முன்னுக்குப் பின்
தி. கோபாலகிருஷ்ணன்

நீ முன்னால் இருந்ததால்
நான் பின்னே இருந்தேன்
நீ முன்னாலேயே இருந்ததால்
நான் பின்னாலேயே இருப்பதாய்
எண்ணினேன்
நான் பின்னாலேயே இருப்பதால்
நீ முன்னாலேயே இருப்பதை
உணர்ந்தேன்
நான் முன்னுக்கு வருவதை
நீ விரும்பவில்லையென
அறிகிறேன்
நீ பின்னுக்கு வரவேண்டும்
என்பது என் விருப்பமில்லை
நான் முன்னுக்கு வருவதால்
நீ பின்னடைய வேண்டுமென்பதற்கு
வாழ்க்கை
ஒற்றையடிப் பாதையல்ல
நான் மேலே போனால்
நீ கீழே போகவேண்டுமென்பதற்கு
வாழ்க்கை
சீசா விளையாட்டுமல்ல