மன மோகன சிங்கம்!

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

விபாவோட்டுக் கேட்டு, வீட்டுக்கு வருகிறார் ஒரு அரசியல் வாதி. புல் தரையில், ஜாலியாக உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருக்கும் இளைஞன் கேட்கிறான் “உங்கள் தகுதி என்ன?” வந்தவர் கோபமுற்று, “என்ன, என்னை வேலைக்கு interview செய்கிறாயா?” என்று கேட்கிறார். ஆம் என்கிறான் இளைஞன்.”என்ன வேலை?” இது அரசியல்வாதி. “தேசத்தை ஆளுகின்ற வேலை” இது பதில். அரசியல்வாதி, நொந்து நிற்கும் போது, அவருக்கு டாடா டீ வருகிறது!
இது டாடா டீயின் விளம்பரப் படம்!

இப்படி ஒரு தேர்வு நடந்தால், அதில் உலகிலேயே மிக அதிக மதிப்பெண் பெறுபவர் நமது பிரதமராகத்தான் இருப்பார். சந்தேகமிருந்தால், பிரதமரின் இணைய தளத்தைச் சென்று பாருங்கள். பொருளாதாரத்தில் டாக்டரேட். புகழ் பெற்ற தில்லிப் பொருளாதாரப் பள்ளியில் பேராசிரியர். வணிக, நிதியமைச்சர்களின் ஆலோசகர். ரிசர்வ் வங்கியின் கவர்னர். மத்திய திட்டக் குழுத் தலைவர், பல்கலைக் கழக மானியக் குழுவின் தலைவர், பிரதமரின் பொருளாதார ஆலோசகர், சௌத் கமிஷனின் செக்ரடரி ஜெனரல், நிதியமைச்சர், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற மேல்சபையின் தலைவர் என 47 வருட அனுபவம்.

அரசு என்னும் இயந்திரத்தின் அத்தனை பாகங்களயும், அவை வேலை செய்யும் விதத்தையும், அதை வேலை செய்ய வைக்கும் வித்தையையும் நன்கறிந்தவர்!

இத்தனை தாண்டியும், அவர் கையிலிருக்கும் ஒரே மாருதி 800 கார், அவர் பிழைக்கத் தெரியாதவர் என்பதற்குச் சான்று!

1991 ஆம் வருடம், பாரத தேசத்தின் தலைவிதியும், நம்மவருடையதும் ஒன்றாய் இணைந்தன. தனது தலைவனை இழந்த அனுதாபத்தில், காங்கிரஸ் தனிப்பெருங் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், பெரும்பான்மை பலமில்லை. நேரு குடும்பத்து வாரிசுகள் யாரும் தலைமை ஏற்க வராத நிலையில், பல தலைகள் ஆடின பதவி ஆசையில்! அதில் ஒன்று மிக வயதான தலை. பன்மொழிப் பாண்டித்யம், சாமியார், ஊழல் என அரசியல்வாதிகளுக்கே உரிய ஸாமுத்ரிகா லட்சணங்களுடன், அரசியல் வாழ்க்கையில் பழம் தின்று கொட்டை போட்ட தலை. தனது பலத்தை உபயோகிக்காமல், போட்டியாளர்களின் பலவீனத்தை உபயோகித்து, அவர்கள் அனைவரையும் வீழ்த்தி, குறைந்த பட்ச சக்தியை செலவு செய்து, பிரதம நாற்காலியில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டது.

ஒட்டிகொண்ட பின்பு, தான் சமாளிக்க வேண்டிய முக்கியமான பிரச்சினையைப் பற்றி ஆலோசித்தது. யோசித்தது.

அய்யா, உங்களுக்கு பிரதம மந்திரியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. என் மந்திரி சபையில் நிதியமைச்சராகப் பணியாற்ற விருப்பமா? என்று. நல்ல வேலை, ஆனால் சிறுபான்மை அரசு! நித்திய கண்டம்!! எப்போது வேணுமானாலும் கவிழலாம். இதற்கு முந்திய இரண்டு அரசுகளும் அவ்வாறே கவிழ்ந்தன. என்ன செய்வீர்கள்?

சிலர், நம்ம வடிவேலு மாதிரி, ஒரு சிரிப்பு சிரித்து விட்டு, வேட்டியைத் தூக்கி அண்டர்வேருக்கு மேலே கட்டிக்கொண்டு கிளம்பிப் போய், உடனே கையெழுத்துப் போட்டுட்டு, முடிஞ்ச அளவு துட்டு பாக்கலாம் என்று முடிவெடுக்கலாம். சிலர், மத்தியான லஞ்ச் பாக்ஸில் சப்பாத்தி, சப்ஜி கொண்டு போயிட்டு, PF, gratiutiy, வாங்கிட்டு, பேசாமே ரிட்டயர் ஆகிறதை விட்டுட்டு, எதுக்கு ரிஸ்க் என்று யோசித்து விட்டு மறுத்துவிடலாம். நம்மவரின் பெரும்பாலான நண்பர்கள் இதைத் தான் சொன்னார்கள்.

