பழங்காலத்திலிருந்து நவீன காலம் வரை சிங்களக் கவிதைகள்

This entry is part [part not set] of 26 in the series 20020428_Issue

லங்காநெட் இணையப்பத்திரிக்கையிலிருந்து ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.


கவிதை ஒரு நாட்டின் உயிர்நாடி. அது ஒரு நாட்டின் உலகப்பார்வையையும், கலாச்சாரப்பிடிப்புகளையும், அதன் கல்வியையும், காதலையும் தெரிவிக்கிறது. கவிதை வழியே தெரிவது கலாச்சாரமுள்ள ஒரு நாடு.

சிங்களர்கள் கவிதையில் சிறப்பு எய்தியிருக்கிறார்கள். சிங்களம் ஒரு கவித்துவமான மொழி. இது எளிதாக கவிதைக்குரிய எதுகைக்கும், மோனைக், இசைவுக்கும் இலக்கணரீதியாகவும், வளமையான சொற்கள் மூலமும் இசைந்து கொடுக்கிறது. ஒரு பொருளுக்குப் பல சொற்கள் இருப்பதனால் இது போன்று கவிதைபாட எளிதாக மொழி வளைந்து கொடுக்கிறது.

நிறைய உயிரெழுத்துக்கள் உடைய சிங்கள மொழி, ப்ரெஞ்ச் உருது போன்ற மொழிகளுக்கு ஒப்பிடத்தகுந்தது. மிக மென்மையான நீரோட்டம் போன்ற மொழி.

18ஆம் நூற்றாண்டு காலத்து கவிதையான ‘கலிங்கபோதி ஜாதக-கவா ‘ என்பது சுலுகலிங்கு இளவரசனின் கதையைச் சொல்லும். இதனை இயற்றியது துனுவிலா. காட்டுக்குச் செல்லும் இளவரசனைப்பற்றிய கீழ்க்கண்ட செய்யுள் அதிலிருந்து எடுக்கப்பட்டது.

நில் திகு வரல் குசுமன்

பெண்ட கோதலு

புல் ரது உபுல் மல்

சவனத சடல

எல் கெவி கல் கியன

லியகி அசல

லொல் ஹெர கியெ

குமரனிந்து மன

பினல

பொருள்: சிவப்பு தாமரைகளை காதுகளின் பின்னே செருகி, அலைபாயும் நீண்ட கூந்தலில் மலர்களைச் சூட்டி, அழகான பெண்கள் நெல்வயலில் இதயத்தைக் கவரும் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பதைக் கேட்டான் இளவரசன். அவன் மனம் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தும், அவர்களால் கவரப்படாமல் சென்றான்

பேராசிரியர் சேனாவிரத பரணவிதான (1945-ல் ஆசியக் கழகம் வெளியிட்ட படைப்பு சிங்களக் கவிதைகள் பிராமி எழுத்தில்) சிங்களக் கவிதைகள் முதல் நூற்றாண்டிலிருந்து துவங்குகின்றன.

ஸ்ரீலங்காவில் பழைய பிராமி கல்வெட்டுகளில் கவிதைப் படைப்புகள் காணக்கிடைக்கின்றன.

13-ம் நூற்றாண்டு நூலான ‘பூஜாவாலியா ‘, ராஜா அக்கபோதி (568-601 கி பி) காலத்திய இலக்கியச் செயல்பாடுகள் பற்றிப் பேசுகிறது. 12 புகழ் பெற்ற கவிஞர்கள் : தேமி, கித்சிறீ, அனுருத், தலாகோத்,

தலசால, தலபிசோ, புரவாடு, சாக்தமாலா, அசக்தமாலா, சூரியபாகு, கேசவகொதயப்பா. இவர்கள் மேற்சொன்ன மன்னரின் காலத்தில் புகழ் பெற்றிருந்தனர்.

சிகிரி எழுத்துகள் கண்ணாடிச் சுவரில் , ராஜா முதல் காசப்பாவின் ( 477-484 கி பி) காலத்தில் கட்டப்பட்டன. சுதைவண்ணத்தில் வரையப் பட்ட மேலாடையற்ற, ஆபரணங்கள் அணிந்த , அழகான பெண்களை நோக்கி இந்தக் கவிதைக் குறிப்புகள் பாடப்பட்டுள்ளன. மதச் சார்பற்ற கவிதைகள் இவை. சிருங்கார ரசம் கொண்ட பாடல்கள் இவை. இந்தச் சுவர்கவிதைகளின் இரண்டு உதாரணங்கள் இவை:

(ஆங்கில மொழி பெயர்ப்பு எஸ் பரணவிதான மற்றும் டபிள்யூ ஜி ஆர்ச்சர்.)

நாங்கள் பேசினோம்

ஆனால் இந்த மலையகத்துப் பெண்கள்

பதில் பேசவில்லை.

கண்ணசைக்கக் கூட இல்லை.

தங்க நிறப் பெண்மணி

எங்கள் கண்ணையும் மனதையும் பறித்துக் கொண்டாள்.

அவள் அழகிய மார்பகங்கள்

மதுவுண்ட அன்னப்பறவைகளை நினைவூட்டின.

மத்தியகாலத்தின் பெரும் இலக்கியப் படைப்பு ‘கவ்சிலுமுன ‘ (கவிதையுன் மணிமகுடம்) 13ம் நூற்றாண்டினது. இது மாகாவியம். சம்ஸ்கிருத காவிய முன்மாதிரிகளைப் பின்பற்றியது. மன்னன் இரண்டாம் பராக்கிரமபாகு(1234-1269) படைத்தது. 770 கவிதைகள் இதில், 15 காண்டங்களாய்ப் பிரிந்து அமைக்கப் பட்டுள்ளது. ‘குச ஜாதகம் ‘ அமைப்பில் போதிசத்வர் குசமன்னனாய் கோரமான உருவம் கொண்டு மறுபிறவி எய்துவதும், அழகிய அரசி பபாவதியின் மீது காதல் கொள்வதும் இதன் கதை.

இதிலிருந்து இரண்டு பகுதிகள் கீழே:(ஆங்கில மொழி பெயர்ப்பு ஹெரால்ட் பேரிஸ் மற்றும் எல் சி வான் கேசல்.)

தேனுண்டு ஆடினான் அன்னம் போன்று அரசன்.

குளத்தில் விளையாட்டு, பெரும் விழாக்கால மண்டபத்தில் திரிந்து

அல்லிகள் பூத்த இரவில்.

அழகிய மதே- முத்துப் போல் பற்கள்

துள்ளும் மீனாகக் கண்கள்

தாமரையே அவர்களின் மதுக்கிண்ணம்.

காதல் பித்துப் பிடித்த பெண்

மதுக்கிண்ணத்தில் பிரதிபலிப்பு.

மிதக்கும் சிறுமலர்க்கண்கள்.

மன்னனை அறிவிழக்கச் செய்யும் இவையெல்லாம்.

கவ்சிலுமன-வின் கவிதைகளில் நிறைய உவமைகள் உண்டு. கவித்துவமான சிங்கள மொழியில் உவமைகள் பெரும் அழகைச் சேர்க்கின்றன.

இடி போல் முழங்கிய முரசொலி கேட்டு

அன்னங்கள் போன்ற பெண்களின் மார்பகங்கள் ,

இரவில் நீந்திய குளம் போன்ற

காதலர்களின் மார்புகளை விட்டு அகன்றன.

மத்தியகால சிங்களக் கவிதைகள் பலவும் ஜாதகக் கதைகள் மீதானவை. 1450-ல் எழுதப்பட்ட ‘காவிய சேகாரய ‘ (கவிதைச் சேகரிப்புகள்) ஸ்ரீராகுலாவால் எழுதப்பட்டவை. இவை ‘சத்துபாஷ்ட ஜாதக ‘க் கதைகளின் மீதானவை. காளிதாசனின் ‘மேகதூதத்தை ‘ப் பின்பற்றி எழுதப்பட்ட சந்தேஷ் கவிதைகளும் – அதாவது தூதுவர் வழியாய் தம்முடைய காதலருக்குச் செய்தி அனுப்பும் கவிதைகள் பிரபலமாயின.செய்திகள் பெரும்பாலும் பறவைகள் மூலம் என்று கவிதை புனையப் பட்டதால் , அழகிய இட வர்ணனைகள் பெரிதும் இடம் பெற்றன.

சந்தேஷ் கவிதைகள்(செய்திக் கவிதைகள் மிகப் புகழ் பெற்றிருந்தன. கேளணி ஆற்றில் புகழ் பெற்ற ஜலக் கிரீடை மீதான கவிதைகள் இவை (ஹெச் பேரிஸ்- எல் சி வான் கேஸல் ஆங்கில மொழிபெயர்ப்பு)

மல்லாக்க மிதக்கும் பெண்கள் –

தோட்டத்தின் குளத்தில் மிதக்கும் தாமரையொத்த முகங்கள்

இருண்ட அல்லிமலர் போல கண்கள்

அன்னம் போன்ற மார்பகங்கள்

கண்ணிமயும் புருவமும் வண்டுகள் போல்

மேலிட்ட வாசனைப் பொருட்கள் ஆற்றில் கரைய

செம்மை நிறமிட்ட உதடுகளின் நிறமும் கரைய

தண்ணீர் தெறிக்கும் பயத்தில் கண்கள் மூட

சந்திரனுக்குக் காத்திருக்கும் அல்லியாகும்

அழகின் தெறிப்பு அங்கமெல்லாம்.

போர்க்கவிதைகளும் சிங்களக் கவிதையுலகிற்கு ஒளி கூட்டின. எனினும் காதல் கவிதைகளே மிக்க மகிழ்வுடன் பயிலப்பட்டன்.

கண்டி ராஜா ராஜசிங்கெ-வின் ராணிக்கும் , கஸ்கன் அடிகர் என்ற வெளிநாட்டு ஆளுக்கும் ஏற்பட்ட காதல் பற்றிப் பல கவிதைகள் உள்ளன. இந்தக் காதலைத் தெரிந்து கொண்ட ராஜா அடிகருகு மரண தண்டனை விதித்தான். அவன் சிறையில் இருக்கும் போது ரகசியமாய் ராணியுடன் தொடர்பு கொண்டு கடிதப் பரிமாற்றம் நடைபெற்றதாய்ச் சொல்லப் படுகிறது. ராணி கஸ்கனுக்கு எழுதியது என அறியப் படுவது :

தேன் விரும்பு வண்டு

காட்டில் பறக்கப் பறக்க

பல நிறப் பூக்களும் அழைக்கும்.

ஆனால் வினோத மணம் நாடிச்

சிறகடித்துப் பறந்து சிறைப்படும்.

சிறைப் பட்டாலும் நீ கலங்காதே

உன் காதல் பூஜிக்கப் படும்.

கஸ்கனின் பதில் இதுவாம் :

இலங்கை மன்னன் பத்துத் தலைகளும் கொண்டு

வேற்று மலரின் மணம் நுகர முனைந்ததுண்டு.

அவனுக்கே வருத்தமில்லை.

நான் ஏன் ஒரு தலை கொண்டு முகர்ந்த

வேறு மலர் பற்றிக் கவலை கொள்ளவேண்டும் ?

என்றும் எனக்குள் இருக்கும் அந்த நறுமணம்.

http://www.lanka.net/ExploreSL/97oct/poetry.html

Series Navigation