந்யாசி ஆண்டவர் ஜீவசமாதி அடைந்த மலாக்கா சந்யாசி மலை கோயில் நாட்டுக்கோட்டையாருடையது. இது போல பல கோயில்கள் முழுக்க முழுக்கச் சுய முதலீட்டைக் கொண்டு நிறுவப்பட்டவை.
• ஐதீக வழிபாட்டில் முழு நம்பிக்கையுடையவர்கள்.
• நாட்டுக்கோட்டையார் என்பது வணிகத் தொடர்பு சார்ந்த தமிழ் மக்களின் ஒரு வகைப் பிரிவு (குலம்).
• முன்னொரு காலத்தில் மலாக்கா பட்டினத்தில் மட்டும் 100 க்கும் குறையாத வணிகக் கடைகளை வைத்திருந்தவர்கள்; பெருஞ்செல்வந்தர்கள்.
• மலாக்காவைத் தவிர்த்து தென்கிழக்காசிய நாடுகளிலும் மலாயாவின் பல மாநிலங்களிலும் அழுத்தமாகக் கால் பதித்தவர்கள்.
• யாரிடமும் கையேந்தாத சுய உழைப்பை மட்டும் நம்பியவர்கள்.
• மலாக்கா மாநிலத்தில் மட்டும் 40,000 ஏக்கர் நிலபரப்பைப் பெற்றிருந்தவர்கள்.
• ஏராளமான தோட்டங்களுக்கு உரிமயாளர்கள்.
• பர்மா,கம்போடியா, ( மலாயா உட்பட- மே 1969 இனக் கலவரம்) போன்ற தேசங்களில் குடியுரிமைப் பிரச்சனையை எதிநோக்கி சொத்துகளை சீனரிடமும் அந்தந்தத் தேசத்தின் செல்வரிடமும் விற்றுவிட்டுத் திரும்பவும் தமிழகத்திற்குத் திரும்பியவர்.
• கம்யூனிச்ட் மற்றும் சீனர்களின் அச்சுறுத்தல் / மிரட்டலால் உயிருக்குப் பாதுகாப்பின்றிப் பரிதவித்தவர்கள்.
• விசா பெறுவதில் சிக்கலை எதிர்நோக்கியவர்கள்.
• 1920 களில் தொடங்கி பதினைந்து வருடங்களாக அச்சகத்தின் மூலம் ‘தமிழ்க் கொடி’ என்ற வாரப் பத்திரிகையை ஒ.எ.ஆர். அருணாச்சலம் செட்டியார் என்பாரைக் கொண்டு தமிழ்ப்பணி செய்தவர்கள்.( தமிழ் நேசன் பத்திரிகையும் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் ஆரம்பித்ததே)
• நேதாஜியின் தீவிர ஆதரவாளர்கள்.
• 15 ஆண்டுகளுக்கு முன் கம்பன் விழாவை மலாக்காவில் பிரமாண்டமாய் நடத்தி அடிப்பொடி சா.கணேசன், தமிழ்க் கடல் இராய.சொக்கலிங்கம்.மு.பா. இரத்தினச் செட்டியார் போன்ற தமிழக அறிஞர் பெருமக்களின் இலக்கியப் பேருரையை நிகழ்த்தி தமிழ்ப் பணியைச் செய்தவர்கள்.
• இந்தத் தெருவுக்கு ‘நாட்டுக்கோட்டையார் தெரு’ என்ற பெயரைக் கொண்டு வந்ததோடு பல நகரங்களில் அவர்கள் கட்டிய கட்டிடங்கள் பழைமை இன்றளவும் உள்ளன .
( இப்பெயர் தற்பொழுது வழக்கில் இல்லை)
• தற்போது புதிய தலைமுறையின் மனமாற்றமும், நவீன கல்வியின் வாயிலாகக் குலத் தொழில் மாற்றத்தையும் எதிர்நோக்கி பழைய மிடுக்கைப் பையப் பைய இழந்து வருபவர்கள்.
• இன்று வங்கிக் கடன் பெறுவதில் பிற சமூகத்தைவிட சவாலை எதிநோக்குகிறவர்கள்.

