மண் பயனுற வேண்டும்

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

நம்பி.


சூரிய ஒளியில் ஓடும் சோழன் பேரூர்தி தனியார் அகலச்சாலையில் ஜிவ்வியது. கூடவே வரும் முல்லையாற்றில் கங்கை நீர் நாணலோடு சிலுப்பியது. சித்திரைச் சூரியனுக்கு எப்போதும் போல் சுள்ளென்று கோபம்.

மேலமருதூரில் இறங்கினான் வள்ளுவன். பளீரென்று விரிந்த பச்சை. தூரத்தில் அய்யனார் கோயில். கூப்பிடு தூரத்தில் ஊராட்சிக் கூடம். உள்ளே போனான்.

‘என்னங்க வேணும் ‘ கணனியிலிருந்து நிமிர்ந்தவன் கண்ணுக்குள் லென்ஸ்.

‘இங்க வாசுகி வீட்டுக்கு எப்படிப் போகனும் ? ‘

‘உட்காருங்க. உங்க பேர் சொல்லுங்க

‘வள்ளுவன் ‘

‘அடையாள எண் ? ‘

’33-2-110-764 ‘

‘திருநெல்வேலியா. அடையாள அட்டை கொடுங்க ‘

கணனி வாங்கிப் படித்துவிட்டு கட்டை விரல் ரேகை கேட்டது. சரி பார்த்துவிடு அட்டையைத் துப்பியது. வாசுகி என்று கணனியில் அடித்தான். திரையில் ஊரின் வரைபடம் தோன்றியது. வாசுகி வீடு மட்டும் பளிச் பளிச். ஒரு தாளில் நகல் எடுத்துக் கொடுத்தான்.

ஊருக்குள் சென்ற தார்சாலைக்கு பலகை வழி காட்டியது. முகில் வேன் சிக்கனமாய்ப் போனது. உள்ளே இரண்டு ஜப்பானியர்கள். சென்ற நூற்றாண்டு ஊழல் பணத்தையெல்லாம் சுத்தமாக வசூலித்து வட்டத்துக்கு ஒரு தொழிற்சாலை அமைத்ததில் மாட்டுத்திடல் இருந்த இடத்தில் பன்னாட்டுத் தொழில் நிறுவனம் அமைந்திருக்கிறது.

நிழலாய் வளர்ந்திருந்த வேப்ப மரங்களுக்கும், புன்னை மரங்களுக்கும் சின்னக் குருவிகள் தூது போயின. வள்ளுவன் ஒரு நம்பிக்கையுடன்தான் வாசுகியைப் பார்க்க வந்திருக்கிறான். அவன் ஜப்பானுக்கு பயிற்சிக்குச் சென்ற பொழுது அவளும் வந்து இருந்தாள். இனிமையாய்த்தான் பழகினாள். இப்பொழுது திடாரென்று போய்க் கேட்டாள் என்ன சொல்வாளோ ?. அப்படியே அவள் சரி என்றாலும் அவள் அப்பா சம்மதிப்பாரா ?. ‘முயற்சி செய்வோம் ‘ அதுதானே இன்றைக்கு மந்திரம். தேற்றிக்கொண்டான்.

ஒரே மாதிரி அளவாய் இருந்த வீடுகளில் எண்ணை சரி பார்த்து ‘டுட்டூய்ங்… ‘

அந்தக்கால மீனா அசப்பில் புடவையில் தோன்றினாள் வாசுகி.

‘வாங்க…. வாங்க…. வர்றதா ஒரு போன்கூட இல்ல. ரெண்டு மாசம் முன்னாடி வீடியோ கான்ஃபரன்ஸ்ல பார்த்தது. நல்லா இருக்கீங்களா ? ‘

‘ம்ம்…. தெரிஞ்சவங்க கல்யாணம். நம்ம ஸ்ரீதர் அய்யருக்கும், நீலாட்சி பறைச்சிக்கும் தஞ்சாவூர்ல கல்யாணம். இவ்வளவு தூரம் வந்தாச்சு. அப்படியே உங்களயும் பார்த்துட்டு போகலாம்னு….. ‘. பொய். அவளைப் பார்க்கத்தான் கல்யாணத்தை சாக்காக வைத்து வந்திருக்கிறான்.

‘ என்ன குடிக்கிறீங்க. குளிர்ச்சியா ? ‘

‘மோர் போதும் ‘

‘ஒரு நிமிஷம். எடுத்துட்டு வர்றேன் ‘

அறையில் 3-D TV. அலமாரியில் திருக்குறள், பாரதியார், காலேஜ் கலக்கல்ஸ், குமுதம் எல்லாம் CDயில். அறை முழுதும் சன்னமாய் இழையும் வாணிஜெயராம். தெருக்கோடி சிவன் கோயிலில் யாரோ அடித்த மணி ஓசைக் கேட்டது.

மோறும் முறுக்கும் வந்தது. கொஞ்சம் வேலை, கொஞ்சம் ஊர்க்கதை என்று நொறுக்கிவிட்டு

‘ முனியனுக்கு வேதியல்ல இந்த வருஷம் நோபல் பரிசு கிடைச்சிடுமா ‘

‘வாய்ப்பிருக்கு… ‘ என்றான் சுரத்தில்லாமல். வந்த விஷயமே வேறு. என்னன்னவோ பேசிக்கொண்டு. எங்கே ஆரம்பிப்பது ?. எப்படிக் கேட்பது ?. பேசாமல் எதுவும் கேட்காமல் போய்விடலாமா ?

‘என்ன பழைய சுஜாதால வர்ற வஸந்த் மாதிரி லொட லொடன்னு பேசுவீங்க. அமைதியாய் இருக்கீங்க ‘. அவன் கண்களுக்குள் அவள் எதிர்ப் பார்க்கும் பதிலைத் தேடினாள்.

‘நான் ஒன்னு கேட்டா தண்டனை வாங்கிக் கொடுத்துட மாட்டாங்களே ‘

‘சொல்லுங்க ‘. மடையா நீயாய் கேட்பாய் என்றுதானே காத்திருக்கிறேன்.

‘நாம ஜப்பான்ல சந்திச்சோமே சாக்கமோட்டோ ‘

‘ஆமாம்.. உங்ககூட காரைக்குடில படிச்சவர்னு சொன்னீங்க ‘

‘போன வருஷம் நில நடுக்கத்துல அவனோட குடும்பமே போயிடிச்சு…. அவன் இப்போ இந்தியக் குடியுரிமை வாங்கலாம்னு ஆசைப்படுறான். நாம வருஷத்துக்கு 50 ஜப்பானியனத்தான் அனுமதிக்கிறோம். அதுல அவனுக்குக் கிடைக்காது. உங்க அப்பா எம்.பி ஆச்சே. அவருக்கு வருஷத்துக்கு ரெண்டு உண்டுல்ல. அதுல அவனுக்கு சிபாரிசு பண்ண முடியுமா ? ‘. சிபாரிசு என்பதை வாய்க்குள்ளேயே சொல்லிக்கொண்டான்.

‘சிபாரிசா…. ‘ யோசித்து, ‘அப்பா நான் சொன்னா செய்வாங்க. சொல்றேன் ‘. என்றாள். அவ்வளவுதானா ?. இன்னொன்றும் கேளேன் என்கிறாள் கண்களால்.

‘ரொம்ப நன்றி ‘. மற்றெதெல்லாம் ஃபிக்சர் போனில் என்கிறான் கண்களால் சிரித்து.

***

நம்பி.

nambi_ca@yahoo.com

Series Navigation

நம்பி

நம்பி