பாடி முடிக்கும் முன்னே…

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

கரு.திருவரசு


பூத்து மலரு முன்னே – எனைப்
பார்த்துச் சிரித்து விட்டாள்!
சேர்த்துத் தழுவு முன்னே – வழி
பார்த்து நடந்து விட்டாள்!

பேசிப் பழகு முன்னே – காதல்
பேசப் பழக்கி விட்டாள்!
ஆசை உணர்த்து முன்னே – அவள்
கூசிப் பிரிந்து விட்டாள்!

நேசம் வளரு முன்னே – அவள்
பாசம் வளர்த்து விட்டாள்!
வாசம் நுகரு முன்னே – என்றன்
நேசம் துறந்து விட்டாள்!

நூலை இணைக்கு முன்னே – அவள்
சேலை வடிவெ டுத்தாள்!
ஏழை படிக்கு முன்னே – எழில்
நூலைப் பறித்து விட்டாள்!

கோலை எடுக்கு முன்னே – கவிக்
கோலம் புனைந்து விட்டாள்!
பாலைக் குடிக்கு முன்னே – தட்டிக்
கீழே இறைத்து விட்டாள்!

காதல் பிறக்கு முன்னே – உயிர்
நாதம் இயக்கி விட்டாள்!
கூதல் தணியு முன்னே – கனல்
ஊதி அணைத்து விட்டாள்!

பாடி முடிக்கு முன்னே – அவள்
ஆடி முடித்து விட்டாள்!
கூடிக் களிக்கு முன்னே – ஏனோ
ஓடி ஒளிந்து விட்டாள்!

கற்று முடிக்கு முன்னே – எனைத்
தொட்டுக் கெடுத்து விட்டாள்!
முற்றும் சுவைக்கு முன்னே – எனை
விட்டும் பிரிந்து விட்டாள்!
*******************************
thiruv@pc.jaring.my

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு