பெரியபுராணம்- 120 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

This entry is part [part not set] of 32 in the series 20070118_Issue

பா.சத்தியமோகன்



3447.

பரமராகிய சிவபெருமானின்

திருவரத்துறை பணிந்தார் பிறகு

பல பதிகளும் சென்று

காளைக்கொடி உடைய இறைவரின்

மணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை வணங்கித்
துதித்து

பரந்த நீர் உடைய பெருங்காவிரி சேர்ந்து

அன்பர்களுடன் நீராடி

பாம்பு அணிந்த இறைவர் அமர்ந்த

குளிர்ந்த

திருவாவடுதுறை அடைந்தார்.

3448.

திருவாவடுதுறை அடைந்தபோது

அடியார்கள் எதிர்கொள்ள அத்தலம் புகுந்தார்

சைவ மெய்த் திரு கோயிலை வலமாக வந்து உள்ளே
சென்றார்

“கங்கை வாழ்சடையரே

ஒரு கண் இல்லாதவன் நான்!” எனச் சொல்லி

“இங்கு எனக்கு யார் உறவு” எனும் கருத்துடைய

திருப்பதிகம் தொடங்கி இசைத்தார்.

3449.

அந்தத் திருப்பதிகம் பாடி வணங்கினார்

துதித்தார்

பிறகு

திருவருளால் விடைபெற்று

திருத்துருத்தி எனும் தலம் அடைந்தார்

விமலர் ஆகிய சிவபெருமானின் திருப்பாதம்
தொழுதார்

கோவிலுள் புகுந்தார் இறைஞ்சினார்

“அடியேன் உற்றபிணியின் வருத்தம்

வருத்தாமல் நீக்க வேண்டும்”

என வணங்கினார்

3450.

பரவிப்பணிந்து வணங்கிய நம்பிஆருரர்க்கு

பரமர்

திருவருள் புரியத் தொடங்கினார்

“பொருந்திய இப்பிணி முழுதும் தீர்வதற்கு

மலர்களில் வண்டுகள் பாடும் தீர்த்தமுடைய

வட குளத்தில் குளி” என்றதும்

மறைவிலாத தொண்டரான சுந்தரர்

கை தொழுதார்

புறப்பட்டார்

3451.

மிகுந்த நீரைஉடைய

அந்த

தீர்த்தத்தின் முன் சென்றார்

வேதங்கள் யாவும் ஒன்று திரண்ட வடிவுடன் விளங்கும்

திருத்துருத்தி இறைவரைத் தொழுதார்

அந்நீரில் மூழ்கியதும்

அவருக்கு ஏற்பட்ட புதிய நோயானது நீங்கி

அதேகணத்தில்-

ஒளி பொருந்திய மேனி உடையவராக

நாவலூரர் விளங்கினார்

3452.

பார்த்தவர்கள் யாவரும் அதிசயம் அடையும்படி

வடகுளத்தின் கரை ஏறினார்

வேறு ஆடை அணிந்து

மிக்க பெரும் காதலால் கோவிலை வலம்வந்து

தொண்டர்கள் எதிரில்

“மின்னுமா மேகங்கள்” எனும் திருப்பதிகத்தை

எட்டுத்திசையில் உள்ளவர்களும்

அறிந்து உய்யுமாறு

ஏழிசை பொருந்துமாறு பாடினார்

3453.

பண் இசை நிறைந்த தமிழ்த்திருப்பதிகம் பாடி

பரமர் திருவருளை மறவாமல்

எண்ணிக்கையிடமுடியாத தொண்டர்களுடன் பணிந்து

அந்தத் தலத்தில் தங்கியிருந்த பிறகு

புறப்பட்டார்

எப்போதும் நினைவில் காணப்படும் இறைவரை

பிற தலங்களிலும் வணங்கினார்

கன்ணுக்கு நிறைவான திருவாரூர்

தம் முன் தோன்றக்கண்டார்

காணத்தொடங்கினார்

3454.

வன்தொண்டரான சுந்தரருக்கு

அன்று

தமது ஒரு கண்ணால் கண்டது நிறைவு தரவில்லை

இன்பம் தரவில்லை

நின்று

நிலத்தில் வீழ்ந்து

பெருமூச்சு விட்டு

நேரே வணங்கி

மயங்கும் மாலைப்பொழுதில்

மீண்டும் திருவாரூரில் புகுந்து

நெருங்கிய சடையுடைய தூய இறைவரைத்தொழ

முன்னே சென்றார்

3455.

பெருகிநின்ற திருத்தொண்டர்களுடன்

கோயிலுள் புகுந்து வணங்கினார்

சிறந்த இசையுடன் கூடிய திருப்பதிகத்தை

“தூவாயா” என்று தொடங்கினார்

“இங்கே

எமது துயர் களைந்து

கண் காணுமாறு காட்சி தர வேண்டும்” என்று

அங்கணர் சிவபெருமான் முன் நின்று

அரிய

தமிழ்ப்பதிக மாலை புனந்தார்

3456.

கங்கை ஆறு அணியும் சடையாரைத் தொழுதார்

வணங்கினார்

வெளியில் வந்து

அங்கு –

வேறொரு இடத்தில்

தனியாய்த் தங்கியிருந்து

தம்முடன் வரும் தொண்டர்களுடன் கூடி

காளைக்கொடி உயர்த்திய சிவபெருமானின்

மூலஸ்தானத்தில்

தக்க சமயம் அறிந்து

ஒப்பிலாத

அர்த்த ஜாமம் எனப்படும் இரவுகால வழிபாட்டின்போது

வணங்குவதற்காக வந்து சேர்ந்தார்

3457.

ஆதி இறைவரின் தொண்டர்கள்

அன்பர்கள்

அங்கு வந்து சேர்ந்தனர்

அவர்கள் முகம் நோக்கி –

குற்றமற்ற இசையுடன் “குருகு பாய” எனத் துவங்கி

அயலார் போல

வருத்தமுடன் வினவுகின்ற திருப்பதிகம் ஒன்றை

காதல் புலப்படும்

கைக்கிளைத் திணையில் வைத்து

பாடியபடியே

அவர்களுடன் கலந்து சேர்ந்தார்

3458.

சிறப்பு பெருகும்

தேவாசிரிய மணடபத்தின் முன் சென்று வணங்கினார்

மேகம் தவழும் கோபுரத்தைக்

கை தொழுது உள்புகுந்தார்

மிகுந்த மாலைகள் உள்ள

“பூங்கோயில்” எனும் திருமாளிகை வணங்கினார்

சேர்ந்தார்

ஆர்வம் பெருகும் பெரும் காதலால்

தரை மீது வீழ்ந்தார்

3459.

தரையில் வீழ்ந்து எழுந்து வணங்கி

இறைவரின் முன்பு நின்று விம்மினார்

வாழ்வுபெற்ற

மலர்போன்ற

ஒரே ஒரு கண்ணுடன் இறையைக் கண்டார்

மனம் நிறைவுபெறாமல் வருந்தினார்

“ஆழ்ந்த துயர்க்கடலில் இருந்து

அடியேனை எடுத்து அருள்வீர்

விரும்பிய கருத்தினை நிறைவு செய்ய

கண்தந்து அருள்வீர்” எனத் தாழ்ந்து துதித்தார்

3460.

திருநாவலூர் மன்னரான சுந்தரர்

திருவாரூர் வீற்றிருந்த பெருமானை –

மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் பிஞ்சகனாகிய சிவனை

வாயினால் பருக இயலாத அமுதம் போன்றவரை

கண்களால் கண்டு பருகுவதற்கு

பொருந்திய பேரன்புடன்

“இன்னொருகண் தாரீர்” எனும் கருத்துடன் வணங்கினார்

3461.

தேவர்குலமெலாம் இறந்துவிடாமல்

நஞ்சினை உண்டு அருள் செய்து

நிலைபெற்ற இறைவரை

“மீளா அடிமை”எனதொடங்கும் பதிகத்தின்மூலமாக

“உமது திருவடியை அன்புடன் பேணும்

உண்¨மாடியார்களுக்கு ஏற்படும் துன்பத்தை

நீவீர் பொறுக்க மாட்டீர்” எனும் குறிப்புடன்

அடிமையும் தோழமையும் கலந்த இயல்புடன் பாடினார்

3462.

காதலுடன் வன்தொண்டர்

தொடர்ச்சியாக தெரிவித்த வேதனைக்கு மனம்
இறங்கி

பூத கணங்களின் முதல்வர்

புற்றினை இடமாகக்கொண்ட புனிதர்

குளிர்ந்த கண் பார்வையை அளித்து அருளினார்

செம்மையாகிவிட்ட் பார்வையுடன் விழித்து

முகம் மலர்ந்தார்

உள்ளம் பரவசமாகி

இறைவரின் திருவடிகள் மீது வீழ்ந்து வணங்கினார்

3463.

விழுந்தார் எழுந்தார்

பலமுறை பணிந்தார் மிகவும் துதித்தார்

மேலும் அதிகரித்த களிப்புடன் ஆடினார் பாடினார்

இன்ப வெள்ளத்தில் அழுந்தினார்

புற்றிடம் தோன்றிய

குளிர்பவளம் போன்ற

சிவக்கொழுந்தான இறைவரின் திருவருளை

இரு கண்களாலும் பருகினார்

திளைத்தார்

3464.

உலகம் உய்வதற்காகத்தோன்றிய நம்பி ஆருரர்

அர்த்த ஜாமக்காலம் நிரம்பும் வரை

தொழுது வணங்கினார்

பொன்மயமான

அழகிய

பூங்கோயிலின் மாளிகையை

விருப்பத்துடன் வலம் வந்தார்

திருமாலும் நான்முகனும்

தரிசிப்பதற்கு

தமது முறைக்காக

காத்திருக்கும் வாசலைக் கடந்தார்

வெளியே வந்தார்

தவ ஒழுக்கமுடைய அன்பர்களுடன்

தேவாசிரிய மண்டபத்தின் பக்கம் அடைந்தார்

3465.

நம்பி ஆரூரர் பிரிந்து விட்ட பிறகு

நங்கையாகிய பரவையாருக்கு

தங்குகிற

தமது மாளிகையில் தனிமை மிகுந்தது

தளர்ச்சி வந்தது

இரவு பகலாய்த்தோன்றியது

பகலோ இரவெனக் கழிந்தது

நாளெல்லாம் பொங்கும் காதலால் வருந்தியதில்

சில நாட்கள் போன பின் –

3466.

செம்மைநெறியாகிய சிவநெறி சேர்ந்த சுந்தரர்

திருநாவலூராளியான சுந்தரர்

திருவொற்றியூர் சேர்ந்து

பெருத்த கொங்கைகளையுடைய சங்கிலியாரை

மணம் புரிந்துகொண்ட செய்தியின் உண்மையை

அறிந்துவருவதற்காக

அவர் அனுப்பிய மக்கள் நிச்சயித்தனர்

உறுதி செய்தனர்

தம்மை அறியாமலே அவருக்கு சினம் எழுந்தது

தாங்கவியலா நெஞ்சுடன் தளர்ந்தார்

3467.

பரவையார்

மென் பூக்கள் பரப்பிய சயனத்தில் உறங்கவில்லை

உறங்க விரும்பவில்லை

விழித்திருக்கவும் விருப்பமில்லை

பொன்னாலான இருக்கையின்மீது

அமரப்பிடிக்கவில்லை

எழுந்து நிற்கவும் பிடிக்கவில்லை

நடந்து செல்லவில்லை

மழைபோல் பொழியும் காமனின் மலர் அம்புகளை

விலக்கவும் மாட்டார்

நம்பி ஆரூரரை மறக்கவும் மாட்டார்

அப்படியெனில்

அவரை நினப்பாரோ எனில்

சினத்தால் நினைக்கவும் மாட்டார்

வாய்விட்டு சொல்லவும் மாட்டார்

எலும்புவரையிலும் உருக்கும்

ஊடலில் இருந்தாரா

பிரிவில் இருந்தாரா

இரண்டின் நடுவில் இருந்தார்!

3468.

பரவையார்

இப்படிப்பட்ட கவலையுடன்

செயலற்ற தன்மையால்

உள்ளம் உடைந்து வருந்தும் நாளில்

நம்பி ஆரூரர்

பிறைச்சந்திரனை மாலையெனச் சூடிய சிவபெருமானின்

கோயிலின் முன்பு சேரும்போது

பரவையாரின் மாளிகையுள் நுழைவதற்கு

அனுமதி பெறாமல்

இசைவு பெறாமல்

வெளியே நிற்கும் பரிவார மக்களைக்கண்டார்

3469.

அங்கு –

நின்று கொண்டிருந்தவர்கள் சிலர்

நம்பி ஆருரரிடம் கூறியதாவது;

“ திருவொற்றியூரில் நிகழ்ந்ததை

முழுதும் அறிந்ததால்

அங்குள்ளவர்கள் வெளியே தள்ளியதால்

இன்று –

பரவையார் தங்கியிருக்கும்

அந்த மாளிகையின் வெளிப்பக்கம் கூட

சென்று பார்க்க முடியவில்லை”

3470.

வன்தொண்டர்

அவ்வாறு அவர்கள் கூறியதைக்கேட்டு

மனம் அழிந்தவரானார்

“இதனுக்கு தீர்வுதான் எதுவோ”

என்று உணர்வராகி

உலக இயல்பை நன்கு கற்ற சிலரை

பரவையார் கோபநிலையின் தன்மை அறிந்து

அதனைத் தணிப்பதற்காக அனுப்பினார்.

3471.

நம்பி ஆரூரர் அருளால் சென்ற அவர்கள்

நங்கை பரவையாரின்

பசும்பொன் அணிந்த அழகிய மாளிகை அடைந்து

சினம் தணியச் செய்யும் தன்மையோடு

புலவியான கடலில் அழுந்திக்கிடக்கும்

மின் போன்ற இடையை உடைய பரவையார் முன்

சென்று சேர்ந்தனர்

“எம் பெருமாட்டியின் பெருந்தன்மைக்கு

இவ்விதம் இருப்பது தகுமோ”

என்பது போன்ற பலவும் எடுத்துக் கூறினார்.

3472.

முதலில் பேத வழி எனப்படும்

சமாதான வழியில் உரைத்தனர்

பிறகு பலவும் சொல்லி

அவரது சினம் தணிய எடுத்துச் சொல்லினர்

அப்பரவையார் அக்கூற்றினை மறுத்தார்

தாம் கொண்ட சினத்தை மாற்றிக்கொள்ளவில்லை

“தீமை பொருந்திய

அந்த நம்பியின் திறம் குறித்து இன்னும் கூறுவீராயின்

உயிர் நீங்குவது உறுதி” என உரைத்தார்

பேச வந்தவர்கள் பேசாமல் போயினர்.

3473.

அம்மக்கள்

திரும்ப வந்து

நிகழ்ந்ததையெல்லாம்

அழகிய திருமுனைப்பாடி நாட்டின் தலைவரான

நம்பி ஆரூரர்க்குத் தெரிவித்ததும்

அச்சம் கொண்டார் நம்பி ஆரூரர்

துன்பக்கடல் கரையேற துணையாகிற

தோணி போன்றவரைக் காணாமல்

மனவேதனையால் நெஞ்சு காந்தியது

நெஞ்சு அழிய வருந்தி

இரவின் நடுயாமமான கடலில் மூழ்கித் தோய்ந்து

எழமாட்டதவர் ஆனார்

(காந்துதல் – ஆடுதல்)

3474.

அருகில் இருந்தவர்கள் உறங்கிவிட்டனர்

அர்த்த ஜாம இறை வழிபாடும் அடங்கிவிட்டது

உலகில் உள்ளவர்கள் நடமாட்டமும் நின்றது

பேயும் உறங்கும் நள்ளிரவில்

மணம் வீசும் கொன்றைமலர் சூடிய சடை மீது

பாம்பும் இளம் சந்திரனும் அணிந்த இறைவரின் தோழர்

தனியே வருத்தத்துடன் இருந்து சிந்தித்தார்.

3475.

என்னை ஆட்கொண்ட இறைவரே

முன்வினையின் பயனாக

இவ்வினைக்கு காரணமாய் நின்ற பரவையாரிடம்

நான் செல்ல அருள் செய்யீரோ!

இந்த நடு யாமத்தில்

அன்னம் போன்ற பரவையாரின் புலவியை நீக்குவது
தவிர

வேறு செயல் இல்லை என வேண்டினார்

இறைவரை நினைத்தார்.

3476.

அடியவர்களின் துன்பம் எனும் இடுக்கண்ணைத்

தாங்க இயலாத சிவபெருமான்

தம்மால் ஆண்டு கொள்ளப்பட்ட தோழரான

நம்பி ஆரூரரின் குறையை முடிக்காமல் இருப்பாரோ

உலகம் முழுதும் ஈன்ற

பொன்போன்ற அழகிய தளிர்க்கை உடைய

காமாட்சி அம்மையாரின் கைவளையல் தழும்பும்

முலைச்சுவடும் கொண்ட இறைவர் சிவபெருமான்

உலகளந்த நெடியோன் ஆகிய திருமாலும் காண இயலாத

தனது திருவடிகள் நிலத்தில் பொருந்துமாறு

நம்பி ஆரூரர் முன்பாக தோன்றினார்.

3477.

தம்பிரான் ஆகிய தம் இறைவர் எழுந்தருளியதும்

தாங்க இயலாத மகிழ்ச்சியினால்

உடலின் எல்லா உறுப்புகளும் நடுங்கி

உடல் முழுதும் மயிர்ப்புளகம் உணடாக்கியது

சுந்தரர் எனும் நம்பி ஆரூரர்

நளினம் மிகுந்த

அழகிய மலர்க்கைகளால் தலை மேல் குவித்தார்

அம்மை பாகரான இறைவரின் .

சிவந்த திருவடித்தாமரையின் கீழ் விழுந்தார்.

— இறையருளால் தொடரும்


pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation