பிடுங்கிகள்
மதியழகன் சுப்பையா

ஊர்ந்து செல்லும் நிலையிலும்
ஓயவில்லை தாய்வழிப் பாட்டி
சுடுதண்ணீக்கு சுள்ளி பொறுக்குகிறாள்
குறைகூலி என்றாலும்; வெளியிலும்
வேலை செய்கிறாள் அப்பாத்தா
சமைத்தலும் துவைத்தலும் முடித்து
தையல் பணிக்கு இடையில்
முறுக்கும் விற்கிறாள் அம்மா
ஐம்பதாயிரம் ரொக்கமும்
இன்னும் பத்து பவுனும் சேர்க்க
ஞாயிறுகளிலும் பணி செய்கிறாள் அக்கா
பள்ளிக்குப் பின் ஓய்வுகளில்
அப்பளம் உருட்டுவதும்
பீடி சுற்றுவதுமாய் தங்கை
ஓயாமல் சம்பாதிக்கும் இவர்களிடம்
கோட்டருக்கென வாங்குகிறான் அண்ணன்
பீருக்கென பிடிங்கிக் கொள்கிறான் தம்பி
கட்சிக்கென உருவுகிறார் அப்பா
சுருட்டுக்கென சுருட்டுகிறார் தாத்தா
மதியழகன் சுப்பையா,
மும்பை