பிரிட்டன் புளுடோனிய உற்பத்தி அணு உலையில் பெரும் தீ விபத்து [Britain ‘s Windscale Plutonium Production Reactor Fire Accident]

This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


முன்னுரை: நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு 1957 அக்டோபர் 10 ஆம் தேதி பிரிட்டனின் ஸெல்லாஃபீல்டு [Sellafield] என்னும் இடத்தில் நிகழ்ந்த வின்ட்ஸ்கேல் இராணுவப் புளுடோனிய உற்பத்தி அணு உலையின் தீ விபத்தைப் பற்றி இப்போது எழுதுவதின் நோக்கம் என்ன ? பாரத்தில் திரள்கரி மிதவாக்கியாகப் பயன்படும் ஸைரஸ் ஆராய்ச்சி அணு உலை [CIRUS Research Reactor] பம்பாயில் உள்ளது. மேலும் அணு ஆயுதங்களுக்கு வேண்டிய புளுடோனியத்தை உற்பத்தி செய்ய பாரதம் ஓரிரு கனநீர் அணு உலைகளை இயக்கி வருகிறது. பிரிட்டன் இராணுவ அணு உலையில் நேர்ந்த தீ விபத்தில் பாரதம் கற்றுக் கொள்ளக் கூடிய பாடங்கள் அநேகம் உள்ளன! 1986 இல் செர்நோபிள் விபத்து [தகுதிநிலை:1], 1979 இல் திரிமைல் தீவு விபத்து [தகுதிநிலை:3] ஆகியவற்றின் வரிசையில் கீழான தகுதிநிலை:5 [Level:5 Accident] பெறுவது, வின்ட்ஸ்கேலில் நேர்ந்த அணு உலை விபத்து! அவ்விபத்தின் கதிரியக்க விளைவுகளை ஒப்பு நோக்கினால், அதை ஒரு குட்டிச் செர்நோபிள் விபத்தாகக் குறிப்பிடலாம்!

அணு ஆயுதங்களுக்கு உற்பத்தி செய்யும் புளுடோனிய அணு உலை திரள்கரி மிதவாக்கியில் [Graphite Moderator] தீ உண்டாகி நூற்றுக் கணக்கான எருகோல்கள் தீப்பற்றி, 20,000 கியூரிக் கதிரியக்கத் துணுக்குகள் [20,000 curie Iodine 131] வெளியே பொழிந்தன! கடல் காற்று அடித்து கதிரியக்கம் பரவும் போது, சுற்றுப் புறத்தில் வாழும் பொது மக்கள் எச்சரிக்கப் பாடாததால், பலர் கதிர்வீச்சுத் தாக்குதலுக்கு ஆளானார்கள். கதிர்த் தீண்டல் மிகுதியால் பத்தாண்டுகளுக்கு அணு உலைக்குள் யாரும் புக முடியாமல் போனது. தீவிபத்துக்குப் பிறகு புளுடோனியம் தயாரிக்கும் வின்ட்ஸ்கேல் இரட்டை இராணுவ அணு உலைகளும் நிரந்தரமாக மூடப்பட்டு முடக்கமாயின! அணு உலைக்கு அருகே வட்டாரப் பண்ணைகளில் கறந்த பாலில் கதிர் ஐயோடின் அளவு [Radioiodine Iodine-131] மிகையாகக் காணப்பட்டுப், பல வாரங்களாக 2 மில்லியன் லிட்டர் பால் ஐரிஷ் கடலில் [Irish Sea] கொட்டப் பட்டது! கடல் காற்றோட்டத்தால் கதிரியக்கப் பொழிவுகள் நூற்றுக் கணக்கான மைல்கள் கிழக்கிலும் மேற்கிலும் பயணம் செய்து, அயர்லாந்து, மற்றும் மத்திய ஈரோப்பிய நாடுகளின் தளங்களிலும் பரவின!

பிரிட்டனில் இயங்கும் அநேக திரள்கரி மிதவாக்கி அணு உலைகள்

அகில நாடுகளில் இயங்கும் கொதிநீர் அணு உலை, அழுத்த எளியநீர் அணு உலை, கனநீர் அணு உலை, வாயுத் தணிப்பு திரள்கரி மிதவாக்கி அணு உலை [Boiling Water Reactor (BWR), Pressurized Light Water Reactor (PWR), Heavy Water Reactor (HWR), Gas Cooled Graphite Moderated Reactor (GCR)] ஆகிய நான்கு வித மாடல்களில், அநேக திரள்கரி மிதவாக்கி அணு உலைகளைத் தொடர்ந்து கடந்த 50 ஆண்டுகளாக இயக்கி, விருத்தி செய்து வருவது, பிரிட்டன் ஒன்றுதான்!

தற்போது பிரிட்டனில் இயங்கும் 35 அணு உலைகள் 12,968 MWe [22% பங்கு] மின்னாற்றலைப் பரிமாறி வருகின்றன. அவற்றில் 32 அணு உலைகளில் திரள்கரி மிதவாக்கியாகவும் [Graphite Moderated] வாயு வெப்பக் கடத்திச் [Gas Cooled] சாதனமாகவும் பயன்படுகின்றன. 32 உலைகளில் 18 அணு உலைகள் பழைய ‘மாக்நாக்ஸ் மாடலைப் ‘ [Older Magnox Type] பின்பற்றி உருவாக்கப்பட்டவை.

நியூட்ரான் வேகத்தைக் குறைக்கும் எளிய நீரின் ‘மிதவாக்கி விகிதம் ‘ [Moderating Ratio]: 45, திரள்கரியின் ‘மிதவாக்கி விகிதம் ‘ [Moderating Ratio]: 3125, கனநீரின் ‘மிதவாக்கி விகிதம் ‘ [Moderating Ratio]: 12500. எளிய நீரின் மிதவாக்கித் தன்மை குறைவானதால் BWR, PWR அணு உலைகளுக்கு செறிவு யுரேனியம் [2%-4%] தேவைப் படுகிறது. ஐயமின்றி மிதவாக்கி விகிதம் 12500 கொண்ட கனநீர் அணு உலைகள்தான் சிறிய வடிவத்தில், நியூட்ரான் சிக்கனத்தில் இயங்கி பெருமளவு மின்னாற்றலை உற்பத்தி செய்பவை. கனநீர், திரள்கரி மிதவாக்கி அணு உலைகளில் ஏராளமான மித வேக நியூட்ரான்கள் கிடைப்பதால், சாதாரண இயற்கை யுரேனிய எருக்கோல்களே [Natural Uranium Fuel Rods] போதுமானவை!

திரள்கரின் மிதவாக்கித் தன்மை எளிய நீருக்கும், கன நீருக்கும் இடைப்பட்டது. திரள்கரி கனநீரை விட மிக மலிவானது! உலையின் வடிவத்தை மற்ற இரண்டு மாடல்களுடன் ஒப்பு நோக்கினால் எல்லாவற்றிலும் திரள்கரி அணு உலைகள் உருவத்தில் மிகப் பெரியவை! திரள்கரியின் ஒரே ஒரு குறைபாடு, நியூட்ரான் மோதலால் நேர்ந்திடும் ‘விஞ்னர் விளைவு ‘ [Wigner Effect]! அணு உலையில் நியூட்ரான்கள் மேலும் மேலும் தாக்கும் போது, திரள்கரியில் நியூட்ரான் சக்தி இடப்பெயர்ச்சி ஆகி, தொடர்ந்து உஷ்ணம் ஏறுகிறது. ஆகவே அணு உலை இயங்கும் போது திரள்கரியின் உஷ்ணத்தைக் கண்காணித்துக் கொண்டு வர வேண்டும். திரள்கரியின் வெப்பம் அடிக்கடிக் குறைக்கப்படா விட்டால், உஷ்ணம் உச்ச நிலை அடைந்து தானாகவே தீப்பற்றிக் கொள்ள வழி உண்டாகும். பிரிட்டன் வின்ட்ஸ்கேல் விபத்து, திரள்கரியில் சேமிக்கப் பட்ட ‘விஞ்னர் விளைவுத் ‘ தீயால்தான் தூண்டப் பட்டது!

வின்ட்ஸ்கேல் புளுடோனிய அணு உலையில் நேர்ந்த தீ விபத்து

1945 இல் நியூ மெக்ஸிகோ, லாஸ் அலமாஸ் ரகசிய இராணுவ அணு ஆயுத கூடத்தில் அமெரிக்கா, பிரிட்டன் ஒன்றாய்க் கூடி உழைத்து முதல் அணு குண்டுகளைத் தயாரித்தாலும், 1946 இல் அமெரிக்கா தனது அணு ஆயுத நுணுக்கங்களை அன்னிய நாடுகளுடன் பங்கிட்டுக் கொள்ளக் கூடாது என்று தடுப்புச் சட்டம் இயற்றியது! அதன் பின் பிரிட்டன் தனது அணு ஆயுத திட்டங்களை உருவாக்க முற்பட்டது! அம்முறையில் 1950-1951 ஆண்டுகளில் அமைக்கப் பட்டவைதான் இரட்டை வின்ட்ஸ்கேல் அணு உலைகள் Pile:1, Pile:2. பிரிட்டனின் முதல் அணு ஆயுதத்திற்கு தேவையான புளுடோனியம் 1952 மார்ச்சில் தயாரானது!

அணு உலையின் வெப்ப ஆற்றல் 180 MWt. நியூட்ரான்களை மிதமாக்கும் திரள்கரிக் கட்டிகள் [Neutron Moderator Graphite Blocks] எட்டுமுக வடிவில் [Octagonal Shape] 50 அடி விட்டம், 25 அடி உயரத்தில் அடுக்கப் பட்டுள்ளன. திரள்கரிக் கட்டிகளுக்கு நடுவே 3444 எருக்கோல் செங்குத்துத் துளைகளும், கதிர் ஏகமூலங்கள் [Isotopes] தயாரிக்க 977 மட்டத் துளைகளும் அமைக்கப் பட்டன! கரிக் கட்டிகளைச் சுற்றிலும் உயிரியல் கவசமாக [Biological Shielding] 7 அடித் தடிப்பு உறுதி செய்யப்பட்ட கான்கிரீட் கட்டிடம் கட்டப் பட்டுள்ளது. வின்ட்ஸ்கேல் இரட்டை அணு உலைகளின் ஒரே ஒரு குறை, அபாய சமயத்தின் போது எழும் கதிரியக்கப் பொழிவுகளை உள்ளடக்கும் கோட்டை அரண் இல்லாதது ஒன்றே! 1950 ஆண்டுகளில் அணு உலைப் பாதுகாப்பு நெறி முறைகள் ஆழ்ந்து எழுதப் படாததால், கோட்டை அரண் முக்கிய மானதென்று அக்காலத்தில் கருதப் படவில்லை!

1952 முதல் வின்ட்ஸ்கேல் அணு உலை எருக்கருவில் [Reactor Fuel Core] விளக்க முடியாதபடி உஷ்ணம் ஏற ஆரம்பித்தது! அதை ஆழ்ந்து உளவிய போது, விஞ்னர் விளைவால் திரள்கரில் வெப்பசக்தி சேர்ந்து, விஞ்னர் சக்தி வெளியாகும் போது எருக்கருவின் உஷ்ணமும் அதிகமானது. பின் அதுவே தீப்பற்ற ஏதுவானது! ஆதலால் விஞ்னர் சக்தி வெளியேறா வண்ணம் அடிக்கடி வெப்பத்தைக் கூட்டி எருக்கருவின் உஷ்ணத்தைக் குறைக்கப்பட வேண்டும்! அம்முறை ‘மெதுத் தணிப்பு ஏற்பாடு ‘ [Annealing Process] என்று பெயர் பெறும்.

1957 அக்டோபரில் அணு உலை Pile:1 இல் எட்டுத் தடவைகள், Pile:2 இல் ஏழு தடவைகள் திரள்கரிக் கட்டிகளின் வெப்பம் ‘மெதுத் தணிப்பு ‘ முறையில் வெளியேற்றப் பட்டன. அணு உலை நிறுத்தப்பட்டு இப்பணி வாடிக்கையாகச் செய்யப்பட்டு வந்தது! வாடிக்கையான பராமரிப்பாயினும் ஒவ்வொரு மெதுத் தணிப்புப் பணியும் வெவ்வேறானது! அப்பணி புரிகையில் அதன் உட்பொருளை உணராது, அணு உலையில் என்ன நிகழ்கிறது என்று அறியாமல், இயக்குநர் கண்மூடித் தனமாகச் செய்து வந்தனர். இரண்டாவதாக உலைக் கலனில் திரள்கரியின் உஷ்ணத்தை அறிய தேவையான கருவிகள் அமைக்கப்பட வில்லை! வின்ட்ஸ்கேல் அணு உலை எருக்கள் தீப்பற்றி எரிய இந்த இரண்டுமே முக்கிய காரணங்கள்!

அணு உலை Pile:1 இல் செய்த ஒன்பதாவது ‘மெதுத் தணிப்பே ‘ கட்டுப் படுத்த முடியாமல் நிலை தடுமாறிப் போனது! அப்போது திரள்கரியிலிருந்து வெகு விரைவாக வெப்பம் வெளியேறி அஞ்சியபடித் தீப்பற்றி, அணு உலையில் யுரேனிய எருக்கோல்கள் 1300 டிகிரி C உஷ்ணம் ஏறி எரிந்து உருகின! 1500 எருத் துளைகளில் உள்ள 100-200 எருக்கோல்களில் தீப்பற்றின! அடுத்து எருக்கலன்கள் வெடித்தன! 17 டன் யுரேனிய எருக்கோல்கள் [20%] தீப்பிடித்து, கதிரியக்கத் துணுக்குகள் வெளியேறின!

இருபத்தி நான்கு மணி நேரம் அணைக்க முடியாத தீயை, இறுதியில் நீர் வெள்ளத்தை அடித்து, இயக்குநர் அணைத்தனர். பின்னால் கணக்கிடும் போது 6700 எருக்கோல்கள் சிதைந்தன என்று மதிப்பிடப் பட்டது! 1958-1961 ஆண்டுகளில் முதல் உலையின் சிதையாத எருக்கோல்கள் பாதுகாப்பாக நீக்கப் பட்டன. அடுத்து இரண்டாம் உலையில் எல்லா எருக்கோல்களும் அகற்றப் பட்டு, இரண்டு அணு உலைகளும் 1990 வரை ஓய்வு நிலையில் இருந்தன!

Fuel Bundle Removal from the Reactor

விபத்தில் வெளியேறிய கதிர்வீச்சுப் பொழிவுகள் அதன் விளைவுகள்

முதல் பிறப்பு பழைய அணு உலையான வின்ட்ஸ்கேல் Pile:1 இல் கோட்டை அரண் அமைக்கப் படாததால், கதிரியக்கம் எளிதாக வெளியே சென்றது. இரண்டு முறை தீவிரக் கதிர்வீச்சுகள் வெளியே பரவின! முதலில் யுரேனிய எருக்கோல்கள் எரிந்து கதிர்வீச்சுப் பிளவுத் துணுக்குகள் சூழ்வெளியில் தப்பிச் சென்றன! மறுநாள் நீரை ஊற்றி அணைத்த போது கிளம்பிய நீராவிக் கோளம் கதிர் முகிலையும், வாயுக்களையும் வெளியே தள்ளியது! அரசாங்க அறிக்கைத் தகவலில் 20,000 கியூரி ஐயோடின்-131 கதிரியக்கம் வெளியேறியதாக அறியப் பட்டது!

கதிரியக்க முகில் காற்றடித்து திசை மாறி இங்கிலாந்தின் தெற்குப் பிரதேசத்தில் பரவியது. பிறகு அயர்லாந்து, மத்திய ஈரோப்பிய நாடுகளிலும், கருவிகளால் அளக்கக் கூடிய அளவு ஐயோடின்-131 இன் கதிரியக்கம் காணப் பட்டது! அணு உலை உள்ளே வேலை செய்த பணியாளிகள் பாதுகாப்பு அளவுக்கு 150 மடங்கு மேற்பட்ட கதிரடி பெற்றனர்! புறத்தே வாழ்ந்த மாந்தர் பாதுகாப்பு அளவுக்கு 10 மடங்கு மேலாகக் கதிரடி வாங்கினர்! பிரிட்டனின் அணுசக்திப் பேரவை [United Kingdom Atomic Energy Agency (UKAEA)] பொதுநபர் பட்ட கதிரடிகள் மிகையாவை என்று அறிந்த பின்னரும், அவர்கள் வாழ்தளங்களிலிருந்து புலப்பெயர்ச்சி ஆகவில்லை!

விபத்து நேர்ந்து இரண்டு நாட்கள் கழித்து, மருத்துவ ஆய்வுக் குழு [Medical Research Council] ஒரு லிட்டர் பாலில் 3700 Bq/litre [1 litre milk with 3700 disintegration/sec Radioactivity] கதிரியக்கத்துக்கு மேலாக இருந்தால், அதைப் புறக்கணிக்க வேண்டு மென்று அறிவித்தது! கதிர்வீச்சு வெளியேறிய அபாயம் அறிந்ததும், மாவட்ட அதிகாரிகள் வின்ட்ஸ்கேலைச் சுற்றி யுள்ள 200 சதுர மைல் தளத்தில் வாழ்ந்த 17 பண்ணையார்கள் கறந்த பாலை ஐயோடின்-131 கலந்திருந்ததால் ஐரிஷ் கடலில் கொட்டும்படி ஆணை யிட்டனர்! அவ்வாறு மொத்தம் 2 மில்லியன் லிட்டர் பால் கடலில் பல வாரங்கள் கரைத்து விடப் பட்டது! பத்து மைல் வட்டாரப் பாலைச் சோதித்ததில் உச்ச அளவுக் கதிரியக்கம் 50,000 Bq/litre [13.5 மடங்கு மிஞ்சிய அளவு] உள்ளதாகக் காணப் பட்டது! மூன்று நாட்கள் கடந்து பாலில் கதிர் ஐயோடின்-137 [Radioiodine-137] விஷக்கலப்பு தெரிய வந்தது! 24 நாட்கள் கடந்துதான் எல்லாத் தடைகளும் நீக்கப் பட்டன!

மற்றும் 27,000 கியூரி ஐயோடின்-131, 16,000 கியூரி டெல்லூரியம்-132, 1200 கியூரி ஸீசியம்-137, 6 கியூரி ஸ்டிரான்சியம்-90, 3600 கியூரி போலோனியம்-210 ஆகிய கதிரியக்கத் துணுக்குகளும் புறத்தே சென்றதாக அறியப் படுகிறது!

வின்ட்ஸ்கேல் அணு உலைத் தீவிபத்து உண்டாகக் காரணங்கள்

1957 ஆம் ஆண்டு பிரிட்டனில் ஏற்பட்ட திரள்கரி தீ விபத்தைப் போல் மறுபடியும் நிகழுமா ? பின் உருவான அணு உலைகளில் பல மாறுதல்கள் செய்யப் பட்டதால் அப்படிப்பட்ட விபத்து நேர வழியே இல்லை! வின்ட்ஸ்கேல் விபத்து நிகழப் பின்வரும் காரணங்கள் முக்கியமானவை.

1. வின்ட்ஸ்கேல் திரள்கரி அணு உலைகளில் வெப்பத்தைத் தணிக்க காற்று பயன்படுத்தப் பட்டது. திரள்கரியில் ஆரம்பித்த தீ பல மடங்கு பெருக, காற்றில் உள்ள ஆக்ஸிஜனே பாதை வகுத்து விட்டது! பிரிட்டனின் நவீன அணு உலைகளில் காற்றுக்குப் பதிலாகக் கரியமில வாயு CO2 [Carbondioxide Gas] வெப்பக் கடத்தி வாயுவாக மாற்றப் பட்டது!

2. வின்ட்ஸ்கேல் அணு உலைகள் கீழான உஷ்ண நிலையில் இயங்கி, விஞ்னர் விளைவுக்கு ஏதுவாக வழி வகுத்தன! நவீன திரள்கரி மிதவாக்கி அணு உலைகள், வின்ட்ஸ்கேல் அணு உலைகள் போலின்றித் தற்போது உயர்நிலை உஷ்ணத்தில் இயக்கப் படுகின்றன. உயர்ந்த உஷ்ணத்தில் விஞ்னர் சக்தி திரள்கரியில் மிகையாகச் சேமிக்கப் படுவதில்லை!

American Graphite Reactor

3. வின்ட்ஸ்கேல் அணு உலைகளில் அரண் அமைக்கப்பட வில்லை! பிரிட்டனின் புதிய அணு உலைகள் யாவும், வின்ட்ஸ்கேல் அணு உலைகள் போலின்றி கோட்டை அரண்களைக் கொண்டிருந்தன.

4. திரள்கரியில் சேர்ந்துள்ள வெப்பத்தை எப்படிக் குறைப்ப தென்று முறையான இயக்க நெறிகள் எழுதப்பட வில்லை! அதை வாடிக்கையாய் நிறைவேற்றச் சீரான பராமரிப்பு ஏற்பாடுகளும் வகுக்கப்பட வில்லை!

5. அரசாங்க அதிகாரிகள் மேற்பார்த்த ராணுவ அணு உலைகள் விரும்பியபடி இயங்கியதால் கட்டுப்பாடு இல்லாமல் போனது! வின்ட்ஸ்கேல் விபத்துக்குப் பிறகு, தனிப்பட்ட அணு உலைக் கண்காணிப்பு பேரவை அமைக்கப் பட்டது. தற்போது வின்ட்ஸ்கேல் மாதிரி திரள்கரி அணு உலைகளைக் கட்டவோ, இயக்கவோ அனுமதி கிடைக்காது.

வின்ட்ஸ்கேல் அணு உலையை முடத்துவ நிலைப் படுத்தச் செலவு

1957 விபத்துக்குப் பிறகு மூடப்பட்ட வின்ட்ஸ்கேல் Pile:1, Pile:2 அணு உலைகளை முடத்துவ நிலைப் படுத்தி [Decommissioning the Reactors] நிரந்தரமாக மூடும் திட்டம் 1985-1986 ஆண்டுகளில் அமுலாகி, 1993 இல் முடத்துவப் பணிகள் ஆரம்பமாயின! அதை நிறைவேற்ற மதிப்பீடுத் தொகை 90 மில்லியன் [1993 US நாணயம்] டாலர் என்று கணக்கிடப் பட்டது! திட்டம் முடிவடையக் குறைந்தது, எட்டாண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப் பட்டது!

தீப்பற்றிய முதல் உலையில் மட்டும் கரிந்து போன 2000 டன் திரள்கரிக் கட்டிகள் [Graphite Blocks] நீக்கப் பட வேண்டும். அவை 25 அடி உயரம் 50 அடி விட்டமுள்ள ‘எட்டுமுக அடுக்கில் ‘ [Octagonal Stack] அமைப்பாகி இருந்தன. அதைச் சுற்றிலும் 7 அடித் தடிப்பில் உறுதியாக்கிய கான்கிரீட் சுவர் உயிரியல் கவசமாகக் [Biological Shielding] கட்டப் பட்டிருந்தது! திரள்கரிக் கட்டிகளின் நடுவே உருகிப் போன, சிதைந்து போன, கதிரியக்கம் எழும் 15 டன் யுரேனிய எருக்கிடங்கு குப்பைக் கழிவாய்க் கிடந்தது!

உயிரியல் கவசத்தின் மேற்புறம் வழியாக ஊடுறுவிச் சென்று, உருகிப் போன எருக்கிடங்கை அணுக, நான்கு கனரக யந்திரங்கள் தேவைப் பட்டன! சிதைந்து இறுகிப் போன யுரேனிய எருக்களை அறுத்து நீக்க தூர இயக்குக் கருவிகள் டிசைன் செய்யப்பட்டன! கதிர்வீச்சு எருக்களை சேமிக்கவும், தூக்கிச் செல்லவும், ஈயக் கவச இரும்புப் கலன்கள் தயாரிக்கப் பட்டன! பத்தாண்டுப் பராமரிப்புப் பணிகளுக்குப் பிறகு, 1999 இல் அனைத்து யுரேனியச் சிதைவுக் கழிவுகளும் நீக்கப் பட்டு, எருக்கோல் தடாகத்தில் [Spent Fuel Pool] நீருக்கடியில் சேர்த்து வைக்கப் பட்டன!

Mortality Rate

வின்ட்ஸ்கேல் அணு உலை விபத்து, ஒரு குட்டிச் செர்நோபிள் விபத்தே!

1957 இல் பிரிட்டன் வின்ட்ஸ்கேலில் நேர்ந்த அணு உலை விபத்து, ஒரு குட்டிச் செர்நோபிள் விபத்தாகக் கருதப் படுகிறது! 1986 இல் செர்நோபிள் விபத்து [Level:1], 1979 இல் திரிமைல் தீவு விபத்து [Level:3] ஆகியவற்றின் 7 தகுதிப்புள்ளி [7 Seven Points Level] வரிசையில் ஒப்பு நோக்கினால் வின்ட்ஸ்கேல் விபத்து, கீழான தகுதிநிலை:5 [Level:5] ஆகக் குறிக்கப்படுகிறது! செர்நோபிள் அணு உலைபோல் வின்ட்ஸ்கேல் உலையிலும் கோட்டை அரண் இல்லாததால், கதிரியக்கத் துணுக்குகள் புறத்தே சூழ்வெளியில் வெகு தூரம் பரவின! 1950 இல் பிரிட்டனின் அணு ஆயுதங்களுக்கு தேவையான புளுடோனிய உற்பத்திக்காக அமைக்கப் பட்ட வின்ட்ஸ்கேல் உலை Pile:1 இன்றைய பாதுகாப்பு நெறி மட்டத்துக்கு மிகவும் குறைந்ததால், அவ்விபத்து போல் நவீன உலக அணு உலைகளிலோ அன்றி பாரதத்தின் அணு உலைகளிலோ நேரும் என்று எதிர்பார்க்க வேண்டிய தில்லை!

மேலும் 1946-1950 ஆண்டுகளில் பிரிட்டன் தானும் அமெரிக்கா போன்று விரைவாக அணு ஆயுதங்களை ஆக்க வேண்டு மென்ற அழுத்தமான அரசியல் சூழ்நிலை இருந்ததாலும், அணு உலைப் பாதுகாப்பு நெறிகள், அப்போதுதான் விருத்தியாகி வளர்ச்சி யுற்று வந்ததாலும், பிரிட்டன் அப்போது மேற்கொண்ட அபாய எதிர்பார்ப்புகள் இன்றைய சூழ்நிலையில் ஒப்புக் கொள்ளப் படாதவை! ஆதலால் செர்நோபிள், திரிமைல் தீவு விபத்துக்களை ஆராய்ந்தது போல் மாந்தர் வின்ட்ஸ்கேல் விபத்தை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு, மற்ற அணு உலைகளிலும் அவ்விதம் நிகழும் என்று ஆழ்ந்து உளவு செய்ய வேண்டிய தில்லை!

1957 ஆம் ஆண்டில் பிரிட்டாஷ் பிரதம மந்திரி மாக்மில்லன் தேசீயப் பாதுகாப்புக் குடையின் கீழ், விபத்தின் தீவிர விளைவுகளைப் பொது மக்களுக்கு அறிவிக்காது மூடி மறைத்தார்! ஆனால் 25 வருடங்கள் கடந்து 1982-1987 ஆண்டுகளில் ‘பிரிட்டாஷ் தேசீய கதிர்வீச்சுப் பாதுகாப்பு வாரியம் ‘ [British National Radiological Protection Board] வின்ட்ஸ்கேல் விபத்தின் மெய்யான கதிர்வீச்சு விளைவுகளையும், எதிர்பார்க்கும் மரண அபாயங்களையும் பொது மக்களுக்கு வெளியிட்டது! அந்த அறிக்கை கதிரடி விளைவால் 260 பேர் புற்று நோயால் தாக்கப் படுவார் என்றும், அவரில் 33 பேர் மரணம் அடைவார் என்றும் அறிவித்தது! மற்றுமொரு தகவல் பிரிட்டனில் மட்டும் 1957 முதல் 1997 வரை புற்று நோயில் 95 பேர் மரணம் அடைவார் என்று அறிவித்தது! ஆனால் தனிப்பட்டு இயங்கும் சில சிறப்பாளிகள் [Radiological Experts] வின்ட்ஸ்கேல் கதிர்வீச்சால் 1000 பேர் உயிரிழப்பார் என்று மதிப்பீடு செய்திருந்தார்கள்!

தகவல்கள்:

1. Windscale Fire Accident in Britain [1957]

2. Britain ‘s Nuclear Weapons, British Nuclear Facilities

3. The Windscale Fire [Jan, 2001]

4. Nuclear Reactors at Sellafield [2001]

5. Windscale Accident in October 1957 By: John Ainslie

6. The 1957 Windscale Reactor Fire [1987 Report]

7. Accident at Windscale 1957 [Sellafield]

8. Govt Records Destroyed in Cover-up [May, 2001]

************************

jayabar@bmts.com

Series Navigation