மண்டைக்காடும் இந்து எழுச்சியும்

This entry is part [part not set] of 32 in the series 20060210_Issue

கற்பக விநாயகம்


மண்டைக்காட்டைப்பற்றி எனக்குத் தெரிந்த வரலாற்றை எழுதும் முன் பாரதி பற்றிய எனது சந்தேகத்தைப் பதிவு செய்துவிடுவது உத்தமம். தங்கம்மா பாரதி ஒரு புத்தகத்திலே எழுதி இருந்தால் உண்மையாகி விடுமா ?

தாய் வழியில் குல தெய்வமானால் என்ன அவர் வழியிலே குலதெய்வமானால் என்ன, பிராமண குலத்தில் உதித்த பாரதிக்கு கள்ளு, சாராயமும் சேவற்கறியும் கேட்கும் மாடன் எவ்வாறு உறவுமுறையானது என்ற மெய்ப்பொருள் காண புத்தகம் நோக்கி அலைவானேன் ? சுடலை மாடன் எனும் நடுகல் வீரனின் வழிபாட்டை வைதீக தர்மத்துள் இழுக்கும் முயற்சி தங்கம்மாள் பாரதி காலத்திலேயே ஆரம்பித்து விட்டதென்றே எண்ணுகிறேன். (சுடலை மாடனை சக்கரைப் பொங்கல் திங்க வைத்த இந்துத்துவ சக்திகள் குறித்து ஜெயமோகன் ‘மாடன் மோட்சம் ‘ எனும் சிறப்பான கதை ஒன்றை எழுதி இருக்கிறார்). ஆக பாரதிக்கு தாய் வழியில் மாடன் குல தெய்வமானது, கேப்பையில் நெய் வடிந்த அன்றுதான் இருக்கும் என நம்புகிறேன். ஆகவே பாரதியின் பார்வையில் மாடனைக் காடனை வணங்கும் மதியிலிகாள் உழைக்கும் இந்து மக்கள்தானே!!!

மண்டைக்காடு கலவரம் குறித்த கமிசனின் அறிக்கையை வெளியிடுவது எனது முந்தைய கட்டுரையின் நோக்கமன்று.

ஆனால் கமிசன் சொன்ன ஒரு பரிந்துரையை திருவாளர்கள் அரவிந்தனும் மலர்மன்னனும் வெளியிட்டதால் கமிசன் சொன்னதன் சாராம்சத்தைச் சொல்லிவிடுவதுதானே முறை.!

வேணுகோபால் கமிஷன் அறிக்கையில் தெள்ளத்தெளிவாகவே மண்டைக்காடு கலவரத்தில் ஆர் எஸ் எஸ் இன் பிரச்சாரமும், அது நடத்தி வந்த ஷாக்காக்களும் அதன் கலவரப் பங்களிப்பும் பதிவாகி உள்ளன. மேலும் சந்தேகம் உள்ளோர் அண்ணா அறிவாலய நூலகத்தில் கிடைக்கும் அந்த அறிக்கையை வாசிப்பார்களாக.

இறுதியில் வேணுகோபால் சில பரிந்துரைகளை எம் ஜி ஆர் அரசுக்கு வேண்டியிருந்தார். அவை பின்வருமாறு.

1) கலவரத்துக்குக் காரணமான ஆர். எஸ். எஸ். இயக்கம் தடை செய்யப்பட வேண்டும்.

2) ஆர். எஸ். எஸ். வளரப் பெரும் காரணமான மதமாற்றத்தைத் தடை செய்ய வேண்டும்.

இரண்டும் எம்ஜிஆரால் கடைப்பிடிக்கப்படவில்லைதான்.

மலர்மன்னனும் அரவிந்தனும் முதல் பரிந்துரையான ஆர் எஸ் எஸ் தடை குறித்து மறைத்ததன் உள்நோக்கம் என்ன ?

(வேணுகோபாலின் அறிக்கையில் ஆர் எஸ் எஸ் இன் பங்கு குறித்த ஆங்கில வடிவம்:

‘The RSS adopts a militant and aggressive attitude and sets itself up as the champion of what it considers to be the rights of Hindus against minorities. It has taken upon itself to teach the minorities their place and if they are not willing to learn their place to teach them a lesson. The RSS methodology for provoking communal violence is: a) rousing communal feelings in the majority community by the propaganda that Christians are not loyal citizens of this country; b) deepening the fear in the majority community by a clever propaganda that the population of the minorities is increasing and that of the Hindus is decreasing; c) infiltrating into the administration and inducing the members of the civil and police services by adopting and developing communal attitudes; d) training young people of the majority community in the use of weapons like daggers, swords and spears; e) spreading rumours to widen the communal cleavage and deepen communal feelings by giving a communal colour to

ny trivial incident. ‘)

சரி விசயத்துக்கு வருவோம். மண்டைக்காடு பகவதி அம்மன் உருவான கதையில் இருந்தே ஆரம்பிப்போம்.

