பிளாஸ்டிக் என்னும் பூமியின் எதிரி

This entry is part [part not set] of 30 in the series 20020512_Issue


காய்கறிக்கடைகளிலும், பலசரக்குக் கடைகளிலும் சாமான்களை கொண்டு செல்லத் தரப்படும் பிளாஸ்டிக் பைகள்- பாலித்தீன் பைகள் – உற்பத்தி செய்ய ஆபத்தானவை. இவை மண்ணோடு மண்ணாக மக்க 1000 வருடங்கள் பிடிக்கும்.

இவ்வாறு இவை மக்கவும், சிதையவும் வெகு காலம் ஆவதால், இந்த பைகள் பெரும் சுற்றுச்சூழல் அழிவுக்கும் ஆபத்துக்கும் காரணமாக ஆகிக்கொண்டு வருகின்றன.

சென்ற மார்ச் மாதம், பங்களாதேஷ் அரசாங்கம், எல்லா பாலித்தீன் பைகளையும் தடை செய்தது. 1988-89 வெள்ளத்துக்கு காரணம் இந்த பிளாஸ்டிக் பைகளே என்பது கண்டறியப்பட்டதால், அரசாங்கம் பாலித்தீன் பைகளை பங்களாதேஷில் உபயோகிக்கத் தடை விதித்தது. பெரும்பாலான கழிவு நீர் குழாய்களை இந்த பாலித்தீன் பைகள் அடைத்துக்கொண்டதால், மழை நீர் வெளியேற வழியின்றி, பங்களாதேஷின் பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு பரப்பு தண்ணீரில் மூழ்கியது. இந்த வெள்ளம் பரந்த அழிவையும், பல உயிர்களையும் பலிகொண்டது.

தாய்வான் நாட்டில் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. சிங்கப்பூர் நாடு இந்த பிளாஸ்டிக் பைகளை தடை செய்யவில்லை என்றாலும், மக்கள் இந்த பைகளை அதிகம் உபயோகிக்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்தியாவில், தெருவில் அலையும் பசுக்கள் இந்த பிளாஸ்டிக் பைகளை சாப்பிட்டு, தொண்டையில் அடைத்துக்கொண்டு, மேலும் சாப்பிடமுடியாமல், பசியால் இறக்கின்றன. ஆமைகளும், இந்த பிளாஸ்டிக் பைகளை ஜெல்லி மீன் எனக் கருதி உண்டு, தொண்டையில் அடைத்து இறக்கின்றன என்பது பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில், இந்த பிளாஸ்டிக் பைகள் ‘தேசிய மலராக ‘ கிண்டல் செய்யப்படுகின்றன. ஏனெனில், இந்தப் பைகள் வேலிகளிலும், புதர்களிலும் சிக்கிக்கொண்டு ஊசலாடிக்கொண்டிருப்பது தென்னாப்பிரிக்காவில் அடிக்கடிப் பார்க்கப்படும் விஷயம்.

அமெரிக்காவில், இந்த பிளாஸ்டிக் பைகள் பெருமளவு உபயோகிக்கப்படுகின்றன. காகிதப்பைகள் உபயோகம் குறைந்து பிளாஸ்டிக் பைகள் உபயோகம் அதிகரித்திருப்பது கணக்கெடுப்பில் தெரிகிறது.

அதற்குக் காரணம், இந்த பிளாஸ்டிக் பைகள் காகிதப்பைகளை விட உறுதியானவையாக இருப்பது, சுகாதாரமாக இருப்பதும், உற்பத்தி செய்யும் விலை குறைவாக இருப்பதும் தான்.

Series Navigation