பொழுது விடிந்தது

This entry is part [part not set] of 35 in the series 20091106_Issue

இளங்கோ மெய்யப்பன்பொழுது சாய்ந்தது.
முத்துப்பட்டிணம் அமைதி அடைந்தது. சற்று நேரத்திற்கு முன்பு வரைக்கும் இருந்த ஆள் நடமாட்டம், சலசலப்பு, பிள்ளைகள் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த கோலியாட்டம், காய்கறியம்மாவின் கூவல், ஐஸ்பெட்டிக்காரனின் ஹாரன், நாயின் குலைத்தல், எல்லா சத்தமும் ஓய்ந்தது. இந்த ஊரிலா இவ்வளவு நடமாட்டம் இருந்தது என்று வியக்கும் அளவிற்கு அமைதி நிலவியது. லோகநாயகி அம்மன் கோயிலை ஒட்டியிருந்த ஊரணியருகே ஒன்றிரண்டுப்பேர் நின்றுக்கொண்டிருந்தனர்.
அந்த இடம்தான் முத்துப்பட்டிணத்திலேயே மிகவும் அமைப்பாக இருக்கும். கோயிலின் கோபுறம் கம்பீரமாக நிற்கும். சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் நடந்ததால் புதிதாகவும், பல வண்ணங்களால் தீட்டிய எழில் சித்திரமாகவும், ஒரு பார்வையாகவும் இருக்கும். கோபுரம் எதிரே பெரிய ஊரணி. தண்ணீர் இருபது அடிக்குக் கீழேதான் இருக்கும். கரையிலிருந்து தண்ணீருக்கு இறங்கிச்செல்ல நாலு பக்கமும் படிகள். ஊரணியை சுற்றியும் தென்னை மரங்கள். மாலை நேர தென்றல் காற்று அந்த தென்னங் கீற்றுகளை கிழித்துவந்து, ஊரணியின் தண்ணீரைத் தழுவி அந்த ஊருக்கே ஒரு தனி மணம் தரும். மாலை நேரங்களில் ஊரே அங்கேதான் கூடும்.
அம்பாளுக்கு ஐந்து மணி அபிஷேகமானதும் யாரும் உடனே வீடுதிரும்பமாட்டார்கள். கோயில் முகப்பில் சிலர், ஊரணிக் கரையில் பலர், இருக்கும் சில திறந்தவெளிகளில் சிறுவர்கள் பம்பரமும், கபடியும் விளையாடுவர். மல்லைகைப்பூ, சுண்டல், மாங்காய் என சிலர் விற்றுக்கொண்டுருப்பார்கள். இளம் பெண்கள் ஒன்றாக ஊரணி படிக்கட்டுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். முகம் கழுவி, சீவி, பொட்டுவைத்து, மல்லிகைப்பூ சூடி, விபூதி, குங்குமமிட்டு, பளிச்சென பல வண்ணங்களில் பாவாடையும், தாவணியும் அணிந்து, தாவணி நிறத்திற்கேற்ற வளையல், ரிப்பன் அணிந்து சிரித்து பேசி கொண்டிருப்பதை பார்ப்பதுதான் எவ்வளவு பரவசம். தாவணியில் இத்தனை நிறங்களா? ஒரு தாவணி வானவில்லையே அங்கு பார்க்கலாம். கோயிலுக்கு உள்ளே இருக்கிற அம்மனுக்கு எல்லா வயதிலும் பக்தர்கள், கோயிலுக்கு வெளியே இருக்கிற அம்மன்களுக்கும் வயது வரம்பின்றி பக்தர்கள். மாமியார், கணவன், குழந்தை, குடும்ப பாரம் என்று எதுவுமில்லாமல், எல்லாவற்றிர்கும் வாய்விட்டு சிரித்து, மனதில் தோன்றுவதை பயமின்றிப் பேசும் வயது அது.
எல்லோரும் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பவேண்டுமே என்றுதான் மனமின்றி கிளம்புவார்கள். உடலும் மனமும் சற்று களைப்பாகவே வீடு திரும்புவர். ஒரு நாள் உழைப்பிற்குப் பிறகு உடலில் வருத்தம் வருவது இயல்பு, வள்ளியம்மைக்கோ மனவருத்தமும் கூடவே வரும். தனிமையா, அமைதியா, இருள் சூளுவதா, களைப்பா, எதுவென்று தெரியாது, ஆனால் இந்த நேரங்களில் வள்ளியம்மைக்குள் ஒருவிதமான சோகம் மனதை அளுத்தும். வெளியே வந்து கதவை சாத்தினாள். தெருவை எட்டிப்பார்த்தாள். யாருமில்லை. இருக்கிற மூன்று தெருவிளக்கில் ஒன்றுதான் எரிந்தது. அதற்குக்கீழ் ஒரு நாய் படுத்துக்கொண்டிருந்தது. மற்ற இரண்டு தெருவிளக்குகள் வெகு நாட்களாக எரியவில்லை, எப்பொழுதுதான் அது இரண்டுக்கும் வெளிச்சம் வருமோ??
அந்தக் காலத்து பீயூசி வள்ளி. ஆறாம் வகுப்பு தாண்டாத பெண்கள் மத்தியில், ஆத்தங்குடி வரைக்கும் சென்று பத்தாம் வகுப்பு வரை படித்தாள். அதற்கு மேல் படிக்க வேண்டுமென்றால் தேவக்கோட்டை சென் மேரிஸுக்குத்தான் போகவேண்டும். அப்பாவிற்குப் பிடிக்கவில்லை. எதுக்குப் படிக்கனும்? மெத்த படிச்சா எவன் கட்டிப்பான்? எப்படி மாப்பிள்ளை பார்ப்பது? அதிகம் படித்தால் சிரமம் என்று நினைத்த காலம் அது. கேள்வி கேட்காமல், அதிகம் பேசாமல், அறிவைப் பெரிதும் பயன்படுத்தாமல் குடும்ப வேலைகளை அமைதியக, யாரையும் தொந்தரவு செய்யாமல் தானாகவே பார்த்துக்கொண்டால் கெட்டிக்காரி. கெட்டிக்காரிக்கு அப்படி ஒரு அர்த்தம்.
அம்மாதான் ஆசைப்பட்டாள். “நான்தான் அடுப்படியும் கொல்லைப்புறமாவும் கிடக்கிறேன். நீயாவது படிச்சு நல்லா வா”. தன்னைவிட தன் பிள்ளைகள் நன்றாக வரவேண்டும்; வந்தால் சிறிதளவும் பொறாமையின்றி மனமாற மகிழ்ச்சியடையும் உன்னதமான உறவுதான் அம்மா. பீயூசி முடித்தவுடன் நல்ல வரன் வந்தது. அப்பா திருமணம் செய்துவைப்பதில் பிடிவாதமாக இருந்தார். “இந்தா பாரு, நல்ல இடம் வந்தா கழிக்காதே. இப்படித்தான் சுப்பு அவன் மக ஓவியம்னு வந்த இடத்தையெல்லாம் நொண்டிச்சாக்கு சொல்லி கழிச்சான், கடைசில என்னாச்சு? எது கிடச்சாலும் சரின்னு போய் தள்ளிவிட்டான்.” இந்த முறை அம்மாவால் வெற்றி பெற இயலவில்லை. 18 வயதில் திருமணம் நடந்தது. சுற்றம் சூழ சொந்தமும், பந்தமும் வந்து வாழ்த்த, வள்ளிக்கு ஒரு அடுப்படியும் கொல்லைப்புறமும் அமைந்தது.
கணவன் நடேசன் நல்லவன். ஆனால் அவ்வளவு கெட்டிக்காரத்தனம் பத்தாது. எந்தவிதமான கெட்டபழக்கங்களும் கிடையாது. சூதுவாது தெரியாது. எளிமையான பேச்சு, தோற்றம், எண்ணங்கள். செல்வத்தை ஈட்டவோ, சேமிக்கவோ, பெருக்கவோ சாமர்த்தியம் பத்தாது. எல்லாம் நன்றாக அமைவதா வாழ்க்கை? அமைந்ததை நன்றாக வைத்துக்கொள்வதுதானே வாழ்க்கை. வள்ளி அமைந்ததை ஏற்றுக்கொண்டாள். ஆனால், தனக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் பல காரியங்களில் நடேசனைவிட தான் சிறப்பாக செய்திருக்கலாம் என்று அவ்வப்போது தோன்றும். நடேசனிடத்தில் மட்டுமில்லை, நிறைய ஆண்களை பார்த்துப் பேசும் போது அவளுக்கு அந்த எண்ணம் வரும். சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அவளை வாழ்நாள் முழுதும் தொடர்ந்தது.
நடேசனுக்கு தன் தம்பி மேல் அலாதிப் பிரியம். தம்பி மாணிக்கம் நன்றாக படிப்பான். நல்ல பேச்சு, நகைச்சுவை, யாருக்கும் அவனிடத்தில் ஒரு வசீகரம் ஏற்படும். யாரிடத்தில் எதைப் பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதை நன்கு அறிந்தவன். எதையும் நகைச்சுவையாகவும் சுவையோடு சொல்லும் திறமையும் அவனிடம் இருந்தது. ஊரார் தன் காதில் விழும்படியே தன்னைவிட தன் தம்பி எல்லா விஷயத்திலும் எவ்வளவு சிறப்பானவன் என பேசக் கேட்டிருக்கிறான். ஆனால் அதை நினைத்து அவன் தம்பி மேல் பெருமைப்பட்டுருக்கிறானே தவிற பொறாமைப்பட்டதில்லை. வள்ளிக்கு வேறு மாதிரியாகத் தோன்றும். மாணிக்கத்தின் பேச்சுக்கு பின்னால் ஒரு சூதுவாது, தந்திரம் இருப்பது போலத் தோன்றும். சிறு வயதிலிருந்தே எல்லா விஷயத்திலும் தனிப்பட்ட கருத்து அமைத்துக்கொண்டதால், இதிலும் அவள் தனித்தே விளங்கினாள்.
நடேசன் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் பொழுதுதான் மாணிக்கம் பள்ளித்தேர்வை எழுதி முடித்தான். மாணிக்கம் ராமனாதபுரம் மாவட்டத்திலேயே இரண்டாம் மதிப்பெண்களைப் பெற்றான். சென்னை மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது. நடேசன் அப்பாவின் நண்பரின் சிபாரிசில் கோவை பேங்க் ஆப் மதுராவில் சேர்ந்தான். மருத்துவக்கல்லூரி படிப்பு முடித்தவுடன் முத்துப்பட்டிணத்தின் முதல் மருத்துவனானான் மாணிக்கம். ஊரே பெருமைப்பட்டுக்கொண்டது. நடேசனைப் பார்த்தால், மாணிக்கம் எப்படியிருக்கிறான் என்றுதான் ஊரே கேட்கும். வள்ளிக்கு அது சற்று சங்கடமாக இருக்கும். டாக்டர் இல்லைனா என்ன, நல்ல பேங்க் ஆபிசர்தானே, நல்ல மனுஷந்தானே, யாரும் மதிக்கலையே. படிப்பு, பதவி, இதுக்குத்தான் மதிப்பா? இவங்களை பத்தி யாருக்கு அக்கறை இருக்கு?
“அப்படி நினைக்காதே வள்ளி. எல்லாருக்கும் நம்ம ஊரு பையன் இப்படி நல்லா வந்துட்டானேன்னு ஒரு பெருமை. அவன் நல்லாயிருக்கான்னு தெருஞ்சுக்கிறுதுல ஒரு வேகம், அதான் என்னைப் பாத்தவுடனே அவன் ஞாபகம் வந்து கேட்கிறாங்க.” வள்ளிக்கு அப்படி தோன்றவில்லை. ஊரார் போகட்டும். தன் மாமனாரும் மாணிக்கத்துக்கே பேசுவதுபோலத் தோன்றும் வள்ளிக்கு.
“எனக்கு வயசாகிட்டுப்போகுதுடா. என்னாலே இந்த மில், ஆட்டோ பைனான்ஸ், மருந்துக் கடை எதையும் பாத்துக்க முடியலை. உங்க இரண்டு பேருல யாரு வந்து பாத்துக்கறீங்க? முத்துப்பட்டிணத்துக்கே வர வேண்டாம். காரைக்குடியில தங்கிக்கிட்டு பிள்ளைகளை படிக்கவைக்கலாம், இரண்டு நாளைக்கொருக்கா இங்க வந்து கடைகளை பாத்துட்டுப்போலாமே. அவனை கேக்கமுடியாது. சென்னைல பிரபலமான டாக்டர். பிராக்டீஸ் எல்லாம் விட்டு இங்க வரமுடியாது.”
வள்ளிக்கு கோபம் வந்தது. அவ்வளவு திறமைசாலினா காரைக்குடியிலும் பிரபலமாகட்டுமே. முத்துப்பட்டிணமே மெச்சுக்குதுல பெரிய டாக்டருணு. எல்லாரும் போய்க் காட்டுங்க. எல்லாத்துக்கும் மாணிக்கம். இதுக்கு மட்டும் இவரா?
“அப்படியில்ல வள்ளி. எனக்கோ ஓஹோனு வேலை ஒண்ணுமில்லை. பேங்க் வேலைதானே. மூணு வருஷத்துக்கொருக்கா மாத்துறான். நம்மளும் ஊர் ஊரா மாறிக்கிட்டே இருக்கோம். பிள்ளைங்க படிப்பு கெட்டுப்போகுது. எனக்கும் காரைக்குடி ரொம்ப பிடிக்கும். வசதியா இருக்கலாம். அப்பாவையும் வயசான காலத்தில பாத்துக்கிட்ட மாதிரி இருக்கும். பேங்க் சம்பளத்தைவிட கடையிலையும், மில்லுலையும் வர வருமானம் மூணு நாலு மடங்கு அதிகமா இருக்கும். எனக்கும் கிளெர்க் வேலை போர் அடிச்சுப்போச்சு. ஆபிசராவோ, மேனேஜராவோ வருவதற்கு எனக்குத் திறமை இல்லை. மாணிக்கம் ஏன் வரலைனு பாக்காதே. நமக்கு எது நல்லதுனு பாரு”. வள்ளி எப்பொழுதும் போல் இதற்கும் சம்மதித்தாள். குடும்பம் காரைக்குடிக்கு மாறியது. மாணிக்கத்தின் குடும்பம் சென்னை அண்ணாநகரிலேயே தொடர்ந்து வசித்து வந்தது. நடேசனுக்கு கலை, வித்யா என்று இரு பெண்கள், மாணிக்கத்துக்கு கதிர் என்ற ஒரே மகன்.
காரைக்குடிக்கு மாறிய சில நாட்களிலேயே நடேசனின் அப்பா இறந்துவிட்டார். நடேசன்தான் எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டான். அப்பா அளவுக்கு திறம்பட கடைகளை நடத்த இயலவில்லை. எல்லாம் சுமாராகவே ஓடியது. தனியார் வங்கிகள் அதிகம் வந்ததால், ஆட்டோ பைனான்ஸ் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆறு மாதத்தில் இழுத்து மூடிவிட்டான். மில் தொழிலாளிகள் அதிக சம்பளம் கேட்டு அடிக்கடி வேலை நிறுத்தம் செய்தனர். மருந்துக்கடை பரவாயில்லை. அப்பா நடத்தும்போது என்னாமோ எல்லாம் சுலபமா நடக்கிறமாதிரி இருந்தது. நாம எடுத்தி நடத்திப்பாத்தாதானே அதில் இருக்கும் சிரமங்கள் தெரியுது.
“ஏன் அண்ணே இவ்வளவு சிரமப்படுரீங்க? கொஞ்ச நாளாவே உடம்பையும் மனசையும் ரொம்ப வருத்துக்கிறீங்க. வேணும்னா ஒரு மேனேஜர் மாதரி போட்டுக்கலாமா? அவன் எல்லாத்தையும் பாத்துக்கட்டும். நம்ம கணக்கு மட்டும் சரி பாத்துட்டு மேற்பார்வை மட்டும் பாப்போம்”
வள்ளிக்கு பொத்திக்கொண்டு வந்தது. ஏன்? இவருக்குப் பாக்க தெரியாதா? வணிகம், வியாபாரம்னா அப்படித்தான். ஒரு சமயம் நல்லா நடக்கும், சில சமயம் சுமாராதான் நடக்கும். உடனே ஆளை மாத்திறதா? வணிகம் நல்லா நடக்காததுக்குப் பல காரணங்கள் இருக்கு. இவர்தான் காரணமா? அதுவும் எப்படி நாசூக்கா சொல்றான் பாரு. இவர் மேல என்னமோ பெரிய அக்கறை இருக்கிற மாதிரி காட்டி, எப்படி நகட்டுறான் பாரு. இனிக்க இனிக்கப் பேசினா ஊரு வேணும்னா ஏமாறலாம், எனக்குத் தெரியாது உன்னை பத்தி.
“கொஞ்ச நாள் நானே நடத்திப் பாக்கிறேன்டா. எனக்கு வேற என்ன வேலை. நல்லா வந்திடும், எனக்கு நம்பிக்கை இருக்கு.” மாணிக்கமும் உடனே சம்மதித்தான். “எனக்கொண்ணுமில்லைண்ணே, உங்க சிரமத்தைக் குறைக்கதான் வழி பாத்தேன். எதாவது முதல் போட்டு, புதுசா செய்யனும்னா சொல்லண்ணே, நான் பணம் தரேன். அப்புறம் அண்ணே, வர லாபத்தில எனக்கு பிரிச்சு தரனும்ணா நினைக்காதீங்க. நீங்கதான் வேலையை விட்டுட்டு வந்திருக்கீங்க, எல்லாத்தையும் நீங்களே வச்சுக்கங்க”
ஆதங்கமும், பொறாமையும் பெரும்பாலும் நமக்கு வெளியே தெரிகின்ற ஒரு சில வெளிப்புற விஷயங்களை வைத்தே வளருகின்றன. ஒவ்வொரு மனிதனிடமும், ஒவ்வொரு உறவிலேயும் நமக்குத் தெரியாதது நிறைய இருக்கின்றன. அவை தெரிய வந்தால், அந்த மனிதர்களைப் பார்த்து நாம் பொறாமைப் படுவதை நிறுத்திவிடுவோம். அப்பா, நல்ல வேளை எனக்கு அந்தக் கஷ்டங்கள் இல்லை என்று கூட நினைப்பு வரலாம்.
நடேசன் எதிர்பார்த்ததைப்போல வணிகம் சரி வரவில்லை. சகோதரர்களுக்கிடயேயான பொருளாதார வித்தியாசம் வளர்ந்துகொண்டே வந்தது. நடேசன் கிட்டத்தட்ட அதே நிலையில் இருக்க, மாணிக்கம் கோடீஸ்வரனானான். புகழ், பணம், சொந்தம், பந்தம், நண்பர்கள் கூட்டம், சுற்றுலாப் பயணங்கள் என வாழ்க்கை சீறும் சிறப்புமாக அமைந்தது. நேரடியாக அடித்துக்கொள்ளாவிட்டாலும் அண்ணியின் காழ்ப்புணர்ச்சி மாணிக்கத்தை சற்று விலக்கியேவைத்தது.
மாணிக்கத்தின் மகன் கதிருக்கு பிட்ஸ் பிலானியில் இடம் கிடைத்தது. ஊருக்குப்போய் எல்லார்கிட்டேயும் சொல்லிட்டுப்போனு அப்பாதான் சொன்னாங்க.
“அது எங்கே இருக்கு?”
“டெல்லிக்கு பக்கத்துல பெரியம்மா. ராஜஸ்தான்ல.”
“அது பாலைவனமாச்சே. அவ்வளவு தூரமா போய் படிக்கனும்? நம்ம ஆளுங்க யாராவது இருக்காங்களா?”
“சோகியாச்சி மகன் கணேசன் அங்கேதான் பெரியம்மா படிச்சான்”
“ஓ, அந்த காலேஜா? அங்கே பிராந்தி குடிப்பாங்களாமே? சிகெரெட்டு, கஞ்சா, குடினு எல்லாம் உண்டாமே.”
“நல்ல காலேஜ் பெரியம்மா. அங்கே படிச்சா நல்ல வேலை கிடைக்குமாம்”
“படிக்கப்போறோம்னு கெட்டு குட்டிச்சுவரா வராதே. நான் எங்க வித்யாகிட்டே சொல்லிட்டேன். நமக்கு அழகப்பாவுலே படி போதும். அவ வாங்குற மார்க்குக்கு எங்கே வேணும்னாலும் அவ போகலாம். நான் அதெல்லாம் நமக்கு வேண்டாம்னுட்டேன்.”
“சரி பெரியம்மா, எல்லாரையும் பாத்திட்டு அப்படியே கிளம்புறேன்”
“ஊருல எல்லார்கிட்டேயும் போய் பெருமையடிச்சுட்டு வர சொன்னாங்களா அப்பா?”
“அப்படியில்லை. சொல்லிட்டு வரச் சொன்னாங்க”
“எல்லாருக்கும் உங்களைப்பத்தி அம்புட்டும் தெரிந்சிருக்கே. இதுவும் தெரிஞ்சுக்கட்டும். யேர்காடுல காப்பி எஸ்டேட் வாங்கியிருக்கீங்கனு முருகப்பன் அண்ணன் சொல்லித்தான் எங்களுக்கே தெரியும். ஏன்? இவுககிட்டே ஒரு வார்த்தை சொல்லனும்னு தோணலியா உங்க அப்பாக்கு?”
“கடைசி வரைக்கும் கிடைக்குமானு தெரியல. அதான் எல்லாம் நல்ல படியா முடிச்சவுடனே பெரியப்பாட்ட சொல்லலாம்னு அப்பா நினைச்சாங்க. வித்தவங்களை முருகப்பன் அண்ணனுக்கு தெரியும். அவங்க சொல்லிட்டாங்க.”
“நல்லா அப்பா மாதிரியே சமாளிக்கிற”
சென்னைக்கு வந்தவுடன் அம்மாவிடம் சொன்னான்.
“இதுக்குத்தான் அவளை போய் பாக்க வேண்டாம்னேன். கேட்டீங்களா? பிள்ளை சொல்லிக்க வந்திருக்கான். ஒரு நல்ல வார்த்தை சொன்னாளா? அதோட வயித்தெரிச்செல்லெல்லாம் என் பிள்ளை மேல. பயமாயிருக்கு, ஒழுங்கா படிச்சிட்டு நல்லபடியா முடிச்சிட்டுவாடா.”
“நல்லா படிக்கிறது என் கையிலமா. என் படிப்பு மத்தவங்க புகழ்றதுனாலையோ, சபிக்கறதுனாலையோ இல்லைமா”
படிப்பு முடித்தவுடன் அமெரிக்கா சென்றான். மேலே படித்தான். கலிபோர்னியாவில் நல்ல வேலை. வித்யாவும் அழகப்பாவில் படித்துமுடித்து பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் சேர்ந்தாள்.
“எதுக்கு அமெரிக்கா? அங்கே இருக்கிற சம்பாத்தியத்தைவிட இப்ப இந்தியாவிலதான் எல்லாம் நல்லாயிருக்காம். எங்க வித்யா இங்கே இருந்துக்கிட்டே அவ்வளவு சம்பாத்தியம். அங்கே எல்லாருக்கும் வேலை போய் சாப்பாட்டுக்கே கஷ்ட்டப்படுறாங்களாமே. எல்லாம் திரும்புறாங்களாமே? அமெரிக்காலாம் சும்மா வெளில சொல்லிக்கறுத்துக்குதான். அங்கே எல்லாம் நாமதான் பாத்துக்கனுமாம்.” பார்க்கிறவர்களிடத்திலெல்லாம் வள்ளி சொல்லிக்கொண்டிருந்தாள்.
“இவுக தம்பி மகனுக்கு இப்ப பேசுறாங்களாம். அமெரிக்கானா எல்லாம் பொண்ணு தர யோசிக்கிறான். அங்கே போன பிறகுதான் தெரியுதாம், எல்லாம் ஏற்கனவே வேற எவளோடையோ இருக்கானுங்களாம். அப்பா அம்மாக்கு பயந்துக்கிட்டு சும்மா பேருக்கு இங்கேவந்து ஒன்னைக் கட்டிக்கிறானுங்களாம். பையங்க இப்படினா பொண்ணுங்க கல்யாணமே வேண்டாங்குதுங்களாம். எங்க வித்யாவை இப்பவே அவ்வளவு பேறும் செஞ்சுக்கிறோம்னு கேக்குறாங்க.”
“நம்ம முருகப்பன் அண்ணனோட பொண்ணை சொல்லுவோமா?” நடேசன் வள்ளியிடம் கேட்டான். “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நமக்கு எதுக்கு? நம்ம சொல்ற இடத்திலெல்லாம் அவுக செய்வாகளா? அவுகளை மாதிரியே பணக்கார வீட்டைத்தான் பாக்குறாகளாம். தெரியுமா உங்களுக்கு? சிங்கப்பூரு ஆனா ரூனா பேத்திக்கு பேசுராங்களாம் உங்க தொம்பி. இந்தா இருக்கிற முருகப்பன் பொண்ணை சொல்லுராங்களாம் இவுங்க. சும்மா கிடங்க.”
சிங்கப்பூர் செட்டியாரின் பேத்திக்கே நிச்சயமானது. சில பேருக்கு மட்டும் எப்படி எல்லாமே நினைக்கிற மாதிரி, சொல்லிவச்சபடி, எல்லாம் நல்லா நடக்குது? வள்ளிக்கு வியப்பாக இருந்தது. எனக்கு மட்டும் ஏன் எதுவுமே ஆசைப்பட்ட மாதிரி நடக்கமாட்டேங்குது? வரட்டும் வரட்டும். அரசன் அன்று கொல்லுவான். தெய்வம் நின்னு கொல்லும்.
கதிருக்குத் திருமணமாகி இரண்டாண்டிருக்குப் பிறகு, வித்யாவுக்கும் திருமணம் நடந்தது. அமெரிக்கா மாப்பிள்ளை. “நாங்க ஒண்ணும் அமெரிக்கா மாப்பிள்ளைனு அலையல. வரதெல்லாம் அமெரிக்கா மாப்பிள்ளைனு வருது. நாங்க என்ன பண்றது? ஜாதகத்திலே இவளுக்கு வெளிநாட்டு வாழ்க்கைனு இருக்காம், கல்லுப்பட்டி ஜோசியர் சொன்னாரு. “எல்லாம் உங்களுக்கு வெளிநாடாதான் வரும் ஆச்சி, இந்த ஜாதகம் பிரமாதமா பொருந்திருக்கு, பேசாம சட்டுபுட்டுனு முடிச்சிடுங்க”. திருமணம் முடிந்தவுடன் வித்யா அமெரிக்கா கிளம்பினாள்.
“வித்யா, கதிர்கிட்ட ரொம்ப வைச்சுக்காதே. நீ உண்டு, உன் குடும்பம்னு இரு. படிச்சோமா, வேலைக்கு போனோமா, பிள்ளையப் பெத்தோமானு இரு. அவங்கெல்லாம் ஒரு மாதிரி. நீதான் பாத்திருக்கியே, என்னையும் உங்க அப்பாவையும் எப்படி நடத்தியிருக்காங்கனு. அந்த அவமானமெல்லாம் எங்களோடே போகட்டும். நீயும் எதுக்கு வாங்கிக்கட்டிக்கணும்? இந்த செட்டிய வீடே வேண்டாம்டீ. மாப்பிள்ளையோட காலேஜ் நண்பர்கள், கூட வேலை பாக்கரவங்க அப்படி என்று நீயா நண்பர்களைப் பாத்துக்க.”
பரம்பரையாக கொடுக்கப்படவேண்டியது சொத்து, நிலம், வீடு, காசு, சம்பிரதாயம், கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் மட்டுமே. பகையும், போட்டியும், பொறாமையும் அல்ல. ஒவ்வொரு மனிதனும் தானிருக்கும் காலத்தில் விதைகளை விதைக்கிறான். அப்பா அம்மாவின் விதைதான் குழந்தையாக உருவெடுக்கிறது, அந்த குழந்தை என்ற கன்றை மரமாக வளர்த்து இந்த பூமியில் பிறருக்கு நிழல் தரவும், காய், கனி, மலர் தரவும் விட்டுச் செல்கிறான். அந்த மரத்தை தண்ணீர், உரம் போட்டு வளர்ப்பது போல நல்ல குணங்களை வைத்தே வளர்க்கவேண்டும். களையை எடுத்து தூரப்போடவேண்டிய நீங்களே, பகை, காழ்ப்புணர்ச்சி, பொறாமை என்னும் களைகளை நீங்கள் வளர்க்கும் மரத்துக்கு அருகில் நடலாமா?
அம்மா கதிரை அழைத்தாள். “டேய், வித்யா அங்கதான் வராளாம். எல்லாருக்கும் விழுந்து அடிச்சுக்கிட்டு செய்கிற மாதிரி நீ ஒண்ணும் அவளுக்கு எதுவும் செய்யவேண்டாம். இவள் மகதான் அறிவால முன்னுக்கு வந்து நல்லாயிருக்காளாம், நாம்மெல்லாம் பணக்கார வீட்டு சம்மந்தத்தாலேதான் இப்படி இருக்கோமா, ஊரு பூரா சொல்லிட்டுத் திரியுரா. நமக்கு எதுக்குடா வம்பு? துஷ்டரைக் கண்டா தூர விலகுனு சொல்லியிருக்காங்க இல்லை? அது போன் பண்ணா பேசு. சும்மா இந்த டின்னரு, லஞ்சுனு வீட்டுக்கெல்லாம் கூப்பிடாதே. நான் உன் நம்பரையே கொடுக்கவேண்டாம்னு இருந்தேன். உங்க அப்பாதான் பறந்து அடிச்சுகிட்டு நம்பரைத் தூக்கி கொடுத்துட்டாங்க. தான் ஆடலைனாலும் தான் சதையாடும்னு சொல்லுவாங்க. அண்ணன் மக, இவுக மக மாதிரியாம், அப்பா சொல்றாங்கடா. இந்த மனுசனுக்கு என்ன விளங்குது?”
வித்யா கணவனுடன் கலிபோர்னியா வந்து சேர்ந்தாள்.
“அண்ணா”.
உறவுகளை அந்த உறவுமுறையோடு சொல்லி அழைப்பதில்தான் என்ன ஒரு உரிமை, பாசம், அன்பு இருக்கிறது. கதிருக்கு வித்யாவின் குரல் கேட்டவுடன் ஒருவிதமான மகிழ்ச்சி. விதயா வந்தவுடன் கூப்பிடமாட்டாளா என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். வித்யாவுடன் பேசிப் பழக வாய்ப்பு இல்லாவிட்டாலும், அவளை தூரத்திலிருந்து கவனித்திருக்கிறான். நல்ல புத்திசாலி. நன்றாக படிப்பாள். கல்யாணக்காரர் வீடுகளில் வேலைக்காரர்களை ஒரு மனிதராக மதித்துப் பேசும் அந்த குணம்தான் அவளிடத்தில் அவனுக்கு பிடித்த குணம். அந்த குணமே அவளைப்பற்றி நிறைய கூறுகிறது என நினைத்தான்.
“எப்பமா வந்தே?”
“இப்பதான் அண்ணா. பயணம்போது நினைச்சுக்கிட்டே வந்தேன், அதான் வந்தவுடனே போன் பண்ணிட்டேன். அண்ணி எப்படியிருக்காங்க? சூர்யா எப்படியிருக்கான்? யாரு மாதிரி இருக்கான்?” அவள் பேச்சு இயல்பாகவும், நிஜமாகவும் இருந்தது. குரலில் பாசம் தெரிந்தது.
“எல்லாரும் நல்லாயிருக்காங்க. வந்து நீயே பாரேன். இன்னிக்கே வரியா? களைப்பா இருக்குனா பரவயில்லை, இன்னொரு நாளைக்குப் பாத்துக்கலாம்.”
“என்ன களைப்பு. அதெல்லாம் பரவாயில்லை. சூர்யாக்குட்டிய பாக்கணும் போல இருக்கு. உங்களுக்குப் பரவாயில்லையா?”
அன்று இரவே அனைவரும் கதிர் வீட்டில் ஒன்றாக சாப்பிட்டனர். அன்று தொடர்ந்த பழக்கம். சிறு மாதங்களிலேயே நெருக்கமாகிவிட்டனர். வாரம்தோரும் சந்தித்து, நன்றாக சமைத்து சாப்பிட்டு, படம் பார்த்து, அரட்டை அடித்து, வாரக்கடைசியையும் விடுமுறை நாட்களையும் ஒன்றாகவே களித்தனர். சூர்யாவிற்கு வித்யாவை நன்றாகவே தெரிந்துவிட்டது. யாரைப் பார்த்தாலும் அழுவான். அம்மாவைவிட்டால் வித்யாவிடம்தான் இருப்பான்.
“நல்ல பொண்ணா இருக்கு கதிர். ஊருல அவங்க எப்படிவேணும்னா இருந்துட்டுப்போகட்டும். வித்யா நம்மகிட்ட நல்லாயிருக்கா. நாமளும் நல்லாயிருப்போம்.” கதிரின் மனைவி அவன் நினைத்ததையே கூறினாள். எந்த இந்திய கடையில் துவரம் பருப்பு நல்லாயிருக்கும் முதற்கண்டு, எந்த இடத்தில் வீடு வாங்கலாம் வரைக்கும் வித்யாவிற்கு அறிவுறையும் ஆலோசனையும் தந்தனர்.
“அண்ணா, இவருக்கு வேலை போயிடுச்சு. இப்பதான் போன் பண்ணாரு”
“அப்படியா. என்ன வித்யா, என்னாச்சு? எப்படி? ஆச்சரியமாயிருக்கே. போன வாரம் கூட சொல்லிக்கிட்டிருந்தாரு, மொத்த நிறுவனம், அவரோட குழு, எல்லாமே நல்லாயிருக்குனு. சரி, பராவாயில்லை, நீ ரொம்ப கவலைப்படாதே, வேற வேலை பாத்துக்கலாம்”
“H-1ல இருக்கறதினாலே, இன்னும் ஒரு மாதத்தில புது வேலை தேடிக்கனுமாமே.”
“அதெல்லாம் பாத்துக்கலாம், நான் வேலைய முடிச்சிட்டு நேரா வீட்டுக்கு வரேன்”
வாழ்க்கையில் ஒரு நிலைப்பாடு வந்து, இப்பொழுதுதான் அதை நன்றாக அமைத்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு அதிர்ச்சியாகவே அமைந்தது. வீடு வாங்குவது, குழந்தை பெறுவது என்பதைப்பற்றிக்கூட பேசிக்கொண்டிருந்தார்கள். பொருளாதாரம் சரியில்லாத நிலையில், இன்னொரு வேலை, அதுவும் இவ்வளவு விரைவாகக் கிடைக்குமா என்பது அவர்களுக்கு சந்தேகமாகவே இருந்தது. பயமாக இருந்தது. மலைப்பாக இருந்தது.