திருவாங்கூர் அரசன் ராமவர்மாவுக்குப் பிறந்தவர்கள் 7 ஆண்கள் (ராமன் பிள்ளை, பப்புப் பிள்ளை உட்பட 7 பேர்).

அவ்வரசு மருமக்கள் வழி அரசு. அரசனுக்குப் பிறகு பட்டம் கட்டுபவர், அரசனின் உடன்பிறந்தாளின் மகனே. ராமவர்மா இறந்த பிறகு அரியணையை அவரின் அக்காளின் மகன் மார்த்தாண்ட வர்மா ஏற்கிறார். ராமன் பிள்ளை, பப்புப்பிள்ளை உள்ளிட்ட எழுவருடன் அவருக்கு தீராப் பகை மூண்டு எழுவரையும் மார்த்தாண்ட வர்மா கொலை செய்தார். அவர்களின் வழித்தோன்றல்களை அக்காலத்தில் இழிவு செய்யக் கருதி மண்டைக்காடு மீனவப் பெண்களுக்குக் கட்டாய மணம் செய்வித்தார். அப்போது மீனவக்குடியினர் (முக்குவர் ?) மதம் மாறி இருக்கவில்லை. நெய்யூர் மிசனரியுடன் திருவாங்கூர் அரசுக்கு நல்லுறவு திகழ்ந்த காலம் அது. மீனவப்பெண்கள் அரசனிடம், கொடுங்கலூர் பகவதி போன்று தங்களுக்கும் மானியத்துடன் ஒரு பகவதி கோவில் வேண்டினர். மார்த்தாண்ட வர்மா சர்வ மானியத்துடன் அனுமதித்தார். அப்போதிலிருந்து நெய்யூர் மிசனரியை சேர்ந்த கிறிஸ்தவர்களும், மண்டைக்காடு மீனவர்களும் வழிபட்டு வந்த ஸ்தலமே மண்டைக்காடு பகவதி கோவில். காலப்போக்கில் மண்டைக்காடு மீனவர்கள் கிறிஸ்தவம் தழுவிய பின்னரும் இவ்வழிபாட்டினை மேற்கொண்டனர்.

கிருஸ்துவர்களின் வழிபாட்டுத் தலம் ஒன்றும் அந்தப்பகுதியில் உள்ளது. அவர்கள் புதன்கிழமை தோறும் நடத்தும் பூசை வேளையில் சர்ச்சை நோக்கி ஒலிபெருக்கி ஒன்று திருப்பப்பட்டு இரைச்சல் அதிகமாய்ப் பாடல் ஒலித்தது இந்துத் தரப்பிலிருந்து. சத்தத்தைக் குறக்கச் சொல்லும் வேண்டுகோளை வல்லாந்திரமாய் மறுத்த தரப்பு கலவர விதையை ஊன்றியது.

(இதே பார்முலாப்படி திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் மசூதி அருகே மேளம் அடித்து விநாயகர் ஊர்வலமாய் 80களின் இறுதியில் கலவரச்சூழலை உருவாக்கியது)

1980 க்கு பிறகு ஆர். எஸ். எஸ். மண்டைக்காட்டில் மூக்கை நுழைத்த பிறகுதான் பிரச்சினையே உருவாகிறது.

ஏன் ஆர்.எஸ்.எஸ். இவ்விடத்தை தேர்ந்தெடுத்தது ?

(இது மயிர் பிளக்கும் வாதமெல்லாம் அல்ல. தேதிகளையும், இடத்தையும் தேர்வு செய்வதில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட மதத் தீவிரவாத இயக்கங்களுக்கு என ஓர் அரசியல் உண்டு. செப்டெம்பர் 25 இல் ராமர் கோவில் ரத யாத்திரையை இந்துத்துவா ஆரம்பித்தது ஏன் என்றால் அன்றுதான் வி.பி. சிங் கின் மண்டல் கமிஷன் அமுலுக்கு வந்த நாள். மண்டல் கமிஷனால் பிற்பட்டோர் பயனடைவதைத் தடுக்கவே அதை வெளிப்படையாய் எதிர்க்காமல் கருமாதி செய்ய ராமனை அழைத்தார் அத்வானி.

டிசம்பர் 6 ஐ மசூதியை இடிக்க தேர்ந்தெடுத்ததன் நோக்கம், அன்றுதான் இந்து மதத்திற்கு மிகப்பெரும் சவாலாய்த் திகழ்ந்த அம்பேத்கர் இறந்த நாள். இன்றைக்கு டிசம்பர் ஆறை அம்பேத்கருடன் நினைக்க முடியாமல் செய்து விட்டதே இந்துத்வா – அதுதான் தந்திர அரசியல்).

அது 1981. பெப்ரவரி மாதம். நெல்லை மாவட்டம் தென்காசி வட்டத்தின் குற்றால மலைச்சாரலை ஒட்டிய மீனாட்சிபுரம். இந்திய அளவில் எங்கும் இந்த ஊரின் பெயர் எதிரொலிக்கிறது. ஏன் ?

அங்கு தலித் மக்கள் கூண்டோடு இஸ்லாமுக்கு மாறினர். சங்கராச்சாரி ஓடி வந்தார். வாஜ்பாய்ி விரைந்து வந்தார். மதுரை ஆதீனம் என்ன திருப்பனந்தாள் மடம் என்ன.. அற நிலையத்துறை அமைச்சர் ஆர் எம் வீரப்பன் என்ன…எல்லோரும் வந்து கெஞ்சினார்கள். தலைக்கு ஒரு லச்சம் தாரோம் திரும்பி வாங்க என்று… எதற்கும் மசியவில்லை அம்மக்கள்.. சமத்துவம் இல்லா இம்மதத்தை விட்டு வெளியேறியதை சரி என்றே சொன்னார்கள்.. இந்து தர்மக் காவலர்களுக்கு அவமானம்.. அச்சம். இப்படியே விட்டால் சங்கராச்சாரியின் காலைக்கழுவி தீர்த்தம் பருகும் ஆட்கள் குறைந்து விடுவரே என்ற நியாயமான மன உளைச்சல் வேறு.

(2 ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாறிய அம்மக்களை ம.க.இ.க. பேட்டி கண்டனர். அப்போதும் அவர்கள் சமத்துவ வேட்கை பற்றியே சொன்னார்கள். இழி நிலை மாற இஸ்லாம் சென்றதில் அவர்களுக்கு கோபம் ஏதும் இல்லை. ஆதாரம்:- மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்டுள்ள ‘பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள் ‘ வீடியோ சி.டி.)

அந்த சி.டி. இல் இஸ்லாத்துக்கு மாறிய தலித் கேட்கிறார் ‘முஸ்லிமா மாறுனா பொண்ணு தர்ரேன்னு பாயிமாருங்க சொல்றாங்க. நீங்க பொண்ணு குடுப்பீங்களா ? ? ‘ இதற்கு என்ன பதில் சொல்வார் மலர்மன்னன் ?

ஒருவேளை இஸ்லாம் சென்ற தலித்கள் திரும்பவும் தாய் மதத்திற்கு திரும்புவாரேயாயின் அவர்களுக்கு சடங்கு செய்ய ஆரிய சமாஜிகள் மீனாட்சிபுரத்தில் ஒரு மண்டபம் கட்டி வைத்தனர்.

அது 25 வருசத்தில் ஒரு தடவை கூட பயன்படுத்தப் படாமல் நாய்கள் உறங்கும் இடமாய் இருப்பதைப் பார்க்கலாம் இன்னும்.

இதை நேர் செய்ய செயற்கையாய் ஒரு இந்து ஒற்றுமையை உருவாக்கிடவே மண்டைக்காட்டை தேர்ந்தெடுத்தார்கள்.

1981 இல் 200 தலித்கள் மதம் மாறியதும் அதனை மீட்கச் செய்த முயற்சிகள் பலிக்காமல் போனதும், 1981 ஜூனில் டில்லியில் ஆர் எஸ் எஸ் கூடியது.

12 அம்சத்திட்டங்களை வரையறுத்தது. அதில் ஒன்றுதான் நெல்லைக்குப் பக்கத்து மாவட்டத்தில் கலவர விதை ஊன்றுதல்.

இல கணேசன் ஒரு பேட்டியில் இதை விளக்கமாகக் கூறுகிறார் ‘களப்பணி செய்ய குமரி விரைந்தேன். பல நூறு கிராமங்களுக்கு ஜோல்னாப் பையுடன் சென்று ஷாக்காக்களை உருவாக்கினேன் ‘. (ஆதாரம் – அதே சி.டி.யில் ஒப்புதல் தரும் மீனாட்சிபுரம் நபர்)

ஆனால் மலர்மன்னன் இந்தக் களப்பணி விசயத்தில் கூட பொய்யாய் சுந்தர ராம சாமி வீட்டில் தங்கியதாய் கதை அளக்கிறார். காலமாகி விட்டவரிடம் நாம் சென்று ஆதாரம் கேட்க முடியாது என்ற தைரியத்தில். சு.ரா. வின் பெயரைச் சொல்லி இவ்வாறு போலிப் பெருமை கொண்டாடுவதுதான் இப்போது பேஷன் போலும்.

மண்டைக்காடு கலவரம் நடந்தபோது தினமணி பத்திரிக்கையில் தினந்தோறும் சாவு எண்ணிக்கை, கைது, தீ வைப்பு எனக் கொட்டை எழுத்து செய்திகள் வந்தமை மங்கலாக நினைவில் உள்ளன. குன்றக்குடி அடிகளார் அமைதி யாத்திரை அங்கு நடத்தினார்.

கலவரம் நடந்த கொஞ்சம் நாளில் தாணுலிங்க நாடார் கைது செய்யப்பட்டார். அவர்தான் அப்போதைய இந்து முன்னணி தலைவர்.

இதைக் கண்டித்து ஒரு சுவர் எழுத்தை தூத்துக்குடி பஸ் ஸ்டாண்டின் கழிப்பறை சுவரில் பார்த்த ஞாபகம். ‘சிங்கத்துக்கு கடிவாளா ? தாணுலிங்க நாடார் கைது ‘ என்று நினைவில் உள்ளது. இச்சம்பவம் நடந்த ரெண்டு வருசம் கழித்து 1984ல் சட்டமன்றத் தேர்தல். கலவரத்தின் பலனை இந்து முன்னணி அறுவடை செய்ய தென் மாவட்டங்களில் வேட்பாளர்களைக் களம் இறக்கியது. தூத்துக்குடி தொகுதியில் கூட ஒருவர் நின்றார் (அருணாசலம் என நினைவு). எனக்கு விவரம் தெரிந்து அவ்வேட்பாளருக்கு அவ்வூரின் சிவன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெருவில் ஸ்வஸ்திக் சின்னம் பொறித்த விளம்பரங்கள் இருந்தன. பாவம் 946 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார். ஆனால் பாலச்சந்திரன் என்பவர் பத்மனாபபுரம் தொகுதியில் இந்து முன்னணி சார்பில் தேர்வானார். இத்தொகுதி கலவரம் நடந்த குமரி மாவட்டத்தில் உள்ளது.

1985 வாக்கில் குமரி மாவட்டத்து நண்பர் சிவக்குமார் என்பவர் அவ்வூர்களின் ஷாக்கா பற்றி பயமுறுத்தும் பல விசயங்களை சொல்லி இருக்கிறார். அங்கு சின்னஞ் சிறுவர் முதற்கொண்டு கராத்தே, சைக்கிள் செயின் சுற்றல் போன்ற தேச நிர்மாணப்பணிகள் செவ்வனே நடந்தனவாம்.

பின்னாளில்தான் அக்கலவரம் குறித்த பல விவரங்களை அறிய முடிந்தது.

ராம கோபாலன், இல கணேசன் போன்ற தலைவர்கள் 8 மாதங்களாகவே சின்னஞ்சிறு ஊர்கள் வரை சென்று களப்பணி ஆற்றி மண்டைக்காட்டை உலகப்படத்தில் இடம் பெற வைத்து விட்டனர்.

இந்த 2 சம்பவங்களுக்கும் பிறகு (மீனாட்சிபுரம், மண்டைக்காடு) எம் ஜி ஆர் கோவில்களில் சமபந்தி விருந்து எனும் கூத்தை ஆரம்பித்து வைத்தார். இதன் மூலம் சாதி ஒழிந்து விடும் என்று யாரோ சொன்ன யோசனை அது. கோவில்களின் மடைப்பள்ளியில் பன்னூறு ஆண்டுகளாய் சமைத்து வரும் மேல் சாதி ஆளின் சமையலை வரிசையில் உட்கார்ந்து தின்னால் சாதி எப்படி ஒழியும் ?

முதலில் பெருங்கோவில்களின் மடைப்பள்ளி சமையல் காரர்களாய் ஒடுக்கப்பட்ட பிரிவினரை நியமித்து அவர்களின் சமையலை அனைவரும் உண்பதில் இருந்துதானே ஆரம்பிக்க வேண்டும் என்று ஆ.சிவ சுப்பிரமணியன் தனது ‘சமபந்தி அரசியல் ‘ எனும் கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார்.

****

vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்