பைமடந்தை

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue

பசுபதி


கனடாவின் தைமாதம் கருணையின்றிப் பிறந்தது.
இனம்புரியா வெறுப்பொன்று என்னுள்ளே கரித்தது.

‘பொங்கலைத் துய்த்திடவே போனானோ சென்னைக்கு ? ‘
செங்கதிரோன் தெரியவில்லை; சீற்றமென்னுள் பொங்கியது.

மேலும்,

அடையவியல் முன்னிரவு; அநுமபிதா சிரிவயிறு;
கடைநகைகள் கைக்கெட்டாக் கடுங்கோபச் சமையலறை .

காபிஇட்லி கிடைக்காத கடுப்புடனே வெளிச்சென்றேன்;
சாபங்கள் இருமொழியில் சரளமாக உமிழ்ந்ததென்வாய்.

பழவினைக் குன்றமெனப் பனிமுண்டப் பிசாசொன்று
அழுத்தியென்றன் ‘கார் ‘மூடி அமர்ந்துபல் காட்டியது.

கடவுளர் எனக்கீந்த கனடாவை நொந்தபடி
நடந்தேன் பணிபுரிய; நாடினேன் ரயில்நிலையம்.

அங்கே,

தள்ளுவண்டி பக்கத்தில்; தள்ளாடும் பைமடந்தை#
அள்ளியொவ்வோர் குப்பையையும் ஆராய்தல் கண்டுநின்றேன்.

அழுகினஅக் கழிவிடையே அணுவளவு உணவிருந்தால்
ஒழுகும்தன் சளிதுடைப்பாள் ; உணவெச்சம் உட்கொள்வாள் .

அதிர்ந்தேன்,

கனத்தது என்இதயம் ; கரித்தனவே என்கண்கள்.
பனித்திரை விலகியது; பகலவனின் நகைகண்டேன்.

நின்றிருந்த அவள்கையை நிறைத்துவிட்டேன் பலகாசால்.
‘நன்றி ‘என்றேன்; மீண்டுமொரு ‘நன்றி ‘சொல்லி நகர்ந்தேன்நான்.

#பைமடந்தை= baglady

pas@comm.utoronto.ca

~*~o0o~*~

Series Navigation