பின் விளைவு

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

க்ருஷாங்கினி


—————–
மேல் வறண்டு வேருக்குள் உயிரோடி
காத்திருக்கும் அருகம்புல்லும்
சிறுபரப்பில் மண் தேங்கி, விருட்சம்
உள் உறிஞ்சி வேர்விட உறங்கும்
அரசும் ஆலும்.
ஆங்காங்கே மேல் மண்ணில் தூவித்தூவி
பறந்து காற்றில் படரும் வேருக்கும்
வெளவால், பறவை கழிவுடன்
வேரையும் உடன் இருத்தி மேலிருந்து
புவி விசையில் கீழ் இறங்கும் கனவிதையும்,
எப்போதும் நசநசத்த ஈரப்பரப்பில்
வேறற்ற காளானும் பாசியும்கூட
மண்ணுக்குள் வீடுகட்டி மேலெழும்பி
மற்றதை அரித்துத் தின்னும்
அள்ளையில் அன்றே முளைத்து, பறந்து
திரிந்து, சில மணியில்
செத்துமடியும் கரையானுக்கு
ஒளித்துளியாய் இறக்கையும்
முளைவிடக் காரணமானது
மழையின் பின்விளைவு.
+++++++++++++++++++++++++++
கூர் முனை கால் வெட்டிப்பின்
தரையில் பிறை நிலா விட்டு
உருண்டு, நிமிர்ந்து
எப்போதும்போல வாயகன்று
நின்றது கிண்ணம்;
விம்மிப் பொங்கிய வெள்ளை நுரை
மீதமிருந்தது அதற்குள்ளேயே.
சிதறியது சிறிதளவே;
கீழிறங்கியது நிமிர்ந்ததெங்கனம்
அறிந்துகொண்டது அக்கணம்
மனம்.
கொள்ளளவு மாற்றம் கொண்டாலும்
விழுந்தெழும் வண்ணம்
உருண்ட அடிப்பாகம் கொண்ட
அனைத்துப் பாத்திரம் வட்ட வடிவமே.
=======================================
nagarajan63@yahoo.com

Series Navigation