எனது டயரிக் குறிப்பில் வார்த்தை

This entry is part [part not set] of 35 in the series 20091106_Issue

ஹெச்.ஜி.ரசூல்


எனது டயரிக் குறிப்பில்
இன்னும் அந்த வார்த்தை இருந்தது.

மிதமான வெயிலில் காய்ந்தும்

அடைமழையில் நனைந்தும்

கொடும்பனியில் உறைந்தும்

ஒரு செடியில் பூத்த பூவின்மீது

அந்த வார்த்தை உட்கார்ந்து

தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டது.

நகங்கள் பிராண்டிப் பார்த்தன.

தூரங்களை கடந்துவந்த

ஒவ்வொரு தருணங்களிலும்

ஊசிகளால் துளைக்கப்பட்ட

அந்த வார்த்தை கதறி தொலைக்கவில்லை.

தன் கூட்டில் வந்துபோன
குஞ்சுகளையெல்லாம் அரவணைத்ததால்

குஞ்சுகளெல்லாம் பிறகொருதடவை

அந்த வார்த்தைக்கு

தாங்கள் கட்டிய கூட்டினைத் தந்தன.

அந்த வார்த்தை உருவாக்கிய
வேறுசில துணைவார்த்தைகள்

முரண்கொண்டு மோதின.

தான் கைப்பிடித்து அழைத்துச் சென்ற

சின்ன சின்னவிரல்கள்

தன்னையே எதிர்த்தபோது

துக்கம் மட்டுமே பெருகியது.

வழிப் போக்கர்கள் எல்லாம் வந்து உட்கார்ந்து

ஒரு நிமிடம் பேசிவிட்டு செல்கிறார்கள்.

தன் கைவசமிருக்கும்

ஆயிரம் ஆயிரம் கதைகளை கேட்பதற்கு

ஆளின்றி தவித்த வார்த்தை

அவரவருக்கான சுதந்திரத்தை

உறுதி செய்தவாறு

திண்ணையில் படுத்திருந்தது .

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்