நாலு வாரம் என்பது மிகவும் குறைவு. அதற்குள் விண்ணப்பம் செய்து, நேர்காணல் சென்று, வேலை கிடைத்து, புது H-1 விண்ணப்பம் தயார் செய்து ஏற்பாடு செய்வது என்பது மிக மிகக் கடினம். கதிருக்கு அது நன்றாக புறிந்தது. வித்யா போகக்கூடாது. இங்கேதான் இருக்கணும். குடும்பம், உறவுனு சொல்லிக்க அவ ஒருத்திதான் இங்கே இருக்கா. எதையோ இழப்பதுபோல ஒரு கவலை தோன்றியது. இதற்கு ஒரு வழிதான் இருக்கு. நமக்கு நல்லாத் தெரிஞ்சவங்க யாரவது உடனடியா ஏற்பாடு செஞ்சாதான் உண்டு. தனக்கு வேலை போனால் எப்படித் தேடுவானோ, அப்படித் தேடினான். தெரிந்தவர்கள் அத்தனை பேருடனும் தொடர்பு கொண்டான். தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பன் சொந்தமாக நிறுவனம் வைத்திருந்தான், இந்தியாவிலிருந்து மென்பொருள் வல்லுநர்களை வரவழைத்து அமெரிக்க நிறுவனங்களில் சேர்க்கும் நிறுவனம். எப்போதுமே கொஞ்சம் H-1கள் வைத்திருப்பார்கள். கதிர் கேட்டுக்கொண்டதால் அவசர அவசரமாக ஏற்பாடு செய்துகொடுத்தனர்.
கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் இந்தியா சென்றான் கதிர். முத்துப்பட்டிணத்திற்கும் சென்றான்.
“அப்படி பாத்துக்கிற, ஒத்தாசியா இருக்கேனு வித்யா சொன்னா. போன் பண்ணா உன்னைப்பத்தியும், உன் வீட்டுக்கு போனதைப்பத்தியும்தான் பேசுறா. எதையும் மனசுல வைச்சுக்காம வேணுங்கிற போது உதவி பண்ணிருக்கியேப்பா”
“வித்யான்ற இந்த உறவு இந்தப் பிறவிலதான் பெரியம்மா. எனக்கு அவளைப் பிடிக்கும். உங்களுக்காகவோ பெரியப்பாக்காகவோ நான் இதைச் செய்யலை. இவ்வளவு நாளா எனக்கு அவளை தெரியாமலையே போயிடுச்சு. என் சூர்யாவுக்கு அவளை மாதிரி ஒரு அத்தை வேணும். வேற எந்தவிதமான பெரிய மனசோ எனக்கு இல்லை.”
இவன்மேல எவ்வளவு கோபப்பட்டிருக்கோம். ஒவ்வொரு சமயம் இவனுக்கு எதாவது கெடுதல் நடந்தால் நன்றாக இருக்கும் என்று மனதின் ஒரு ஓரத்தில் அவள் நினைத்தது உண்டு. அதை நினைத்து இன்று வெட்கப்பட்டாள். இவன் நல்லா இருக்கிறதுனாலேதானே நம்ம பொண்ணு நல்லாயிருக்கா. ஒரு மனிதன் நன்றாக வந்தால் அந்த குடும்பத்துக்கே பயன், அந்த ஊருக்கே பயன், அவனை சுற்றி இருப்பவர்களுக்குப் பயன். நன்றாக வருவது அவனவன் கையில். நீ பொறாமைப் படுவதால் எவனும் குட்டிச்சுவராகப்போவதில்லை. உனக்கு அந்த அளவுக்கு சக்தி கிடையாது.
நன்மை என்பது காற்றுபோல. எங்கும் இருக்கிறது. நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது சென்றடையவேண்டிய இடத்தை கட்டாயம் சென்றடையும். அது இயற்கையின் நீயதி. நீ ஒரு புல்லாங்குழல் மாதிரி, அந்த நன்மை என்னும் காற்று உன் வழியே சென்றால் அது உலகிற்கு நீ படைக்கும் இசை.
அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு வண்டி. கதிர் 5.30க்கே வண்டி நிற்கும் இடத்திற்கு சென்றுவிட்டான். சென்றால், அவனுக்கு அதிர்ச்சி. பெரியம்மா வழி அனுப்புவதற்காக நின்றுகொண்டிருந்தாள்.
“எதுக்கு பெரியம்மா இவ்வளவு வெள்ளனா இங்க நின்னுக்கிட்டு”
“பரவாயில்லைப்பா. எப்பவும் இந்த நேரத்திற்கு எழுந்திருக்கிறதுதான். வண்டி வரட்டும்பா, அது வரைக்கும் இருக்கேன்”
“அமெரிக்கா வாங்க பெரியம்மா.”
வண்டி வந்ததும் கதிர் சென்றுவிட்டான். வள்ளி வீட்டை நோக்கி விருவிருப்பாக நடந்தாள். மனமும் உடம்பும் ஒருவிதமான கிளர்ச்சியுடன் இருந்ததை உணர்ந்தாள். ஆதங்கம் இல்லாத மனம் எவ்வளவு லேசாக இருக்கிறது. ஊரின் அமைதியை, அமைப்பை, காற்றை ரசித்தாள். இத்தனை நாளும் இதை ரசித்ததேயில்லையே. உலகம் அழகானது. வாழ்க்கை ஒரு வரம். ஒரு துள்ளலுடன் அடிகளை எடுத்துவைத்தாள்.
பொழுது விடிந்தது.
ilangomey@yahoo.com

Series Navigation