பெரியபுராணம் – 64 – 30. காரைக்காலம்மையார் புராணம்

This entry is part [part not set] of 23 in the series 20051111_Issue

பா.சத்தியமோகன்


1716.

வளைந்த சங்குகளை கடல் அலைகள் சுமந்து கொண்டு மேல் ஏறி

அருகிலுள்ள கழிக் கானல்களில் உலவும்

வளம் மிக்க காரைக்கால் என்ற ஊர்

மானம் மிக்க தருமத்தின் வழிநின்று

பெருவணிகர்குடிகள் நெருங்கி விளங்கும் பதியாகும்.

(பதி- இடம்)

1717.

மரக்கலங்கள் மிக்க கடற்கரையில் உள்ள

காரைக்காலில் வாழும் வணிகர் குலத் தலைவரான

தனதத்தன் என்பவரின் தவத்தால் அவரிடத்தில்

பராசக்தி அவதரித்தாள் எனுமாறு புனிதவதியார் வந்து பிறந்தார்.

1718.

வணிகர்களின் பெரும் குலம் விளங்குமாறு

இம்மண்ணுலகில் வந்து பிறந்தபின்

அழகு பெருகும் மென்மையான திருவடிகள்

தளர்நடை கற்கும் பருவத்தில்

பாம்புகளை அணியும் சிவபெருமான் திருவடிகளில்

அடிமைத் தொழில் பழகிவரும் அடங்காத மனக் காதலுடன்

ததும்பி வரும் மொழி பயின்றார்.

1719.

பெருமையுடைய பல நல்ல உறவினர் மகிழுமாறு

பருவங்கள் தோறும் சிறப்புகள் செய்தார்

செல்வமிகு தந்தையார் தனதத்தன்

பெருகிய பாராட்டினால் வளர்கின்ற புனிதவதியார்

காளையூர்தியுடைய சிவபெருமானிடத்தில்

மிக்க அன்புடன் கூடிய அழகுடன்

கொழுந்து வளர்ந்ததுபோல வளர்ந்து வந்தார்.

1720.

மற்ற மகளிருடன் வண்டல் விளையாட ஆடுகையிலும்

வளர்சந்திரன் சூடிய சடை புனைந்த

அண்டர்பிரான் திருவார்த்தைகளையே பயில்வார்

சிவன் அடியார்கள் வந்தால் அவர்களைத் தொழுவார்

வளர்ப்புத் தாயார் பாதுகாத்திட

துணை முலைகளும் துவளும் இடையுமாக

பருவ வயது அடைந்தார்.

1721.

உடல் கூற்று வல்லுநர் உரைக்கு நலம் யாவும் நிரம்பி

பேரழகு நாளும் நாளும் மிகுதியால் வளரும் பண்பினாலே

வீடு விட்டு வெளியே செல்லக் கூடாத பருவம் வர

இவர்களது மரபுக்கேற்ற

பழங்குடியில் வந்த வணிகர்

மணம் செய்து கொள்ளப் பெண் பேசத் தொடங்கினர்.

1722.

சிறப்புமிக்க கடற்கரையில் உள்ள பட்டினமான

நாகைப்பட்டினத்தில் “நிதிபதி” என்ற பெயருடன்

பெருமை பெற்ற வணிகன் பெற்ற குலமகனுக்கு

ஒத்த மரபில் தேடவரும் குலத்தில் வந்த

இந்த சேயிழையைப் பெண்பேச

மாடங்கள் நிறைந்த காரைக்கால் எனும் நகரில்

அறிவுடைய பெரியோர் அனுப்பப்பட்டனர்.

1723.

அங்கு வந்த முதிய அறிவினர்

மணம்பேச மனையில் புகுந்து

பெண்ணின் தந்தை தனதத்தனை அடைந்து

நீ பெற்ற பைங்கொடியை நிதிபதியின் மகனுக்கு

முந்தையோர் மரபினுக்குப் பொருந்தும் முறையால் மணம் புரிக என்றனர்.

1724.

முறைமையோடு மணம் செய்துதர சம்மதித்தான் தனதத்தன்

சென்று அதனை நிதிபதியிடம் அறிவித்தார்கள்

உயர்ந்த பெருஞ்சிறப்பு பெற்றதுபோல் மகிழ்ந்தான் நிதிபதி

தன் தனிப் பெருமகனுக்கு செல்வம் மிக்க சுற்றத்தாருடன் கூடி

மணத்துக்குரிய செயலைச் செய்யலானார்.

1725.

திருமணத்திற்கு சம்மதித்ததால் மணநாள் ஓலை அனுப்பினார்

மணநாள் வந்து சேர்ந்தது

மணச்சடங்குக்கு ஆவன அமைவித்தார் நிதிபதி

மலர்மாலை உடைய மணமகனையும்

மணக்கோலம் புனையும் அணிகளால் அழகை விளக்கி

மணமுரசு ஒலிக்க சுற்றத்தினரோடு காரைக்கால் புகுந்தார்.

1726.

வண்டுகள் மொய்க்கும் மாலை சூடிய தனதத்தனின்

அழகுமிகுந்த மாளிகையுள் புகுந்து

அறநூல்களின் விதிப்படியே சடங்குகள் செய்து அமைத்து

தளிர் போன்ற மென் நகை மயிலான புனிதவதி அம்மையை

மாலை சூட்டிய காளை போன்ற பரமதத்தனுக்கு

களி மகிழ சுற்றத்தவர் கலியாணம் செய்தார்கள்.

1727.

மங்கலமான திருமண வினைகள் முடிந்தபின்

இல்வாழ்க்கையின் இயல்பில் வாழும் நாளில்

தங்கள் குடிக்கு புனிதவதியார் ஒரே புதல்வி ஆதலால்

பொங்கும் ஒலியுடைய நாகைப்பட்டினத்துக்குச் செல்லாது

தன் கணவனுடன் காரைக்கால் நகரிலேயே தங்கி வாழ

அழகிய மாளிகையை அருகில் அமைத்தான்.

1728.

மகளைக் கொடையாகக் கொடுத்து மகிழ்ச்சி சிறந்தது.

வரம்பில்லாத செல்வம் தந்தான் தந்தான் தனதத்தன்

பிறகு

ஒப்பிலா சிறப்புடைய நிதிபதியின் மகனான பரமதத்தனும்

அடங்காத பெரும் காதலினால்

மனையில் தங்கி வளம் பெருக்கினான்

வணிகச் செயலால் மேன்மை நிலை அடைந்தான்.

1729.

அங்கு அவனது இல்வாழ்வின் அருமையான துணையாக

அமர்கின்ற பூங்குழலுடைய புனிதவதியாரும்

போர் செய்யும் காளையுடைய சிவபெருமானின் திருவடிக்கீழ்

ஓங்கிய அன்புறும் காதலை ஒழிவில்லாமல் பெருகும்படி

இல்லறத்தில் பண்பு வழுவாமல் ஒழுகி வந்தார்.

1730.

இறைவனின் அடியார் தம் இல்லறம் நாடி வந்தால்

நல்ல திரு அமுது அளிப்பார்

தம் பரிவினால்

செம்பொன்னும் நவமணியும் செழுமையான ஆடைகளும்

அவர்க்குத் தகுதியின்படி வேண்டியதை அளிப்பார்

தேவர்களின் தலைவரான சிவபெருமானின் திருவடியின் கீழ்

இவ்விதமாக உணர்வுடன் ஒழுகி வந்த நாளில் –

1731.

தம் ஒழுக்க நெறியில் பயிலும் பரமதத்தனுக்கு

ஓர் இரண்டு மாங்கனிகளை வந்து சேர்ந்த சிலர் கொடுத்தனர்

அங்கு அவற்றை வாங்கி

அவர்களுக்கு வேண்டிய செயல்களை முடித்துத் தந்து

இங்கு இப்பழங்களை வீட்டில் கொடுக்கவும் என இயம்பினான்.

1732.

கணவன் தந்து அனுப்பிய கனி இரண்டையும்

கைகளில் கொண்டு

மணம் கமழும் மலர்க்கூந்தல் மாதராகிய புனிதவதியார் இல்லத்தில் வைத்தார்

படமுடைய பாம்புகளை புனைந்து அருள்கின்ற சிவபெருமானின்

திருத்தொண்டர் ஒருவர்

பசி வேட்கையுடன் மனையும் புகுந்தார்.

1733.

நான்கு வேதங்களும் மொழிந்த சிவபெருமானின்

மெய்த்தொண்டர் பசித்திருப்பது கண்டு

நாதனின் அடியார் பசி தீர்ப்பேன் என விரைவில் நினைத்து

பாதத்தைத் தூய்மை செய்தல் பொருட்டு நீரை முதலில் அளித்தார்

உண்ணும் வாழை இலை வைத்தார்

குற்றம் நீங்கும் நல்விருந்தாகக் கொண்டு

இனிய அடிசில் உண்பித்தார்.

1734.

மணம் கமழும் தாமரை மலர்மீது வீற்றிருக்கும்

திருமகள் போன்ற புனிதவதியார்

அப்போது கறியமுது (கறிகள்) சமைக்கப் பெறாமல்

திரு அமுது (சாதம்) மட்டுமே கைக்கூடப் பெற்ற நிலையில்

சிவபெருமானின் அடியாரே அரிய விருந்தாய் கிட்டிய நிலையில்

இதைவிட பெறத்தக்கது ஒன்றுமில்லை எனும் அறிவினராய்

அவரை உணவு உண்ணச்செய்யத் துவங்கினார்.

1735.

“இவற்றை வைத்திரு” என தன் கணவர் அனுப்பிய

தம்மிடம் முன்னால் இருந்த

நல்ல இனிய மாங்கனிகள் இரண்டினில் ஒன்றைக் கொண்டு

மிகவும் விரைந்து வந்து சேர்ந்தார்

மனமகிழ்ச்சி கொண்டார்

துன்பம் தீர்க்கும் இறை அடியாரை அமுது செய்துவித்தார்.

1736.

முதுமையால் வந்த தளர்ச்சியாலும்

முதிர்ந்து முடுகிய தீ போன்ற பசியின் நிலையாலும்

அயர்ந்து அங்கு வந்து சேர்ந்த திருத்தொண்டர்

வாய்ப்பான மென்சுவை பெற்ற அந்த உணவை

மாங்கனியோடு இனிதாக அருந்தி

மலர் பொருந்திய மென் கூந்தல் அம்மையாரின் அன்புச் செயலுக்கு

மகிழ்ந்து சென்றார்.

1737.

அந்த அடியார் போனபின்பு

அந்த இல்லத் தலைவனாகிய வணிகன் பரமதத்தன்

நண்பகலில் —

ஓங்கிய அந்த பெரிய இல்லம் அடைந்து

அழகுற நீராடி உணவை உண்ண விரும்பி வர

கற்புடைய புனிதவதியாகும் தன் மனைக்கடமை முறைப்படி

உணவு உண்ணச் செய்ய எண்ணினார்.

1738.

இனிய திருவமுதை கறிவகைகளுடன்

பொருந்தும் முறையில் பரிமாறிய பின்

நிலை பெற்ற சிறப்புடைய கணவனான பரமதத்தன்

முன்பு இல்லத்திற்கு அனுப்பித்த

நல் மதுர மாங்கனிகளில் எஞ்சிய ஒன்றை

நறுமணமலர்க் கூந்தல் அம்மையார் கொண்டு வந்து

கலத்தில் இட்டார்.

(கலம் – இலை )

1739.

மனைவியார் தாம் கொண்டு வந்து கலத்தில் இட்ட

மிக்க இனிய சுவை வாய்ந்த கனியை சுவைத்து

ஆசை நிரம்பாமல் வணிகன் பரமதத்தன்

இது போன்று இன்னுமொரு பழம் உண்டே அதனை இடுக என்றதும்

அதனைத் –

தாம் கொண்டு வருவதுபோல

அங்கிருந்து அகன்றார்.

1740.

அப்பக்கத்தில் நின்று மனம் அயர்வார்

அரிய கனி பெற வேறு என்னதான் வழி எனத்

தன் மெய் மறந்து நினைத்ததும்

துன்பம் அடைந்த இடத்தில் வந்து உதவும் காளை ஊர்தி உடைய

சிவபெருமானின் திருவடிகளை

தம் மனதில் கொண்டு உணர்ந்தவுடன்

அவர் அருளால் தாழ்ந்த குழலுடைய அம்மையாரின்

கையில் வந்திருந்தது அதி மதுர கனியொன்று

1741.

அவ்விதமாகக் கொண்டு வந்து மகிழ்வுடன்

பரமதத்தன் இலையில் இட்டதும்

உற்ற சுவை அமுதினும் மேம்பட்டதாக விளங்கியது

முன்பு தந்த மாங்கனியன்று மூவுலகிலும் கிட்டாதது

இதை வேறெங்கு பெற்றாய் என

மெய் வளையார் தம்மைக் கேட்டுக் கொண்டான்.

1742.

அக்கேள்வி கேட்டதுமே அம்மையார்

அருளுடைய இறைவர் அளித்து அருளும்

சிறப்புடைய பேரருளை விளம்புவது சரியன்று எனப் பேசாதிருந்தார்

கற்புடைய நெறியினால் கணவன் கேள்விக்கு

சொல்லைக் காக்காமல் விடுதலும் உண்மைவழி அல்ல என்று

விளம்பாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட நடுக்கம் (விதிர்ப்பு) உற்றார்..

1743.

செய்தபடி சொல்லுவதே கடமை எனும் சீலத்தால்

மை தழையும் கழுத்துடைய சிவபெருமான் சேவடிகள் மனத்துற வணங்கி

சுவை பொருந்தும் அந்தக் கனியளித்தவர் யார் எனக்கேட்கும் கணவனுக்கு

பூங்குழலுடைய அம்மையார்

அக்கனியின் வரலாற்றைக் உள்ளபடி மொழிந்தார்.

1744.

ஈசன் அருள் எனக் கேள்விப்பட்டு

இல்லறத்திற்குரிய அவ்வாணிகன் மனம் தெளியாதவன் ஆனான்

வாசமலரில் எழுந்தருளும் இலக்குமி போன்ற அம்மையார் தமை நோக்கி

இக்கனி ஒளியுடைய சடை கொண்ட சிவபெருமான் திருவருளெனில்

இன்னுமொரு கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாயாக

என்று மொழிந்தான்.

1745.

அங்கிருந்து அகன்ற மனைவியார்

பாம்புகளை அணியும் சிவபெருமானைத் துதித்து

இப்போது இதை அளித்து அருளாமல் போனால்

முன்பு நான் சொன்னது பொய்யாகும் என வேண்டிக் கொண்டார்

மாங்கனியொன்று திருவருளால் வந்து எய்தியது

அதனை ஆங்கு அவன் கையில் கொடுத்ததும்

அதிசயித்து வாங்கிக் கொண்டான்.

1746.

அக்கனி வாங்கியதும் வணிகனும்

தன் கையில் புகுந்த மாங்கனியைப் பிறகு காணாதவன் ஆனான்

தணியாத பயம் மேற்கொண்டான்

உள்ளம் தடுமாற்றம் எய்தி

அழகிய கூந்தல் கொண்ட அந்த அம்மையாரை

வேறொரு பெண் எனக் கருதி

தொடர்பு நீக்கும் துணிவு கொண்டான்

எவர்க்கும் அதனைச் சொல்லவில்லை

தொடர்பின்றி வாழ்ந்து வந்த நாளில் –

(திருவருளால் தொடரும் )
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation