மடியில் நெருப்பு – 18

This entry is part [part not set] of 33 in the series 20061228_Issue

ஜோதிர்லதா கிரிஜா


சூர்யா திகைப்புற்றுத் தடுமாறியதெல்லாம் கண நேரத்துக்குத்தான். தன்னையும் மீறித் தாழ்ந்து விட்ட விழிகளை உயர்த்தி, “ஓ! அதுவா! நான் முதல்ல தலைவலி மாத்திரை வாங்குறதுக்குத்தான் மருந்துக் கடைக்குப் போனேன். மாத்திரைக்குக் காசு தர்றதுக்கு ஹேண்ட் பேக்ல கையை விட்டேனா ? பர்சை ஆ·பீஸ்லயே விட்டுடுட்டது தெரிஞ்சிச்சு. மருந்துக்கடை எங்க ஆ·பீஸ்லேர்ந்து அஞ்சு நிமிஷ நடை. ரோட்டை வேற க்ராஸ் பண்ணணும். பர்ஸை மேஜை மேல விட்டேனா, இல்லாட்டி, ட்ராயர்ல விட்டேனான்னு நெனப்பு வரல்லே. எங்க ஹெட் க்ளார்க் அஞ்சரை மணிக்கு மேலதான் கெளம்புவாரு. அதான் அவருக்கு ·போன் போட்டு, இப்படி இப்படின்னு விஷயத்தைச் சொன்னேன்!”

அனந்தநாயகி திகிலடித்துப் போய்விட்ட முகத்துடன், “பர்ஸ் இருந்திச்சா?” என்றாள்.

“இருந்திச்சு. மேஜை மேலயே வெச்சிருந்திருக்கேன். ஹெட் க்ளார்க் எடுத்து வெச்சிருந்தாரு. நான் உடனே திரும்பிப் போய் வாங்கிக்கிட்டேன். . . .” – அம்மா நம்பிவிட்டது புரிந்ததும், சூர்யா தானே தன் முதுகில் தட்டி மனத்துள் தன்னைப்` பாராட்டிக்கொண்டாள்.

சற்றுப் பொறுத்துப் பின்கட்டில் சூர்யாவை எதிர்கொண்ட சுகன்யாவின் முகத்தில் மட்டும் அவளை நம்பாத நமட்டுப் புன்னகை தவழ்ந்துகொண்டிருந்தது.

இருவர் பார்வைகளும் சந்தித்துக்கொண்ட கணத்தில், சுகன்யா, சிரிப்பை அடக்கிக்கொண்டு, “நல்லாவே ரீல் விட்றேக்கா!’ என்றாள்.

“சீச்சீ ! ரீல் இல்லேடி. மெய்யாலுமேதான். . . . அது சரி, நான் மெடிக்கல் ஷாப்புக்குப் போனதும் ·போன் போட்டதும் அம்மாவுக்கு எப்படித் தெரிஞ்சிச்சு?”

“எதிர்வீட்டு மாரியப்பன் மூலமாத் தெரிஞ்சிச்சு.”

“மவுன்ட் ரோட்ல என்னை அஞ்சு மணிக்குப் பார்த்தவன் நான் வீட்டுக்குத் திரும்பி வர்றதுக்குள்ளே இங்கே எப்படி வந்தான்?”

“அவந்தான் சைக்கிள் சவாரிக்காரனாச்சே! நீ பஸ்சுக்குக் காத்திட்டிருந்த நேரத்தையும் கணக்குல சேர்த்துக்க.”

“ஆமாமா.”

“அக்கா! இன்னைக்கு சாவித்திரி உன்னோட ஆளைப்பத்தி இல்லாத பொல்லாத கேள்வியெல்லாம் கேட்டிச்சு. நீ சொல்லச் சொன்னதை மட்டுந்தான் சொன்னேன். இன்னும் எங்க வீட்டுக்கே தெரியாது, அதனால ரகசியமா வச்சுக்கன்னேன். அப்பால அவரு பேரென்ன, எங்க வேலை செய்யிறாருன்னு கேட்டிச்சு. நானே அதையெல்லாம் எங்கக்கா கிட்ட இன்னும் கேக்கல்லேன்னு சொல்லி மழுப்பிட்டேன்.:

“நல்ல வேலை பண்ணினே!”

“ஏங்க்கா! நேத்து மெய்யாலுமே நீ அந்தாளோட வெளியில போகல்லையா?”

“சத்தியமா இல்லே!”

“நேத்தைக் கதையை விடு. ஆனா, இனிமேற்பட்டு தெனமும் அஞ்சு மணிக்கு மேலே உனக்கு ஆ·பீஸ்ல வேலை இருக்கும், இல்லியா?”

“சரிதாண்டி, அதிகப் பிரசங்கி! சும்மா இரு. . .” என்று அவளை அடக்கிவிட்டு நகர்ந்த சூர்யா முகத்தைத் திருப்பிக்கொண்டு நடந்தாள்.

. . . மறு நாள் காலை ராஜாதிராஜன் கண் விழித்த போது, ஏழு மணியாகிவிட்டது. அவன் எழுவதற்கென்றே காத்துக்கொண்டிருந்தது போல் தொலைபேசி கணகணத்தது. தண்டபாணியாகத்தான் இருக்கும் எனும் ஊகத்தால் கிளர்ந்த எரிச்சலுடன், “ஹல்லோ!” என்றான்.

“நாந்தாப்பா – தண்டபாணி பேசறேன்.”

“சொல்லுப்பா. நான் இப்பதான் முழிச்சுக்கிட்டேன். கொஞ்சம் பொறுத்துப் பேசுப்பா. நான் இன்னும் பல்லு கூட வெளக்கல்லே.”

“நேத்தே நீ ·போன் பண்ணுவேன்னு எதிர்பார்த்தேம்ப்பா. “

“·போன் பண்றேன்னு நான் உங்கிட்ட சொல்லவே இல்லியே!”

“சொன்னாத்தானா! சரி, விடு. . . . அம்பது தர்றேன்னிருக்குறே! மொதத் தவணை பத்தாயிரத்தை எப்பப்பா குடுப்பே? அதைப் பத்தி ஒண்ணுமே சொல்லல்லையே?”

“தண்டபாணி! இத பாரு. நான் சொல்ற நாள்லே நீ என்னோடா ஆ·பீசுக்கு வா. அப்ப பேசலாம். நீ நேத்து என்னோட பேசினப்போ, எங்கப்பா என் ரூம் வாசல்ல வந்து நின்னிருக்காரு. நான் கவனிக்கல்லே. ஆனா, நல்ல காலம்! அப்பா என்னோட முழுப் பேச்சையும் கேக்கல்லேன்னு தோணுது. . .

தண்டபாணி சிரித்தான்.

“எதுக்குடா சிரிக்கிறே? இதிலே சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு?”

“இல்லே, நாம் பேசினது முழுக்கவும் அவரு கேட்டிருந்தாருன்னா எப்படி இருக்கும்னு நெனச்சுப் பார்த்தேன், சிரிப்பு வந்திடிச்சு.”

“உனக்குச் சிரிப்பாவா இருக்கு? என்னோட நெலைமை என்ன ஆகியிருக்கும்! சரி, சரி. அப்பா நுழைஞ்சுக்கிட்டிருக்காருன்னு நெனைக்கறேன். ·போனை வச்சுடு. அம்பதுக்குப் பதிலா முப்பதா வாங்கிக்க. . . . அப்புறம் பேசுவோம். . . . “ பேச்சைத் துண்டித்துவிட்டு, ராஜாதிராஜன் பல் துலக்கப் பின்கட்டுக்குப் போனான்.

அவனைச் சந்திக்கும் போது, காவல்துறையின் சந்தேகப்பட்டியலில் அவனது பெயர் இடம் பெற்றிருப்பது பற்றிச் சொல்லி, அந்தச் சாக்கில், சூர்யாவை இழப்பதற்கான ஈட்டுத் தொகையைக் கணிசமாய்க் குறைத்துவிட முடியும் என்று அவன் நம்பிக்கை கொண்டான். கூடிய வரையில் அவனுடன் தகராறு எதுவும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் எண்ணினான். கொலைக் குற்றத்துக்குக் கூடத் தயங்காதவன் என்பதால், அவனைக் கவனமாய்க் கையாள வேண்டும் என்றும் நினைத்தான். அவன் அளவுக்குத் தான் மோசமில்லை என்று திருப்திப்பட்டுக்கொள்ளவும் செய்தான்.

அவனது தொழிலில் தான் மிகவும் நேரடியாக ஈடுபடாத போதிலும், மாட்டிக்கொள்ளும் சாத்தியக்கூறு இருந்த உண்மை அவனது முதுகுத்தண்டைச் சில்லிடச் செய்தது. எனினும் அப்படி நடந்தால், அப்பாவின் செல்வாக்கால் தன்னால் தப்பிவிட முடியும் என்று அவன் நம்பினான். அப்பா சொன்னது போல், இனி அவனைச் சிறுகச் சிறுகவேனும் ஒதுக்கிவைப்பதுதான் புத்திசாலித்தனம் என்று அவனுக்குத் தோன்றியது.

பல் விளக்கிவிட்டு, முகம் துடைத்தவாறு அவன் திரும்பியபோது, கூடத்துக் கட்டிலில் ஜகந்நாதன் மல்லாந்து படுத்திருந்ததைக் கண்டான்.

“அப்பா!”

அவர் கண்களைத் திறந்தார்.

“இன்னைக்கும் அலுப்பா யிருக்காப்பா? கொஞ்ச நாளுக்கு ஜாக்கிங்கை நிறுத்துங்களேம்ப்பா!”

”அதெல்லம் இல்லே, ராஜா. நேத்து ராத்திரி சரியாத் தூங்கல்லே. ஏதேதோ யோசிச்சுக்கிட்டே இருந்தேனா, பனிரெண்டு மணிக்கு அப்பாலதான் தூக்கம் வந்திச்சு. . .”

“என்னப்பா யோசிச்சிட்டிருந்தீங்க?”

“அந்த தண்டபாணிப் பய சிநேகிதத்தை நீ விட்டா நல்லாருக்குமேன்றதைப் பத்தித்தான். “

“கொஞ்சம் கொஞ்சமா விட்டுர்றேம்ப்பா. ரொம்ப நாளைய சிநேகிதத்தை ஒரே நாள்ல முறிச்சுக்க முடியுமாப்பா? அதுக்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்பா.”

” நீ சொல்றது சரிதான். ஆனா எவ்வளவு சீக்கிரம் விட முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் விட்டுடப்பாரு. எதுக்குச் சொல்றேன்னா நீ அவனுக்கு வெறும் சிநேகிதன் மட்டுந்தான்னாலும், போலீஸ் கேஸ்னு வர்றப்போ அவனோட சம்பந்தப்பட்டவங்க எல்லாரையுமே விசாரிப்பாங்க. நம்ம பேரு எதுக்கு இதிலே அநாவசியமா அடிபடணும்? இல்லியா? நானும் ஒண்ணும் அரிச்சந்திரன் இல்லேதான். பிசினெஸ்னு வர்றப்போ, முன்னே பின்னே, அப்படி இப்படி இருக்கிறவன்தான். இருந்தாலும் என்னோட தவறுகள்லாம் சட்டத்துக்கு உட்பட்ட தவறுகள் . . . ஆனா, உன் சிநேகிதன் தப்பான தொழிலகள்னா செய்துக்கிட்டிருக்கான்னு தோணுது!”

அன்று பிற்பகல், அலுவலகத்தில் வேலை ஓடாமல் ஒரு கோப்பை ராஜாதிராஜன் புரட்டிக்கொண்டிருந்த போது, ஜகந்நாதன் அவனைத் தொலைபேசியில் அழைத்தார்.: “ராஜா! அப்பா பேசறேன். நீ உடனே கிளம்பி வா. . .”

“ஏம்ப்பா! உங்களுக்கு உடம்புக்கு ஏதானுமா?”

“அதெல்லாம் இல்லே. நீ உடனே வாயேன். . .” அவன் குழப்பத்துடன் உடனே புறப்பட்டான்.

jothigirija@vsnl.net
– தொடரும்,

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா