பெயெரெச்சம்..

This entry is part [part not set] of 39 in the series 20101002_Issue

தேனம்மை லஷ்மணன்


***********************

லாரி முகப்புகளில்.,
விளம்பரப் பலகைகளில்.,
திரையரங்கு நிறுத்தங்களில்.,
ஊர் காட்டிகளில்.,
ஒளிந்து தெரியும் உன் பெயர்..

ஓட்டுனர் பயிற்சிப்பள்ளியோ.,
நகை அடகுக்கடையோ.,
உணவுக் கூடமோ.,
அணியாடை அகமோ.,
தேய்ந்தும் கரைந்தும்
மறைந்தும் பளிச்சிட்டும்..
சுருட்டைக் கேசமாய்
கருத்த எழுத்துக்களில் உன் பெயர்..

உன் பெயர் சொல்லிக் கூப்பிட்டு
யாரோ யாரையோ அழைக்கும்போதும்
தோளணைத்துச் செல்லும்போதும்.,
குழந்தைகளைக் கொஞ்சும்போதும்.,
காதுகளில் வழிகிறது தேன்..

பத்ரிக்கையிலோ.,
புகைப்படத்திலோ.,
தொலைக்காட்சியிலோ.,
உன் பெயர் கொண்டவரைப் பார்த்தால்
ஒரு சந்தோஷப்பூ மலர்கிறது
கண்ணிலும்., மனசிலும்…,இத்ழிலும்.,
எதிர்பாராது உனையே கண்டதாய்..

உன் பெயர் பொறித்த இடங்கள்
சரித்திரக் கல்வெட்டுக்களாய்
மனதில் படிந்து.,

தடங்களற்ற கணனித்திரையிலும் கூட
நிரவிக் கிடக்கும் உன்னை.
நெருடிப்பார்க்கிறேன்
நீ கனவா நனவா என்று.

Series Navigation

தேனம்மை லஷ்மணன்

தேனம்மை லஷ்மணன்