பெரியபுராணம் – 39 — 23. உருத்திர பசுபதி நாயனார் புராணம்

This entry is part [part not set] of 28 in the series 20050506_Issue

பா சத்திய மோகன்


1031.
நிலத்தில் உயர்ந்து பரவி எழும் பெருவெள்ளம்
பூந்தடங்களிலும் பெரிய வயல்களிலும் புகும் பொன்னி நன்னாடு
குலத்தில் ஓங்கிய குறைவிலாத நிறைகுடி மக்கள் குழுமி வாழ்கின்ற
மேம்பட்ட நலமுடைய பெரும் திருத்தலையூர்.
1032.
வேதியர் வளர்க்கும் வேள்வித்தீ மழை அளிக்கும்
நறுமணம் கமழும் சோலைகள் தேன் அளிக்கும்
பசுக்கூட்டங்கள் அளிக்கும் ஐந்தை உகந்து ஆடுவார்க்கு
அந்த ஊர் அறமும் நீதியும் சால்பும் அளித்தது.
(ஐந்து = பசுவிடம் பெறப்படும் பஞ்சகவ்வியம்)
1033.
அருளுடைய அப்பெருநகரத்தில் அரிய மறைகளின்
வாய்மையில் நிற்கும் உயர் வேதியர் குலத்தினில் தோன்றிய தூயவர்
செங்கண் கொண்ட பெரிய காளையில் ஊர்பவரும்
இமவான் மகளான கொடி போன்ற பார்வதி அம்மையாரை
ஒருபங்கில் கொண்டவருமான சிவபெருமானின்
அடிமைத்திறம் விரும்பும் பசுபதியார் அவர் பெயர்.
1034.
திருமாலும் அறியாத மலர் போன்ற திருவடிகளை அந்த அந்தணர்
அரிய மறையின் உருத்திர மந்திரம் கொண்டு துதிப்பதனால்
இடையறாத தூய அன்புடனே
சுருதியில் பதிந்து நேய நெஞ்சினர் ஆகி
அதையே ஓதித் துதிக்கும் செயலில் சிறந்து விளங்கினார்.
(உருத்திரம் = அரிய வேதங்களின் ஒரு கூறு / வேதங்களின் நடு / வேதங்களின் இதயம் / வேதத்தின் பயன்)
1035.
பறவைகளின் ஒலி அளவிலாமல் ஒலிக்க
அப்பக்கத்தில் மென் தேன் வண்டுகள் பாட
கரிய வரால் மீன்கள் நீண்ட வரிசையாய் பிறழும் நீரில்
தீ எழுந்ததைப் போல
செந்தாமரைமலர் மணத்துடன் மேவும் நீர்நிலைக்குச் சென்று-
1036.
தெளிவான குளிர் பொய்கை நீர் கழுத்தளவு இருக்க
உள்ளே பொருந்தப் புகுந்து நின்று
வழியும் வெண் அலை கங்கை நீர் ததும்பும் சடை கொண்ட சிவனாரை
உவந்து கொள்ளும் அன்புடன் திரு உருத்திரத்தை
குறிப்போடு சொன்னார்.
1037.
அரிய வேதத்தின் பயனாகிய உருத்திரம் அதனை
நியதிப்படி பகலிலும் மாலையிலும் வழுவாமல்
தாமரையின் பொருட்டில் உள்ள நான்முகனைப் போன்ற பசுபதியார்
சிலநாள் ஒன்றுபட்ட உணர்வுடன் ஓதிவந்தபோது
உமையை இடப்பக்கம் கொண்ட சிவபெருமான் மகிழ்ந்தார்.
1038.
காதலான அன்பரின் அரிய தவப்பெருமையும்
அதனுடன் கலந்த வேத மந்திர நியதியின்
அளவு கடந்த மிகுதியையும் ஏற்று
ஆதி நாயகரான சிவபெருமான் அமர்ந்து அருள் செய்யவே
தீது இலாத நிலை உடைய சிவன் உலக எல்லை அடைந்தார் பசுபதியார்.
1039.
நீண்ட நெடிய அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்
ஆடுகின்ற சேவடி அருகில் பொருந்தச் சேர்ந்தார்
?உருத்திர பசுபதியார் ? எனும் பெருமைமிகு நாமத்தை
அவருக்கு குவலயம் போற்றி வழங்கியது.
1040.
கூரிய திரிசூலத்தை உடைய சிவபெருமானின் அருளால்
அருகில் பொருந்திய உருத்திரபசுபதியாரின் திறம் துதித்து
மதில் சூழ்ந்த தில்லையின் எல்லையில்
நாளைப் போவாரான செயல் கொண்ட
திருத்தொண்டர் திறத்தினை மொழிவோம் இனி.
(உருத்திர பசுபதி நாயனார் புராணம் முற்றிற்று )

cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்