பொங்கல் ஏக்கம் – மெய்மையும் கனவும்

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

இராம.கி.


பொங்கலென்ன பொங்கலிது, பொல்லாத பொங்கலிது,
முங்கி முழுகியதாய் மூணாம் வருசமிது;
இந்த வருசமினி எம்நிலைமை மாறுமின்னு
புந்தி புறக்கிட்டு போனகதை எங்குசொல்ல ?

மூணுவட்டி தான்கொடுத்து மொத்தப் பணம்போட்டு
வீணாய் உழுது, விதைநெல் முளைக்கவச்சு,
நாத்தைப் பிடுங்கி, நட்டுவச்சு, நீரிரைச்சு,
பார்த்துக் களைபுடுங்கி, பத்திரமா பாடுபட்டு,
பூச்சி மருந்தடிச்சி, புத்துரங்கள் தானுமிட்டு,
வாய்ச்ச வயக்காட்டில் வக்கணையாக் காத்திருந்தால்,
பால்பிடிக்கும் நேரத்தில் பாழாகிப் போச்சுதைய்யா!
கால்வாயில் நீரில்லை! கண்ணெல்லாம் பூத்திருச்சு!

பாளம் வெடிச்சபடி பாழாகி நிலம்போச்சு;
சோளம் விதைச்சதுபோல் சூம்பிப் பயிரெல்லாம்!
ஒருபொட்டு, ஓர்துளியை வானமழை காட்டலியே!
வருதுன்னு சொல்லி வடமேற்கே மேட்டூரை
நீருக்குப் பார்த்து நெட்டுயிர்த்து மூச்செறிந்து,
தூருக்கு நீரின் தொடர்பை அறுத்துவச்சு,
பங்காளி மாநிலத்தை பார்த்தோலம் இட்டதெல்லாம்
எங்கம்மா கோட்டைக்குள் ஏனோதான் கேக்கலியே!

நெல்லுக் கருதெல்லாம் நீளத் தொலைஞ்சுதுன்னு
புல்லுக்கு அறுத்துவிட்டு போட்டகதை ஓர்பக்கம்;
நொஞ்சதுதான் நெல்லென்றே மிஞ்சியதைப் பாப்பமின்னு,,
மஞ்சக் கிழங்கும் மணிக்கரும்பும் நட்டுவச்சு,
சந்தைக்குக் கொண்டாந்தா, வாங்குறதுக் காளில்லை;
மந்தமாய் யாபாரம்; மாமலையாய் தேங்கிருச்சு;
இல்லாத காசை எடுத்துவக்க யாரிருக்கா ?
சொல்லாமெ கொள்ளாமெ சூடுபட யாரிருக்கா ?

ஆனையம் பாரம் அடுக்கடுக்காப் பானைவகை;
பானையதை வாங்குதற்கு பட்டணத்தில் ஆட்களிலை;
சுண்ணாம்பை வீட்டுச் சுவரெல்லாம் பூசிவிட,
அண்ணாந்து பார்த்து, அதையெல்லாம் வாங்காமே,
அம்போன்னு கிடக்காம் அரியலூரு சந்தையிலே;

(………கொஞ்சம் கொஞ்சமாய் மெய்மையில் இருந்து மனத்திற்குள் இதமாய் ஒரு கனவு)

கொம்பெல்லாம் சீவி, கொழுவண்ணம் தா னடிச்சு
செந்தூரப் பொட்டிட்டுச் சோடிச்சு பூவணிய,
கந்தில் கயிறுகட்டிக் காளையெதிர் பார்த்திருக்க,

வாகாய்ப் பனங்கிழங்கும் வள்ளிக் கிழங்கவியும்,
பாகாம் பசுநெய்யும், பாயாசம் சர்க்கரையும்
பால்பறங்கிக் காய்கறியும் பக்குவமாய்ச் சோறும்வச்சு
பால்பொங்கும் நேரத்தில் பொங்கல்லோ பொங்கலென
ஓசையிட்டுச் சங்கூதி ஊரார்க் குணரவச்சு
ஆசை யுளம்கொள்ள அதையுண்ணும் பேறுபெற்று,
கும்மோணம் வெத்திலையும் கோதாய் அடைக்காயும்,
இம்மிக் குதப்பி இதழைச் சிவக்கவைக்க,

(மீண்டும் மெய்மையின் வசப்பட்டு மனம் திரும்புகிறது…….)

பொங்கலென்ன பொங்கலிது, பொல்லாத பொங்கலிது,
முங்கி முழுகியதாய் மூணாம் வருசமிது;
இந்த வருசமினி எம்நிலைமை மாறுமின்னு
புந்தி புறக்கிட்டு போனகதை எங்குசொல்ல ?
————————————————————–
poo@giasmd01.vsnl.net.in

Series Navigation

இராம.கி.

இராம.கி.