பெரியபுராணம் — 5

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

பா சத்தியமோகன்


46.

தேசமெல்லாம் விளக்கிய தெந்திசை

ஈசர் உறையும் தோணிபுரம் எனும் சீகாழித்திசை

பூசனைக்குப் பொருந்தும் திசை

பேசப்போச தெற்குத் திசை ஒப்பற்ற ஓர்திசை.

47.

ஆலால சுந்தரர் வந்தொண்டராகிய செய்கையை

உபமன்னிய முனிவர் கூறிய விதமே

திருதொண்டர் சிறப்பை விரிந்த

தன்னாசையால் சொல்லப்புகுவேன்.

48.

புற்றை இடமாகக் கொண்டே பெருமானின் திருவருள் கூறும்

மெய்வாக்குத் ? திருதொண்டர்த்தகை ? எனும் பெயரே

இந்நூலுக்கு நல்ல திருப்பதிகம் ஆகும்

தொழுது மேற்கொள்ளத் தக்கதாகும்.

49.

நம்பியாண்டார் நம்பி துதித்தருளிய வகை வழி

திருத்தொண்டர் திருவந்தாதி பற்றி

மெய்யடியார்களை எம் ஆற்றலின் வகையினால்

வழுவாமல் இயம்புவோம்

50.

உலகம் உய்யட்டும் சைவம் நின்றோங்கட்டும்

எல்லையிலாச் சீர் நம்பி ஆரூரர் பாடிய

திருத்தொண்டர் நின்று நிலவும்

காவிரி பாயும் சோழநாட்டின் சிறப்பு கூறுவோம்.

51.

ஆரூரர் பாடிய பாட்டின் இயலும் பொருளும்

இமயமலை சிகர் உச்சி எல்லைக்குள் பலநாடுகளுக்குள்

புகழ் வளர் புலிக்கொடி சோழநாட்டின் இயல்பை

நவிலத் தொடங்குகிறேன்.

52.

ஆதிமாதவ முனி அகத்தியன் கொணர்ந்த

கமண்டலம் பொழிந்த காவிரி ஐம்பூதத்தில் ஒன்று

மண் மடந்தையின் பொன் மார்பில் தாழ்ந்தோர்

குளிர்ந்த முத்து மாலையென விளங்கும்.

53.

மேற்கு மலைத் தொடரில் சையம் எனும் பெரிய மலையினின்று பொழியும் பெருமை சான்றது

செம்மை செயும் பூமி மகளை வளர்க்கின்ற செவிலி போன்றது

வையகம் சார் பல்லுயிரும் வளர்ந்து நாடுதோறும்

உய்ய சுரந்தும் அளித்தும் உண்டாக்கும் நீர் அது.

54.

திருமாலின் கொப்பூழ்ச்சுழி போன்று அலைகள் தன் மேல் சுழிக்கும் சிறப்பான

பல்லுயிர்கள் இறவாது நீர்தந்து காக்கும் பெருமையால்

அருட்கோல அகத்தியன் கமண்டலத்தில் தங்கி வாழ்ந்த கொள்கையால்

இக்காவிரியும் நான்முகனும் சரிசமமே.

55.

சந்திரன் தவழும் உயர்ந்த சைய மலை உச்சியில்

வெண் தலை போன்ற நுரையுடன் பொங்குவதால்

காவிரியின் நீர் எங்கள் தலைவன் (பிறைச்சந்திரன்) சிவபெருமான்

சூடிய திருமுடி கங்கைக்குச் சமம்.

56.

அழகிய நீண்ட சைய மலை தந்த மேன்மையால்

எண்ணிலா அறங்கள் வளர்க்கும் ஈகையால்

அண்ணலின் ஒருபாகத்தையுடைய உமை நாயகியின்

பரவி நெகிழும் கருணையின் ஒழுக்கம் போன்றது காவிரி

57.

மணம்கமழ் மலரால் நீரால் வழிபடுகிறது

எண்ணிலாச் சிவாலயங்களை செம்பொன் மணல் சிதற

வழியெங்கும் எம்பிரானைக் குளிர்ந்து இறைஞ்சுகிறது

சிவனடியாரை ஒத்திருக்கிறது காவிரி.

58.

மணங்கமழ் காவிரி தேசுடையது எனினும் தெளிவில்லாதது

குடைந்தாடும் மங்கையர் கொங்கையில்

பூசும் குங்குமத்தை சந்தனத்தை

அலைகள் அழித்தபடி ஓடுவதால்.

59.

வண்டுகள் எழுந்து ஆரவாரம் செய்ய

மலையினின்று அடித்துவரும் பூக்களால் தேன் பொங்க

காவிரியின் வெள்ளநீர் கால்வாய்களில் பாயும்

நீர்நிலைநிறைந்த காட்டுக்கு வளம் தர.

60.

ஒளிபொருந்திய துறையிலே மாபெரும் மதகுகள் வழியே

வயலில் புகும் வெள்ள நீரை எதிர்கொண்டு

மள்ளர்கள் மகிழ்ச்சி ஒலி

வானுலகிற்கும் அப்பால் கேட்கும்.

( மள்ளர் – உழவர்)

— திருஅருளால் தொடரும்.

cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்