பற்று வரவு கணக்கு.

This entry is part [part not set] of 16 in the series 20010304_Issue

சித்திரலேகா


எனக்கு நாலு பிள்ளைகள்
நாலும் ஆண் பிள்ளைகள்.
நாலு பேரும் அயல் நாட்டில்.
நாலு பேரும் குடியிருப்பது
பத்து மைல் தூரத்துக்குள்.

ஒண்ணாம் மூத்தவன் மானேஜர்.
அரண்மனை போல வீடு
பெரிய தோட்டம்
பெரிய புல்தரை
தோட்ட வேலைக்கும்
சமையலுக்கும்
வீட்டு வேலைக்கும் ஆள்.

இரண்டாம் மூத்தவன் டாக்டர்.
அரண்மனை போல வீடு
பெரிய தோட்டம்
பெரிய புல்தரை
தோட்ட வேலைக்கும்
சமையலுக்கும்
வீட்டு வேலைக்கும் ஆள்.

மூணாம் மூத்தவன் இஞ்சினியர்.
அரண்மனை போல வீடு
பெரிய தோட்டம்
பெரிய புல்தரை
தோட்ட வேலைக்கும்
சமையலுக்கும்
வீட்டு வேலைக்கும் ஆள்.

நாலாம் மூத்தவன்தான்……
சிறு வீடு.
வீட்டு வேலைக்கு ஆளும் கிடையாது.
மகன் புல் வெட்டுவான்.
மருமகள் சமைப்பாள்.
இருவரும் சேர்ந்து
வீடு சுத்தம் செய்வர்.

ஒண்ணாம் மூத்தவன் பரவாயில்லை.
ஓரளவுக்கு தாராளம்.
மணிக்கூறுக்கு பத்து டாலர்
வேலையாளுக்கு
சம்பளம்.
நொட்டு நொள்ளை சொல்லி
சம்பளம் குறைக்க மாட்டான்.

ரெண்டாம் மூத்தவனும்
மூணாம் மூத்த மருமளும்
கொஞ்சம் கஞ்சம்.
மணிக்கூறுக்கு எட்டு டாலர் சம்பளம்.
திருப்தியே இல்லாத இருவரும்
நொட்டு நொள்ளை சொல்லி
வாரம் இருபது டாலராவது குறைப்பர்.

மூன்று மகன்கள் வீட்டிலும் சேர்த்து
வாரத்துக்கு நாற்பத்தைந்து மணி நேர வேலை.
சம்பளக் குறைப்பும் போக
மொத்தம் முன்னூத்தம்பது டாலர்
வார சம்பளம்-
நாலாம் மூத்தவனுக்கும்
மருமகளுக்கும்.

Series Navigation

author

சித்திரலேகா

சித்திரலேகா

Similar Posts