ஆனால், நம்மவர் வேறு மாதிரி யோசித்தார். “இதுவரை, எல்லா அரசாங்க வேலைகளையும் பார்த்திருக்கிறேன். இது மிக கடினமான வேலை. வெற்றி பெறும் வாய்ப்பு மிகக் குறைவு. ஆனால், வெற்றி பெற்றால், பாரத வரலாற்றில் ஒரு சிறு குறிப்பாகும் பாக்கியம் கிடைக்கும்”. இது, சாதனையாளர்களுக்கே உரித்தான சிந்தனை!

1991 ஆம் ஆண்டு, ஜூன் 21 ஆம் தேதி, பாரதத்தின் நிதியமைச்சராகப் பதவி ஏற்றார். கையிருப்பு ஒரு பில்லியன் டாலர்கள் கூட இல்லை. பத்து நாட்களுக்கு மேல், வீட்டில் பொங்கித் திங்க ஒன்றுமில்லை என்ற நிலைமை.

1990-91 பாரதத்துக்குப் போறாத காலம். ஒரு பிரதமர், மக்களின் முன் தோன்றி, கஜானா காலி என்று ஒப்பாரி வைத்தார். உடன் கவிழ்ந்தார். அடுத்து வந்த ஆட்சியின் நிதியமைச்சர், ரூம் போட்டு யோசித்து விட்டு, அண்டா, குண்டாவை அடகு வைத்து ஒரு 6 மாதம் ஓட்டலாம் என்று முடிவெடுத்து, பாரத ரிசர்வ் வங்கியின் தங்கத்தை கொண்டு போய், இங்கிலாந்தில் அடகு வைத்து, பணம் புரட்டிக் கொண்டு வந்தார்.

பாரதத்தின் மீது, பன்னாட்டு, பிணந்திண்ணி நிதி நிறுவன வல்லூறுகள் வட்டமிடத் துவங்கின. பிரேசில், அர்ஜண்டினா, ரஷ்யா போன்ற சில நாடுகளும் இதே நிலையில்தான் இருந்தன. ஜெப்ரி ஸாக்ஸ் போன்ற பி.சி.சொர்க்கார் மாதிரியான பொருளாதார மேதைகள், இந்தியாவுக்கு, அதிரடி வைத்திய சிகிச்சை
முறைகளைப் பரிந்துரைக்கத் துவங்கினர்.

பொது பட்ஜட் தாக்கல் செய்ய இன்னும் ஒரு மாதமே இருந்தது. அது சாதாரண நிதியமைச்சர்களுக்கு, அடி வயிறு கலங்கும் காலம். ஆனால், நம்மவருக்கு அது பாரதத்தையே மாற்றியமைக்கும் வாய்ப்பு. ஒரு தேர்ந்த ஜீனியஸ் தன் வேலையைத் துவங்கியது. துவங்கும் முன், சாணக்கியப் பிரதமரிடம் சென்று, தனக்கு வேண்டிய முழு சுதந்திரத்தை வாங்கிக் கொண்டு வந்தது. வழவழா பிரதமரும், ஒரு மாறுதலுக்கு உடனே சரி என்று சொல்லி, “நீ தைரியமாகச் செய், அரசியலை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று நம்பிக்கையூட்டி அனுப்பினார்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, தனது திட்டத்தை உடனே செயல்படுத்தினார். மூன்று தனித்துவ வழிமுறைகளை (unique ideas) கொண்டிருந்தது அவர் திட்டம்.

1. அந்நியச் செலாவணியை ஈட்டுவது
2. பாரதத்தை உலகோடு இணைப்பது
3. பொருளாதார விவகாரங்களில், அரசின் பங்கைக் குறைப்பது.

அந்நியச் செலாவணி, மிக அவசரத் தேவையாக இருந்தது. மூழ்கத் துவங்கியிருந்த நோயாளிக்கு, ஆக்ஸிஜன் போல. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை முதலில், இரண்டு தவணைகளில் குறைத்தார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தமது சேமிப்புகளை பாரதத்துக்கு திரும்பவும் அனுப்பத் துவங்கினர். வணிக நிறுவனங்கள் வெளிநாட்டில் வைத்திருந்த தமது நிதிகளை இந்தியாவுக்கு அனுப்பத் துவங்கினர். ஏற்றுமதித் துறை உடனே சுறுசுறுப்பாகச் செயல்படத் துவங்கிற்று. ஆனால், அது போதாது என்பது அவருக்குத் தெரியும்.அதைப் பட்ஜட்டுக்குப் பின்னால் பார்த்துக் கொள்ளத் தீர்மானித்தார்.

அடுத்ததாக, இந்தியத் தொழில் துறையைப் பீடித்திருந்த மிகக் கடும் நோயான, லைசைன்ஸ் முறையை, ஓரிரவில் ஒழித்துக் கட்டினார். தொழிலதிபர்கள் இதைப் பெருமளவு ஆதரித்தனர். ஏனெனில், அதிகப் பணம் செய்ய சுலபமான வாய்ப்பு. டெல்லியில் கைகட்டி நிற்க வேண்டாம். சில தொழில் அதிபர்கள் எதிர்க்கவும் செய்தனர். அவர்கள், அரசியல் மூலமாக வியாபாரம் செய்தவர்கள்.

இந்த இரு பெரும் முடிவுகளை, அவர் பட்ஜட்டுக்கு முன்னரே அறிவித்தார். இதனால், அரசின் திட்டங்களை, பட்ஜட்டில் மட்டுமே அறிமுகப் படுத்தும், சம்பிரதாயம் எரிக்கப்பட்டது. மேலும், பட்ஜட்டுக்கு முன்பே இந்தியாவைப் பற்றி ஒரு நல்லெண்ணம் உலகப் பொருளாதார மையங்களில் உருவாகியது. இந்தியா நிச்சயம் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் கொண்டு வரும் என்பதை அனைவரும் உணர்ந்தனர். உலக வங்கி, நாவைச் சப்புக்கொட்டத் துவங்கிற்று. பொருளாதார வல்லுனர்களுக்கும் நல்ல வேட்டை. டாலர்களில் consultancy வேலை கிடைக்குமல்லவா?

இதைப் பற்றிய விவாதங்கள் துவங்குமுன்னரே, பட்ஜட் செஷன் துவங்கிற்று. பட்ஜட்டில், மிச்சமிருந்த தடைகளையும் உடைத்தெறிந்தார். அந்நிய தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் முறைகளை எளிதாக்கினார். இந்த இடத்தில் தான், நமது சுதேசி வியாபாரிகளுக்கு முதல் அதிர்ச்சி. “பாம்பே க்ளப்” என்று ஒன்றை ஏற்படுத்தி, எங்களால், பன்னாட்டு நிறுவங்களுடன் போட்டி போட இயலாது என ஒப்பாரி வைத்தனர். அவர்களில் பலர், தமது கார் அல்லது ஸ்கூட்டருக்கு, ஆறு மாதம் முன்பே அட்வான்ஸ் பணம் வாங்கிக் கொண்டு, நுக்ர்வோரின் பணத்தில் கொழுத்தவர்கள். இனிமேல், பணம் சம்பாதிக்கணும்னா
கஷ்டப்படணும்கற எண்ணம் அவர்களை ரொம்பக் கஷ்டப் படுத்தியது! அப்போது, நம் நாட்டில் இரண்டே இரண்டு ப்ராண்ட் கார்கள் இருந்தன. இரண்டு ஸ்கூட்டர்கள் தான். கொஞ்ச நாள் முன்னாடி வரை, மூன்று பைக்குகள் தான் இருந்தன.

மமோசியின் (வ.உ.சி, ம.பொ.சி மாதிரி, இவரையும் குறுக்கி நம்மவராக்கிக் கொள்ளும் பேராசைதான்) 91-92 பட்ஜட் உரை, 31 பக்கங்கள் கொண்டது. 153 பாரா. குறைந்த பட்ச உழைப்பைச் செலவு செய்யும் எவரும் அதைப் படித்துப் புரிந்து கொள்ள முடியும். நிதியமைச்சகத்தின் இணய தளத்துக்குச் சென்று அந்த உரையை இறக்கி, சேமித்துப் படிக்கலாம்.

அந்த உரை, மிக எளிதான துவக்கம், ப்ரச்சினைகளைப் பற்றிய அலசல், அதற்கான தீர்வுகள் – இவையனைத்தையும் கொண்டு ஒரு இலக்கிய நாவல் போல் எழுதப்பட்டிருக்கிறது. இதற்குப் பின்னும், மிக அழகாக எழுதப்பட்ட பட்ஜட் உரைகள் வந்திருக்கின்றன. ப.சி யின் 96-97 பட்ஜட் உரையையும் அவ்வாறே வகைப் படுத்தலாம். எனினும், உள்ளடக்கத்தை ஒப்பிட்டு நோக்கும் போது, மமோசியினது பல படிகள் மேலே. ஏனெனில், அது ஒரு நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்க முற்படும் ஒரு மாபெரும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.

பட்ஜட்டில், நாட்டின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிவிட்டு, தனது தீர்வுகளைச் சொல்கிறார். 45 வருடமாக, உள் நோக்கிய பொருளாதாரம் நமது. இப்போது, திடீரென்று, உலக நிறுவனங்களோடு எப்படி போட்டியிடுவது?? எல்லோருக்கும் தயக்கம். பயம். “after 4 decades of planning and industrialisation, we have reached a stage of development wherein we should welcome, rather than fear, foreign investment” இந்த வரிகளில், உலக மயமாக்கலை மிகத் தைரியமாக எதிர்கொள்ளும் மமோசியின் ஆளுமை வெளிப்படுகிறது.

அதே போல், அரசு நிறுவங்களைப் பற்றிப் பேசும் போது, அவற்றின் துவக்க கால நோக்கங்களில் இருந்து எவ்வாறு விலகிவிட்டன என்பதைப் பேசி, அவற்றை மேம்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பேசுகிறார். எண்பதுகளில் புகழ் பெற்ற மார்கெரட் தாட்சர் முறை, எல்லா அரசு நிறுவங்களையும் தனியாருக்கு விற்று விடப் பரிந்துரைத்தது. ஆனால், மமோசி, அவ்வாறு தடாலடி முடிவுகள் எதையும் எடுக்க வில்லை. நல்ல அரசு நிறுவங்களின், மேலாண்மைத் (management) திறனை மேம்படுத்தவும், அவற்றின் நிதித் தேவைகளுக்க்கு, பங்குச் சந்தையை அணுகும் சுதந்திரத்தைத் தரவும் பரிந்துரைத்தார். இன்று, உலக நிறுவங்களில், முதல் 500 இடங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ONGC முதலான நிறுவங்கள், ரிலையன்ஸ், டாடா போன்ற தனியார் நிறுவங்களை விட முண்ணனியில் உள்ளன. திருத்தவே முடியாத நிறுவங்கள், விற்கப்பட்டன. Modern bread போன்ற ரொட்டி தயாரிக்கும் அரசு நிறுவங்கள் அவை.

வங்கிகள் அன்று பெருமளவில், அரசியல் ஆதிக்கத்தில் இருந்தன. அவற்றை விடுவித்து, அவற்றிற்கு சுதந்திரமளிக்கும் வகைக்கான ஒரு திட்டத்தையும் துவங்கினார். அது பின்னால், வெற்றிகராமாகச் செயல் படுத்தப் பட்டு, மிகப் பெரும் தனியார் வங்கிகளாக அவை உருவெடுத்தன. icici போன்ற வங்கிகள் அவற்றின் விளைவுகளே. அரசியல்வாதிகளால் , குற்றுயிராக்கப் பட்ட இந்தியன் வங்கி (இதில், தமிழக தேசியஅரசியல்வாதிகளின் பங்கு மிக அதிகம்) போன்ற வங்கிகளுக்கு, நல்ல தலைவர்களை நியமித்து, அவற்றை புத்துயிர் பெறச்செய்தார்.

இதை எந்த மிகப் பெரும் தலைவரும் செய்திருக்க முடியாது. ஏனெனில், மிகப் பெரும் தலைவர்களுக்கு, எதிர்ப்புகளும் அதே அளவில் இருக்கும். ஆனால், நரசிம்ம ராவ் அரசை எதிர்த்துக் கிளம்பிய எதிர்ப்புகள் அனைத்தும் பெரிய அளவு விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. இதையே, இராஜீவ் செய்திருந்தால், மிகப் பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கும். மிகப் பெரும் அரசியல் ஆளுமைகள் இல்லாமல் இருந்தது, மமோசிக்குச் சாதகமாகவே இருந்தது. சாதரண மனிதனுக்கு, நரசிம்ம ராவைத் தெரியவில்லை. அதனாலேயே, அந்த அரசைப் பற்றிய எதிர்க் கட்சிகளின் பிரச்சாரங்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தவில்லை

அதேபோல், இந்தியாவின் இறக்குமதி வரிகள் மிக அதிகமாக, முட்டாள்தனமான அளவுகளில் இருந்தன. எடுத்துக் காட்டாக, சில பொருட்களின் வரிகள் 300% அளவுக்கு இருந்தன. இது போன்ற வரிகள், பல பொருட்களுக்கு கள்ளச் சந்தைகளை உருவாக்கின. ப்ளாக் மார்க்கெட் என்பது ஒரு கவுரமான தொழிலாகவே இருந்தது அப்போது. ஒரு ஒரிஜினல் சிடிசன் வாட்ச்சை அங்குதான் ஒரு சாதரணன் வாங்க முடியும். அதே போல், தங்கக் கடத்தல் ஒரு மிகப் பெரும் தொழிலாக இருந்தது. மிக அதிக வரிகள், உலக நாடுகள் மத்தியில், இந்தியாவுக்கு ஒரு கேவலமான இமேஜையே உருவாக்கி இருந்தன. இதை, தடாலடியாக 150% ஆகக் குறைத்தார். அதற்குப் பின் வந்த அனைத்து நிதியமைச்சர்களும், இதை அப்படியே பின்பற்றி, கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, இன்று, நமது வரிகள், உலகில் உள்ள நாடுகளோடு ஒப்பிடுகையில், சமமாக உள்ளன. இன்று, இந்தியாவின், மிகப் பெரிய வாட்ச் ப்ராண்ட், டாடாவின் டைடன் தான். உலக மயமாக்களினால், நம்ம ஊர் தொழில் பாதிக்கப் படவில்லை. மாறாக மேம்பட்டிருக்கிறது. இன்று, தொலைபேசியோ, காரோ, வீடோ ஒரு தொலைபேசி தூரத்தில் உள்ளது. இணையம் கல்யாணத் தரகர் வேலை பார்க்கிறது. அமெரிக்க அம்பிகள், பஜ்ஜி, சொஜ்ஜி, காப்பி, பாட்டு முதலிய சம்பிரதாயங்கள் மறந்து, சுலபத்தில் திருமணம் செய்து, மணவிலக்கும் பெறுகிறார்கள். நன்றாகச் செயல்படாத ஒரு விஷயம் இன்று இந்தியாவில் செல்லுபடியாகாது.

ஆனால், இவை எதுவுமே, வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் மனிதர்களைத் தொடவே இல்லை என்பதுதான் மமோசியின் மிகப் பெரும் தோல்வி.இதற்கு மிக முக்கிய அடிப்படைக் காரணங்கள் பல. இந்தியாவை விட நான்கு மடங்கு நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் மக்கள் தொகை, இந்தியாவினதை விட மூன்றில் இரு மடங்கு குறைவு. எனவே, ஒவ்வொரு இந்திய விவசாயிக்கும் இருக்கும் சராசரி நில அளவு, மிகக் குறைவு. எனவே, விவசாயத்தை ஒரு தொழிலாக மேற்கொண்டு, ஒரு சிறு விவசாயியால், முதலீடு செய்ய இயலாது. இரண்டாவது, வேளாண்மை மாநில அரசின் கீழுள்ள ஒரு துறை. மத்திய அரசு திட்டங்கள் மட்டுமே தீட்ட முடியும். செயல்படுத்துவது, மாநில அரசின் கைகளில் தான் உள்ளது. மூன்றாவது – மிக முக்கியமான காரணம். மமோசிக்கு, இதற்கான சரியான தீர்வு தெரியவில்லை.

இது வரை, இந்திய வேளாண்மைத் துறையில் சாதனைகள் என்பது பசுமைப் புரட்சியும், வெண்மைப் புரட்சியுமாகும. இதில் பசுமைப் புரட்சி என்பது, பாசன வசதி உள்ள மாநிலங்களில், வீரிய வித்துக்களின் துணையுடன் நிகழ்த்தப் பட்டது. இதில், சாதகங்களோடு, பாதகங்களும் இருந்தன. ஆனால், வெண்மைப் புரட்சி, உண்மையிலேயே நீண்ட நாள் நீடித்திருக்கக் கூடிய சாதனையாகக் கருதப்படுகிறது. கிராமங்களில், கூட்டுறவு சங்கங்கள் மூலம், பால் கொள்முதல் செய்யப்பட்டு, பதப்படுத்தப் பட்டு, நகரங்களில் விநியோகம் செய்யப்படுகிறது. வாரா வாரம் விவசாயிகளுக்கு, பாலுக்கான பணம் பட்டுவாடா செய்யப் படுகிறது.
இது அவர்களுக்கு ஒரு ரெகுலரான வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அது மட்டுமின்றி, கால்நடைகளுக்கு மருத்துவ வசதி முதலியன, விவசாயிகளுக்குப் பேருதவி. இதே போன்ற வழியில், சிறு விவசாயிகளுக்குப் பயன் தரும் திட்டங்கள் தீட்டியிருக்கலாம். ஆனால், மமோசி இதைக் கண்டு கொள்ளவேயில்லை.

மாறாக, வேளாண் பொருட்களின் மீதான இறக்குமதியைத் தளர்த்தி, சுங்க வரிகளைக் குறைத்து விட்டார். இதனால், வேளாண் பொருட்கள் சுலபமாக இறக்குமதியாகி, அவற்றின் விலைகள் பாதிக்கப் பட்டன. எல்லா முன்னேறிய நாடுகளும், விவசாயிகளுக்கு, பேரளவில் மானியம் அளிக்கின்றன. மானிய விலைகளோடு, போட்டியிட முடியாமல், விவசாயம் நலிந்தது. இன்று, வேளாண்மை ஒரு லாபகரமான தொழிலே இல்லை. இதற்கான ஒரு தீர்வை கொடுக்க முடியாதது, மமோசியின் பலவீனமே.

இறுதியில், பாரா 153ல், விக்டர் ஹ்யூகோவின் பொன்மொழியைக் கூறி, பட்ஜட் உரையை நிறைவு செய்கிறார். “No power on earth can stop an idea whose time has come”; “I suggest to this august house that the emergence of India as a major economic power in the world happens to be one such idea. Let the whole world hear it loud and clear. India is now wide and awake. We shall prevail. We shall overcome” – எவ்வளவு உண்மை. இன்று 17 ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்கையில், மிகச் சரியான மதிப்பீடாகத் தோன்றுகிறது. ஆனால், 1991ல் இது ஒரு தீர்க்கதரிசி கண்ட மாபெரும் கனவு மட்டுமே!

2004 – இன்னொரு மாபெரும் திருப்பம். கிட்டத்தட்ட, 8 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும், காங்கிரஸ் தேர்தல்களில் தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்து, ஆட்சியமைக்கும் வாய்ப்பு அமைந்தது. தோல்வியைத் தாங்கிக் கொள்ளாமல், ஒரு இத்தாலியப் பெண் பிரதமரானால், தலையை மழித்துக் கொள்வேன் என்று, இந்தியப் பாரம்பரியக் கட்சி, குழாயடிச் சண்டை போட்டது. அந்த இத்தாலியர் மிகப் புத்திசாலி. சட்டென்று, மமோசியின் தலையில் க்ரீடத்தை வைத்து, இவரே பிரதமர் என்று அறிவித்தார். ஒரே கல்லில், இரு மாங்காய்கள் விழுந்தன. எதிர்க் கட்சியின் ப்ரம்மாஸ்திரம் பஸ்பமாயிற்று. மருந்துக்குக் கூட பதவி ஆசையில்லாத
மமோசியினால், காங்கிரஸ் கட்சியின் மீதுள்ள, காந்தி குடும்பத்தினரின் உரிமைக்கும் பங்கமில்லை. “the country is safe in the hands of Dr.Singh” என்றார், சோனியா காந்தி. உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை!

“இந்த ஆள் வேஸ்ட். ஒரு முனிசிபாலிடித் தேர்தலில் கூட ஜெயிக்கத் துப்பில்லாதவர்” என்று, ஊழல் குற்றச்சாட்டில் பதவியிழந்த வெளியுறவுத்துறை அமைச்சர், நட்வர்சிங் மமோசி பற்றிக் கூறினார். வயிற்றெரிச்சல்; ஆனால் உண்மை, வெறும் இகழ்ச்சியில்லை! இந்தியாவின் மிகப் பலவீனமான பிரதமர் என்று அழைக்கிறார் அத்வானி. அதுவும் ஓரளவு உண்மை. தனது கேபினட்டில் இருக்கும், சில காங்கிரஸ் மந்திரிகளை அவர் ஏனென்று கூடக் கேட்க முடியாது.

செங்கோட்டையில் கொடியேற்றி விட்டு, பாகிஸ்தான் நம்மிடம் வாலாட்டினால், முஷாரஃபின் குடலை உருவி மாலையாகப் போட்டுக்கொள்வேன் என்று வீர வசனம் பேச அவருக்குக் கையாலாகாது. அல்லது, வீம்புக்கேனும், பாகிஸ்தான் எல்லையில் படையை நிறுத்தி, 5000 கோடி செலவு செய்யத் தயங்குவார். அவருக்கு, மிக அழகாக, மக்கள் கூட்டத்தை மயக்கும் கவிதைகள் சொல்லத் தெரியாது. அவர் சுதந்திர தின உரைகள் மிக மோசம். உரை நிகழ்த்தும் போது, அவர் தூங்கி விழாமல் இருப்பதே பெரிய அதிசயம்!

Stephen Covey என்னும் மேலாண்மை நிபுணர் தனது “7 habits of highly effective people” என்னும் புத்தகத்தில், “area of influence” என்று ஒரு கோட்பாட்டைக் குறிப்பிடுகிறார். அதாவது, தனக்குச் சாதகமான இடம், சூழல், மக்கள் முதலியவற்றின் மூலமாகக் காரியம் சாதித்தல் எனபது அதன் உள்ளர்த்தம். தனது பலவீனங்களை விடுத்து, பலங்களை உபயோகித்து வேலை செய்தல். இது ஒரு மேலாளருக்குத் தேவையான ஒரு மேலாண்மைத் தத்துவம். மமோசி பின்பற்றுவது இதையே. அவரால் என்ன செய்ய முடியுமோ, அதில் முழுக் கவனமும் செழுத்தி, காரியமாற்றுகிறார். தனது பலவீனமான தருணங்களில் மௌனமாக இருந்து விடுகிறார்.

பதவியேற்றதும், முதன் முதலில் அமெரிக்காவில், முஷாரஃபைச் சந்தித்த பின், சொன்னார் “முஷாரஃப் நல்ல மனிதராகத் தெரிகிறார். அவருடன் நாம் உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்” மிகத் தேர்ந்த அரசியல்வாதியான முஷாரஃப், சர்தாரைத்தின்று ஏப்பம் விட்டு விடுவார் என்று பேசப் பட்டது. ஆனால், அதன் பின் மமோசி அவரைக் கண்டு கொள்ளவேயில்லை. மமோசிக்குத் தெரியும், நமக்கு உண்மையான போட்டி, அமெரிக்காவும் சீனாவும்தான், பாகிஸ்தான் அல்ல. அது, உத்திரப்பிரதேசம் அளவு உள்ள ஒரு நிலப்பகுதி. அவ்வளவே. அது மட்டுமின்றி அவருக்கு பஞ்சாபிகளையும், காஷ்மீரிகளையும் மிக நன்றாகத் தெரியும். அதிகம் உணர்ச்சி வசப் படுபவர்கள் – எல்லைகளைத் திறந்து வைத்தால், எல்லாம் சரியாகி விடும் என்பது அவர் தீர்வு. இது நடந்து முடிய நாட்களாகும். ஆனால், அதுதான் ஒரே வழி. ஏனெனில், பங்காளிச் சண்டைகள் அரிவாள் அல்லது கோர்ட்களில் தீர்வது கடினம். மனங்கள் திறக்க வேண்டும். எனவே, காஷ்மீர் எல்லைக்கோட்டுக்கான தீர்வைப் பேசாமல், எல்லைகளைத் திறந்து விட்டார். இன்றைய உலகில், எல்லைக்கோடுகள் ஒரு பொருட்டே இல்லை எனபது அவரது வாதம்.

George Bush இந்தியா வந்தது தெரியும். ஆனால் என்ன விஷேஷம் என்பது முக்கியம். இது வரை, இந்தியா வந்த எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும், தன் பதவிக்காலம் முடிய ஆறு மாதங்கள் இருக்கையில், இந்தியாவுக்கு உல்லாசப் பயணம் வருவார்கள். தாஜ்மகால் முன்பு மனைவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு போவார்கள். ஜிம்மி கார்ட்டர், பில் கிளிண்டன் முதலிய அனைத்துத் தலைவர்களும் அவ்வாறு சுற்றுப் பயணம் வந்தவர்களே. அவர்களை, lame duck president என அழைப்பார்கள். ஆனால், புஷ் தனது ஆட்சியின் துவக்கத்திலேயே இந்தியா வந்தார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும், அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் முக்கிய விஷயம் என்னவெனில், இந்தியா, அணுசக்திப் பரவல் சட்டத்தில் கையெழுத்திடாத நாடு. கையெழுத்திடாமலேயே, அணுகுண்டுப் பரிசோதனைகள் நடத்தியதால், பல அணுசக்தி நாடுகளுக்கு இந்தியாவின் மீது தவறான கருத்துக்கள் இருந்தன. அந்த நாடுகளின் பார்வையில், அது சரியே. அமெரிக்காவும், 98 அணுகுண்டுச் சோதனைகளுக்குப் பின் இந்தியா மீது தடைகள் விதித்திருந்தது. தடைகள் என்றால், அணுகுண்டு மற்றும் ஆயுதங்கள் தொடர்பான ஏற்றுமதிகளுக்குத் தடை.

அப்படித் தடைகள் இருந்ததை மறந்து, அமெரிக்கா அணு ஒப்பந்தம் போட வந்தது, அமெரிக்காவின் கொள்கையில் ஏற்பட்ட மிகப் பெரும் மாற்றத்தைக் குறிப்பதாகும். அதற்கு, மிக முக்கிய காரணம், மமோசி ஒரு மிக நல்ல மனிதர் என்று புஷ் நினைத்ததே. அது மட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகளில், அமெரிக்கா இந்தியா உறவுகள் மேம்பட்டிருந்ததும் ஒரு உபரிக் காரணம். மமோசி, மிகச் சாமர்த்தியமாக, அணுசக்திக் கழகத் தலைவர் காகோட்கர் மற்றும் சிறந்த அணு விஞ்ஞானிகளுடன் ஒரு குழுவை ஈடுபடுத்தி, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை முடித்தார். அமெரிக்காவும், இந்தியாவை ஒரு அணு ஆயுத நாடு என்பதைச் சுற்றி வளைத்து ஒப்புக் கொண்டது. “இதை விடச் சாதகமான ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் பெறமுடியாது. இந்தியா இதைச் செயல் படுத்தலாம்” என, இந்தியாவின் மிக முக்கிய அணு விஞ்ஞானியான டாக்டர்.M.R. ஸ்ரீனிவாஸன் தெரிவித்திருக்கிறார். இது மமோசியின் மிகப் பெரிய சாதனை எனக் கூறலாம். ஏனெனில், முதல்முறையாக, அமெரிக்கா இந்தியாவை ஒரு சரி சமமான நாடாக மதித்து ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதைச் செயல் படுத்தினால், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு மேலும் உயரும். அணுசக்தி தொடர்பான தொழில் நுட்பங்கள் இந்தியாவுக்கு மிக எளிதாகக் கிடைக்கும்.

2004 ல், காங்கிரஸ் பதவி ஏற்கும் எனத்தெரிந்ததும், மீடியாக்கள் அதை இந்தியப் பொருளாதர வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் எனபது போல் பிரச்சாரம் நடத்தின. பங்குச் சந்தை சரசரவென விழுந்தது. ஆனால், விழுந்த வேகத்திலேயே மீண்டும் எழுந்து, 4000 புள்ளிகளில் தொடங்கி இன்று 17000 புள்ளிகள் உயர்ந்த்திருக்கிறது. வியாபாரிகளின் குடுமி சும்மா ஆடாது. அவர்களுக்குத் தெரியும், மமோசி + ப சி கூட்டணியை விட இந்தியப் பொருளாதாரத்தை நிர்வகிக்க நல்ல குழு கிடைக்க முடியாதென. இன்று இந்தியா, உலகிலேயே மிக வேகமாக வளரும் இரண்டாவது நாடு. (சைனா முதலிடத்தில் உள்ளது). சைனாவில், அரசின் பேச்சுக்கு எதிர் பேச்சு கிடையாது. ஆனால், மமோசியின் பேச்சை அவர் மந்திரிகளே பலர் கேட்க மாட்டார்கள். இப்படி ஒரு ஜனநாயக நாட்டில், தொடர்ந்து 4 வருடங்களாக 8 சதவீத வளர்ச்சி கொடுப்பது மிகப் பெரிய சாதனை. முதல் முறையும் கூட.

ஆனால், பிரதமரான பின்பு, மமோசியின் சாதனைகள் பொருளாதாரம் மற்றும் வெளியுறவுத்துறைகளில் மட்டுமே இருப்பதுதான் பலவீனம். உள்நாட்டு சட்ட ஒழுங்கு, வேளாண்மை, கட்டமைப்பு முதலிய துறைகளில் முன்னேற்றங்களே இல்லை. நிதியமைச்சர் மமோசி, பிரதமர் மமோசியை விடச் சிறந்தவர் என்பதே உண்மை. பிரதமராக அவர் தம்மை முழுதும் தயார்படுத்திக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால், அவரை விடுத்து, மற்றவர்களை நோக்குகையில், இவரே மேல் என்று தோன்றும். மேலும், பொருளாதாரம் இன்று மிக முக்கியமாகி விட்ட நிலையில், ஒரு பொருளாதார நிபுணர் பிரதமராயிருப்பதுதான் சரியானதும் கூட.

குணம் நாடி, குற்றமும் நாடி, மிகை நாடி நோக்குகையில், மமோசி இந்தியாவின் தலையெழுத்தை மாற்றி அமைத்த மாபெரும் மனிதராகத் தோன்றுகிறார். இன்று உலக அரங்கில், இந்தியா ஒரு வல்லரசாக மதிக்கப் படுவதற்கு, அவர் முழுமுதற் காரணம். கடுமையான உழைப்பாளி. கடந்த 4 வருடங்களில், உடல் நிலை சரியில்லாத நாட்களைத் தவிர, மற்ற நாட்களில் ஓய்வெடுத்ததில்லை. எளிமையானவர். நிதியமைச்சராக இருந்த காலத்தில், இந்தியாவின் பொருளாதார நிலை கருதி, ஊதியம் பெற்றுக்கொள்ளாமல் உழைத்திருக்கிறார்.

ஒரு குக்கிராமத்தில் சாதரணக் குடும்பத்தில் பிறந்த, மமோசி, தமது உழைப்பால் உயர்ந்த கதை அனைவருக்கும் உத்வேகத்தைக் கொடுக்கக் கூடியது. 1991 பட்ஜட் உரையில் அதை நெஞ்சம் நெகிழ்ந்து சபையோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்துல் கலாமும், இவரும் சம காலத்தில் இந்தியாவை வழிநடத்தியது, இந்தியாவின் அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும். நமது, சம காலத்தில், பொருளாதாரப் பிரச்சினகளைச் சந்தித்த ரஷ்யா, பல துண்டுகளாக வெடித்துச் சிதறியது. மக்கள் சொல்லொண்ணாத் துயரம் அனுபவித்தனர். பிரேசில், அர்ஜெண்டினா போன்ற நாடுகளும் அவ்வாறே துயரங்களைச் சந்தித்தன. ஆனால், நமது மன மோகன சிங்கரின் வழிகாட்டுதலில், இந்தியா அது போன்ற சோதனகளை, மிக எளிதாகக் கடந்து இன்று மிகப் பெரும் வல்லரசாகும் வழியில்
நடந்து கொண்டிருக்கிறது. அதைச் செய்து முடித்த அந்தப் பெருமகனோ, சாதனைகளை நின்று பார்த்து மகிழ நேரமில்லாமல், “miles to go before I sleep” என்று தன் பாட்டுக்கு தன் வழியில் சென்று கொண்டிருக்கிறார்!


Series Navigation