மரணம் என்னும் நெருப்பு (எனக்குப் பிடித்தக் கதைகள் – 15 – தாஸ்தாவெஸ்கியின் ‘நாணயமான திருடன் ‘ )

This entry is part [part not set] of 29 in the series 20020617_Issue

பாவண்ணன்


பெல்லாரி மாவட்டத்தில் ஹோஸ்பெட் என்னும் இடத்தில் நாங்கள் வசித்து வந்த நேரம். துங்கபத்ரா நதிப்படுகையில் உள்ள வளமான ஊர் அது. பெருமளவில் விவசாயிகள் வாழும் இடம். நாங்கள் வாடகைக்குக் குடியிருந்த வீட்டுக்கு எதிரே நடுத்தரமான விவசாயி ஒருவர் வசித்து வந்தார். நெல் விளையும் நிலம் கொஞ்சம், சோளம் பயிராகும் நிலம் கொஞ்சம், நான்கு பசுக்கள் என ஓரளவு வசதியாகவே இருந்தார். ஓரளவு எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்தவரும் கூட. மாலை வேளைகளில் அவருடன் பல சமயங்களில் பொழுதுபோக்காகப் பேசிக் கொண்டிருப்பேன். தன் இளமைக் காலத்தில் அவர் பட்ட சிரமங்களையும் வாழ்வில் முன்னேறிய ஒவ்வொரு கட்டத்திலும் சந்திக்க நேர்ந்த இடர்ப்பாடுகளையும் சமாளித்த விதங்களையும் அடிக்கடி சொல்வார். அவருக்கு இரண்டு பிள்ளைகள். இருவருமே அவரைப் போலவே கடுமையான உழைப்பாளிகள்.

ஒரு மழைக்காலம். சாதாரணக் காய்ச்சல் என்று படுத்தவர் எழுந்திருக்கவில்லை. மாவட்ட மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல பிள்ளைகள் எவ்வளவோ முயன்றும் அவர் வர மறுத்து விட்டார். நாளுக்கு நாள் அவர் உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. பல ஊர்களிலிருந்தும் பல உறவினர்கள் வந்து பார்த்துவிட்டுச் சென்றார்கள். அவர்களையெல்லாம் மூச்சிருக்கும் போதே பார்த்ததில் பெரியவருக்குச் சந்தோஷம் ஏற்பட்டது. பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்த ஊரில் வசிக்கிற பழைய காலத்து நண்பர் ஒருவரை அழைத்து வரும்படி ஒருநாள் மூத்தவனிடம் சொன்னார். அவர் யாராக இருக்கக் கூடும் என்கிற விவரம் அவர்களுக்குத் தெரியவில்லை. அதுவரை அவரைப் பற்றிக் கேள்விப்பட்டது கூட கிடையாது. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதைக் கடமையாகக் கொண்டு அவர் உத்தேசமாகச் சொன்ன முகவரியில் அவரைத் தேடிக் கண்டுபிடிக்கப் பெரும் சிரமப்பட்டார்கள். பெரியவர் சொன்னபடி அவர் ஊரிலேயே இல்லை. ஊருக்கு ஒதுக்குப் புறமாகப் புறம்போக்கு நிலத்தில் குடிசையில் வாழ்ந்து வந்தார்.

முகப்பழக்கம் இல்லாதவர்கள் வந்து அழைத்ததும் கலவரமுற்றுப் போனார் அவர். பிள்ளைகள் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் அமைதியாக எழுந்து பின்னால் வந்தார். அதற்கப்புறம் ஒரு வார்த்தை பேசவில்லை.

இரு பெரியவர்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதும் கண்களில் நீர் மல்க கைகளைப் பற்றிக் கொண்டார்கள். வெகுநேரம் பேச்சில்லாமல் கழிந்தது. படுக்கையிலிருந்த பெரியவர் தம் ஞாபகத்திலிருந்து ஒவ்வொரு பெயராகச் சொல்லி அவர்களெல்லாரும் எப்படி இருக்கிறார்கள் என்று ஆர்வத்துடன் கேட்டார். வந்த பெரியவரும் நிதானமாக அவர்களுடைய தற்கால நிலையைப் பற்றிச் சொன்னபடி வந்தார். கடைசியாகத் தயங்கித் தயங்கி அவருடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், குடும்பத்தார் பற்றிக் கேட்டார். வந்தவர் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. பிறகு ‘இப்ப எதுக்கு அதெல்லாம் பழைய கதை, விட்டுத்தள்ளு ‘ என்று சிரித்தார். ‘இல்ல கெளடரே, அதையெல்லாம் தெரிஞ்சுக்கணும், இல்லன்னா என் கட்ட வேகாது ‘ என்றார் படபடப்புடன் பெரியவர். மனைவி இறந்து விட்டாள். மூத்தவன் யாரோ கொங்கணிப் பெண்ணைக் கட்டிக் கொண்டு ஊரைவிட்டே சென்று விட்டான். சின்னவன் பாம்பு கடித்து இறந்து விட்டான். பெண்பிள்ளைகள் யாருக்கும் சரியாக வாழ்க்கை அமையவில்லை. ஏகப்பட்ட தொல்லைகள். போக்குவரத்து, பேச்சுவார்த்தை என்பதே இல்லாமல் போய்விட்டது. கோயில் பிரசாதத்தால்தான் தன் உயிர் பிரியாமல் இருக்கிறது என்று தரையைப் பார்த்தபடி சொன்னார். கேட்டுக்கொண்டிருந்த பெரியவரின் கண்களில் நீர் தளும்பியது.

பிள்ளைகள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர் அனைவரும் சூழந்து நிற்க, பெரியவர் வந்தவரைப் பற்றிச் சொன்னார். வந்தவர் எவ்வளவோ தத்தும் கேட்காமல் ஆவேசம் வந்தவரைப் போலப் பேசினார் அவர். ‘சின்ன வயசிலேருந்து நாங்க சிநேகதர்ங்க. ஒருநாள் மாடு விக்க சந்தைக்கு ஓட்டிக் கொண்டு சென்றோம். அந்தப் பணத்தில் ஏதோ நிலம் வாங்கணும்ன்னு இவனுக்கு ஆசை. சந்தைல மாடு நல்ல வெலைக்குப் போச்சி. வியாபாரிகிட்ட வாங்கன பணம் பூரா என் கையிலதான் இருந்திச்சி. பணத்தைப் பார்த்ததும் என் மனசுல கள்ளம் வந்திடுச்சி. வழிபூரா ஏதேதோ கணக்கு போட்டபடி வந்தேன். மறுநாள் நிலம் பதியணும், பணத்தை நீயே வச்சிருந்து நாளைக்கு எடுத்து வான்னான். ராத்திரிக்குள்ள பணத்த இடம் மாத்திட்டேன் நான். பணத்த என்கிட்ட தரவே இல்லைன்னு அடுத்தநாள் சத்தியம் பண்ணிட்டேன். கொஞ்சநாள் அங்கயே இருந்துட்டு, சண்டையில ஊரவிட்டு பிரியற மாதிரி பிரிஞ்சி இந்த ஊருக்கு வந்து சேந்தேன். பெரிய ஆளா உயர உயர எனக்குள்ள குற்ற உணர்ச்சி அதிகமாகிக் கொண்டே வந்தது. இப்ப உங்க முன்னால வச்சி சொல்றேன். அந்தப் பணத்தை நான்தான் எடுத்தேன். இன்னைக்கு இருக்கற இந்த மண், இந்த வசதி, இந்த வாழ்க்கை எல்லாமே இவனால வந்ததுதான் ‘ என்றார். ஆவேசத்தில் அவர் நெஞ்சு ஏறித் தாழ் ந்தது. தனது தலையணைக்குக் கீழே இருந்த துணிமுடிச்சை எடுத்து வந்தவரின் கையில் திணித்தார். ஊரே வேடிக்கை பார்த்திருக்க அக்காட்சி நடந்தேறியது. இதுநாள் வரை கட்டிக் காத்த வந்த பெயரைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தன் மனத்தின் ஆழத்திலிருந்த சுமையை இறக்கி வைத்த களைப்பில் அவர் ஆவி பிரிந்தது.

மரணத்தின் முன்னால் தன் அகங்காரங்களையும் பெருமைகளையும் மறந்து ஒருவன் மண்டியிடுகிற தருணம் முக்கியமானது. உயிர் பிரியும் தருணத்திலாவது தன் களங்கத்திலிருந்து விடுதலையாக வேண்டும் என்று மனசார விரும்பும் மனித நடத்தையை ஆய்வு செய்தால் மனத்துக்கும் மரபுக்கும் உள்ள ஆழமான முடிச்சைப் புரிந்து கொள்ள முடியும். இந்த எண்ணம் மனத்தில் எழும்போதெல்லாம் நினைவுக்கு வருவது தாஸ்தாவெஸ்கியின் ‘நாணயமான திருடன் ‘ சிறுகதை.

இக்கதையில் ஒரு சாதாரண குடும்பம் இடம்பெறுகிறது. தன் வசதிகளைக் குறைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே அறை ஒன்றை உருவாக்கி வாடகை¢குக் கொடுக்கிறார்கள். அந்த வீட்டில் வசிக்கும் பெரியவருக்கும் வாடகைக்கு வந்தவருக்கும் நல்ல உறவு ஏற்படுகிறது. துரதிருஷ்டவசமாக வாடகைக்கு வந்தவரின் மேலங்கி திருட்டுப் போய்விடுகிறது. அப்போது திருடர்களில் நல்ல திருடர்களும் இருக்கிறார்கள் என்று சொல்வதாக இக்கதையை அமைத்துள்ளார் தாஸ்தாவெஸ்கி.

ஏதோ ஒரு உணவு விடுதியில் சாப்பிடுகிற சமயத்தில் பரிதாபமாகக் காணப்பட்ட யாரோ ஒருவனுக்கும் உணவு வாங்கித் தருகிறார் அவர். அந்தப் பழக்கத்தில் அவரோடேயே ஒட்டி விடுகிறான். நயமாகப் பேசி கூடவே தங்கவும் செய்கிறான். அவன் பெயர் எமில். ஊர் மாறிச் சென்றாலும் கண்டுபிடித்து வந்து விடுகிறான். அவனைத் தவிர்ப்பது இயலாத காரியமாக இருக்கிறது. அவன் உணவுக்கும் இடத்துக்கும் சேர்த்து அவர் சம்பாதிக்க வேண்டிய நிலை. ஒருநாள் அவர் ஆடைகள் காணாமல் போய்விடுகின்றன. தான் அதைப் பார்க்கவே இல்லை என்று சத்தியம் செய்கிறான் எமில். போகட்டும் என்று விட்டு விடுகிறார் அவர். எமிலின் போக்கு மெல்ல மெல்ல மாறத் தொடங்குகிறது. திடுமென உழைக்க ஆசைப்படுகிறான். அறைக்குத் திரும்பாமல் அடிக்கடி வெளியே தங்குகிறான். மதுவருந்த மறுக்கிறான். அவன் போக்கே விசித்திரமாக மாறி விடுகிறது.

ஒருநாள் இரவு அவன் உடல்நிலை மோசமாகிறது. அவரே மருத்துவரை அழைத்துக் காட்டுகிறார். மறுநாள் பேச்சுவாக்கில் எமில் அவரிடம் ஏஎன் கோட்டு எவ்வளவு பெறும் ? ஏ என்று கேட்கிறான். அது வெறும் கந்தல். எதற்கும் பயன்படாது என்று சொல்லத் தயங்கிய அவர் ஃமுன்று ரூபிள் பெறும்ஏ என்று சொல்கிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு தன் மரணத்துக்குப் பிறகு தன் கோட்டை விற்றுப் பணத்தை எடுத்துக் கொள்ளும்படி சொல்கிறான் எமில். பிறகு மெல்ல அன்றொருநாள் தொலைந்து போன கால்சட்டைகளைத் தானே திருடியதாகச் சொல்கிறான். அதற்காக மன்னிப்புக் கேட்கிறான். ஏதோ பேச வாயடுக்கிறான். அதற்குள் அவன் உயிர் பிரிகிறது.

வாழ்வில் மரணம் தவிர்க் க முடியாத ஒன்று. வாழ்வு முழுக்க பொய்மைகளும் உண்மைகளும் கலந்த வாழ்வை வாழ்கிறவர்கள் கூட மரணத்தின் கணத்தில் உண்மையின் சுடராக இருக்க விரும்புகிறார்கள். உள்ளூரத் தன்னைச் சுடும் பொய்யையும் அக்கணத்தில் வெளிப்படுத்தி விடுகிறார்கள். அந்த எல்லையைத் தாண்டி அப்பொய்யின் சுமையைத் துாக்கிச் செல்ல அவர்களுக்குத் தெம்பிருப்பதில்லை.

சூரியன் மிகப்பெரிய நெருப்புக்கோளம். அதை நெருங்கும் எதுவும் அதன் வெப்பத்தில் பொசுங்கி விடும். மரணமும் ஒருவகையில் சூரியனைப் போல என்று எண்ணத் தோன்றுகிறது. தன்னை நெருங்கும் உயிரின் மனத்தில் குவிந்திருக்கும் கசடுகளையும் பொய்மைகளையும் பொசுக்கி ஆவியாக்கி விடுகிறது.

*

( மனத்தின் ஆழத்தில் உருவாகும் சிறுசிறு சலனங்களையும் சொற்களால் படம்பிடித்து விடக் கூடிய வல்லமை மிகுந்தவர் தாஸ்தாவெஸ்கி. பிராய்டு தன் உளவியல் ஆய்வுகளுக்கான பல அம்சங்களை தாஸ்தாவெஸ்கியின் கதைகளிலிருந்து கண்டடைந்ததாகச் சொல்வதுண்டு. மரணதண்டனை விதிக்கப்பட்டு சைபீரியச் சிறைவாசம் அனுபவித்தவர். 1859ல் விடுதலையாகி இலக்கியத் துறையில் ஈடுபட்டவர். 59 ஆண்டுக்காலம் மட்டுமே வாழ்ந்த தாஸ்தாவெஸ்கி உலகப்புகழ் பெற்ற கரம்சேவ் சகோதரர்கள், குற்றமும் தண்டனையும், அசடன் உள்ளிட்ட பல புதினங்களைப் படைத்தவர். சக்தி காரியாலயத்தின் வெளியீடாக எம்.எஸ்.சபரிராஜன் என்பவர் மொழிபெயர்ப்பில் 1943 ஆம் ஆண்டில் ‘ருஷ்யக் கதைகள் ‘ என்னும் தலைப்பில் வெளியான நுாலில் இக்கதை இடம்பெற்றுள்ளது.)

paavannan@hotmail.com

Series Navigation