பார்வை: பல நேரங்களில் பல மனிதர்கள்/ பாரதி மணி

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

தாஜ்



‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ உயிர்மை இதழில் கட்டுரையாக வெளிவந்தப் போது வாசிக்க இயலவில்லை. அன்றைக்கு, காலத்தின் இருக்கமான பிடிக்குள் விழிகள் பிதுங்க துபாயில் மாரடித்துக் கொண்டிருந்தேன். இலக்கியமெல்லாம் இரண்டாம் பட்சமாகிப் போனது. எதையும் வாசிக்க மறந்தேன். உயிர்மையையும் பாரதி மணியையும் சேர்த்து. ஊர் திரும்பிய நாளில் அந்தக் கட்டுரைகள் தொகுப்பாய் வெளிவந்து பேசப்பட்டது. சுமார் ஒன்னறை வருடக் காலமாக அதைப் படிக்கணும் என்று விரும்பியும், காரணமற்று ஏனோ தட்டிக் கொண்டே போனது. கடந்த வாரத்தில், இடி மின்னலோடு கோடை மழை கொட்டிய தினத்தன்று எதேச்சையாய் அது சாத்தியமான போது, மனதிற்கு ஏக மகிழ்ச்சி! கடுங் கோடையில் பெரும் மழைப் பார்த்த குதூகலமும் சேர, படிக்கப் படிக்க திகட்டாத அனுபவமாக விரிந்து கொண்டே போனது!

தலைநகரின், தமிழ்ச் சார்ந்த விசேச முகங்களையும் சேர்க்க, டெல்லியைப் பற்றியும், டெல்லியைச் சுற்றியுமான செய்திகளை, இலக்கிய வாசகர்களிடம் இதற்கு முன் இத்தனைக்கு விசால மாய் வேறு யார் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்!? வெங்கட் சுவாமி நாதன் டெல்லியைப் பற்றி தனது கட்டுரைகளில் குறிப்பிட்டு இருக்கிறார்தான். அவைகள் எல்லாம், அங்கே அவர் எதிர் கொண்ட கலை நுட்பம் சார்ந்த சங்கதிகள் மட்டுமே! க.நா.சு.வும் அந்த அளவில்தான்! தி.ஜானகிராமனும், இந்திரா பார்த்தசாரதியும் டெல்லியில் வாழ்ந்த நம்ம எழுத்தாளர்கள் என்றாலும், அவர்களது வழியே வாசகர்கள் கண்டதும்/கொண்டதும் குறைவு. ‘புலிநகக் கொன்றை’ எழுதிய பி.ஏ.கிருஷ்ணன் தனது கட்டுரைகளில், தலைநகர் சாணக்கியங்களை நிறைய எழுதி இருக்கிறார்! அவர் எழுத்தில், உள்ளடக்கத்தை மீறிய ‘ஐ.ஏ.எஸ்.’ மிடுக்குகளிலேயே நாம் அதிகம்! நாம் திருப்திக் கொள்ள வேண்டியதும் அந்தப் புள்ளியில்தான்.

என் நினைவில் என்றைக்கும் பசுமையாய் வாழும் சுஜாதா, டெல்லியைப் பற்றிய சங்கதிகளை சிரிக்க சிரிக்க பல இடங்களில் சொல்லி இருக்கிறார்! எல்லாமே வாராந்திரிகளின் இரண்டு பக்க மேட்டருக்கான தயாரிப்புகளாகவே தொடங்கி முடியும். வாஸந்தி அவர்களிடன் அவ்வப்போதைய டெல்லி வெளிப்பாடுகளும் சுஜாதாவை ஒத்ததுதான்! என்றாலும், வித்தியாசம் உண்டு. பெண்களின் அல்லல்கள்/ பெண்ணுரிமையின் மகத்துவம் என்பதான சட்டகத்திற்கு பொருந்தி வரும் சங்கதிகளைப் பற்றிய தழதழக்கும் குரல் அது! கஸ்தூரி ரங்கன் அவர்கள் டெல்லி அரசியலை ஒரு காலகட்டத்தில் ‘நிருபரின் டைரி’ என்கிற தலைப்பில் நாள் தவறாது எழுதியதை அறிவேன். துல்லியமாய் இங்கே நினைவுக் கூற முடியவில்லை. ஆர். வெங்கட் ராமன் ஒரு காலகட்டத்தில் துக்ளக் இதழில் வாரம் தவறாமல் டெல்லி அரசியல் சங்கதிகளை எழுதுகிறவர்தான். வாசிக்கத்தான் இடறும். அத்தனைக்கு பக்க சார்பு கொண்டதாகவே இருக்கும்.

மொழி மாற்றம் கொண்டு, தமிழில் வரும், குல்தீப் நய்யார் கட்டுரைகளில், டெல்லி அரசியல்/ தலைநகர வி.ஐ.பி.கள் என்று தாளாரமாகவே காணக் கிடைக்கும். கட்டுரைகளின் விஸ்தீரண மும், கனபரிமாணமும், நேர்மையும் மெச்சும்படிக்கும் இருக்கும். என்றாலும், அவரை இங்கே கணக்கில் கொள்வதென்பது சரிப்படாது. மரியாதைக்குரிய குல்தீப் நய்யார் தமிழ் வட்டம் சார் ந்தவர் அல்ல. இத்தனை எழுத்தாளர்களின் டெல்லியைப் பற்றிய அனுபவ வெளிப்பாடுகளை வாசிக்க கிடைத்து, வாசித்தும் இருக்கும் ஓர் தீவிர வாசகனின் பார்வையில், பாரதி மணியே தனித்தும் மேலெழுந்தும் தெரிவார் என்றால் ஆச்சரியப்பட மாட்டேன்!

***

1955-ம் வருஷம் டெல்லி சென்ற ‘பார்பவதிபுரம்’ மணி, நாடகம்/ நடிப்பு/ கம்பெனி ஒன்றில் பொருப்பான பதவி என்பதான கீர்த்திகளோடு முடிந்துப் போகாமல், இன்னும் இன்னும் என்று வெளியிலும் அவர் வியாபித்திருக்கிற பரிமாணங்கள் லேசுப்பட்டது அல்ல! டெல்லியை அவர் தொட்டது தொட்டே, சொல்ல தகுந்த லாவகமான அனுபவங்கள் அவருக்கென்றே கிளைத் திருக்கிறது! அந்த வயதிலேயே ஜவர்ஹர்லால் நேருவிடம் சின்னப் பரிச்சியம் கொள்கிறார்! நாடக ஆக்கங்களில் பங்கெடுக்கிறார்! அடுத்தடுத்த காலங்களில், மலையாள இயக்குனரான ராமு காரியாட்டின் ‘செம்மீன்’ படத்திற்கு, தேசியவிருது கிடைக்க முயற்சி மேற்கொள்கிறார்! டெல்லி கர்நாடக சங்கீத சபாவின் தலைவராக இருக்கிறார்! இசைக் கலைஞர் சுப்புவின் நெரு ங்கிய வட்டத்தினுள் சகஜ நட்பு பாராட்டுகிறார்!

டெல்லியில் வாழ்ந்த பல மூத்த தமிழ்ப் படைப்பாளிகளைப் பற்றி பேசுகிறார். குறிப்பாய், சுஜாதவின் நினைவை பல அறிய தகவல்களோடு நெகிழ்ச்சிப்பட சொல்கிறார். சுஜாதாவின் நாட கங்களை டெல்லியில் வெற்றிகரமாக மேடையேற்றிய செய்திகள் அதில் பிரதானம்! நாவல் ஆசிரியர் இந்திரா பார்த்தசாரதி, நாடக ஆசிரியர் என்கிற அந்தஸ்த்து கொள்ள காரணமாக இவர் அறியவருகிறார்! பாரதி மணி பணிபுரிந்த அலுவலகத்தில், அவரது உதவியால் திறக்கப்படும் ‘UNI Canteen’ என்கிற ‘கையேந்தி பவனை’ முன் நிறுத்தி தி.ஜானகிரான், ஆதவன் தொடங்கி பல கலைஞர்களோடு சகஜம் பாராட்டியதை கோடிட்டு காமித்திருக்கிறார்!

இன்னொருப் பக்கம், அலுவலக முகாந்திரமாய் பிராங்ஃபுரூட், லண்டன், பங்ளாதேஷ் யென அவர் சுற்றி வந்ததிலான விசேஷ அனுபவங்கள் வேறு! அன்னை தெரஸா, ‘பொங்க பொந்து’ ஷோக் முஜீபுர் ரஹ்மான், ஷோக் ஹஸீனா, அறியப்படாத பங்களாதேஷ் வாழும் தமிழ் இஸ்லாமிய வம்சாவளிகள்! அவர்கள் தமிழ்ப் படிக்க இவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள்! இந்திய அரசின் ‘Z’ பிரிவில் இருந்த ‘பொங்க பொந்து’வின் மகள் ஷேக் ஹஸீனாவிற்காக, பங்களாதேஸ் சென்று வரும் போதெல்லாம் ‘ஹீல்ஸா’ மீன் கொண்டு வந்து தரும் சிரத்தை என்பதாக நீண்டு நம்மை மலைக்கவும் வைக்கிறார் பாரதி மணி!

தொகுப்பில் இருக்கும் பதினெட்டு கட்டுரைகளுமே என்னை கவர்ந்தவைகளே! இத்தனைக் காலமும் எழுத்தை மட்டும் விட்டு வைத்திருந்த பாரதி மணி, இந்தக் கட்டுரைகளின் வழியே அதையும் தனது சாதிப்புகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்! இப்படியோர் இலக்கிய தரம் வாய்ந்த எழுத்து, முதல் முயற்சியிலேயே ஒருவருக்கு சமைந்திருப்பது வியப்புதான்! இந்தக் கட்டுரைத் தொகுப்பில், அருந்ததி ராயும் என் முதல் ஆங்கிலப் படமும், அன்னை தெரஸா, தில்லி நிகம்போத் சுடுகாட்டோடு, ஆகிய மூண்றும் எனக்கு ரொம்பவும் விசேசமாகப் பட்ட கட்டுரைகள்.

‘அருந்ததி ராயும் என் முதல் ஆங்கில படமும்’ கட்டுரையின் வழியே, அந்தக் கலைஞரின் மேதமை அடுக்குகளில் எனக்குப் பிடிப்படாத பல பக்கத்து செய்திகள் இருக்கிறது. இயற்கை பராமரிப்பின் மேம்பாட்டுக்காக போராடிய/போராடும் அருந்ததி ராயைதான் எனக்குத் தெரியும்! அவர் 1989-ம் ஆண்டுலியே ‘இன் விச் ஆன்னி கிவ்ஸ் இட் தோஸ் ஒன்ஸ்’ என்கிற ஆங் கிலப் படத்திற்கு கதை வசனம் எழுதியதோ/ அது பல திரைப்பட விழாக்களில் பரிசு பெற்றதோ/ ‘எலக்ட்ரிக் மூன்’ என்கிற ஆங்கில கதையையை அவர் எழுதி அதில் அவர் நடித்திருந் ததோ/ அந்தப் படத்தில், அவரது நடிப்பையொட்டி அவருக்கு புக்கர் பரிசு கிடைக்கப் பெற்றதோ என் அளவில் புதிய செய்திகளே! மேலும் அந்தக் கட்டுரையில், நேர்த்தியான அளவு
கோலுடன் சினிமா தயாரிக்கும் முறையை பாரதி மணி நம்மோடு பகிர்ந்துக் கொண்டிருப்பது இன்னொரு விசேசம்!

‘அன்னை தெரஸா’ பற்றிய கட்டுரை, நம் காலத்தில் வாழ்ந்த ஓர் தேவதையை நெருக்கத்தில் கண்டு, வரையப்பட்ட கோட்டுச் சித்திரமாக இருக்கிறது! அத்தனைக்கு எளிய அழகு! அந்த அன்னையை மாதிரியே! அவரை விமானப் பயணத்தின் போது பாரதி மணி சந்திப்பதும்; பக்கத்து இருக்கைப் பயணாளியாக இருந்து பயணிப்பதும்; அங்கே அன்னையிடம் அவர் காட் டும் மௌனமும்; பேச நேர்கிற போது, அளவு சுத்தமாய் கொஞ்சத்திற்குப் பேசுவதுமான நிகழ்ந்ததோர் நிகழ்வை, பாரதி மணி அப்படியே எழுத்தில் புலப்பட வைத்திருக்கிறார்! இதன் பொருட்டே அந்தக் கட்டுரையை என் மனதின் ஈரமானப் பக்கத்தில் சப்பணமிட்டுவிட்டது. அதை வாசிக்கும் நாழிகையில், சில நேரம் சிலிர்க்கவும் சிலிர்த்தது.

‘தில்லி நிகம்போத் சுடுகாடு’ கட்டுரையினூடே, பாரதி மணி என்கிற மனிதனின் வான்ணுயர்ந்த மனித நேயத்தை/ உதவும் மனப்பான்மையை/ சமூதாயத் தொண்டை நாம் உணர முடிகிறது. அந்தக் கட்டுரை வாசிக்கும் நேரம், உள்வயப் பார்வையை கொள்ளும் வாசகர்களுக்கு அவர்களின் சுயம் உறுத்தவும் உறுத்தலாம். வாய்ப்பிருக்கிறது. டெல்லியில் மரணம் கொள்ளும் தமி ழர்கள் பலரின் கடைசி யாத்திரைக்கு பாரதி மணி, முன் நின்று காரியங்கள் ஆற்றுகிறார்! குறிப்பிட்ட ஓர் காலக்கட்டம்வரை அது அவருக்கு சாத்தியம் ஆகியிருக்கிறது! இந்த அளவி லான எளிய சேவையோ, வேறு ஏதேனுமோர் சேவையோ நம்மில் எத்தனைப் பேருக்கு சாத்தியம்? லௌகீக வாழ்வு கொள்ளும் நாமெக்கெல்லாம் அதற்கென நேரம்தான் ஏது? பின்னே, சுயம் உறுத்தத்தானே செய்யும்?

இந்தக் கட்டுரையை, பலரும் பாராட்டி இருக்கிறார்கள். இதில் நம் படைப்பாளி பெரும்மக்களும் அடக்கம். அவர்களுக்கும் சுயம் உறுத்தியிருக்குமோ? நிச்சயமாக நான் அந்த உறுத்த லோடுதான் வாசித்தேன். அந்தக் கட்டுரையை முடித்த நொடியிலேயே, பாரதி மணியை அவர்களை செல்லில் அழைத்து, அதை முழுசாக கொட்டவும் கொட்டினேன். அந்தக் கட்டுரை வாசிப்பில், நான் அதிக அளவில் நெகிழ்ந்ததற்கு மேலே கூறியவை மட்டும் காரணமல்ல. மரியாதைக்குறிய க.நா.சு.வின் மரணமும், மரணத்திற்கு முந்திய நிமிஷ/ நொடிப் பற்றிய செய்தி களும் அடக்கம். என்னுடைய இலக்கிய ஆசான், பாரதி மணியின் மாமனார் என்பதால், க.நா.சு. வின் மரணத் தகவல்கள் கட்டுரையில் படு சுத்தம்! நிகம்போத் சுடுகாட்டில் அவர் தக னம் செய்யப்படும்வரை அப்படியே! நெகிழாதா மனம்?

பாரதி மணியின் இந்தக் கட்டுரைத் தொகுப்பைப் பற்றி, ‘என் பார்வை’ என்கிற கோணத்தில் நான் இங்கே நிறைய சொல்லிக் கொண்டிருப்பதாகப் படுகிறது. இதற்கு மேலும், சொல்லத் தகு ந்த சங்கதிகள் அவரது கட்டுரைத் தொகுப்பில் இருந்துக் கொண்டே இருக்கிறது. ‘நாதஸ்வரம்- என்னை மயக்கும் மகுடி!’ ‘நான் வாழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானம்’ என்கிற இரண்டு கட் டுரைக்குள்ளும் ஏகப்பட்ட செய்திகள். குறிப்பாய், ‘நாதஸ்வரம்- என்னை மயக்கும் மகுடி!’ கட்டுரை இங்கே பேசப்பட்டு இருக்க வேண்டும். இசை/ சங்கீதம்/ அதன் மூர்த்திகளைப் பற்றிய செய்திகளென, தகவல்கள் இதில் பூபாளம் கொள்கிறது!

தெரிந்தே இங்கே சர்ச்சித்து ஆனந்தம் கொள்ளாது விடும் சங்கதிகள் பல உண்டு! பாரதி மணியின் ‘லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் DLO-7727’யைப் பற்றிய தகவல்கள் அதில் ஒன்று! இதனை குறித்து வாசகர்களோடு பகிர்ந்துக் கொள்ள தவறினாலும், அவர் ‘குடிமகனாக’ இருந்து வந்த காலகட்டத்தை முன் வைத்து, சில நிஜங்களை வாசகர்களோடு பகிர்ந்துக் கொண்டே ஆக வேண்டும்.

கட்டுரைகளின் பல இடங்களில், டெல்லி நண்பர்களோடான நெருக்கத்தின் மையமாக ‘ஹாட் டிரிங்ஸ்’ இடம் பிடித்திருந்ததை சிரத்தையோடு பாரதி மணி குறிப்பிட்டுக் கொண்டே வருகி றார்! விஸ்கி/ சோடா மேக்கர் சகிதமாய் தான் ஒரு நடமாடும் ‘பாராய்’ இருந்த நிகழ்வையும் கூட தயக்கமற ஒரு இடத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்! அவரது எழுத்தில் தெறிக்கும் இந்த நிஜத்தின் தரிசனம் நம் வாசகர்களுக்கு புதிதாக இருந்திருக்கும்! அவரது ஒளி மறைவற்ற இந்த நிஜம் எனக்கும் விசேசமாகப் பட்டதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லைதான். என்றாலும் இரு க்கிறது. வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கும் நம் படைப்பாளிகளை முன் நிறுத்தி யோசித்துப் பாருங்கள்! நம்மவர்கள் புனிதம் போதிக்க ஆசைக் கொள்வார்களே தவிர, இப்படி உண்மை பேச மாட்டார்கள். மறந்தும்கூட, வாழும் நிஜத்தடியில் நிற்கவே மாட்டார்கள்! பாரதி மணி, அவரது எழுத்தை ஒத்த விசேசம்! தொகுப்பை வாசித்த மன நிறைவில், அப்படியென உணர் கிறேன்!

****
satajdeen@gmail.com

Series Navigationயாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு >>