புதிய பாலை

This entry is part [part not set] of 30 in the series 20020909_Issue

இராம.கி.


‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பதோர் வடிவம் கொள்ளும் ‘

– சிலப்பதிகாரம் 11:60-7

என்றான் இளங்கோ தமிழப் பாலையை

இது

அன்றைய நிலையில் அவன்செய் வரையறை;
இன்றைக் கிருந்துநான் எண்ணிப் பார்க்கிறேன்:

முல்லையும் மருதமும் முறைமையில் திரிந்து….
சரளையும் மேடும் மணலொடு புணர்ந்து
வேலிக் கருவை கோரைப் புல்லோடுப்
போலிகை நிலமாய் புறத்தினிற் காட்டி
பன்னெடுங் காலம் பானையில்## வினைத்து
கன்னெயும்* வளியும் கலந்து உருக்கி
பொன்னையும் பொலிவையும் நெய்யொடு பீற்றி
கூடத் தெறிப்பின் மாடகோ புரங்கள்
ஆடல் தோற்றம் அழகு வண்ணங்கள்
தேடி வாராதோ அரபுப் பாலையில் ?

பின் துயர் எங்கே நடுக்கி உறுத்தும் ?

எண்பதில் நாற்பது ஆயிரம் மாத்திரி#
எவனுக்குத் தெரியும் நகரப் பரப்பு ?
ஊருக்கு வெளியே பாலைவனமாம் ?
உள்ளே இருந்தால் யாருக்குத் தெரியும் ?
கோடையில் மட்டும் பதனித்து** விட்டால்
நாடவர் யார்தான் வாழ மறுப்பார் ?

யாரங்கே காசை அள்ளித் தெளியுங்கள்!
பாரெங்கும் செழிப்பைப் பார்த்துக் கொணருங்கள்!

பின் துயர் எங்கே நடுக்கி உறுத்தும் ?

பளிங்கும் ஆடியும் பளிக்கும் கருங்கலும்
விளங்கும் ஒளியும், வியன்நகர் மனைகளும்;
பறக்கும் சாலையும், திரக்கும், நேரியும்
வழிதுறை எல்லாம் மகிழுந்துச் சாரையும்;
(சாலையில் நடப்பது இந்தியன் மட்டுமே!
வேலைக்கு வந்தவன் வேறென்ன செய்வான் ?)

வேலிக் கருவையின் வாழ்வைப் பாருங்கள்.
ஆறுகிடந்தன்ன அகல்நெடுந் தெருக்களில்
இந்த மரமே இருமருங் கிருக்கும்
நடுவரி முழுதும் பேரீந்தின் ஆட்சி

உலகில் உள்ள பொதினர்கள்$ எல்லாம்
கலக்க வருவார்; கல்நெய் அல்லவா ?
ஏழரை மில்லியன்@ யார்தரு வார்இனி ?

மணலும் கல்லும் மணல்சார் இடமும்
புதுத் திணை என்றால் புலவர்கொள் ளீரோ ? ‘

உரக்கச் சொன்னேன்:

‘பின் துயர் எங்கே நடுக்கி உறுத்தும் ?
உலகைப் புரப்பதே பாலை வனந்தான்! ‘

வானொலி சொன்னது:

‘கல்நெய் இன்றேல் பாலையென் னாகும் ? ‘

விடை தெரியாமல் முகம் கவித்தேன் நான்.

## புவி என்ற பானை
* கல்+நெய் = கன்னெய் = petrol here denoting petroleum
#ஆயிரம் மாத்திரி = கிலோ மீட்டர் (here it denotes the size of Riyadh)
** பதனித்தல் = air-conditioning
$ பொதினம் = business; பொதினர் = businessman
@ seven and half million barrels per day = the present production of Oil in Saudi Arabia

***
poo@giasmd01.vsnl.net.in

Series Navigation

இராம.கி.

இராம.கி.