பேசி பேசி…

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


பேசி பேசி
செய்த உருவங்கள்.

சிலைகளாய் சிரிக்கின்றன…

இதயம் பிசைந்து
பிடித்த சிலை
கேட்கிறது
என் பெயர் என்னவென்று.

காதலென்று சொல்லுகிறோம்.

விளையாட அள்ளிய மண்
கையிலிருந்து
நீயில்லாமல் உதிர்கிறது.
நீ வருவாயென பூத்துக் கொண்டு
பூ என்கிறது.

பேசி பேசி
கிடந்தப் படுக்கை
என் மீது
படுத்துக் கிடக்கிறது.

தலையணை என் மீது
தலைவைத்துத் தூங்குகிறது.

நகர்த்திப் போடாத நாற்காலி
நின்று கொண்டே கேட்கிறது.
உட்காரவா
கால் வலிக்கிறது என்கிறது.

அந்த
பக்கத்து நாற்காலியை
பிடித்துக் கொண்டு பேச பேச
நாற்காலி நானாகிறேன்.
என் மீது சாய்ந்தமர்ந்து
நாற்காலி நானாகிறது.

அப்புறம் அப்புறம்
பேசி பேசி
நீ நானாக
நான் நீயாக
உருவங்கள் உருவகங்கள்
வார்த்தைகள்
வார்ப்புகளாய் வடிவங்கள்.

பேசி பேசி
எழுதக் காத்திருந்த கவிதை
எழுதாத காகிதமாய்.
காற்றில் பறக்கிறது கவிதையாய்.

பேசும் கரங்களால்
செய்து
சிரிக்கும் சிலைகள்…
செய்யும் கரங்களால்
செய்யாமல்
செய்த சிலைகள்…

பேசி பேசி பிறந்த மொழி
அகராதியாய் பக்கத்தில்…
விரித்த பக்கம் மூடாமல்
விரித்த பொருளாய் சொல்.

உயிர் பெற்று வீடெங்கும்
உருவங்கள்.

காசு பணம் அனுப்பிக் கொண்டிருந்த
ஊருக்கு
கத்துங்குரல் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்
கண்டு உன்னை வந்தபின்.

இங்கே
தொலைபேசி அட்டைகளில்
காசுக்கு
காலம் விற்கப்படுகிறதுதான்.

மாதத்தையே பேசி பேசி
போதாமல்
அடுத்த மாதத்தையும் கடனாய் வாங்கி
பேச பேச

சரியாயிருக்கும்
கைசேரும் ஊதியமும்
கட்டப்போகும் கைத்தொலைபேசி கட்டணமும்.

கவலையில்லைதான்
இங்கே
காலம் இருக்கும் வரை.

— — —
பட்டுக்கோட்டை தமிழ்மதி
சிங்கப்பூர்.
tamilmathi@tamilmathi.com

Series Navigation