வழக்கறிஞர் அருண், மலாக்கா செட்டி சமூகத்தைப் பற்றித் தெரிந்தகொள்ள ஒருவரை முன்மொழிந்தார். அவர்தான் டத்தோ S.K.அருணாசலம் பிள்ளை.அவரை அணுகினால் மலாக்கா செட்டி சமூகத்தவர் பற்றி நிறைய தகவல்கள் தருவார் என்று சகோதர உணர்வுடன் கூறி வழி காட்டினார். தொடக்கத்தில் கண்ட கல்லாப்பெட்டிக்காரருக்கும் இவருக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள். முன்னவர் பயந்து வாழ்ந்த சமூகத்தின் எச்சம்! அதற்குக் காரணம் நிச்சயம் அவரல்ல.

மற்றொரு குறுக்குத் தெருவான ஜாலான் துக்காங் பெசியில் டத்தோ S.K.அருணாசலம் என்பவர் செலவுக் கடை வைத்திருப்பதை அறிந்தேன். அந்தக் கடையை ஒட்டியபடி மலாக்கா செட்டி சமூகத்தவர் 1781- இல் எழுப்பிய சிறீ பொய்யாத விநாயகமூர்த்தி கோவில் தென்பட்டது. தென்கிழக்காசியாவின் பழமையான இந்துக் கோவில் இதுவாகும்.பிற்காலத்தில் அக்கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை நாட்டுக் கோட்டைச் செட்டியாரிடம் வழங்கப்பட்டுவிட்டதாக அறிந்தேன். ஆயினும், அக்கோயிலில் இன்னமும் மலாக்கா செட்டி சமூகத்தவரின் பெயர்களே கோயிலின் முகப்பில் பொறிக்கப்பட்டுள்ளது.

டத்தோ S.K.அருணாசலம் என்பவர் நெற்றியில் குங்குமத்தோடு தமிழரைப் போலவே காணப்பட்டார். தொடக்கத்தில் தமிழிலேயே உரையாடினேன். மொழி புரியாத காரணத்தால் ‘apa’ ( என்ன ?) என்று என்னிடமே மலாயிலும் ஆங்கிலத்திலும் உரையாடத் தொடங்கினார். பின்பு, நான் வந்த நோக்கத்தை ஆங்கிலத்தில் சொன்னபோது கடுகடுப்புடனும் வேண்டா வெறுப்புடனுமே சந்திப்புக்குச் சம்மதித்தார்.(Kamu mencari duit dengan membuat liputan tentang masyarakat kami, ya?) எங்களைப் பற்றிய தகவலைத் திரட்டி பணம் தேடுகிறீர்களா? என்று சொன்னபோது பதிலுக்கு நானும், ‘ இது என் தொழிலல்ல, பல்கலைக்கழகத்தின் ஆய்வேட்டுக்காகவும் சுயநலத்துக்காகவும் உங்கள் காலடியில் வந்து விழுபவனல்லன், இதற்காக மழையையும் பொருட்படுத்தாது வீதியில் அலைய வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது. ஒரு புனிதமான பதிவு நிமித்தம் வந்துள்ளேன்’ என்று தீர்க்கமாகச் சொன்னேன். எனது இருத்தலை நிலைப்படுத்த அவரது கடை வாயிலிலேயே நின்று பேசலாம் என்றேன். இப்படித்தான் பலர் வந்து போனதாகவும் மற்ற இனத்தவரைத் தவிர்த்துத் தமிழ் மாணவர்கள் எவரும் ஆய்வுகளைக் கொண்டு வந்து மருந்துக்கும் காண்பிக்கவில்லை என்றார். என்னைத் தாராளமாக நம்பலாம். நான் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவனல்லன் என்றேன்.பிப்ரவரி 2009 இல் ‘வல்லினத்தோடு’ திரும்பவும் சந்திக்கிறேன் என்று சொன்னபோது அவரது முகத்தில் புன்னகை ரேகை படர்ந்தது.

தமிழ் விளங்குமா என்பதைத் தெரிந்துகொள்ள பிரத்தியேகமான கேள்வியைத் தொடுக்காமல், என் பேச்சிலேயே மும்மொழியையும் கலந்துதான் பேசினேன். தமிழில் அவருக்கு ஆர்வம் இருந்ததை அவ்வப்பொழுது அவர் உதிர்த்த சொற்களில் செவிமடுக்க முடிந்தது. தமிழ் உச்சரிப்பு என்னவோ பிற இனத்தவர் பேசுவது போல் மழலைத்தனம் மிகுந்திருந்தது. ஆனாலும், ஆகம ஐதீக பதங்களைத் தமிழரைவிடச் சரியாகவே உச்சரித்தார்!

செட்டி என்ற சொல்லை எழுதுவதில் மிகத் தெளிவாகவே இருந்தார். எங்கள் சமூகத்தைப் பலர் ‘ CETI ’ என்றே தவறாக எழுதி வருகின்றனர்; அதன் பொருள் வேறு என்று கூறிவிட்டு ஒரு வெற்றுத் தாளில் ‘CHETTI’ என்று பெரிதாய் எழுதி இப்படித்தான் எழுத வேண்டும் என என்னிடம் காண்பித்தார். முதலில் கூறப்பட்ட சொல் முழுக்க முழுக்க தமிழ்ச் சமுதாயப் பிரிவினரையும் வட்டித் தொழில் புரிபவரையும்,பின்னது கலிங்கப்பட்டணத்தின் தொன்ம உறவையும், 14 ஆம் நூற்றாண்டில் மலாக்கா துறைமுகக் காலத்திலிருந்து உருவான புதுவகை சமுதாயம் எனவும், கடல் வழி வாணிபம் செய்த தந்தைக் குல பாரம்பரியம் என்பதையும் வலியுறுத்தினார்.செட்டி,பிள்ளை,நாயக்கர்,இராஜா,படையாச்சி,முதலியார்,பத்தர்,பண்டாரம் கலியன் என்ற பிரிவினர் இவர்களிடத்தில் வேரூன்றியிருப்பினும் ஒற்றுமையாகவே உள்ளனர்!

15 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு, மலாக்காவும் அதன் சுற்று வட்டார பிராந்தியங்களும் இந்து சமயக் கோட்பாட்டில் வேரூன்றியும், ஆட்சி செய்த மன்னர்களை ‘Raja’ என்றும் ‘Sri’ என்றும் அழைத்து வந்ததாகவும் மேலும் விளக்கினார். எங்களது உரையாடல் சூடு பிடிக்கத் தொடங்கியபோது குறுக்கிட்ட தமிழக அன்பர் ஒருவர் தமிழேலேயே பேசி பொருளை வாங்கிச் சென்றதைக் கவனித்தேன். இவரும் நறுக் நறுக்கென்று இரத்தினச் சுருக்கமாகத் தமிழில்தான் பதிலளித்தார்; அது வாக்கியமாக இல்லாவிட்டாலும் அந்த மிடுக்கை ஒற்றைக் கண்ணால் இரசித்தேன்! சிரித்தார்!

மலாக்கா செட்டி சமூகத்தைப் பற்றி இன்னொரு கருத்தும் நிலவுகிறது. அதாவது,அந்தமான் தீவிலும் இன்ன பிற தீவிலும் வெள்ளையர்களால் நாடு கடத்தப்பட்டுக் கைதிகளாக நடத்தப்பட்ட தமிழர்கள்தான் ( கட்டபொம்மன் உடன்பிறப்புகள் உட்பட)பின்னாளில் மலாக்காவில் குடியேறி வெள்ளையர்களுக்கு அடிமையாய்க் கூலி வேலை செய்து, அதன்பின் காலவரையறை முடிந்தபின் உள்நாட்டுப் பெண்களை மணமுடித்து செட்டிச் சமூகமானார்கள் என்று கூறப்படுவதும் உண்டு.இதைத் தவிர்த்து முன்பு தமிழக காஞ்சிபுரத்தில் ஏற்பட்ட கலவரத்தால் தப்பியோடி வந்தவர்கள்தான் இந்தச் செட்டிகள் என்றும் கூறப்படுவதுமுண்டு. இவ்விரு கருத்துகளையும் முதற்கருத்தோடு ஒப்புநோக்கும்போது முரண்படுவதைக் காணலாம்.போர்த்துக்கீசியர்,தாங்கள் மலாக்காவைக் கைப்பற்றித் தங்கள் வசமாக்கிக் கொண்டபோது (1511-1641)அவர்கள் வரைந்த மலாக்கா வரைபடத்தில், மலாக்கா கடற்கரையோரம் அமைந்த ‘கம்போங் கிலீங்’ என்ற கிராமத்தையும் குறிப்பிட்டு வரைந்து காட்டியுள்ளனர். அதோடு,அங்கு வாழ்ந்த செட்டி சமூகத்துக்குத் தங்களுக்கே உரிய தனித்த கட்டமைப்பும் ( செயலவைக் குழுமம்)அதற்குரிய பொறுப்பாளர்களும் தங்கள் சமூக நலனை மலாக்கா இந்து மன்னர்களிடம் எடுத்துக் கூறி உறவைப் பேணியவர்கள் என்ற தகவலும் உண்டு. மேலும், போர்த்துக்கீசியர் மலாக்காவைக் கைப்பற்றியபோது தங்கள் பாதுகாப்பைக் கருத்திற்கொண்ட இச்சமூகம், எதிராளிக்குக் கணிசமான பங்களிப்புச் செய்ததும் இங்குக் கவனிக்கத்தக்கது. போர்த்துக்கீசியரின் தலைமைக் கடற்படைத் தளபதி அல்போன்சோ டி அல்புகர்க் எழுதிய குறிப்பில் இச்செய்தி காணக் கிடைக்கிறது.போர்த்துக்கீசியர் மலாக்காவை வென்றதன் வாயிலாகக் கைம்மாறாய் மலாக்கா செட்டிக்கு உயர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்புகளும் உள்ளன. போர்த்துக்கீசியருக்குப் புரிந்த அளப்பரிய உதவியால் மலாக்கா செட்டிகள் தங்கள் வணிகத்தை இடையூறுமின்றி நடத்தவும் முடிந்தது. ஒரு கதவு திறக்க மறு கதவு அடைக்கப்படும் என்பதுபோல டச்சுக்காரர்கள் வந்த பின்பு(1641-1824) இவர்களின் தலைவிதி மாற்றியமைக்கப்பட்டுப் பழைய செல்வாக்குச் சரிந்தது! மேற்கத்தையவர்களின் இராட்சச கப்பல்களுக்கு முன் இவர்களின் சிறு வணிகக் கப்பல் தொய்விழந்தது.இதன் காரணமாக விவசாயம் உட்பட வேறு பல தொழில்களை நாடிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டது! இதுகாறும் இவர்கள் வசித்து வந்த கம்போங் கிலீங் என்ற கிராமத்தையும் டச்சுக்காரர்கள் பறிமுதல் செய்து அதற்கு டச்சுக் கிராமம் என்று பெயர் சூட்டிக் கொண்டாலும் செட்டிமார்களில் சிலருக்கு அங்கு வசிக்க வாய்ப்பும் கிடைத்தது.டச்சுக் கவர்னர் போர்ட் (Gabenor Bort) இவர்களுக்கு ஒரு காணி நிலத்தையும் நிலப்பட்டாவையும் கொடுத்து அங்கு சிறீ பொய்யாத விநாயகர் கோயிலையும் எழுப்ப வகை செய்தது. இக்கோயிலில்தான் மலாக்கா செட்டிகளின் விலைமிகு உடைமைகளும் சொத்துகளும் பழம்பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. அதே காலக்கட்டத்தில் இவர்களுக்கு மற்றப் பகுதிகளில் குடியிருப்பையும் உருவாக்கிக் கொடுத்தனர். கவர்னர் போர்ட் அறிக்கையின்படி, 1678 ஆம் ஆண்டில் மட்டும் 761 மலாக்கா செட்டிகள் இங்கு வசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.இசுலாத்தில் ஐக்கியப்பட்ட செட்டிகளுக்கு இக்கோயிலுக்குப் பக்கத்தில் மசூதியை நிறுவுவதற்கும் வாய்ப்பளித்துள்ளனர். அம்மசூதி இன்றளவும் உள்ளது.
(அடுத்த பக்கத்தில்)

Series Navigation

ஏ.தேவராஜன்

ஏ.தேவராஜன்