துரத்தப்பட்ட நிழல்

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

ஹெச்.ஜி.ரசூல்



பேசும் உயிருள்ள பொம்மையை
சிநேகிதியாய் பாவித்தும்
சோர்வுற்று துக்கத்தில்
காற்றின் மிதப்பில் தியானித்திருந்தது
நிழல்

என் உடலின் உருவத்தை
கட்டாந்தரையில் வரைந்துப் பார்த்த
ஒளியின் திவலைகளுக்கு நன்றி சொல்லி
முன்னே மண்டியிட்டுக் கிடக்கும்
உன்னைப் பார்த்து புன்னகைத்தேன்

பக்க வாட்டிலும் சிலநேரம்
முன் தொடர்ந்து செல்லும்
அந்த நிழலை கொல்வதற்கு
துரத்திக் கொண்டுவரும்
கட்டாரிகளைப் பார்த்து திகைத்து
கைகூப்பி வரங் கேட்டேன்
வெறும் நிழலல்ல
என் உடம்பின் கண்ணுள்ள
காதுள்ள தரிசனம்

இதனை உடனழித்து
வேறொரு உருவம் தீட்ட
எந்த விரல்களாலும் முடியாது.
அல்லது இந்த உருவத்தையே
மறுபடியும் தீட்டிப் பார்க்கவும் கூட


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்