மடியில் நெருப்பு – 28

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

ஜோதிர்லதா கிரிஜாஆய்வாளர் சத்தியானந்தத்துக்கு வியப்பு ஏற்படவில்லை. அவர் விஜயகுமாரை அமைதியாக ஏறிட்டுப் பார்த்து, “ அந்த லெட்டரைக் காட்டுவியா, விஜயகுமார்? இப்பவாச்சும் உண்மையை ஒத்துக்கிட்டியே! வா, வா . . . உள்ளே போய்ப் பேசலாம்,” என்றார்.

இருவரும் உள்ளே போனார்கள்.

“சார்! என்னை மன்னிச்சிடுங்க, சார். அந்த லெட்டரை நான் கிழிச்சுப் போட்டுட்டேன்,” என்ற அவனை அவர் சற்றே எரிச்சலுடன் பார்த்தார்.

“என்னப்பா இது, இப்படிப் பண்ணிட்டே? பரவால்லே. பரவால்லே. அழாதே. லெட்டரைப் படிச்சியில்லே?”

“ ம்.. . .”

“அப்ப அதிலே என்ன எழுதி யிருந்திச்சுன்றதையாச்சும் சொல்லு. ஒரு சின்ன விவரம் கூட ஒதுக்காம சொல்லு.”

“சார்! தவிர்க்க முடியாத சூழ்நிலையிலே தூக்கு மாட்டிக்கிறதாவும் தன்னை மன்னிக்கும்படி கேட்டும் எனக்கு ஒரு லெட்டர் எழுதி யிருந்திச்சு. தன்னோட வீடு, சேமிப்பு எல்லாம் என்னைச் சேரணும்னு உயில் எழுதி வெச்சிருக்கிறதா அதிலே சொல்லியிருந்திச்சு. கூடவே இன்னொரு கவரும் இருந்திச்சு. அதிலே போலீஸ் கமிஷனரோட விலாசத்தை எழுதி வச்சிருந்திச்சு. அதை நான் பெர்சனலா போலீஸ் கமிஷனர் கிட்ட குடுக்கணும்னும் சொல்லியிருந்திச்சு. எனக்கு ஒரே ஆவல். பிரிச்சுப் படிச்சுட்டேன். அப்பாலே பயந்து போனேன். போலீஸ் கமிஷனருக்குன்னு அட்ரெஸ் பண்ணியிருந்த கவரைப் பிரிச்சது குத்தமாச்சேன்னுதான். அதனாலதான் அக்காவுடைய லெட்டரைப் பத்தி உங்ககிட்ட பொய் சொன்னேன்.”

சத்தியானந்தம் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அவனையும் உட்கார்த்திய பின், “ சரிப்பா. போனது போச்சு. அதைப் பத்திப் பரவால்லே. அதிலே என்ன எழுதியிருந்திச்சு? அதைச் சொல்லு! அது போதும். மத்ததை நான் பாத்துக்குறேன்,” என்றார்.

“வார்த்தைக்கு வார்த்தை நெனப்பு இல்லே, சார். ஆனா மொத்த விஷயமும் நெனப்பு இருக்கு. தண்டபாணின்ற ஒரு ஆளோட பஸ் ஸ்டாப்லே சிநேகமாச்சுன்னும் காலப் போக்குலே அது லவ்வா மறிடிச்சுன்னும் சொல்லியிருந்திச்சு. அப்பாலே, ஒரு நாள் அந்தாளு, தன்னோட அம்மாவுக்கு ரொம்ப உடம்புக்கு முடியல்லைன்னும், ஆம்பளையான தன்னால அவங்களுக்குப் பணிவிடை செய்ய முடியல்லைனும், ஒரே ஒரு நாள் ராத்திரிக்கு மட்டும் வந்து தங்கி அவங்ளைப் பாத்ரூமுக்குக் கூட்டிட்டுப் போறது, கொள்றது மாதிரியான பணிவிடைகளைச் செய்துட்டுக் காலையிலே புறப்பட்டுப் போயிக்கலாமுன்னும் மத்தாநாளு காலையிலே யாரோ சொந்தக்காரப் பொண்ணு அவங்களைக் கவனிச்சுக்க வந்துடும்னும் சொன்னதை நம்பி அக்கா அவனோட வீட்டுக்குப் போயிருக்கு. ஆனா போன இடத்துலே அது மாதிரி யாருமே இல்லையாம். அந்தாளு அக்காவை வலுக்கட்டாயமாக் கற்பழிச்சிருக்கான். அக்காவைக் கற்பழிச்சதோட நிக்காம, அதை அந்தாளு ப்ளூ ·பில்ம் வேற ரகசியமா எடுத்திருக்கான். அதைச் சொல்லி அக்காவைப் பயமுறுத்தி ரெண்டு லட்சம் கேட்டிருக்கான். கொடுக்காட்டி, அதைக் கேசட்டா ரிலீஸ் பண்ணிடுவேனு ப்ளேக் மெயில் வேற பண்ணியிருக்கான். அதனால, அக்கா முதல்லே வீட்டை விக்க முயற்சி பண்ணியிருக்கு. ஆனா, பணத்தையும் வாங்கிக்கிட்டு, ப்ளு ·பில்மையும் கேசட்டா அவன் போட மாட்டான்கிறது என்ன் நிச்சயம், அப்படிப் போட்டான்னா அது எப்படித் தனக்குத் தெரியவரும், தெரிய வந்தாலும் அதை எப்படித் தடுக்க முடியும் அப்படின்னெல்லாம் அக்காவுக்கு நிறைய சந்தேகம் வந்திருக்கு. அதனால, வீட்டை விக்கிற நெனப்பை விட்டுட்டுத் தற்கொலை பண்ணிக்கிடிச்சு. அதே சமயம், அவனைப் போலீஸ்ல மாட்டணும், தன்னை ஏமாத்தினது மாதிரி அவனை மத்த பொண்ணுங்களை ஏமாத்த விடக் கூடாதுன்ற எண்ணமும் அக்காவுக்கு வந்திருக்கு. அதனாலதான் அந்த லெட்டரை எழுதிச்சாம். லெட்டரோட கடைசியிலே அப்படி எழுதியிருந்திச்சு. . .”

“சரி . . . அந்த லெட்டரை என்னைக்குக் கிழிச்சே? கிழிச்ச துண்டுகளை யெல்லாம் எங்கே போட்டே?”

“நேத்துதான் சார் தெருக் குப்பைத் தொட்டியிலே எல்லாத் துண்டுகளையும் ஒரே பந்தா உருட்டிப் போட்டேன். குப்பை அள்றவங்க தினமும் வர்றதில்லே. அதனால அந்தக் காகித உருண்டை அங்கேயேதான் கிடக்கும். போய் எடுத்தாரட்டா, சார்? “

“போ,போ. முதல்லே அதைச் செய். எல்லாத் துணுக்குகளையும் பிரிச்சு இணைச்சு ஒழுங்காக்கிப் படிக்க வருதான்னு பாப்போம்.”

“சார்! போலீஸ் கமிஷனருக்கு அட்ரெஸ் பண்ணியிருந்த லெட்டரை நான் பிரிச்சதுக்கு என்னை தண்டிப்பாங்களா, சார்?”

“அப்படியெல்லாம் எதுவும் ஆகாது. நான் அதுக்கு உத்தாரவாதம் தர்றேன். போ! போய் அதை எடுத்துட்டு வாப்பா, முதல்லே. இன்னைக்குன்னு பாத்துக் குப்பை அள்றவங்க வந்து தொலைக்கப் போறாங்க! ஓடு.”

விரைந்து வெளியே போன விஜயகுமார் ஐந்தே நிமிடங்களில் திரும்பிவந்து அந்தக் காகித உருண்டையைச் சத்தியானந்தத்திடம் கொடுத்தான்,

“நல்ல காலம், சார்! நான் எப்படி உருட்டிப் போட்டேனோ, அப்படியே இருந்திச்சு.”

“சரி. இப்ப நாம ரெண்டு பேரும் என்ன பண்றோம்னா, இந்தக் காகித உருண்டையை மெதுவாப் பிரிச்சு, எல்லாத் துணுக்குகளையும் தனித்தனியா எடுத்துச் சுருக்கமே இல்லாம் நீவிட்டு, அதுக்கு அப்புறமா வரிசைப் படுத்தி முழு லெட்டரையும் கொண்டுவரப் போறோம்.”

“சரி, சார்!”

அரை மணிப் பொழுதுக்குள் காகிதத் துணுக்குகள் ஒரு முழுக் கடிதமாக உருப் பெற்றன. எந்தத் துணுக்கும் தவறிப் போயிருக்கவில்லை.

“சார்! இந்தாங்க எங்க அக்காவுடைய ·போட்டோ. அடையாளத்துக்கு வச்சுக்குங்க. எங்கிட்ட இன்னொண்ணு இருக்கு. ஒருக்கா, அந்த ப்ளு ·பில்ம் உங்க கையிலே மாட்டிச்சுன்னா எங்க அக்காவை அடையாளம் கண்டுக்க இது உதவியாயிருக்கும். அப்படிக் கிடைச்சா, அதை எரிச்சுடுங்க, சார். எங்க அக்கா ரொம்பவே மானஸ்தி, சார்!” என்ற விஜயகுமார் சட்டென்று நொறுங்கி அழுதான்.

“ஆகட்டும்ப்பா. கிடைச்சா, அப்படியே செய்யறேன். அழாதேப்பா, விஜயகுமார்!” என்ற சத்தியானந்தம் அவன் தோளைத் தட்டிக்கொடுத்தார்.

“உங்க அக்காவுடைய இந்தப் படம் ரொம்ப அவசியம்னு சொல்லமாட்டேன். ஏன்னா, அவங்க பாடியை நாங்க பல கோணங்கள்லே படம் பிடிச்சிருக்கோம். இருந்தாலும் இது ரொம்பத் தெளிவாயிருக்கிறதால எடுத்துக்குறேன். அப்பால திருப்பிக் குடுத்துடறேன்”

“சரி, சார்.”

“அப்ப நான் புறப்பட்றேன், விஜயகுமார்!”

“கொஞ்சம் இருங்க, சார். காப்பி குடிச்சுட்டுப் போலாம்.”

“வேணாம்ப்பா! போய்ச் சாப்பாடு சாப்பிடணும். . .தைரியமாயிருப்பா! அப்புறம் இன்னொண்ணு. உங்க அக்கா காரியமெல்லாம் ஆனதும் நீ காலேஜ் ஹாஸ்டல்லே சேர்ந்துடுப்பா. இந்த வீட்டில இருந்தா எப்ப பாரு அக்கா ஞாபகமே வந்துட்டிருக்கும். அங்கேயும் வரும்னாலும், இந்த அளவுக்கு இருக்காது. என்ன? சரியா? அப்புறம் ஏதாச்சும் உதவி வேணும்னா என்னை வந்து பாரு, “ என்ற சத்தியானந்தம் தமது முகவரி அட்டையை அவனிடம் கொடுத்தார்.

“ரொம்ப தேங்க்ஸ், சார்.”

வீடு திரும்பிய சத்தியானந்தம் தம் அறைக்குப் போய் உட்கார்ந்து நீண்ட நேரம் யோசித்தார். ‘தண்டபாணியைப் பிடித்தாக வேண்டும். இந்த வட்டாரத்துக்குப் புதியவனான என்னால் தனியாக அதைச் சாதிப்பதென்பது இயலாத ஒன்று. சக ஊழியர்களில் யாரை நம்புவது, யாரை நம்பாதிருப்பது என்பது இன்னும் புரியவில்லை. . . ‘

அரை மணி நேரம் போல் மண்டையை உடைத்துக் கொண்டதன் பிறகு ஓர் அருமையான திட்டம் அவருக்குத் தோன்றியது. உற்சாகத்துடன் எழுந்தார்.

“ரம்மி! ரம்மி!”

“என்னங்க! என்னாச்சு? இம்புட்டுச் சத்தமாக் கூப்பிட்றீங்க?”

“நான் இன்னைக்கு லீவ் போடப் போறதில்லே. கமலா கேஸ்லே சில திடீர்ச் செய்திகள் கிடைச்சிருக்கு. எல்லாத்தையும் அப்பால சொல்றேன். இப்ப சாப்பிட உக்காரலாமா?”

“ வாங்க, வாஙக. உக்காருங்க. நீங்களாவது, லீவ் எடுக்கிறதாவது!”

“கோவிச்சுக்காதேம்மா!”

“சரி, சரி.”

சத்தியானந்தம் உற்சாகத்துடன் சாப்பாட்டு மேசையின் முன் உட்கார்ந்தார்.

. . . தமது காவல் நிலையத்தை யடைந்ததும், சத்தியானந்தம் தலைமைக் காவலரைக் கூப்பிட்டார்

“நீங்க எத்தினி வருஷமா இங்கே இருக்கீங்க, ஹெட் கான்ஸ்டபிள்?”

“என்னை நீங்க முத்துன்னே கூப்பிடுங்க, சார்! . . .மூணு வருஷமா இருக்கேன், சார். எதுக்குக் கேக்குறீங்க?”

“அப்ப . . . இந்த வட்டாரம் முழுக்க உங்களுக்கு அத்துபடின்னு சொல்லுங்க.”

“ஆமாங்க.”

“என்னைப் பத்தி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க.”

“ரொம்பக் கண்டிப்பானவருன்னு கேள்விப்பட்டிருக்கோம். ஒத்தை ஆளா பைக்குலே துரத்திட்டுப் போய் ரெண்டு குற்றவாளிகளைப் பிடிச்சு அதுக்கு மெடல் எல்லாம் வாங்கி யிருக்கீங்கன்னு தெரியும். ஒரு நேருக்கு நேர் மோதல்லே குண்டடி பட்டு ஆஸ்பத்திரியிலே பதினஞ்சு நாள் இருந்ததும் தெரியும்.”

சத்தியானந்தம் மர்மமாய்ப் புன்னகை புரிந்தவாறு, “அப்படி யெல்லாம் கண்டிப்பும் கறாருமாக் கடமைகளைச் செஞ்சு என்னையா நமக்கு லாபம்? சர்க்கார் ஆ·பீசுகள்லே கழுதையும் குதிரையும் ஒண்ணுதானே?” என்றார். அவரது பார்வை ஆழமாய் முத்துவின் மீது பதிந்திருந்தது.

“ . . . . . . . . .”

“நானும் இனிமே கொஞ்சம் மாறிக்கலாம்னு இருக்கேன். கடமை, கடமைன்னு அலைஞ்சு என்னத்தையா கண்டோம்? என்னத்தைக் கண்டோம்? கையிலே நாலு காசு சேர மாட்டேங்குது. வாங்குற சம்பளம் வயித்துப் பாட்டுக்கே சரியாப் போகுது! பொஞ்சாதிக்கு ஒரு நகை வாங்கிப் போட முடியுதா, பட்டுப் புடவை வாங்கித் தர முடியுதா? சொல்லுங்க!”

“ஆமா, சார்.”

“நானும் எல்லாரையும் போல மாற்¢ட்றதுன்னு தீர்மானிச்சுட்டேன், முத்து. கட்டுப்படியாகல்லே. கடமையாவது, கத்திரிக்காயாவது! அவனவன் காரென்ன, பங்களா என்னன்னு வெச்சிருக்கான். நான் இன்னும் ஒரு சொந்த வீடு கூடக் கட்டல்லே. வீட்டிலே பொஞ்சாதியோட பிடுங்கல் சகிக்க முடியல்லே. (ரம்மி! என்னை மன்னிச்சுடும்மா!) . .. .”

முத்துவின் புன்னகை அகலமாகிக்கொண்டே வந்து இறுதியில் காதளவு நீண்ட இளிப்பில் சென்று நின்றது.

“ஆமா, சார். நானே சமயம் பாத்து இது பத்தி உங்களாண்ட பேசணும்னு இருந்தேன். ஆனா அய்யா ரொம்பவும் கண்டிப்புன்னு கேள்விப் பட்டிருந்ததாலே எப்படி அந்தப் பேச்சை எடுக்கிறதுன்னு தயங்கிட்டிருந்தேன். நான் அனுபவத்திலேர்ந்து சொல்றேன், சார், நம்மச் சுத்தி இருக்கிறவங்க எப்படி நடக்கிறாங்களோ அப்படியே நாமும் நடந்துக்கிட்டாத்தான் மீண்டு வரலாம். இல்லாட்டி, கூட இருக்கிறவங்களே நமக்குக் குழி வெட்டிறுவாங்க!”

சத்தியானந்தத்துக்கு வேர்க்கத் தொடங்கி யிருந்தது. குற்றவாளியை மடக்கிப் பிடிப்பதன் பொருட்டு ஒரு பொய்யான போர்வையைப் போர்த்திக்கொண்டிருந்தாலும் அவர் வாயிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்த சொற்கள் அவரைச் சங்கடப் படுத்திக் கொண்டிருந்தன.

அப்போது தொலைபேசி மணியடிக்க, சத்தியானந்தம் அதை எடுத்துத் தமது நிலையத்தின் பேரை அறிவித்தார்.

“நான் ஐ.ஜி.. பேசறேன். . .”

“குட் மார்னிங், சார்.”

“குட் மார்னிங். . . உங்க கிட்ட ஒரு அர்ஜென்ட் விஷயம் பேசணும். ·போன்ல வேணாம். இன்னைக்கு சாயங்காலம் காஸ்மாபாலிட்டன் கிளப் வாசல்லே என்னை வந்து பாருங்க.”

“சரி, சார். கண்டிப்பா வந்து பாக்கறேன்.”

சத்தியானந்தம் எதற்காக இருக்கும் என்கிற யோசனையுடன் முகவாயை வழித்துக் கொண்டார்.

jothigirija@vsnl.net

தொடரும்

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா