‘பிதாவே ! இவர்களை……. ‘

This entry is part [part not set] of 25 in the series 20010924_Issue

ருத்ரா.


அன்பான
அமொிக்க நாட்டின்
சகோதரர்களே!சகோதாிகளே!

வெறிபிடித்த
அந்த மரணப்பறவைகள்
எச்சமிட்ட நெருப்பில்
கருகிப்போன
உங்கள் இதயமலர்களுக்கு
எங்கள் இதயங்களின் அஞ்சலி!

உங்களதுபூக்குவியல்கள்.
உருகி அழும் மெழுகுவர்த்திகள்.
இவற்றோடு
எங்கள் உள்ளங்களும்
அங்கே பரப்பிக் கிடக்கின்றன.

கண்ணீருக்கு
தேசியக்கொடிகள் கிடையாது.
சோகத்தை பங்கு போட்டுக்கொள்வதில்
எல்லைகள் இல்லை
வேலிகள் இல்லை.

‘உலக மானுடம் ‘ குண்டு துளைத்து
தொலைந்து போவதில்லை.
சவப்பைகளின் முடிச்சுகளுக்குள்
முற்றுப்புள்ளிகளாய்….அது
முடிந்து போவதில்லை.

அந்த உலக வர்த்தக மையக்கட்டிடத்தின்
அலுவலக கம்பியூட்டர்கள்
இடிபாடுகளாய் புதைந்து விட்டபோதும்
அவற்றின் ‘மெமாி ‘களின்
கருப்பைக்குள் ஒட்டுமொத்தமாய்
உறைந்து கிடப்பது
அந்த ‘உலகமனிதனின் ‘ விஞ்ஞான அறிவு தான்.
அந்த எாிமலைக்குழம்பு
இந்த அஞ்ஞானிகளால் அவிக்க முடியாதது.

தீவிரவாதத்தின்
முட்டாள்தனமான துப்பாக்கிகளுக்கு
அடுக்குமாடிக்கட்டிடங்கள்
வேண்டுமானால்
இலக்குகளாக இருக்கலாம்.
ஆனால் அசைக்க முடியாதது
அடித்தளமாய் கிடக்கும்
அந்த உலக மானுடம் !

ஓ! உலக மானிடனே!
இந்த நூத்திப்பத்து மாடிகளா
உன் உயரம் ?
காலை உணவுக்கு
இந்த அண்டவெளியையே
ஆப்பிள் துண்டமாக்கி
சாப்பிடும்
அறிவுப்பசி அல்லவா உனக்கு.

வெறியின் கொட்டாங்கச்சிக்குள்
வெறும் வெடிகுண்டு சித்தாந்தத்தை
வேதப்புத்தகமாக்கிக் கொண்டிருக்கும்
இந்த வேதாளங்களா
உனக்கு பூச்சாண்டி காட்டுவது ?

வேதனை.
ஆத்திரம்.
கோபம்….என்று
கொஞ்சம் வடிகாலாய்
தீப்பந்தம் ஏற்றிக்கொள்.
பரவாயில்லை.
ஆனால்
மூளையில் தீப்பிடித்து எாியும்
இந்த அற்பர்கள் அல்ல
உன் இலக்குகள்.

எய்ட்ஸ் கிருமிகளை விட மோசமானவை
அந்த தீவிரவாத சிந்தனைகள்.
அவை நீர்த்துப்போக
உன் அறிவாயுதத்தை
இன்னும் கொஞ்சம் கூர் தீட்டிக்கொள்.

இந்த லட்சம் டன் குப்பைகளை
ராட்சத கிரேன்கள்
அள்ளிக்கொண்டிருந்த போதும்
வரலாற்றின்
குப்பைத்தொட்டிக்குள்
வீசியெறியப்பட்டு கிடப்பது
அந்த தீவிரவாதம் தான்.

மானுடத்தின் மலர்ச்சியை
தீயிட்டுப்பொசுக்கி
கடந்து வந்த நூற்றாண்டுகளின்
முகத்தையெல்லாம்
கருக வைத்திருக்கும்
தீவிரவாதத்தின் கொடூரமுகம் இது.

உயிர்களைக் கொண்டே
உயிர்களை உயிர்களோடு மோதி
உயிர்களைக் கொன்று குவித்து
உயிர்ப்பலி கேட்கும் உயிர்ப்பசையற்ற
குரூர முகம் இது.

கடவுளின் முகமூடி அணிந்து கொண்ட
சைத்தான்கள்
உலக வர்த்தக கட்டிடத்தில்
உயரமாய் ஒருஇடம் பார்த்து
அந்த கடவுளுக்கே
அதில் கல்லறை கட்டுவதாய்
கொக்காித்த கொடிய முகம் இது.

தீவிரவாதம் எனும்
வெறிபிடித்த சிந்தனைகளே!
மானுட ஈரத்தையெல்லாம்
துடைத்து அழித்துவிட்டு
துப்பாக்கிகளை மட்டுமே
பாக்கி வைத்திருக்கும்
இருட்டு உள்ளங்களே!

துப்பாக்கிகளையே தின்று
துப்பாக்கிகளையே கர்ப்பம் தாித்து
துப்பாக்கிகளையே
பிரசவிக்கும் அசுரவித்துகளே!

இந்த சிதிலங்களிலும் சடலங்களிலும்
ரத்தம் சொட்ட சொட்ட
நசுங்கிக்கிடக்கும்
அந்த இறைவனின் முகம்
உங்கள் கண்களுக்குத் தொியவில்லையா ?

உங்கள் வெடிகுண்டுகளால்
ஒரு சின்னப்பூவைக் கூட
உருவாக்க முடியாத போது
இந்த மரண ஓலங்களைக்கொண்டா
தோட்டம் போட
தோட்டாக்களுடன் அலைகிறீர்கள் ?

வெறிபிடித்த
பல்லும் ரத்தமும் தான்
நீங்கள் ஓதும் வசனங்களா ?

ஓங்கி உலகளந்த
உலக வர்த்தக மையக் கட்டிடத்தில்
மரணங்களை
மொத்தக்குத்தகை எடுத்து
தீவிரவாதத்தை
வர்த்தகம் செய்யவந்த
தீக்கரங்களே.
உங்களுக்கு கிடைத்த
லாபங்களை உற்றுப் பாருங்கள்..

நசுங்கிய சடலங்கள்…
சாம்பலான கட்டிடங்கள்…
மரணப்புகைமூட்டங்கள்…
பற்களைத் துருத்திக்கொண்டு
வாய் பிளந்து கொண்டிருப்பது போல்
மல்லாந்து கிடக்கும் இடிபாடுகள்..
சிக்கன் சாப்பிட அறுத்துவீசிய
கோழி இறக்கைகள் போல்
சிதறிகிடக்கும்
கான்கிாீட் துணுக்குகள்….

இறைவன் மிக மிகப்பொியவன்.
சந்தேகமேயில்லை.
எல்லாப்புகழும் அந்த இறைவனுக்கே
அதிலும் சந்தேகமேயில்லை.
ஆனால்
அந்த இறைவனையே
கசாப்பு செய்ய முயலும்
உங்கள் பட்டாக்கத்திகளுமா
அந்தப்புகழை
பட்டியல் போட்டுக்கொண்டிருப்பது ?

பிதாவே !
அல்லது
மிகப்பொிய இறைவரே !
உங்களை அன்று
ஓட ஓட விரட்டிக் கல்லெறிந்த
தீய சக்திகளின்
உருண்டு திரண்ட
பாிணாம வடிவமே
இன்றைய தீவிரவாதம்.
மீண்டுமா..உங்களுக்கு
இந்த கல்லெறிகளும்
முட்கிாீடமும் சிலுவைகளும் ?

அதனால் தான் கேட்கிறோம்..
பிதாவே !
இவர்களை தண்டியும்.

பிதாவே
இவர்களை மன்னியும்
என்று நாங்கள் கேட்டால்
அதை விட
கொடிய பாவம் வேறு இல்லை.
ஏனெனில்
அதன் பிறகு
‘பிதாவே இவர்களை மீண்டும் மன்னியும் ‘
என்று உங்களை கேட்க
நாங்களும் இருக்க மாட்டோம்.
நீங்களும் இருக்க மாட்டார்கள்.

***

Series Navigation

ருத்ரா

ருத்ரா