புழுத் துளைகள் – 2

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

ரெ.கார்த்திகேசு


*** *** ***

நரித்தா விமான நிலையத்திற்கு வான்வெளிக் கணித மையத்தின் கறுப்பு நிற விருந்தினர் கார் வந்திருந்தது. சீருடை அணிந்த ஓட்டுநர் ‘டாக்டர் அரவிந்தன், மலேசியா ‘ என்று எழுதப் பட்ட அட்டை பிடித்து வரவேற்பு நிலையத்தில் நின்றிருந்தார். அவரே அவனுடைய பைகளையெல்லாம் தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளி காரில் கொண்டு ஏற்றினார். பளபளக்கும் கறுப்பு நிற டொயோட்டா கார்.

விருந்தினர் மாளிகையில் அறை சிறியதாக இருந்தாலும் தீவிர சுத்தத்துடன் இருந்தது. பல்துலக்கும் தூரிகையிலிருந்து சவர பிளேடுகள் வரை பிளாஸ்டிக்கில் சுற்றி வைக்கப் பட்டிருந்தன. பொட்டுத் தூசியில்லாத படுக்கை விரிப்புகள். காலை 11 மணிக்கு பேராசிரியர் யஷிமோத்தோவுடன் சந்திப்பு என்று சொல்லிவிட்டு ஓட்டுநர் தாம் வரவேற்பறையில் காத்திருப்பதாகச் சொல்லிப் போனார்.

தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே எண்களின் மேல் தனக்கு ஏற்பட்ட மோகம் தன்னை இந்த அறிவியல் பூமியான ஜப்பானில் கொண்டு வந்து விட்டிருப்பதை நினைக்க அவனுக்கு ஆனந்தமாக இருந்தது. கால் அரைக்காலிருந்து, காணி மாகாணி வரை அவன் பிழையில்லாமல் கூட்டிச் சொல்வதை பழைய காலத்தில் தமிழ்நாட்டில் படித்து வந்திருந்த பெரியசாமி வாத்தியார் கவனித்துப் பாராட்டி உற்சாகப்படுத்தத் தவறவில்லை.

இடைநிலைப் பள்ளியில் பின்னங்கள் மிகச் சுலபமாக வந்தன. இறுதி வகுப்பில் கூடுதல் கணிதமும் செய்தான். அறிவியல் பாடங்களில் இயற்பியலையும் வேதியலையும் அவன் எண்களாகவே பாடம் செய்ய முடிந்தது. பல்கலைக் கழகம் போகும் வாய்ப்பு வந்தபோது அவன் விரும்பியேற்றது கணிதத் துறை. அங்குதான் கொள்கை அடிப்படையிலான இயற்பியலில் வான் வெளியையெல்லாம் காகிதத்தில் எண்களாலான சூத்திரங்களைப் பயன்படுத்தியே அளந்துவிட முடியும் என்ற அபூர்வமான செய்தி அவனுக்குப் படிந்தது.

மலேசிய அரசின் உபகாரச் சம்பளங்கள் பெற்று கொலோன் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் முடித்ததோடு டாக்டரேட்டும் செய்தான். அங்கு ஜெர்மன் மொழியையும் பயின்றான். கணிதமும் வான்வெளியும் கைகோர்த்து நடக்கின்றன என்பதை முழுமையாக அறிந்துகொண்டது அங்குதான். புழுத் துளை என்பது அவன் கவனத்துக்கு வந்ததும் அங்குதான்.

வான்வெளிப் பயணம் என்பது இன்னும் ஒரு கனவாகவே இருப்பதற்கு அண்டங்களின் தூரமே காரணம். அவற்றைக் கடக்கப் போதிய வேகம் கொண்ட கலங்கள் இல்லை. மனித ஆயுள் போதாது.

ஆனால் வான்வெளி ஆய்வில் பெரிய நட்சத்திர மண்டலங்களையெல்லாம் விழுங்கிவிடும் கருந் துளைகள் அண்டத்தில் இருக்கின்றன என்பது கொள்கையளவில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இந்தக் கருந்துளைகள் நட்சத்திரங்களை விழுங்கும் வேகம் ஒளியின் வேகத்தைவிட அதிகமாக இருப்பதால் இவற்றிலிருந்து ஒளியே வெளிவருவதில்லை. ஆகவே எந்தத் தூர நோக்காடியும் இதைக் காண முடியாது. ஆகவேதான் கொள்கையளவிலான அனுமானமாக அவை இருக்கின்றன. எண்களாலும் சிக்கலான சூத்திரங்களாலுமே அவற்றை வருணிக்க முடியும்.

அரவிந்தனைக் கருந் துளை கட்டிப்போட்டிருந்தது. அவை இருப்பதற்கான கணிப்புகளை வரையறுக்க அவனால் முடிந்தது. கருந் துளையின் மறுபக்கத்தில் காலத்தின் போக்கைத் தலைகீழாக்கும் வெண் துளையும் இருக்கிறதெனவும் கொள்கையளவில் அனுமானிக்கப் பட்டிருக்கிறது. கருந் துளையையும் வெண் துளையையும் இணைக்கும் பிரம்மாண்டமான சுரங்கம்தான் புழுத் துளை எனவும் வருணிக்கப் பட்டுள்ளது.

இதைப்பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளவர் பேராசிரியர் யஷிமோத்தொ. வான் வெளிப் பயணத்திற்குப் புழுத் துளைகளை பயன் படுத்த முடியுமா என்ற பாதையில் அவரது ஆய்வு இருந்தது. அவருடைய ஆராய்ச்சிக்காகவே ஜப்பானிய அரசாங்கம் இந்த வான்வெளிக் கணிதத்திற்கான அனைத்துலக தோக்கியோ மையத்தை அமைத்துக் கொடுத்திருந்தது.

தன் டாக்டரேட் ஆய்வின்போது படிக்க நேர்ந்த அவர் வகுத்திருந்த ஒரு கணித சூத்திரத்திற்கு ஒரு சிறிய ஒட்டு ஒன்றைத் தன் கணிப்பிலிருந்து எழுதினான் அரவிந்தன். அது பேராசிரியரின் அடிப்படை ஆய்வை எவ்வகையிலும் பாதிப்பதல்ல. ஆனால் அதில் ஒரு சிறிய பகுதியை நுண்ணியமாக்கும் கணிதம்தான்.

யஷிமொத்தோ தொடர்பான விஷயமாக இருந்ததால் அவரிடம் கருத்துப் பெற வேண்டும் என அந்த ஆராய்ச்சி இதழ் அவருக்கு அனுப்பியிருக்கிறது. அதுதான் அவனை ஜப்பான் வரைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது.

*** *** ***

தோக்கியோவுக்கு 25 கிலோமீட்டருக்கு வெளியே அழகிய இயற்கைச் சூழலில் வான்வெளிக் கணிதத்திற்கான அனைத்துலக தோக்கியோ மையம் வளர்ந்த மரங்களுக்குள்ளே புதையுண்டிருந்தது. வரவேற்பறையில் சீருடையணிந்திருந்து சிக்கென்றிருந்த ஜப்பானிய இளம்பெண் அவனுக்காக விரிந்த புன்னகையுடன் காத்திருந்தார். குனிந்து குனிந்து வணக்கம் செலுத்தினார். அவனுக்கு முன்னால் வேகமாக நடந்து இயக்குனரின் அறைக்குக் கொண்டு சென்றார். அவர்கள் இயக்குநரின் கதவைத் தட்டிய பொழுது காலை மணி 11.

கதவு திறந்து வந்த மதிய வயதுக் குட்டைப் பெண்மணிதான் அகிக்கோ யஷிமோத்தோ என்று நம்பக் கடினமாக இருந்தது. ஜப்பானிய முறையில் குனிந்து வணக்கம் சொல்லிக் கைகுலுக்கி வரவேற்றார். ஒரு அழகிய சின்னஞ்சிறு புட்டியிலிருந்து சாக்கே ஊற்றி அவனுக்கு கொடுத்தார்.

‘பழக்கம் உண்டா ? ‘ என்று கேட்டார்.

‘முன்பு கொஞ்சமாக அருந்தியிருக்கிறேன்! ‘ என்றான்.

‘கற்றுக் கொள்ளூங்கள். சாக்கே இல்லாமல் ஜப்பானிய கலாச்சாரத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது! ‘

முகமன்கள் முடிந்த பின் விஷயம் ஆரம்பமாயிற்று.

‘அரவிந்தன். உங்கள் கட்டுரை கண்டு நான் மிக மகிழ்ச்சியடைந்தேன். புழுத் துளைகளில் மனிதர்கள் சவாரி செய்து வேற்று அண்டங்களை அடையும் என்னுடைய கொள்கை அளவிலான சூத்திரத்தில் நீங்கள் செய்திருக்கும் ஒரு மறுகணிப்பு எங்கள் ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியிருக்கிறது. ஒருவகையில் ஒரு பத்தாண்டுகளில் ஏற்படவேண்டிய முன்னேற்றம் உடனே ஏற்பட வழியேற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு பங்களிப்பு வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான மலேசியாவில் இருந்து வரும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. அந்தச் சூத்திரத்தின் விரிவு வெறும் கணித அறிவினால் மட்டும் ஏற்பட்டதல்ல. உங்களுக்கு நல்ல கற்பனை ஆற்றல் இருக்கிறது. அந்தக் கற்பனையின் வழியாகத்தான் நீங்கள் இந்த கணித இலக்கை அடைந்திருக்கிறீர்கள். இந்த மாதிரியான கற்பனாவாதிகளை – கனவு காண்பவர்களைத்தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். ‘

அரவிந்தனுக்கு மகிழ்ச்சியாகவும் கூச்சமாகவும் இருந்தது. ‘நான் உங்களிடம் இன்னும் கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன், பேராசிரியர் அவர்களே! ‘ என்றான்.

‘இதோ பாருங்கள். இந்தப் பேராசிரியர் என்பதெல்லாம் வேண்டாம். நாம் சக விஞ்ஞானிகள். என்னை நீங்கள் அக்கிக்கோ என்றே கூப்பிடலாம்! ‘

‘நன்றி அக்கிக்கோ ‘

‘சரி வாருங்கள். பரிசோதனை அறைக்குப் போகலாம். அங்கே சில வியக்கும் உண்மைகள் சிலவற்றை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்! ‘

அவர் வழிகாட்ட அரவிந்தன் பின்னால் நடந்தான்.

*** *** ***

பரிசோதனை அறையில் இன்னும் மூன்று விஞ்ஞானிகள் அவனுக்காகக் காத்திருந்தனர். குனிந்து வணக்கம் செலுத்திக் கைகுலுக்கினார்கள்.

ஒரு 18 வயது இளைஞனைப் போல் காணப்பட்ட அழகிய முகம் கொண்ட ஒருவர் முன்னால் வந்ததும் அக்கிக்கோ கூறினார்:

‘அரவிந்தன் இவரை நீங்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். கவாபாத்தா சாத்தொ ஒரு வான்வெளிப் பிரயாணி. அமரிக்காவிலும் ரஷ்யாவிலும் பயிற்சி பெற்றுள்ளார். அனைத்துலக வான் வெளி நிலையத்தில் ஏற்கனவே மூன்று மாதங்கள் இருந்து வந்திருக்கிறார். ‘

‘ஆமாம். இவரைப் பற்றி நான் பத்திரிகைகளில் வாசித்திருக்கிறேன்! மிகவும் மகிழ்ச்சி! ‘ என்றான்.

‘ஆனால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய புதுச் செய்தி என்னவென்றால், இவர்தான் புழுத் துளை வழியாக பிரயாணம் செய்யப் போகும் முதல் மனிதர்! ‘

அரவிந்தன் அக்கிக்கோவை அதிர்ச்சியுடன் பார்த்தான். ‘என்ன சொல்கிறீர்கள் ? இந்த புழுத் துளை வழியான பிரயாணமெல்லாம் ஒரு கொள்கையளவில்தானே! ஏட்டில் மட்டும்தானே அது சாத்தியம் ? அதற்கு ஏன் இப்படி ஒரு வான் வெளி வீரர் தேவை ? ‘

அக்கிக்கோ புன்னகைத்தார். ‘கவாபாத்தா சான், நீங்களே சொல்லுங்கள்! ‘ என்றார்.

கவாபாத்தா கணினியில் சில உத்தரவுகளைச் செலுத்த பெருந்திரையில் ஒரு வான்கலம் தோன்றியது. அவர் விளக்கினார்: ‘ஐந்தாண்டுகளுக்கு முன்பே ஜப்பானிய அரசு பேராசிரியர் யஷிமோத்தொவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு மிக ரகசியமாக இந்த வான்கலத்தைக் கட்ட ஆரம்பித்தது. இதன் அடிப்பகுதி இதன் எரிபொருள் தாங்கி. யூரேனியம். குளிர் ஃபியூஷனில் சக்தி உற்பத்தி செய்கிறது. மேற்பகுதிதான் வான்வெளி வீரர் அமரும் கேப்சியூல். இந்த வான்கலம் கருங் குழியை அடைந்ததும் இயக்கம் நின்றுவிடும். அதற்கு மேல் இயற்கை விதிகள் காப்சியூலை இயக்கிப் பிரயாணத்தை ஒளியின் வேகத்துக்கு மேல் துரிதப் படுத்தும். ‘

‘ஆ ‘ வென்று வியந்து கேட்டுக் கொண்டிருந்தான். இப்படி ஒரு ராட்சதக் கனவு நனவாகும் என்பது சாத்தியம் என இதற்கு முன் அவனுடைய கணித மூளைக்குக் கூடத் தோன்றவில்லை.

‘ஓ மை கோட்! ‘ என்றான் அரவிந்தன்.

‘இந்தப் பயணத்தின் போது அவரை எங்காவது சந்தித்து மனித ரகசியங்கள் பற்றிக் கேட்க வேண்டும் என்பதால்தான் இதற்கு ஒப்புக் கொண்டேன்! ‘ என்றார் கவாபாத்தா. அறையில் சிரிப்பலை பரவிற்று.

அரவிந்தன் கேட்டான்: ‘சரி! எப்படித் திரும்புவீர்கள் ? ‘

‘நாம் போக வேண்டிய பாதையை நிர்ணயம் செய்தபிறகு கணினி அதையே திருப்பி த்ிரும்பும் பாதையாக நிர்ணயிக்கும்! ‘

‘அத்தனைக்கும் இதில் உள்ள எரிபொருள் போதுமா ? ‘

‘போதும். இது ஒரு சிறிய அணு உலை. தொடர்ந்து உற்பத்தி செய்துகொள்ளும்! ‘

அக்கிக்கொ குறுக்கிட்டுக் கூறினார்: ‘அரவிந்தன் உங்கள் மனதில் நூற்றுக் கணக்கான கேள்விகள் எழும் என்பது எங்களுக்குத் தெரியும். அடுத்த சில நாட்களில் இவற்றை எப்படிச் சாதித்தோம் என்பதைப் படிப்படியாக விளக்குகிறோம். ஆனால் இப்போது உங்கள் உடனடியான பொறுப்பு ஒன்று இருக்கிறது! ‘ என்றார் அக்கிக்கோ.

காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு அரவிந்தன் கேட்டான்.

‘உங்கள் நீட்சியினால் கருங்குழியின் எந்தத் திசையில் இந்த கேப்சியூலை வைத்தால் அது சரியான திக்கில் பிரயாணப் படும் என்பதை நிர்ணயித்து விட்டோம். ஆனால் உங்களிடம் நான் இப்போது கேட்பது வேறு! ‘

‘சொல்லுங்கள் ‘

‘இந்த கேப்சியூல் எங்கும் செல்லாமல் இருந்த இடத்திலேயே இருப்பதற்கு நீங்கள் பாட்டை வகுத்துக் கொடுக்க வேண்டும்! ‘

அரவிந்தன் விழித்தான். எங்கும் போகாமல் இருந்த இடத்தில் இருக்க எதற்கு இத்தனை முயற்சிகள் ? என்ன சொல்லுகிறார் ?

‘விளங்கவில்லை அக்கிக்கோ! ‘

‘சொல்லுகிறேன். புழுத் துளையைப் பயன்படுத்துவது பற்றிப் பேசும் போதெல்லாம் இன்னொரு அண்டத்துக்குப் போவது பற்றியே நாம் சிந்திக்கிறோம். ஆனால் ஒளியின் வேகத்தை மனிதனால் மிஞ்ச முடியுமானால் நம் கோளத்திலேயே நாம் இருக்குமிடத்திலேயே காலத்தை முந்திச் செல்லலாம். நம் எதிர்காலத்தைப் பார்க்கலாம். ஆனால் முதலில் வான்வெளிக்குச் சென்று புழுத் துளையில் நுழைந்து மீண்டு பின்னர் தொடங்கிய இடத்திலேயே இறங்க வேண்டும். ‘

‘எப்படி ? ‘

‘எனக்குத் தெரியாது. முடியும் என்று மட்டும் எனக்குப் படுகிறது. உங்கள் கற்பனா சக்தி தீவிரமாகச் செயல் பட வேண்டும். அதன்பின் உங்கள் கணக்கில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும். என்ன நினைக்கிறீர்கள் ? ‘

மூளை புகை படர்ந்து கிடந்தது. பழக்கமில்லாத திசைகளில் நியூரோன்கள் பாய்ந்து முட்டிச் சிதறிச் செயல் இழந்து நின்றன.

‘அக்கிகோ. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். மூளை செயலிழந்து நிற்கிறது! ‘

‘நல்லது. அப்படியானால் அது வேறு திசைகளில் பயணப்பட ஆயத்தமாகிறது என்று அர்த்தம். உங்கள் கணக்குகளை வகுக்க இரண்டு சூப்பர் கணினிகளை உங்கள் உபயோகத்திற்கு ஒதுக்கியுள்ளேன். இந்த இரண்டு விஞ்ஞானிகளும் 24 மணி நேரமும் உங்களுடன் இருப்பார்கள். ‘

திகைத்திருந்தான்.

‘இன்னும் மூன்று மாதங்களில் நமது புழுத் துளைப் பயணம் துவங்க வேண்டும் ‘

நுரையீரல் வெடிக்க ‘என்னால் முடியாது ‘ என்று கதற வேண்டும் போல இருந்தது. ஆனால் இதய வெளியில் நட்சத்திரங்கள் நிறைந்த ஒரு மண்டலத்தில் ஒரு புழு ஆடிக்கொண்டிருந்த கற்பனையில் மெய்மறந்து இருந்தான்.

*** *** ***

continued…

*** *** ***

kgesu@pd.jaring.my

Series Navigation